TNPSC Thervupettagam

இனிப்பை எடுத்துக் கொண்டாடும் முன்

July 2 , 2023 561 days 337 0
  • இந்தியாவில் ஆயிரம் இனிப்பு வகைகள் இருந்தாலும் சாக்லெட்டுக்கும் இந்தியர்கள் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போதே ‘சாக்கி... சாக்கி’ என சாக்லெட் பிரியர்களாக உருவாகிவிடுகிறார்கள். நேரமும் உழைப்பும் கோரும் இனிப்புகளை எல்லாம் வீட்டிலேயே அநாயசமாகச் செய்துவிடும் இந்தியர்கள் கோகோ, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து எளிதாகவும் விரைவாகவும் செய்துவிடக்கூடிய சாக்லெட்டுகளை மட்டும் கடையில் வாங்கி உண்ணவே விரும்புகிறார்கள்.

வரலாறு

  • மத்திய, தென் அமெரிக்கக் கண்டத்தின் மழைக்காடுகளில் விளையும் கோகோ விதைகளில் இருந்து பானம் தயாரிக்கும் வித்தையைச் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாயன், அஸ்டெக் மக்கள் அறிந்திருந்தார்கள். அப்போது இது ‘கடவுளின் பானம்’ என்று கருதப்பட்டதால், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள் மட்டுமே அதை அருந்தும் வாய்ப்பைப் பெற்றார்கள்.
  • அமெரிக்காவுக்கு வந்து சென்ற ஸ்பானியர்களால் பொ.ஆ. (கி.பி) 1500களில் ஐரோப்பாவுக்கு கோகோ வந்து சேர்ந்தது. கசப்பான இந்தப் பானத்தில் இனிப்பு, லவங்கப்பட்டை சேர்க்கப்பட்டு, அதிகாரத்திலும் செல்வத்திலும் கொடிகட்டிப் பறந்தவர்களின் ஆடம்பர பானமாக மாறியது. ஆரோக்கியத்தை வழங்கும் ‘பிரெளன் கோல்ட்’ என்கிற ‘அமுதபான’மாகக் கருதப்பட்டதால், கோகோ பானத்தின் தேவை அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனி நாடுகளில் கோகோவையும் கரும்பையும் விளைவித்தன. ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளைக் கொண்டுவந்து கோகோ விளைச்சலை அமெரிக்கர்கள் அதிகப்படுத்தினர்.
  • 1828ஆம் ஆண்டு கோகோ விதைகளை வறுத்து, பொடி செய்து, சாறெடுத்து, திடப் பொருளாக மாற்றி, மீண்டும் திரவத்தில் கரைக்கும்விதத்தில் இயந்திரம் உருவாக்கப்பட்டது. இயந்திரத்தின் பயன்பாடு வந்ததும் கோகோவுடன் சர்க்கரை சேர்த்து விலை மலிவாக, பெருமளவில் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதன் விளை வாக சாக்லெட் எளியவர் களின் நாக்குகளையும் வந்த டைந்தது.
  • ஐரோப்பிய நிறுவனங்கள் சாக்லெட் தயாரிப்பில் மும்முரமாக இறங்க, கோகோ வின் தேவை அதிகரித்தது. அதனால், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோகோவை விளை வித்துத் தருவித்துக் கொண்டன.

வகைகளும் பரிமாணங்களும்

  • டார்க் சாக்லெட், மில்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட், ரா சாக்லெட், மோல்டிங் சாக்லெட், வீகன் சாக்லெட் என்று ஏராளமான வகைகளில் சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சாக்லெட்டுக்குள் பருப்புகள், உலர் பழங்கள், தேங்காய்த் துருவல் போன்றவை வைக்கப்பட்டு விதவிதமான சுவையிலும் வடிவத்திலும் தரத்திலும் சாக்லெட்டுகள் கிடைக்கின்றன.
  • சாக்லெட் பானங்கள், சாக்லெட் ஐஸ்கிரீம், சாக்லெட் குக்கீஸ், சாக்லெட் கேக் என சாக்லெட் பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது.

இந்தியாவில் சாக்லெட்

  • இந்தியாவில் ஆங்கிலேயரால் கோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சாக்லெட் விளம்பரங்கள் ஆரம்பத்தில் குழந்தைகளையும் பிறகு குடும்பத்தினரையும் அடுத்து சாதனைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டன. இன்று அதற்காக இளைஞர்கள் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.
  • 1990இல் கேட்பரி டெய்ரி மில்க் சாக்லெட் விளம்பரத்தில், கிரிக்கெட் வீரர் ஒருவர் 100 ரன்களைக் குவித்தவுடன் அவரின் தோழி மகிழ்ச்சியில் சாக்லெட்டைச் சாப்பிட்டுக் கொண்டே மைதானம் நோக்கி ஓடுவதாக இருந்தது. 30ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கிரிக்கெட் வீராங்கனை 100 ரன்களைக் குவிக்க, அவருடைய நண்பர் மகிழ்ச்சியில் சாக்லெட்டைச் சுவைத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி ஓடி வருவதாக எடுக்கப்பட்டது. இந்த விளம்பரம் இதயங்களைக் கொள்ளை கொண்டது. காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை விளம்பரங்களில் புகுத்துவது, தொடர்ந்து சாக்லெட் தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவியிருக்கிறது.

ஐரோப்பியர்களின் கொடி

  • ஐரோப்பிய நாடுகளே சாக்லெட் உற்பத்தியில் இன்றுவரை கொடி கட்டிப் பறக்கின்றன. கடந்த ஆண்டு கணக் கெடுப்பின்படி ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, போலந்து ஆகிய நான்கு நாடுகள் சாக்லெட் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா போன்றவை முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன. பெல்ஜியம் சாக்லெட்டுகள் இன்றுவரை பெரும்பாலும் கைகளால் செய்யப்படுவதால் கூடுதல் புகழைப் பெற்றுள்ளன.

காடுகளும் குழந்தைத் தொழிலாளர்களும்

  • உலகத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு கோகோவை மேற்கு ஆப்பிரிக்கா பூர்த்திசெய்கிறது. இதில் 40 சதவீதத்துக்கும் மேல் ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து விளைவிக்கப்படுகிறது. இங்கு 80 லட்சம் மக்கள் கோகோ தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
  • சாக்லெட்டின் தேவை அதிகரித்து வருவதால் கோகோ விளைச்சலையும் அதிகப்படுத்த வேண்டியிருக் கிறது. பழைய மரங்களிலிருந்து குறைவான அளவிலேயே கோகோ அறுவடை ஆகிறது. இதனால், காடுகளை அழித்துப் பணப்பயிரான கோகோவை நடும் பணி நடைபெற்றுவருகிறது. ஐவரி கோஸ்ட்டில் 70 சதவீதக் காடு கோகோவுக்காக அழிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆப்பிரிக்காவில் கோகோ தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால், குழந்தைகளும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஐவரி கோஸ்டில் மட்டும் இருபது லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
  • காடு அழிப்பைத் தடுக்கும் விதத்திலும் தேவையை ஈடுசெய்யும் விதத்திலும் அதிக உற்பத்தித் திறன்கொண்ட கோகோ மரங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. உலக இயற்கை நிதியம் (WWF) காடுகள் அழிப்பையும் குழந்தைத் தொழிலாளர்களையும் தடுக்கும் விதத்தில் பெருநிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுவருவது ஆறுதலானது.

அளவு மீறினால்...

  • நிறைய சாக்லெட் சாப்பிடுவது பற்களைச் சொத்தையாக்குவதோடு பிற உடல் உபாதைகளையும் கொண்டுவரும் என்று மருத்துவர்கள் காலம்காலமாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால், அண்மைக் காலமாக சாக்லெட் உடலுக்கு நல்லது என்கிற செய்தி அதிக அளவில் பரப்பப்படுகிறது. அமிர்தமாகவே இருந்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்பது சாக்லெட்டுக்கும் நிச்சயம் பொருந்தும்!

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்