- சிறிது காலம் அமைதியாக இருந்ததுபோல தோற்றமளித்த மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை மீண்டும் தலைதூக்கி இருப்பது சமூக ஆர்வலர்களைக் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.
- கடந்த ஓராண்டுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் அவ்வப்போது கலவரங்கள் நிகழ்ந்தபோதும், ஜிரிபாம் மாவட்டம் அமைதியாகவே இருந்துவந்தது. இந்தச் சூழலில், அந்த மாவட்டத்தின் குனெü நகரின் அருகில் உள்ள சோரோக் அடிங்பி என்ற கிராமத்தில் சொய்பம் சரத் சிங் என்ற விவசாயி மர்ம நபர்களால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக தலையை வெட்டி அது தனியாக எடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது இப்போதைய வன்முறைக்கு வித்திட்டது.
- ஜிரிபாமுக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி சென்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது முதல்வர் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, அதே மாவட்டத்தில் மைதேயி இனத்தவர்கள் அதிகம் வாழும் புதாங்கல் என்ற பகுதிக்குள் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை நுழைந்த கும்பல் 2 வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் அடுத்தடுத்து இருந்த 70 வீடுகள் எரிந்து சாம்பலாயின. 2 காவல் துறை புறச்சாவடிகள், வனத் துறை அலுவலகத்தையும் மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
- ஜிரிபாம் வன்முறைக்கு எதிராக, தலைநகர் இம்பாலுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை தமேங்லாங் மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
- மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் திடீரென நிகழவில்லை. மைதேயி, குகி உள்ளிட்ட சமூகங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. மைதேயி இனத்தவரை பழங்குடியின பட்டியலில் (எஸ்.டி.) சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 27-இல் உத்தரவிட்டது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்தத் தீர்ப்பால் தங்கள் உரிமைகள் பறிபோய்விடும் என்ற எண்ணம் குகி பழங்குடியினரிடையே ஏற்பட்டது.
- இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுராசந்த்பூர், தமேங்லாங் உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பால் 2023 மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட பேரணி வன்முறைக் களமாக மாறியது. அப்போது தொடங்கிய வன்முறை வெறியாட்டம் 220-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ளது.
- கலவரத்தின்போது, காவல் துறையினர் கண்ணெதிரிலேயே இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டுப் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள அவல நிலை இன்னமும் தொடர்கிறது. ஏற்கெனவே வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக அமைதி திரும்பிய நிலையில், வன்முறையால் அதிகம் பாதிக்கப்படாத ஜிரிபா மாவட்டத்துக்கும் வன்முறை இப்போது பரவி உள்ளது.
- மணிப்பூரில் வன்முறை என்பது இப்போது தொடங்கியதல்ல. 1960-களில் இருந்தே ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்கள் தனி மாநில கோரிக்கைக்காகப் போராடி வருகின்றன. 1980 முதலே அந்த மாநிலம் "பாதிக்கப்பட்ட பகுதி' (டிஸ்டர்ப்டு ஏரியா) என்றே மத்திய அரசால் குறிப்பிடப்படுகிறது.
- இப்போதைய கலவரத்துக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு காரணம் என்று ஒருதரப்பினர் கூறினாலும், அந்த மாநிலத்தில் பல ஆண்டுகளாக கஞ்சா பயிரிட்டு கொழுத்து வரும் கும்பல் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளும் காரணம் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். மணிப்பூர் காவல் துறையினர் தங்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்று குகி சமூகத்தினரும், "அஸ்ஸாம் ரைபிள்ஸ்' போன்ற மத்திய படையினர் தங்களுக்கு எதிராக உள்ளனர் என மைதேயி சமூகத்தினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருவதும் பிரச்னை நீடிப்பதற்கு காரணமாக உள்ளது. ஆயுதம் ஏந்தி போராடி வரும் குழுக்கள் உள்ளூர் மக்களைத் தூண்டி விடுவதால், பல சந்தர்ப்பங்களில் காவல் துறையினருக்கு அல்லது ராணுவ வீரர்களுக்கு எதிராக பெண்கள் அணிதிரள்வது வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக ஆகியுள்ளது.
- "கடந்த ஓராண்டாக மணிப்பூர் மாநிலம் அமைதிக்காக ஏங்குகிறது; அங்குள்ள மக்கள் உதவி கோரி கூக்குரல் எழுப்புகின்றனர்; இந்தப் பிரச்னைக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் பேசியது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புது தில்லியில் திங்கள்கிழமை (ஜூன் 17) ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மைதேயி, குகி ஆகிய இரு சமூகத்தினரிடமும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமித் ஷா அறிவித்துள்ளார்.
- மாநிலத்தில் இப்போது 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களைக் குவிப்பதால் தற்காலிகமாக அமைதி ஓரளவு நிலைநாட்டப்படலாம். ஆனால், அது நிரந்தரத் தீர்வாகாது. மணிப்பூர் மாநிலப் பிரச்னைக்குக் காரணம் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். அந்த மாநில மக்கள் அமைதியாக வாழ விரைவில் வழிவகை செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினாலும் தவறில்லை!
நன்றி: தினமணி (20 – 06 – 2024)