TNPSC Thervupettagam

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது

November 24 , 2024 53 days 68 0
  • டொமினிகன் குடியரசின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக மிரபல் சகோதரிகளான பெட்ரீஷியா மிரபல், மினர்வா மிரபல், மரியா தெரசா மிரபல் ஆகிய மூவரும் 1960 நவம்பர் 25 அன்று கொல்லப்பட்டனர். இந்த மூன்று சகோதரிகளின் அரசியல் கொலை உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பியது.
  • அரசியல் இயக்கங்களில் பங்கேற்கும் பெண்கள் மீது செயல்படுத்தப்படும் வன்முறைகளைக் களைவதோடு பொதுவெளிகளில் அவர்கள் மீதான வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தியும் நவம்பர் 25ஆம் தேதியைப் பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிப்பதற்கான நாளாக ஐநா சபை அறிவித்தது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை அறிவிக்கும் ஐநா, ‘இனி பொறுப்பது இல்லை; பெண்கள் மீதான வன்முறைகளைக் களைய ஒன்றிணைவோம்’ என்கிற முழக்கத்தோடு ‘பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கும் 16 நாள்கள்’ இயக்கத்தை இந்த ஆண்டு தொடங்குகிறது.

இந்தியாவில் தனிச் சட்டம்

  • ஐநாவின் இதுபோன்ற செயல்பாடுகளால் பல்வேறு நாடுகளில் பாலியல் ரீதியான வன்முறைகளைக் களைவதற்கான பிரத்யேகச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவிலும் 2012ஆம் ஆண்டில் நிர்பயா மீதான மிகக் கொடூரமான பாலியல் வன்முறை குற்றம் நடைபெற்ற பிறகு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்களிலும் இந்தியத் தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரிவுகளிலும் 2013ஆம் ஆண்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பணிபுரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடைசெய்யவும் பாதுகாக்கவும் குறைதீர்க்கவும் ஒரு புதிய சட்டம் அதே ஆண்டு நடைமுறைக்கு வந்தது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான கடுமையான ஒரு குற்றவியல் சட்டம் இயற்றப்பட்டு 2012இல் நடைமுறைக்கு வந்தது.

அதிகரிக்கும் சமத்துவமின்மை

  • ஒரு சமூகத்தில் பெண்களுக்கான சம வாய்ப்பு, அரசியல் பங்கேற்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை பெண்களின் சமத்துவத்தைத் தீர்மானிப்பவையாக உள்ளன. அவர்கள் மீதான வன்முறை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவெளிகளிலும் சமூகத்திலும் தொடர்ந்து அரங்கேறுவது சமத்துவமின்மை மென்மேலும் அதிகரித்துவருவதைக் காட்டுகிறது. பெண்கள் மீதான குற்றங்கள் பெரும்பாலும் அவர்களது உடல் மீதான வன்முறையாகவே இருக்கின்றன. இந்த வன்முறைகள் மிக இளம் வயதில் இருந்து சமூகத்தின் சமத்துவமற்ற மதிப்பீடுகளின் காரணமாகவும், பாலினரீதியாகப் பிம்பப்படுத்துதல் மூலமாகவும் எவ்வித முன்னேற்றமும் அடைய முடியாத வகையில் அவர்களை ஒடுக்கி அசமத்துவத்தை நிலைநிறுத்த வகைசெய்கிறது.

நீதி கிடைப்பதில் நிலவும் சிக்கல்

  • 2022ஆம் ஆண்டு இந்தியாவின் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4,45,256. இவை தவிர பதியப்படாத வழக்குகளும் உண்டு. அது இந்தப் புள்ளி விவரத்தைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்குமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
  • பெண்கள் மீதான வன்முறை நம் அன்றாட வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் இழையோடி இருக்கிறது. பாலியல்ரீதியான பாரபட்சமும் சுரண்டலும் இயல்பானதாக ஆக்கப்பட்டுள்ளன. எனவே, சட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி வலிந்து பேசினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதிலேயே பல பெண்களுக்கும் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. அவ்வாறு பதிவு செய்தாலும் புலனாய்வு செய்வது, குற்றத்தை நிரூபிக்கும் வரை சட்ட உதவிகள் பெறுவது, சமூகரீதியான பாதுகாப்பு - வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றில் அரசும் சமூகக் கட்டமைப்பும் மிகப் பெரும் சவாலாகவே இருக்கின்றன.
  • பல நேரம் பலவிதமான வன்முறைகள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களாலும் குடும்பங்கள் மூலமாகவும் நிகழ்த்தப்படுவதால் மேற்கண்ட பாதுகாப்புகளுக்கு உதவி புரியும் அரசுக் கட்டமைப்புகளில் பெரும் போதாமை நிலவுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பெண்கள் இவ்விதமான சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கும்போது ஐநாவின் பெண்கள் அமைப்பு, ‘வன்முறைக்கு எதிரான குரல்’ என்கிற ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி முறைசாராக் கல்வி அமைப்புகளில் இளம் சிறுமிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இது குறித்த புரிதலையும் பயிற்சியையும் அளிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தது.
  • இந்தியா, இந்தப் பாடத்திட்டத்தைப் பெண் குழந்தைகளிடமும் சிறுமிகளிடம் எடுத்துச்செல்ல முன்வந்த முதல் 12 நாடுகளில் ஒன்றாகும். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன் இந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களையும்கூடப் பயிற்றுவித்தது. ஆனால், இது முழுமையாக இந்தியப் பெண்களிடமும் பெண் குழந்தைகளிடமும் சென்றடையவில்லை.

எதார்த்தம் சொல்லும் சேதி

  • இன்று வரை பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்ளும் போது சமூகத்தின் பாலினரீதியான பாரபட்சம், பெண்களுக்கு எதிரான மதிப்பீடுகள், காவல்துறையின் அலட்சியம், சட்டரீதியான - மருத்துவரீதியான உதவிகள் தேவையான அளவில் இல்லாதது போன்ற காரணங்கள் பெண்களை ஒடுக்கி அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற இயலாமல் செய்துவிடுகின்றன.
  • இன்றுவரை பாலியல்ரீதியான வல்லுறவு உள்படப் பல்வேறு குற்றங்களுக்கு எதிராக விரைந்து நிவாரணம் பெறுவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த கொல்கத்தா மருத்துவ மாணவியின் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவம் நாடு முழுவதும் கட்டமைப்பிலும் சட்டம் மற்றும் அரசின் பல்வேறு போதாமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அது மட்டுமன்றிப் பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்வதில் அரசுகளுக்கு இருக்கக்கூடிய முன் தீர்மானத்தைப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியது.
  • சமீபத்தில் சென்னையில் பெண் குழந்தை மீதான பாலியல் வல்லுறவு புகார் கையாளப்பட்ட விதத்தால் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி வழக்கை விசாரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையை அமர்த்தியதும், மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டைச் சாராத ஏழு காவல் மற்றும் ஆட்சிப் பணித்துறை அதிகாரிகள் தலைமையில் அவர்கள் மேற்பார்வையில் அப்பெண்குழந்தை மீதான பாலியல் வல்லுறவு புகார் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததும் கவனிக்கத்தக்கவை.

ஒன்றிணைந்து செயல்படுவோம்

  • பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்குச் சமூக, சட்ட, கலாச்சாரரீதியான மாற்றங்களைப் பள்ளிக் கல்வியிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டும். பெண்கள் மீதான வன்முறை குறித்து ‘பூஜ்ய சகிப்புத்தன்மை’ இருப்பதை அரசியல் தீர்மானத்தின் மூலம் மாநில மற்றும் மத்திய அரசுகள் உறுதிப்படுத்தினால்தான் மாற்றத்தைத் தொடங்க முடியும்.
  • பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறையை முற்றிலும் ஒழித்தால்தான் எந்தவொரு பெண்ணும் தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிக்கொணர்ந்து சமுதாயத்தில் தங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றுவதுடன் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தியில் சமத்துவத்தையும் அடிப்படை உரிமைகளையும் பெற முடியும்.
  • குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகளில் பாலினரீதியான பாரபட்சம் எவ்வாறு பெண்கள் மீதான வன்முறையாக இயல்பானதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைக் கூர்ந்து கவனித்து விழிப்புணர்வு பெற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அடுத்ததாக அதைக் களைவதற்கான நடைமுறையாகப் பாலின பாரபட்சங்கள் குறித்து உரக்கப் பேசுவதும் விவாதிப்பதும் அவசியம்.

பெண்களுக்கான சமத்துவமும்

  • அவர்களுக்கு எதிரான வன்முறையும் ஒன்றை மற்றொன்று எதிர்மறையாகச் சார்ந்திருக் கின்றன பெண்களிடம் மதிப்பிற்குரிய உறவை நடைமுறைப் படுத்துவோம். விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துவோம். இயல்பாக்கப்பட்ட அன்றாட வன்முறைகளை, பாரபட்சங்களைப் பற்றிய பேசாப்பொருளைப் பேசத் தொடங்குவோம். பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்க ஒன்றிணைவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்