- மோடி தலைமையிலான முந்தைய இரண்டு அரசுகள் எதிர்கொண்ட விமர்சனங்களில் முக்கியமானது, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்காமல் அரசு நடந்துகொள்வதாகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுந்த குமுறல்கள்தான். இந்த முறை ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய மாநிலக் கட்சிகளின் துணையுடன்தான் பெரும்பான்மையை எட்ட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பாஜக, இனியேனும் மாநில அரசுகளை - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை - அரசமைப்புச் சட்ட விழுமியங்களின்படி சரிசமமாக நடத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மாநில அரசுகளுடன் மோதல்:
- பாஜக ஆளும் மாநிலங்களை ‘இரட்டை இன்ஜின் அரசு’ என்னும் அடைமொழியுடன் ‘கவனித்துக்கொண்ட’ மோடி அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளுக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துவந்தது மறுக்க முடியாதது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் அவற்றில் முக்கியமானவை. ஜிஎஸ்டி நிதிப் பகிர்வு, பேரிடர் நிவாரண நிதி, 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுடன் ஏற்பட்ட பிணக்கால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும்
- அளவுக்கு நிலவரம் மோசமாக இருந்தது. இவ்விவகாரத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்ட உச்ச நீதிமன்றம், “மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறியது கவனிக்கத்தக்கது.
- அதேசமயம், மத்திய ஆட்சியாளர்களைத் விரோதிகள் போலவே பாவித்து, மாநிலத்துக்கும் மாநில மக்களுக்கும் எதிராக திட்டமிட்டுச் செயல்படுவதாக மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதன்மூலம் அரசியல் லாபம் பெற முனைந்ததுடன், தங்கள் நிர்வாகத் திறமை இன்மைக்கான பழியை மத்திய அரசின் மீது சில மாநில அரசுகள் தூக்கிப் போட்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும். “பிரதமர் அலுவலகத்தை அதிகார மையமாக வைத்திருக்க விரும்பியதே இல்லை. அது மக்களின் பிரதமர் அலுவலகமாக இருக்க வேண்டும்; மோடியின் பிரதமர் அலுவலகமாக அல்ல” என்று பிரதமர் மோடி அண்மையில் நெகிழ்ந்திருக்கிறார்.
- ஆனால், அவரது முந்தைய ஆட்சிக்காலங்களில் பிரதமர் அலுவலகம்தான் மத்திய அரசின் எல்லாத் துறைகளின் முடிவையும் எடுத்தது; அவற்றால் பல மாநிலங்கள் நேரடித் தாக்கத்தைப் பெற்றன என்பதும் மறுக்க முடியாதது. குறிப்பாக, பாஜக அரசால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் பல மாநிலங்களின் முன்னேற்றத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக நிதித் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் குரல்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலுவுடன் எதிரொலிக்குமா என்னும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
- மாநில அரசுகள் கொண்டுவரும் நலத்திட்டங்கள் பலவற்றுக்கு மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு கணிசமானது. எனவே, என்னதான் கொள்கைரீதியில் மத்திய அரசை எதிர்த்தாலும், குறிப்பிட்ட அளவிலேனும் இணக்கமான போக்கைக் கொண்டிருந்தால் மட்டுமே மாநில அரசுகளால் நிதிச் செலவுகளைச் சமாளிக்க முடியும். ஆனால், மத்தியில் இருந்து பாரபட்சமாக நிதி ஒதுக்கப்படுவதாகச் சில மாநிலங்கள் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தன.
- இன்னொரு புறம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மத்திய அரசின் நிதியை முறையாகச் செலவழிக்கவில்லை எனத் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக தொடர்ந்து முன்வைத்தது. கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ‘உத்தரவாதத் திட்டங்கள்’, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கைகொடுக்கவில்லை என்று பாஜகவினர் விமர்சித்துவரும் நிலையில், மோடி அரசின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவே அந்தத் திட்டங்களைக் கொண்டுவந்ததாகவும், அவை தொடரும் என்றும் முதல்வர் சித்தராமையா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
மனம் மாறாத பாஜக:
- பாஜக அரசு கொண்டுவர முயலும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மாநிலக் கட்சிகளுடன் - தேசியக் கட்சியான காங்கிரஸும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை கொண்டு வரப்படாது எனத் தேர்தல் அறிக்கையிலும் காங்கிரஸ் உறுதியாகத் தெரிவித்திருந்தது. ஆனால், மக்களின் தீர்ப்பு காங்கிரஸுக்கு அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை! கூட்டணிக் கட்சிகளுடன் வேண்டிய சமரசத்தைச் செய்துகொண்டு, பாஜக அரசு தனது லட்சியத் திட்டங்களை எப்படியேனும் நிறைவேற்றியே தீரும் எனத் தெரிகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், பொது சிவில் சட்டம் போன்றவை மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள்” எனச் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியிருப்பது அதைத்தான் உணர்த்துகிறது.
- எடுத்த எடுப்பிலேயே கூட்டணிக் கட்சிகள் மெகா கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசைத் திணறடிக்கும் என்று எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் கணித்திருந்த நிலையில், ஆரம்பகட்டக் காட்சிகள் என்னவோ பாஜகவுக்கு சாதகமாகவே தெரிகின்றன. முக்கியமான அமைச்சகப் பொறுப்புகளைத் தன்வசமே பாஜக வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் மோடியின் முந்தைய ஆட்சியின் நீட்சிதான் புதிய அரசு என்ற பேச்சு எழுந்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களைக்கூட மாநில அரசுகளின் எதிர்ப்புகளை மீறி அமல்படுத்தப்போவதாக பாஜக தொடர்ந்து பேசிவந்தது. அமித் ஷா மீண்டும் உள்துறை அமைச்சராக்கப்பட்டிருப்பது அதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
- ராணுவக் கனவுடன் இருந்த இளைஞர்களின் அதிருப்திக்கு வழிவகுத்த அக்னிபத் திட்டத்தைக் கொண்டுவந்தது முந்தைய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்தான். கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்திவரும் நிலையிலும், ராஜ்நாத் சிங்கே மீண்டும் பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி விவகாரங்களில் கடுமையும் கண்டிப்பும் காட்டுபவர் என விமர்சிக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதியமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிரான போக்குகளைக் கர்நாடக அரசு முன்னெடுத்துவரும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணா நீர்வளத் துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
- இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் பதவியையாவது தெலுங்கு தேசம் கட்சி கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அந்தக் கட்சியும் ஐக்கிய ஜனதா தளமும் இரண்டாகப் பிளவுபடக்கூடும் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் ‘ஆவலுடன்’ எச்சரித்துவருகிறார்கள். ஆனால், ஆந்திர பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி-யுமான டகுபதி புரந்தேஸ்வரிக்குத்தான் அந்தப் பதவி வழங்கப்படும் என்று பேசப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர்
- என்.டி.ராமராவின் மகளான புரந்தேஸ்வரியைச் சபாநாயகராக்குவதன் மூலம் - ஒருவகையில் சந்திரபாபு நாயுடுவைச் சரிகட்டிவிட முடியும் என பாஜக நம்புகிறது.
- 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் பிஹார், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை இழந்துவிட்டன. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தத்தமது மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்தைக் கேட்டுப் பெறும் முனைப்பில் இருக்கின்றன. பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு நிதிஷ் குமார் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.
கூட்டாட்சியின் முக்கியத்துவம்:
- எதிர்க்கட்சி மாநில அரசுகளின் ‘நியாயமான’ கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதே கூட்டாட்சிக்கு அழகு. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நீண்டகாலமாக வலியுறுத்திவருகிறது. தற்போது நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாகத் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன. ஆனால், பாஜக ‘மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும்’ நிலைக்குப் போகுமா என்பது கேள்விக்குரியது.
- எல்லாவற்றையும் தாண்டி, சாதுரியமாக ஆதாயம் தேடும் பாஜக, ஒடிஷாவில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜியை முதல்வராக்கியிருப்பதன் மூலம், பழங்குடிகள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றக் குறிவைத்திருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கெனவே ஒடிஷாவைச் சேர்ந்த திரெளபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக்கியது, சத்தீஸ்கரில் விஷ்ணு தேவ் சாயை முதல்வராக்கியது எனப் பழங்குடிச் சமூகத்தினரைக் கவரும் உத்திகளை பாஜக கடைப்பிடித்தது. அதே உத்தி தொடர்கிறது என்பதால், மாநிலங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இப்படியான அணுகுமுறையை பாஜக தொடரும் என்றே கருதலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 06 – 2024)