- எனது நண்பர் ஒருவர் சக ஊழியரிடமிருந்து தனக்கு வந்த கட்செவி அஞ்சல் தகவலை என்னிடம் காட்டினார். அந்தப் பதிவில் பெண்களை உயர்வாகப் போற்ற வேண்டும் என்ற உபதேசம் அடங்கி இருந்தது.
- அதைச் சுட்டிக்காட்டிய நண்பர் கட்டிய மனைவியைக் கொடுமைப்படுத்தித் துரத்திவிட்டு வேறொரு பெண்ணுடன் வசித்துவரும் இவர், பெண்களைப் போற்ற வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார்' என்று கூறி வருந்தினார்.
- அந்த பெண்ணுரிமைப் போராளி அற்புதமான நடிகர்தான், சந்தேகமில்லை. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சமூக ஊடகத்தில் எழுதிய அந்தப் பதிவை தனது சொந்தக் கருத்துப் போல அவர் நகலெடுத்து அனுப்பியிருக்க வேண்டும். இதனைத்தான்
- மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
- ஒப்பார் யாம்கண்டது இல்
- என்று திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.
- கயவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்தும் யாம் கண்டதில்லை' என்பதே இதன் பொருள்.
- எனவேதான், எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார், அந்த செய்தி உண்மையா என்பவற்றையெல்லாம் ஆராய்ந்த பிறகே அதன் உண்மைத் தன்மை குறித்த முடிவுக்கு நாம் வர வேண்டும்.
- எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்பது அறிவு
- என்று திருவள்ளுவர் கூறியதன் காரணம் இதுவே.
- அதேபோல, சிலரைப் பார்த்தால் சிடுசிடுவென இருப்பார்கள். நெருங்கிப் பழகும் போது தான் அவரது இனிய குணநலன்கள் தெரியவரும்.
- முள் செடியில் மலர்ந்த ரோஜா மலர்களைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.
- பிறரிடம் பழகத் தயங்குவார்கள் சிலர். ஆனால் பழகிவிட்டால் அவர்களின் நட்புறவு நீண்ட நாள்களுக்கு நீடிக்கும்.
- நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
- பண்புடை யாளர் தொடர்பு
- என்று இதையே திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
- அதேசமயம், தீ நட்பு', கூடா நட்பு' குறித்தும் அவர் எச்சரித்திருக்கிறார். 'தொழுதகை உள்ளும் படைஒடுங்கும்' நபர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.
- ஒருவரிடம் முதலில் நட்பு பாராட்டிவிட்டு, பின்னர் இவரிடம் ஏன் நட்புறவு கொண்டோம் என்ற வெறுப்புணர்வை அடையும் நிலை யாருக்கும் வாய்க்கக் கூடாது.
- மனித மனத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மதிப்பிட இயலாது. எந்த மனிதரையும் எளிதாக எடைபோட இயலாது. தவிர, யாரும் நூறு சதவீதம் தூய்மையானவராக இருக்க முடியாது.
- குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
- மிகைநாடி மிக்க கொளல்
- என்ற திருவள்ளுவரின் போதனையைப் புரிந்துகொண்டால் பல ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்.
- அது மட்டுமல்ல, ஒருவர் தகுதியானவரா, தகுதியல்லாதவரா என்பது அவர்களுடனான பழக்கத்தின் தொடக்கத்தில் தெரியாது; அவர்களின் இறுதிச் செயல்பாட்டில்தான் தெரிய வரும். இதனையே,
- தக்கார் தகவிலர் என்பது அவரவர்
- எச்சத்தால் காணப் படும்
- என்று திருக்குறள் கூறுவதாகத் தோன்றுகிறது.
- கவர்ச்சிகரமான விளம்பரங்களால் வசீகரிக்கும் நிதி நிறுவனங்கள் நிகழ்த்தும் மோசடிகள், போலி ஆன்மிகவாதிகளின் சுயரூபங்கள், மேடையில் முழங்கும் அரசியல்வாதிகளின் பொய்முகங்கள், கபட வேடமிட்டு காலை வாரும் போலிகளின் முகத்திரைகள் போன்றவை தெரியவரும்போது நாம் கடும் அதிர்ச்சி அடைகிறோம்.
- இதற்கு பிறர் மீது குற்றம் கூறுவதில் பொருளில்லை. மனிதர்களையும் அவர்களது கருத்துகளையும் மதிப்பிடத் தெரியாத நமது இயலாமைக்கு பிறரைக் குறை கூறுவது அறியாமை.
வழிகாட்டும் திருக்குறள்
- இங்குதான் இலக்கியங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. நமது வாழ்வில் இலக்கியத்தின் துல்லியமான மதிப்பிடத்துக்கு திருக்குறளே சான்று.
- வாழ்வின் அனுபவங்கள் செறிந்த இலக்கியங்களைப் பயிலும்போது, அதுவரை புலப்படாமல் நம்மை ஏய்த்து வந்த மாயைகள் அகலும்.
- தங்கள் அனுபவ அறிவாலும், ஞான விரிவாலும் கண்டறிந்த உண்மைகளை கல்வெட்டுகள் போல இலக்கியங்களில் சான்றோர் பதித்து வைத்திருக்கிறார்கள்.
- நாம் காயம் படாமல் நடைபயில பாதுகாப்பான சாலைகளை அமைத்திருக்கிறார்கள் நமது முன்னோர். நாம்தான் அந்தச் சாலைகள் இருப்பதே தெரியாமல், முள்கள் செறிந்த காட்டுப்பாதையில் சென்று அல்லலுறுகிறோம். பிறகு பாதைகளை சபிக்கிறோம்; நம்மை நாமே நொந்து கொள்கிறோம்.
- தற்போதைய அவசர உலகில் இலக்கியங்களை வாசிக்கவோ நேசிக்கவோ நமக்கு நேரம் இருப்பதில்லை. தவிர, கையடக்கமான அறிதிறன்பேசிகள் நமது மதிப்பு மிகுந்த நேரத்தைக் களவாடி விடுகின்றன.
- சமூக ஊடகங்களில் நிலவும் வம்புச் சண்டைகளிலும், யாரோ எழுதிய பதிவைப் படிக்காமலே பலருக்கும் அனுப்பிவைக்கும் அவசரச் செயல்பாடுகளிலும் குவிந்திருக்கும் நம் கவனம், இலக்கியங்கள் மீது திரும்புமானால் பல இன்னல்களை நாம் முன்கூட்டியே தவிர்க்க முடியும்.
- எனது நண்பரின் சக ஊழியர் அனுப்பிய கட்செவி அஞ்சல் பதிவில் தாம் குறிப்பிட்ட திருக்குறளின் உண்மைப் பொருளை அறிந்திருந்தால் அவரது வாழ்க்கை தடம் புரண்டிருக்காது; அவரது மனைவியின் வாழ்வும் இருண்டிருக்காது.
- அந்தக் குறள் இடம்பெறும் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்திலுள்ள பத்து குறட்பாக்களையும் அவர் படித்திருந்தால், குறைந்தபட்சம் தன்னெஞ்சறியப் பொய்யுரைத்திருக்க மாட்டார்.
- திருக்குறளின் 'கயமை' அதிகாரத்திலுள்ள பத்து குறள்களும் இப்படிப்பட்டவர்களை அம்பலப்படுத்தவே என்பது தெளிவு.
- மக்களைப் போல மட்டுமல்ல, கடவுளர் போலவே நடிப்பவர்களிடமும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். 'தேவர் அனையர் கயவர்' என்பது வள்ளுவர் வாக்கு.
நன்றி: தினமணி (06 - 07 - 2021)