இன்னும் எத்தனை பேரிடர்களுக்குப் பேசாமல் இருக்கப் போகிறோம்?
- மனிதர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றங்களைப் பேரிடர்கள் (disaster) என்கிறோம். நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழக்க நேரும் துயர நிகழ்வை மேலைநாட்டினர் பெரும்பேரிடர் (catastrophe) என்பர். இயற்கைச் சீற்றம் பேரிடராக மாறுவது மனிதச் செயல்பாடுகளின் காரணமாகவே. அதாவது, இயற்கையை மனிதர்கள் கையாண்டு வந்திருக்கும் விதங்களே பேரிடருக்கு மூலக்காரணம். காலநிலைப் பிறழ்வினால் நேரும் பேரிடர்கள் இதற்குச் சான்று.
- 2024 ஜூலை 30 இரவில் மேற்கு மலைத் தொடரின் வயநாடு பகுதியில் நேர்ந்த நிலச்சரிவுப் பேரிடரில் 400 பேர் பலியாயினர்; 150 பேர் காணாம போயினர். கேரள பெருவெள்ளப் பேரிடர் நிகழ்ந்த 2018இல் அம்மாநிலத்தில் 341 நிலச்சரிவுகள் பதிவாகின. பெருமழையினாலும் நிலச்சரிவினாலும் 483 பேர் பலியாயினர்.
- ரூ. 40,000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய பேரிடர் அது. 2018 பேரிடரைத் தொடர்ந்து, மேற்கு மலைத்தொடர்ப் பகுதிகளான வயநாடு, இடுக்கி, மலப்புரம், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
- 2019இல் கவலப்பாறை (மலப்புரம்), புதுமலை (வயநாடு) நிலச்சரிவுகளில் 75 பேர் பலியாயினர். 2020 பெருவெள்ளமும் நிலச்சரிவும் 104 பேரைப் பலிவாங்கியது. அவ்வாண்டு ஆகஸ்ட் 6இல் மூணாறில் 612 மி.மீ. மழை பெய்தது. 2024 வயநாடு நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. பேரிடர் நேர்ந்த இந்த இரண்டு பகுதிகளும் மேற்கு மலைத் தொடரின் குறுக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளவை.
நிலச்சரிவு:
- கடற்கோள், பெருவெள்ளம், நிலநடுக்கம்போல நிலச்சரிவும் ஓர் இயற்கைச் சீற்றம். நிலம் எப்போதும் அசைந்துகொண்டே இருக்கிறது. குன்றுகளும் மலைகளும் தோன்றுவது அதன் நீண்டகால விளைவே. போலவே, நிலத்தின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களால் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. மலை போன்ற சாய்வான பகுதிகளில் கற்கள், பாறைகள், மணல் ஆகியவற்றின் கலவை சரிந்து விழுவதை நிலச்சரிவு என்பர்.
- மண்ணின் கெட்டிதட்டிய பசைத்தன்மை, கற்கள், பாறைகளின் கலவை, நிலத்தின் சாய்தளம் போன்ற கூறுகள் நிலச்சரிவுக்கு இயற்கையான காரணங்கள்; புற்பூண்டு, செடிகொடி, மரங்களின் வேர்கள் மண்ணில் நெருக்கமாக ஊடாடி நிலச்சரிவைத் தடுக்கின்றன.
- இயல்பான மழையை நிலம் எளிதில் ஆற்றுப்படுத்துகிறது. ஆனால் பெருமழையினால் ஏற்படும் நீர்ச்செறிவானது, நிலத்தின் எடையைச் சட்டென்று அதிகரிக்கவைக்கிறது; அதோடு, பசைத்தன்மை கொண்ட மண்ணின் மசகுத்தன்மையைக் கூட்டி, கல், மண், பாறை இடையே உராய்வுத்தன்மையைக் குறைத்து விடுகிறது. நிலச்சரிவு ஏற்பட இவை போதுமான காரணங்கள்.
- நிலச்சரிவு அபாயத்தை மானிடக் காரணிகள் அதிகரிக்கின்றன. சான்றாகக் காடழிப்பு, தீவைத்தல் நடவடிக்கைகள் நிலத்தின் பிடிமானத்தைக் குறைக்கின்றன. மலைப் பகுதிகளில் நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் நிலச்சரிவைத் தீவிரப்படுத்தலாம். கட்டுமானங்கள், ஒற்றைப் பயிர்ச் சாகுபடி முறை போன்றவற்றால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்.
- நீரிடி (cloud burst) என்னும் திடீர்க் கனமழை, குறுகிய நேரத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட வெள்ளப்பெருக்குச் சில வேளைகளில் நிலச்சரிவை ஏற்படுத்தி மண், கல், பாறைக் கலவையை ஆறுபோல கீழ்நோக்கி அடித்துக் கொண்டுவரும். 2024 வயநாடு நிலச்சரிவு இதற்கு ஓர் உதாரணம். 86,000 சதுரமீட்டர் நிலப்பரப்பை 5,000 அடி உயரத்திலிருந்து கீழ்நோக்கி ஆறேழு கிலோமீட்டர் தொலைவுக்கு இழுத்துவந்தது.
மேற்கு மலைத் தொடர்:
- கனிம வளங்களுக்காகவும் சுற்றுலா உள்ளிட்ட தொழில் வளர்ச்சிக்காகவும் பிற வணிகச் செயல்பாடுகளுக்காகவும் மேற்கு மலைத்தொடர் ஏற்கெனவே அழிவுக்கு உள்ளாகியிருந்தது. மலைத்தொடரின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (1986)இன் அடிப்படையில் சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையில் மேற்கு மலைத்தொடர் சூழலியல் வல்லுநர் குழுவை (2010) அமைத்தது.
- 2011இல் முன்வைக்கப்பட்ட மாதவ் காட்கில் அறிக்கை, மேற்கு மலைத்தொடரைச் சூழலியல் கூருணர்வுப் பகுதியாக (Ecologically Sensitive Area) அறிவிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதோடு மலைத்தொடரைக் கூருணர்வுத் தன்மையின் அடிப்படையில் மூன்று மண்டலங்களாக (Ecologically Sensitive Zones 1, 2, & 3) வகைப்படுத்தியது. மாதவ் காட்கில் அறிக்கையைப் பல்வேறு தரப்புகளின் பின்னூட்டங்களின் அடிப்படையில் ஆழ்ந்து படித்து, துறைசார் நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக மத்திய அரசு கஸ்தூரிரங்கன் குழுவை (2012) அமைத்தது. காட்கில், கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளுக்குச் சார்ந்த மாநிலங்கள் (மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம்) எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
காலநிலைக்கு இசைந்த வளர்ச்சி:
- சுற்றுச்சூழலியல் நீடித்த தன்மைக்குப் பொருந்தாத வளர்ச்சியும், முறைப் படுத்தப்படாத குடிமைக் கட்டுமானங்களும் நாளடைவில் பேரிடருக்கு வழிவகுக்கும். இந்தப் படிப்பினையின் அடிப்படையில் 2018 பேரிடருக்குப் பிந்தைய மாநிலத்தின் தேவைகள் மதிப்பிடப்பட்டு அறிக்கையளிக்கப் பட்டது. ‘காலநிலைக்கு இசைந்த கேரளம்’ (Climate Resilient Kerala) என்கிற எதிர்காலப் பார்வையுடன் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
- நீர்வளங்களை ஒருமைப்படுத்திய, சுற்றுச்சூழலியல் கூருணர்வு கொண்ட, பேரிடர் அபாயங்களைக் கணக்கில் கொள்ளுகிற நிலப் பயன்பாடு/ குடியேற்ற அணுகுமுறை, பேரிடர் அபாயக் குறைப்பு உத்திகளுடன், மக்கள் பங்கேற்பு பேரிடர் மேலாண்மையை இலக்காக்கி ‘காலநிலைக்கு இசைந்த கேரளம்’ கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது. பெருவெள்ள மேலாண்மைக்கென ‘ஆற்றுக்கு இடமளித்தல்’ என்கிற திட்டமும் முன்வைக்கப்பட்டது.
- ஆனால், நடைமுறையில் பெரிதாக ஏதும் நிகழவில்லை. நிலப் பயன்பாடுகளில் சூழலியல் கூருணர்வு என்பது இன்றைக்கும் மாயமான்தான். சுற்றுலா வருவாயைக் குறிவைத்து வயநாடு, இடுக்கி பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருந்தன. கூருணர்வு/ அபாயப் பகுதிகளிலிருந்து மறுகுடியேற்றம் செய்யப்படுவதற்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக மாநில அரசும் இதில் மெத்தனமாகவே இருந்திருக்கிறது.
பேரிடர் தவிர்த்தல்:
- பேரிடர் தவிர்ப்பு/ தாக்கம் குறைப்பைப் பொறுத்தவரை பேரிடர்க் கால முன்னெச்சரிக்கை தெளிவாக, சரியான நேரத்தில் உள்ளூர் மக்களைச் சென்றடைவது மிக முக்கியம். மழையின் தீவிரம், காற்றின் வேகம், நீரிடி போன்றவை குறித்த துல்லியமான தகவல்கள் வேண்டும். அதற்கான தொழில்நுட்ப மேம்பாடு நிகழவில்லை. வட கேரளப் பகுதியின் வானிலையைக் கணிப்பதற்குக் கோழிக்கோட்டில் ஒரு டாப்ளர் வானிலை ரேடாருக்கான தேவை நிறைவேறவே இல்லை. இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்திய நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனமும் இதில் போதிய அக்கறை காட்டவில்லை. வயநாட்டில் போதுமான மழைமானிகள்கூட இல்லை.
- 2019 நிலச்சரிவைப் போலவே 2024 வயநாடு நிலச்சரிவும் நீரிடியின் காரணமாக நேர்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் 64-124 மில்லிமீட்டர் மழையை மட்டுமே முன்கணித்திருந்த நிலையில், 48 மணி நேரத்தில் (2024 ஜூலை 30, 31) 572 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. மிகக் குறைந்த காலத்தில் கொட்டிய அதிகனமழையினால் (நீரிடி) ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, அடிவாரத்தில் 300 பேரைக் கொன்றது.
- காலநிலைப் பிறழ்வு தென்மேற்குப் பருவக்காற்றின் போக்கில் ஏற்படுத்திய மாற்றமே நீரிடிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நீண்ட காலமாகத் தவறான நிலப் பயன்பாட்டு முறையினால் சூழலியல் சிதைவுக்கு உள்ளாகியிருந்த மேற்கு மலைத்தொடர், காலநிலைப் பிறழ்வினால் மேலும் அபாயகரமான பகுதியாக மாறியிருக்கிறது. மேற்கு மலைத்தொடர் பேரிடர்கள் என்பவை மானிடக் காரணிகளும் காலநிலைப் பிறழ்வும் இணைந்து ஏற்படுத்திவருபவை.
- இயற்கை மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதற்கும், பேரிடரிலிருந்து மீண்டெழுவதற்கும் தயார்நிலையில் இருப்பது நம் பொறுப்பு. குடிமைச் சமூகம் பேரிடர்த் தயார்நிலையில் இருப்பதற்கு என்ன தேவை? குடிமை ரீதியாக, அடிப்படைக் கட்டுமான ரீதியாக அது ஆற்றல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பேரிடர் முன்னெச்சரிக்கை, பேரிடர் தவிர்ப்பு, மீட்பு என்பதான கட்டங்களில் போதிய அடிப்படை அறிவும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் குடிமைச் சமூகமும் இணைந்து அணுகவேண்டிய பெரும் பொறுப்பு இது.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 09 – 2024)