TNPSC Thervupettagam

இன்று மும்பை, நாளை சென்னையா?

May 4 , 2023 430 days 248 0
  • மும்பையில் உள்ள ‘சிவாஜி பூங்கா’ மஹாராஷ்டிர அரசியலின் உணர்வுபூர்வ மையம். ‘சத்ரபதி சிவாஜியின் பெயரைச் சூட்ட வேண்டும்’ என்று உருவான தொடர்ச்சியான மக்கள் கோரிக்கைகள், போராட்டத்தின் விளைவாக 1927இல் சிவாஜியின் முந்நூற்றாண்டு தருணத்தில், சிவாஜியின் பெயரைத் தாங்கியது முதலாகவே மராத்தியர்கள் அரசியலோடு நெருக்கமான பிணைப்பை அந்தப் பூங்கா உருவாக்கிக்கொண்டது.
  • விடுதலைப் போராட்ட கால நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, சுதந்திரத்துக்குப் பின் அன்றைய பம்பாய் மாகாணத்தில் இருந்து மராத்தியர்களுக்கு என்று ஒரு தனி மாநிலமாக மஹாராஷ்டிரத்தைக் கோரும் ‘சம்யுக்த மஹாராஷ்டிர இயக்கம்’ சிவாஜி பூங்காவில்தான் மையம் கொண்டது.
  • குஜராத்திகள், மராத்தியர்கள் இரு மொழிச் சமூகங்களின் சேர்க்கையாக இருந்த பம்பாய் மாகாணம் இரண்டாகப் பிரிவதற்கான நியாயம் பம்பாய் நகரத்திலிருந்தே உருவானது. நகரில் பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களை குஜராத்திகள் கையில் வைத்திருந்தார்கள். அரசிலும் முக்கிய நிறுவனங்களிலும் மேல்தட்டு வேலைகளில் தென் இந்தியர்களின் செல்வாக்கு பெறலானார்கள். மராத்தியர்களின் ‘மண்ணின் மைந்தர்கள்’ உணர்வுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.
  • தன்னுடைய பேச்சு, எழுத்து, கேலிச்சித்திரங்களில் இந்த உள்ளூர் உணர்வைப் பிரதிபலித்த பால் தாக்கரே மராத்தியர்கள் உரிமையைப் பேசும் ஓர் அரசியல் கட்சியாக ‘சிவசேனை’யை ஆரம்பித்தபோது புதிய கட்சியின் முக்கியச் செயல்பாடுகளைக் காரியார்த்தமாகவே சிவாஜி பூங்கவோடு பிணைத்தார். பால் தாக்கரேவின் வீடும் கட்சியின் தலைமையகமும் சிவாஜி பூங்காவின் அருகிலேயே அமைந்தன. 1966 அக்டோபர் 30 துஷரா பண்டிகை அன்று சிவசேனையின் பிரம்மாண்ட பேரணியை சிவாஜி பூங்காவில் மையமிட்டு நடத்தினார் பால் தாக்கரே. அதற்குப் பின் அதுவே ஒரு வழக்கமானது.
  • பிற்பாடு சிவசேனை முதல் முறையாக 1995இல் ஆட்சி அமைத்தபோது, மனோகர் ஜோஷி முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியை ராஜ் பவனுக்குப் பதிலாக பால் தாக்கரே சிவாஜி பூங்காவிலேயே நடத்தச் சொன்னார். 2012இல் அவர் மறைந்தபோது அங்கேயே எரியூட்டப்பட்டார். மஹாராஷ்டிரத் தலைநகரின் இதயமாக சிவாஜி பூங்காவைக் கண்டார் பால் தாக்கரே; அந்த இதயம் கொண்டிருக்கும் அடிநாதம் உள்ளூர் உணர்வு என்று சொல்பவர்கள் உண்டு.
  • இந்தியாவில் சிவசேனையின் தோற்றத்துக்கு உள்ள தனித்துவமும் முக்கியத்துவமும் என்னவென்றால், ஒரு நகரத்தை அடித்தளமாகக் கொண்டு உள்ளூர் அரசியலின் நியாயத்தைப் பேசும் கட்சியாகத் தோன்றியது அது. தீயூழாக ஏனையோர் மீதான வெறுப்பைக் குழைத்து அது கட்டப்பட்டது. உள்ளூர் மக்கள் நலன்களின் பெயரால் வெளியூர் மக்களை எதிரிகளாக அது சித்திரித்தது. இந்துத்துவத்தின் பெயரால் சிறுபான்மையினரை துரோகிகளாக அது சித்திரித்தது.
  • தம்முடைய சொந்த நகரின் வேலைகளையும் பொருளாதாரத்தையும் வெளியூர்க்கார்கள் பறிப்பதாக எண்ணிய விளிம்புநிலை மக்களே சிவசேனையின் ஆதரவுத் தளமாக அமைந்தபோதும் சிவசேனையின் தலைமை நிர்வாகிகள் தளம் பெருமளவில் முற்பட்ட சாதியினர், மேல் வர்க்கத்தினராலேயே அமைந்திருந்தது. முற்பகுதியில் தென் இந்தியர்களுக்கு எதிராகப் பேசிய சிவசேனை, பிற்பகுதியில் வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசியது. ஆயினும் மும்பை போன்ற பெருவர்த்தக நகரை ஒவ்வொரு நாளும் வந்தடையும் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் தொழிலாளர்களின் முன்னுரிமைகளைப் பேசவும் சிவசேனை தேவை என்ற எண்ணம் மும்பையர்களிடம் இருந்தது. மஹாராஷ்டிரத்தை ஆள்வது யாராக இருந்தாலும், கால் நூற்றாண்டுக்கும் மேல் மும்பை மாநகராட்சியானது சிவசேனையின் கைகளிலேயே இருக்கிறது.
  • நாடு முழுக்கக் கிளைகளைப் பரப்பும் சிவசேனையின் அபிலாஷைக்கான நிதியாதாரம், ‘பிரஹன்மும்பை மாநகராட்சி’ என்று அழைக்கப்படும் மும்பைப் பெருநகரத்தை ஆளும் நிர்வாகத்தோடு கலந்திருக்கிறது. சுமார் 2.2 கோடி மக்கள் வாழும் நாட்டின் பெரிய மாநகராட்சியான மும்பை மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் அல்லாது, பட்ஜெட் அளவிலும் (ரூ.45,949 கோடி) இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் பெரியது. இந்தியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் மும்பை. நாட்டின் நிதி, வணிக, பொழுதுபோக்குத் தலைமையகம் என்பதோடு, சர்வதேச அளவிலும் முதல் பத்து வர்த்தக மையங்களில் ஒன்றும் அது.
  • பால் தாக்கரேவின் மறைவுக்குப் பின் பெரும் பிளவைக் கட்சிக்குள் சமீபத்தில் எதிர் கொண்டிருக்கும் அவருடைய மகன் உத்தவ் தாக்கரேவுக்கு, விரைவில் நடைபெறவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தல் பெரும் அமிலச் சோதனையாக உருவெடுத்திருக்கிறது. கட்சியைப் பிளந்து சென்ற ஷிண்டே மத்திய - மாநில ஆட்சியதிகாரத்தில் உள்ள பலமான பாஜக கூட்டணியோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கவிருப்பது மட்டுமே தாக்கரே எதிர் கொள்ளும் சவால் இல்லை. மும்பை பெருநகரத்தின் மக்கள் கலவையில் ஏற்பட்டிருக்கும் பெரும் மாற்றம் அவர் முன் பூதாகரமாக நிற்கிறது.
  • நகரத்தின் தொழில் வளர்ச்சியோடு இணைந்துவந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - அவர்களில் பெரும் பகுதியினர் இந்தி பேசும் பிராந்தியங்களிலிருந்து வந்தவர்கள் இன்று மும்பை நகரத்தின் பெரும் வாக்கு வங்கியாக வளர்ந்து நிற்கிறார்கள். பாஜக அவர்களுடைய இயல்பான தேர்வாக அமைந்திருக்கிறது. உள்ளூர் மக்களின் அபிலாஷைகளைப் பேசும் சிவசேனை அவர்களுக்கு அச்சுறுத்தல் சக்தியாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் வெறுப்பு சக்தியாக வளர்ந்துவந்த சிவசேனை போன்ற ஒரு கட்சி மட்டும் இல்லை; மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த எந்தக் கட்சியும் நியாயமான குரலில்கூட உள்ளூர் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் சூழல் இப்போது மும்பையில் இல்லை என்கிறார்கள்.
  • மராத்தியர்கள் வாக்குகளைத் தாண்டி சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒரு தசாப்தத்துக்கு முன்பே சிவசேனை உணர்ந்திருந்தது. விளைவாகவே உத்தவ் தாக்கரேவின் தலைமையின் கீழான கட்சி புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேச்சுகளை விழுங்கியது. கட்சியை ஷிண்டே உடைத்துக்கொண்டிருந்த நாட்களிலும், சிவசேனையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஷிண்டே அணிக்கு மாறிக்கொண்டிருந்த நாட்களிலும்கூட இந்தி பிராந்திய சமூகத் தலைவர்களை முன்னரே திட்டமிட்டபடி சந்திக்கும் நிலையில் உத்தவ் தாக்கரே இருந்தார்.
  • இன்று மும்பை மாநகராட்சியின் வாக்காளர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கினர் இன்று இந்தி பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் - பெரும்பாலும் உத்தர பிரதேசத்தினர், பிஹாரிகள்; பெருநகரில் உள்ள 227 வட்டங்களில் 50 வட்டங்களில் புலம்பெயர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்; மேலும் 50 வட்டங்களில் குறிப்பிடத்தக்க இருப்பை அவர்கள் கொண்டுள்ளனர்.
  • உள்ளூர் வாக்குகளை கட்சிரீதியாக, சாதிரீதியாக உடைக்கலாம்; ஒப்பீட்டளவில் வெளியூர் வாக்கு வங்கி உறுதியானது. முன்னதாக 2017இல் நடந்த தேர்தலில் பாஜக - சிவசேனை இரண்டும் கூட்டணியில் இருந்தன. கிட்டத்தட்ட சமமான இடங்களில் (84-82) அவை வென்றன. ஆயினும் தேர்தல் உடன்பாட்டின்படி மாநகராட்சியைத் தனதாக்கிக்கொண்டது சிவசேனை. இப்போது களம் மாறும்போது சூழல் என்னவாகும் என்று நடுக்கத்துக்கு உள்ளாகிறது.
  • பாஜக நேரெதிர் மனநிலையில் இருக்கிறது. சஞ்சய் பாண்டே, வித்யா தாக்கூர், ரமேஷ் தாக்கூர், ராஜ் ஹன்ஸ், கிருபாசங்கர் சிங் என்று பல இந்தி பிராந்திய தலைவர்களை அது மஹாராஷ்டிர கட்சியிலேயே முகங்களாகக் கொண்டிருக்கிறது. மேலும், உத்தர பாரத கிளை என்ற பெயரில் வட இந்தியர்களுக்கு என்றே தனி அணியையும் அது கட்சிக்குள் நடத்துகிறது. புலம் பெயர்ந்தோர் அதிகரிக்கும் இடங்களில் எல்லாம் பாஜக வெல்லும் சாத்தியம் அதிகரிக்கிறது. அதாவது, உள்ளூரில் உள்ளாட்சி அளவில்கூட உள்ளூர் மக்களுடைய நலன்களைப் பேசுவோர் இனி வெல்ல முடியாது என்ற சூழல் உருவாகிறது.
  • மஹாராஷ்டிரம், மும்பை, சிவசேனை - பாஜக எனும் பெயர்களை எல்லாம் கடந்து பார்த்தால் நாம் பேசிக்கொண்டிருக்கும் விவகாரம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுமே எதிர்கொள்ளும் ஓர் அச்சுறுத்தல் என்பது புரியவரும்.
  • எந்த ஒரு சமூகமும் புலம்பெயர்ந்தோரை அரவணைப்பதும், அவர்களுக்கான உரிமைகளை அளிப்பதும் முக்கியம். அதேசமயம், உள்ளூர் மக்களின் இயல்புரிமையைப் பாதித்திடாத வகையில் அது அமைந்திடுவதும் முக்கியம். எங்கிருந்து வருவோருக்கும் அவர்கள் வந்த வேகத்தில் ரேஷன் பொருள்களை வழங்குவதுபோல, நிலவுரிமையையும் வாக்குரிமையையும் வழங்கிடுவது சரிதானா என்ற கேள்வி மிகுந்த அர்த்தம் பொதிந்தது.
  • ஏன் இந்தியாவின் குடியுரிமையை மூன்றடுக்கு கொண்டதாக மாற்றிடக் கூடாது; நாட்டில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் எந்தப் பகுதிக்கும் செல்லலாம், வசிக்கலாம்; குறைந்தது பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என்று குறிப்பிட்ட காலகட்டம் வரை புதிதாகச் சென்ற மாநிலங்களில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அங்கு சொத்துரிமை, வாக்குரிமை வழங்கிடும் முறையை மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துடன் கலந்து முடிவெடுக்கும் முறையை இந்தியாவில் கொண்டுவரக் கூடாது?
  • உள்ளூராருக்கு முன்னுரிமை எனும் முறைமையும் சமூகநீதியின் ஒரு பகுதியாகும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது!

நன்றி: அருஞ்சொல் (04 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்