- உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதைப் போலவே, நமது மொத்த மக்கள்தொகையில் சுமார் 10 கோடி பேர் (8%) 60 வயதைக் கடந்தவர்கள். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் 30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இளைஞர்களை முன்னிலைப்படுத்தி நமது திட்டங்கள் வகுக்கப்படுவது எந்த அளவுக்கு நியாயமானதோ, அதேபோல முதியோர் நலன் குறித்தும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். கலாசார ரீதியாகவே முதுமைக்கும் அனுபவத்துக்கும் தலைவணங்கும் இந்தியப் பாரம்பரியம் தடம் புரண்டுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
- மருத்துவம், சுகாதாரம், உடல் நலம் குறித்த பிரச்னைகளில் மூத்த குடிமக்களுக்கான திட்டங்களை வகுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று ஏனைய பிரிவினர் எல்லோரையும்விட, இணை நோய் பாதிப்புகள் உள்ள முதியோரைத்தான் மிக அதிகமாக பாதித்திருக்கிறது. மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டிருப்பதைப் போலவே, வாழ்நாளும் அதிகரித்து வருகிறது என்கிற நிலையில், அதற்கேற்ற வகையில் திட்டங்கள் வகுத்தாக வேண்டும்.
- முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்குரைஞருமான அஸ்வனி குமார் உச்சநீதிமன்றத்தில் முதியோர் நலம் பேணல் குறித்து ஒரு வழக்குத் தொடுத்தார். "உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக கரோனா கொள்ளை நோய்த்தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அதிலிருந்து முதியோரைக் காக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெருந்தொற்றால் முதியோர் எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 -ஆம் தேதி உத்தரவிட்டது.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஒடிஸா, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களைத் தவிர, இதர மாநிலங்கள் செயல்படுத்தவில்லை என அஸ்வனி குமார் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள், அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் முதியோரை அனுமதிப்பதிலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று புதிதாக உத்தரவிட்டனர். இது தொடர்பாக மனுதாரர் அஸ்வனிகுமார் தெரிவித்துள்ள யோசனைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
- முதியோர் உதவித்தொகை பெறும் தகுதியுடைய அனைவருக்கும் அந்தப் பணம் முறையாகக் கிடைப்பதையும், அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்குவதையும் மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் அதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்பது அஸ்வனி குமார் புதிதாக தாக்கல் செய்த மனு மூலம் தெரிய வந்துள்ளது.
- இந்தியாவிலுள் முதியோரில் 70% பேர் ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் உணவுக்காக தங்களது வாழ்நாள் முழுவதும் உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிலும், குறிப்பாக வயதான பெண்களின் நிலைமைதான் மிக மோசமாக உள்ளது.
- வயது முதிர்ந்த பெண்களில் 66% பேர் தங்களது தேவைகளுக்காக மற்றவர்களைத்தான் முழுமையாகச் சார்ந்துள்ளனர். 32% மூதாட்டிகள் அவர்களுக்கென தனியாக சொத்துகள் எதுவும் இல்லாதவர்கள் என்பதால், வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் மூன்று வேளை உணவுக்கே பரிதவித்து வரும் இந்த முதியவர்களால் மருத்துவச் செலவினங்களை எப்படி எதிர்கொள்ள முடியும்?
- இந்தியாவில் கடந்த 1999-இல் முதியோருக்கான தேசியக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், முதியோர்களுக்கு ஓய்வூதியம், பொது விநியோகத்திட்டம் மூலம் உணவுப் பொருள்கள் கிடைப்பது போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும், முதியோரைப் பேணிக் காக்கும் பொறுப்பு அவர்களது உறவினர்களிடமே விடப்பட்டுள்ளது. இதனால், வறுமை நிலையில் உள்ள உறவினர்களால் முதியவர்களுக்கு முறையான உதவிகள் கிடைப்பதில்லை.
- முதியோர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என இந்திய அரசியல் சட்டத்தின் 41, 47-ஆவது ஷரத்துகள் குறிப்பிடுகின்றன. இதை உணர்ந்து, நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, முதியோரைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும்.
- முதியோரின் மிக முக்கியமான பிரச்னை மருத்துவ வசதி பெறுவது. எல்லா மருத்துவமனைகளிலும் முதியோர் நலப்பிரிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- தனிமை, முதுமையுடன் இணைந்து வரும் நோய்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை, உளவியல் ரீதியாக ஆதரவின்மை போன்ற பிரச்னைகள் பெரும்பாலான முதியோரை பாதிக்கின்றன. மருத்துவம் அவர்களது ஆயுள்காலத்தை நீட்டிக்கிறதே தவிர, மன அமைதியை உறுதிப்படுத்துவதில்லை என்பதை சமுதாயம் உணர வேண்டும்.
- இந்தப் பிரச்னைக்கு பொதுத்தீர்வு கிடையாது. இன்றைய இளமை, நாளைய முதுமை என்பதை உணர்வதுதான் இதற்குத் தீர்வு!
நன்றி: தினமணி (19 – 03 – 2021)