- "வேற்றுமையில் ஒற்றுமையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டிய அரசாங்கம், பொது சிவில் சட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி திசை திருப்புவது சரியல்ல. நடக்க பெரும் தூரம் உள்ளது, செய்ய பல வேலைகள் உள்ளன, பொது சிவில் சட்டம் இன்றைய தேதியில் வேண்டாத ஒன்று" என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
- “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஓர் இறையாண்மை மிக்க, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்திலும், வழிபாட்டிலும் சுதந்திரமும், தகுதி நிலை மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அனைவரிடமும் வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.” - இது நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் உள்ள விஷயம்.
- ஆக, சமத்துவத்தின் அடிப்படையிலேயே நம் நாடு ஜனநாயக நாடாக இருத்தல் வேண்டும். அதே சமயத்தில், ஒவொரு குடிமக்களுக்கும் அவர்களுடைய மத வழிபடுகளை செய்யவும் மதங்களை பின்பற்றவும் அடிப்படையான உரிமை உள்ளது. அதனால்தான் நம் நாட்டில் தனிப்பட்ட சட்டங்கள் (personal laws) அவரவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் இயற்றப் பட்டுள்ளன.
- பெருவாரியான மதத்தின் அடிப்படையில் இந்த சட்டத்தை மற்றுவதற்கான ஒரு முயற்சியே பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சி. பொது சிவில் சட்டம் என்பது மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது தவறான ஒன்றாகத் தெரியாது. மதத்தின் அடிப்படையில் ஏன் சிவில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்று வாதிடுவது மேலோட்டமாகப் பார்க்கும்போது சரியாகவே இருக்கும். சமத்துவம் என்பது பொதுவான சட்டத்தால் வருமா என்று பார்த்தால் அதற்கான பதில் வராது என்பதுதான்.
- சமமானவர்களுக்கு இடையே பொதுவான ஒரு சட்டம் இருக்கலாம். குற்றவியல் சட்டங்கள், வணிகவியல் சட்டங்கள் பொதுவானவையாக இருப்பதற்கான கரணம், மக்கள் யாவரும் குடிமக்களாக சம உரிமைகளை அனுபவிக்கிறார்கள்; அவர்களின் கடமைகளும், பொறுப்புகளும் சமமாக / பொதுவானதாக இருக்கும்; ஆகவே அவர்கள் பொதுவான குற்றவியல் / வணிகவியல் சட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
- குடும்ப விவகாரங்களான திருமணம், ஜீவனாம்சம், கூடி வாழ்வது, விவாகரத்து, குழந்தைகள் வளர்ப்பு / பாதுகாப்பு, சொத்துரிமை போன்ற அம்சங்கள் தனிமனிதர்கள் தொடர்புடையவை. இவை, அவர்கள் சார்ந்த மதங்களின் அடிப்படையிலேயே அணுகப்படுகின்றன. திருமணம் என்பது அவரவர் மதத்தின் சம்பிரதாயத்தின்படி செய்யப்படுகிறது. மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்குமான விசேஷ திருமணச் சட்டம், இந்திய வாரிசு சட்டம், காப்பாளர் மற்றும் காப்பிலுள்ளார் சட்டம் (Guardiana and Wards Act) போன்ற சட்டங்கள் உள்ளன.
- ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து வாரிசு சட்டம், ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் ஆகியவை ஹிந்துக்களுக்கு பொருந்தும். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், பார்ஸிகளுக்கும் தனியாக சட்டங்கள் உள்ளன. இவைபோக பொதுவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் ஜீவனாம்சம் பெறலாம். பெண்கள் குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் என்பதும் மதங்களுக்கு அப்பால் பொதுவாக எல்லோருக்குமானது.
- விசேஷ திருமணச் சட்டத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்தால் மதத்தின் அடிப்படையில் உள்ள எந்த சட்டமும் அவர்களை பாதிக்காது. அவர்கள் மதச்சார்பற்ற (secular) சட்டங்களின் ஆளுமைக்கு உட்படுவர். ஆகவே பொது சிவில் சட்டம் இன்றியே மக்கள் தங்கள் விருப்பப்படி அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலான சட்டங்களையோ பொதுவான சட்டங்களையோ தேர்வு செய்து கடைப்பிடிக்கும் உரிமை உள்ளபோது அரசாங்கம் அதை அகற்றி ஒரு பொது சிவில் சட்டம் கொண்டுவரத் தேவையில்லை.
- மேலும், பொது சிவில் சட்டம் என்று நமது மத்திய அரசு சொல்வது ஹிந்து மதவாதிகளின் விருப்பு வெறுப்புக்களை மற்ற மதத்தவரின் மேல் திணிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது. இது ஒற்றுமையாக இருக்கும் சமூகத்தை பிரிக்கும். சிறுபான்மையினருடைய சந்தேகத்துக்கு உள்ளான சட்டங்கள் தேவையற்றவை.
- சமூக நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் நமது ஜனநாயகக் கடமையாகப் பார்க்கவேண்டிய ஒன்றிய அரசு, அவற்றை சீர்குலைக்கும் முயற்சியாக பொது சிவில் சட்டத்தை முன்வைக்கிறது. இந்த தேன் பூசிய பேச்சுக்கு மக்கள் செவிசாய்க்கக்கூடாது. ஏற்கனவே பிளவுபட்டு இருக்கும் நம் சமூகத்தை மேலும் எரியூட்டி பிரிக்கும் முயற்சியில் ஈடுபடாமல், மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டு மதச்சார்பற்றவர்களாக்கினால் போதும். இதன்படியே நாம் மதப்பிரிவினைகள் இல்லாத சட்டங்களைக் கையாண்டு மற்ற சட்டங்களை தேவையற்றதாக்க முடியும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 51A-ல் அடிப்படைக் கடமைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. மத, மொழி மற்றும் பிராந்திய அல்லது பிரிவு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் பொதுவான சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்துதல், நமது கலப்பு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை மதித்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றவை அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஆகவே, வேற்றுமையில் ஒற்றுமையை பாதுகாத்து அரசை நடத்திச்செல்வதில் கவனம் செலுத்தவேண்டிய அரசாங்கம், பொது சிவில் சட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி திசை திருப்புவது சரியல்ல. ஊடகங்களும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து 'பொதுவில்' உள்ள மாயை நிஜத்தில் இல்லை என்று இயம்புவது கடமை. நடக்க பெரும் தூரம் உள்ளது, செய்ய பல வேலைகள் உள்ளன, பொது சிவில் சட்டம் இன்றைய தேதியில் வேண்டாத ஒன்று.
நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)