இன்றைய தேவை: இந்த முக்கோணம்!
- நம்முடைய சமூக அமைப்பில் மூன்று முக்கியக் கூறுகள் இருக்கின்றன. ஒன்று, மக்களாகிய நுகர்வோர்; இன்னொன்று, அவர்களுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்; மூன்றாவது, தொழிலகங்களை நடத்துவதற்குத் தேவையான மனித சக்தியைத் தயாரிக்கும் கல்விக்கூடங்கள்.
- இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய நிலையில் சமூகம் எப்படி இருக்கிறது என்று தொழிற்சாலைகளுக்குத் தெரிவதில்லை; தொழிற்சாலைகளுக்குத் தேவையான மனித சக்தி என்ன என்று கல்விக்கூடங்களுக்குத் தெரியவில்லை; கல்விக்கூடங்களில் உற்பத்தியாகும் மாணவர்களுக்குத் தொழிற்சாலையும் தெரிவதில்லை; சமூகமும் தெரிவதில்லை. இந்த மூன்றும் இணைந்திருக்காத ஒரே காரணத்தினால்தான் சமூக விரோத சக்திகளாலும், நம்மைத் தவறாக வழிநடத்த நினைக்கின்றவர்களாலும் வெகு எளிதாக எல்லோரையும் திசைதிருப்ப முடிகிறது. இதனை எப்படிச் சரிசெய்வது?
தொழிலகங்கள் - கல்விக்கூடங்கள்:
- இந்தப் பிணைப்பு மிக அடிப்படையானது. மாணவர்களுக்கு இணையவழியாக உலக விஷயம் தெரிந்த அளவுக்கு அவர்களைச் சுற்றி எத்தனை தொழிற்சாலைகள் இருக்கின்றன என்று தெரிவதில்லை. அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் தனியார் - அரசுசார் தொழிற்சாலைகளுக்குப் போயிருக்கிறார்களா? அவர்களை அழைத்துச்செல்லப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் முயற்சி எடுத்திருக்கின்றனவா? தொழிற்சாலைகள் எப்படிச் செயல்படுகின்றன என்கிற அடிப்படை மாணவர்களுக்குத் தெரியாத காரணத்தினால்தான், தொழிற்சாலைகளின் செயல்பாட்டால் பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்லி முடக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதுதான் நம்முடைய மரபு. மாணவர்களுக்கு உழவு எப்படி நடக்கிறது, தொழில் எப்படி நடக்கிறது என்கிற அடிப்படை தெரிய வேண்டும். அப்போதுதான் இவை ஒன்றை ஒன்று பாதிக்கின்ற விஷயங்கள் அல்ல என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியவரும். இனிமேலும் பாதிக்காத வண்ணம் செயல்பட நவீனத் தொழில்நுட்பங்களை இன்னும் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற உத்வேகமும் வரும்.
- அதற்கு அருகில் இருக்கின்ற தொழில் வளாகங்களுக்குப் போக வேண்டும். இந்த நிறுவனங்கள் மாணவர்களுக்காக ஆலைப் பயிற்சி (In-plant training), கோடைக்காலப் பயிற்சி (Summer Training), தொழில் பயிற்சி (Apprentice Training), பணியிடப் பயிற்சி (Internship) போன்றவற்றை வழங்குகின்றன. தொழிற்சாலையைச் சுற்றிப்பார்க்கும் வசதியும் (Industrial visit) செய்துதருகின்றன. ஆய்வுத்திட்டம் (Project) செய்ய நினைத்தால் அதற்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், பல முன்னேற்றங்கள் சாத்தியமாகும்.
தொழிலகங்கள் – சமூகம்:
- இவை இரண்டும் ஒன்றிணைய வேண்டும். முன்பெல்லாம் தொழிலகங்கள் தனி அமைப்பாக, தன்னிச்சையாக இயங்கிவந்தன. இப்போது கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் (Corporate social responsibility -CSR) என்கிற பெயரில் சமூகத்துடன் ஏதாவது ஒரு வகையில் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என்கிற சட்டமே வந்துவிட்டது. அதன்படி, எந்தத் தொழிலகமாக இருந்தாலும், அவர்களுடைய லாபத்தில் ஒரு பகுதியைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் செலவழித்தாக வேண்டும்.
- மருத்துவமனைகளில் குடிநீர் வழங்கும் இயந்திரங்கள், மருத்துவ முகாம்கள், பல பள்ளிகளில் வகுப்பறைகள் / கழிப்பறைக் கட்டிடங்கள், மருத்துவமனைகளுக்குத் தேவையான கருவிகள், பல இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள், கிராமங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், சீரமைக்கப்பட்ட குளங்கள், படித்துறைகள், விபத்துகள் நடக்க வாய்ப்புள்ள புறவழிச்சாலைச் சந்திப்புகளில் உயர்கோபுர மின்விளக்குகள், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள், பொது சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், சிறிய கிராமப் பகுதிகளில் சமுதாய நலக் கூடங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய்க்குத் திட்டங்கள் பல்வேறு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கல்விக்கூடங்கள் – சமூகம்:
- மாணவர்கள் எப்போதாவது காவல் நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேசி இருக்கிறார்களா? உறவினர்களுக்கான உடல்நலப் பிரச்சினை இல்லாத நிலையைத் தாண்டி, அரசு பொது மருத்துவமனைகளுக்குள் சென்றிருக்கிறார்களா? எத்தனை வகை நோயாளிகள் வருகிறார்கள்; அவர்களைச் செவிலியர்களும் மருத்துவர்களும் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள் என்று கவனித்திருக்கிறார்களா? முதியோர் இல்லங்களுக்கு, சிறப்புக் குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குப் போயிருக்கிறார்களா? உழவு நடக்கும் இடங்களுக்குப் போய் விவசாயிகளிடம் பேசி இருக்கிறார்களா? இவை எல்லாம் எந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் எதிர்காலத்துக்கு ஒரு பாதை போட்டுத் தருவதற்கான விஷயங்கள் என்பது அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறதா? இன்னும் சொல்லப்போனால் அவர்களில் எத்தனை பேர் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காகப் படிவம் நிரப்புவது தவிர, வேறு காரணங்களுக்காக வங்கிகளுக்குச் சென்றிருக்கிறார்கள்?
- மாணவப் பருவத்திலேயே இவற்றையெல்லாம் பழகிக்கொண்டால், கல்வி முடித்து வெளியே வரும்போது மலைப்போ அச்சமோ இல்லாமல் ‘எனக்குத் தெரிந்த சமூகம்தானே’ என்கிற ஒரு ஒட்டுதல் வரும். இதில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஓரளவுக்கு முடிவுசெய்திருப்பார்கள்; அதற்குப் பிறகு எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.
- இவற்றைச் செய்துவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்விக்கூட நிர்வாகத்துக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் தொழிலகங்களிலிருந்து யாரையாவது மாதம் ஒரு முறையாவது அழைத்து ஒரு வகுப்பு நடத்துவது அவசியம். தொழில் சார்ந்த ஒரு விஷயம் குறித்து மாணவர்களிடம் அவர்கள் உரையாற்ற வேண்டும்; விளக்கிச் சொல்ல வேண்டும். அப்போது சமூகப் பற்றுடன் கூடிய மாணவ சமூகம் உருவாகும். இந்த மூன்று அங்கங்களையும் ஒன்றிணைப்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2024)