- ஜனவரி 19, 1956 அன்று இரவில் ஆயுள் காப்பீட்டைத் தேசியமயமாக்கவும், 243 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவும் வகைசெய்யும் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதலும் பெறப்பட்ட தகவல் வெளியானது. அதுவரைக்கும் அந்த அறிவிப்பை மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார் அன்றைய மத்திய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக்.
- அடுத்த நாள், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டபோது, அதிர்ச்சிகள் காத்திருந்தன. அந்நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையே பொறுப்பாளராக்கி, மத்திய அரசு பணிநியமன ஆணைகளை வழங்கியது.
- காப்பீடு குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டது. தேசியமயமாக்கும் நடவடிக்கை இவ்விதமாக ஒரு சில மணி நேரங்களிலேயே நடந்து முடிந்தது. அடுத்துவந்த ஒவ்வொரு வார இறுதியிலும் மும்பையில் இருந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போதைய நிதிச் செயலரும் எல்ஐசியின் தலைவருமான ஹெச்.எம்.படேல் அந்தக் கூட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார்.
ஊழியர்கள் நியமனம்
- ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களின் விவரங்களும் திரட்டப்பட்டன. செப்டம்பர் 1, 1956 அன்று எல்ஐசியைத் தொடங்குவதற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் காப்பீட்டு நிறுவன ஊழியர்களை எல்ஐசியின் ஊழியர்களாகப் பணியில் நியமிக்கவும் ஏற்பாடானது.
- ஊழியர்களும் தாங்கள் நியமிக்கப்படுகிற இடத்தில் பணிபுரியத் தயாராகவே இருந்தார்கள். ஆயுள் காப்பீட்டைத் தேசியமயமாக்குவது குறித்தும், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனத்தை உருவாக்குவது குறித்தும் தனித்தனியாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. செப்டம்பர் 1, 1956 அன்று எல்ஐசி தொடங்கப்பட்டது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 97 மையங்களில் மட்டுமே செயல்பட்டுவந்தன. எல்ஐசியின் தொடக்கமோ 5 பிராந்திய அலுவலகங்கள், 33 கோட்டங்கள், 200 கிளைகள் என்று நாடு முழுவதையும் இணைத்துவைத்தது.
ஏழைகளின் பாதுகாவலன்
- இந்திய மக்கள் அனைவரிடமும் காப்பீட்டைப் பரப்புவதும் எல்ஐசி தொடங்கப்பட்டதற்கான நோக்கங்களுள் முக்கியமானது. இந்திய மக்களில் பெரும் பகுதியினர் குறைந்த வருவாய் கொண்டவர்களே. அவர்களுக்கும் காப்பீடு அளிப்பதால்தான் எல்ஐசியின் சராசரிப் பிரிமிய வருவாய் ரூ.13,127 ஆக உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே காப்பீடு அளிப்பதால்தான் அவற்றின் சராசரிப் பிரிமிய வருவாய் ரூ.56,383 ஆக உள்ளது. சரியாகச் சொன்னால், செலவு குறைவான இந்தப் பெரிய பிரிமியங்களும் எல்ஐசியிடம் வந்திருந்தால், அரசுக்குக் கூடுதல் நிதியும் லாபமும் பாலிசிதாரர்களுக்குக் கூடுதல் போனஸும் கிடைத்திருக்கும்.
நொடிக்கு நொடி...
- 2018-19 நிதியாண்டில் பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி வழங்கியுள்ள தொகை ரூ.1.63 லட்சம் கோடி. அதாவது, வேலை நாளின் ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சம் பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி பாதுகாப்பாகத் திருப்பி அளித்துக்கொண்டிருக்கிறது. பணம் பெற்றவர்கள் 2.6 கோடிப் பேர். அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் 4.34 பேருக்கு எல்ஐசி பணம் வழங்குகிறது.
காப்பீட்டின் உண்மையான பலன்
- பாலிசி எடுக்கும்போது நோய்களை மறைத்தல் உள்ளிட்ட காரணங்களால் இறந்த பின் காப்பீட்டுத் தொகை மறுக்கப்படலாம். கடந்த ஆண்டில் அவ்வாறு எல்ஐசியால் 10 ஆயிரத்துக்கு 67 என்ற விகிதத்தில் உரிமங்கள் மறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தனியாரால் 10 ஆயிரத்துக்கு 397 என்ற விகிதத்தில் உரிமங்கள் மறுக்கப்பட்டுள்ளன. எப்படியாவது மக்களுக்கு வழங்கிவிடுவது எல்ஐசியின் நோக்கமாக இருப்பதையே இது காட்டுகிறது.
உலகிலேயே நம்பர் 1
- எல்ஐசியின் நடப்பிலுள்ள பாலிசிகள் 29.09 கோடி. 11.61 கோடி குழுக் காப்பீட்டுப் பாலிசிதாரர்களையும் சேர்த்தால் மொத்தம் 40.7 கோடிப் பேருக்கு எல்ஐசி காப்பீடு அளித்துள்ளது. 142 கோடி மக்களைக் கொண்ட சீனா, 134 கோடி மக்களைக் கொண்ட இந்தியா ஆகியவற்றுக்கு அடுத்து எல்ஐசியின் பாலிசிதாரர் எண்ணிக்கையே அதிகம்! மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான அமெரிக்காவின் 33 கோடி மக்கள்தொகையைவிட எல்ஐசியின் பாலிசிதாரர்கள் எண்ணிக்கை 23.7% அதிகம். உலகிலேயே மிக அதிகம் பேருக்குக் காப்பீடு வழங்கியுள்ள நிறுவனம் எல்ஐசிதான்.
நன்றி: இந்து தமிழ் திசை (28-02-2020)