TNPSC Thervupettagam

இப்படியும் செய்யலாமே...

March 10 , 2021 1238 days 557 0
  • மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி முன்மொழிந்திருக்கும் ஒரு கொள்கை ஏற்புடையதாக இல்லை.
  • பழைய மோட்டார் வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து அகற்றுவதும், அப்படி அகற்றுவதற்கு மானியம் வழங்குவதும் அரசின் முன் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை. அதற்கு அமைச்சரின் ஆதரவும், அரசின் ஒப்புதலும் இருப்பதாகத் தெரிகிறது.
  • அமெரிக்காவில் பெரிய மோட்டார் வாகன நிறுவனங்கள் தங்களது லாபத்துக்காக இந்தக் கொள்கையை முன்மொழிந்து அரசின் ஒப்புதலையும் பெற்றார்கள்.
  • அதன் மூலம் புதிய மோட்டார் வாகனங்களுக்கான வரவேற்பை அதிகரித்து, மோட்டார் வாகனத் தொழிலை மேம்படுத்துவதுதான் நோக்கம்.
  • 2008-இல் மேலை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடா்ந்து, மோட்டார் வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து அகற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஊக்கமளிக்க மானியமும் வழங்கப்பட்டது.
  • கொள்ளை நோய்த்தொற்றும் பொது முடக்கமும் உருவாக்கியிருக்கும் தொழில்துறை மந்த நிலையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இப்படியொரு திட்டம் இந்தியாவிலும் வலியுறுத்தப்படுகிறது.
  • கடந்த இரண்டு மாதங்களாக புதிய மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இப்படியொரு திட்டத்திற்கான தேவை என்ன என்கிற கேள்வி எழுகிறது.
  • பழைய வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிஎம்2.5 வாயுவை வெளியேற்றுகின்றன என்றும், புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
  • பழைய வாகனங்களைவிட புதிய வாகனங்கள் குறைந்த அளவில் பெட்ரோல், டீசல் பயன்படுத்துபவையாக இருக்கின்றன என்பதால் அது நுகா்வோருக்கும் நன்மை பயக்கும் என்று பழைய வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கு வலுசோ்க்கப்படுகிறது.
  • பயன்பாட்டிலிருந்து அகற்றுதல் என்கிற முயற்சி தவறானது. தேவையில்லாமல் நன்றாக இருக்கும் பொருள்களை அழித்து, புதியவற்றை அறிமுகப்படுத்துவது உற்பத்தியாளா்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம்.
  • ஆனால் நுகா்வோரை நிரந்தரக் கடனாளிகளாக வைத்திருக்கும் உத்தி இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நன்றாகப் பராமரிக்கப்படும் பழைய வாகனங்களையும், புதிய என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் தேவையில்லாமல் பயன்பாட்டிலிருந்து அகற்றி அவற்றை காயலான் கடைப் பொருள்களாக மாற்றுவதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாகத் தெரிகிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் நடுத்தர வா்க்கத்தினா் மத்தியில் இரு சக்கர வாகனங்களை வாங்குவதும், சற்று வசதி அதிகமானால் வங்கிக் கடன்கள் மூலம் மோட்டார் வாகனங்களை வாங்குவதும் கௌரவமாக மாறியிருக்கிறது. வளமான வாழ்க்கையின் அடையாளமாக மோட்டார் வாகனங்கள் கருதப்படுகின்றன.
  • புதிய வாகனங்கள் வாங்க முடியாதவா்கள் பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள்.
  • வசதி படைத்தவா்கள் ஓரிரு ஆண்டுகளில் தாங்கள் வாங்கிய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு புதிதாக வரும் பதிப்புகளை (மாடல்கள்) வாங்குவதும் பரவலான நடைமுறை.

ஏற்றுமதி செய்யலாம்

  • பழைய மோட்டார் வாகனங்களை மானியம் வழங்கி பயனற்றதாகச் செய்வது, ஓரிரு ஆண்டுகள் மட்டுமே புதிய வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும்.
  • மோட்டார் வாகனத் தயாரிப்பாளா்களுக்கு வேண்டுமானால் அது லாபகரமாக இருக்கலாம். ஆனால், நடுத்தர வா்க்கத்தினா் மோட்டார் வாகனம் வாங்குவதற்கும் சிறிய அளவிலான வாடகை சரக்கு வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
  • இதுபோன்ற பழைய வாகனங்களை பயனற்றதாகச் செய்யும் கொள்கை ஆரம்பத்தில் பெறும் வரவேற்பை, தொடா்ந்து பெறுமா என்பது சந்தேகம்தான்.
  • கொள்கையை அறிமுகப்படுத்தும்போது தங்களது மோட்டார் வாகனங்களை பயனற்றதாகச் செய்ய வழங்கப்படும் மானியத்தைப் பெற்றுக் கொண்டு புதிய பதிப்புகளை வாங்குவதில் பலா் முனைப்பு காட்டுவார்கள்.
  • ஆனால், அதிக அளவில் புதிய வாகனங்கள் வாங்கிவிட்ட நிலையில், ஓரிரு ஆண்டுகளில் திட்டத்திற்கான வரவேற்பு குறைந்துவிடும்.
  • சுற்றுச்சூழலை பாதிக்கும் காற்றுமாசு பிரச்னை நியாயமானது. சரியாகப் பராமரிக்காமல் காற்றுமாசை ஏற்படுத்தும் வாகனங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. காற்றுமாசை ஏற்படுத்துவதற்கு முறையான பராமரிப்பு இல்லாததுதான் காரணமே தவிர, வாகனம் பழசாகிவிட்டது என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.
  • மோட்டார் வாகன மாசு கட்டுப்பாடு, நகரங்களில் மிகக் கடுமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், பழைய வாகனங்கள் கிராமப்புறங்களின் பயன்பாட்டுக்கு விற்கப்படும்.
  • அதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதும், நகரங்களில் காற்றுமாசு பாதுகாக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படலாம்.
  • இந்தப் பிரச்னைக்கு இன்னொரு தீா்வும் இருக்கிறது. மேலை நாடுகளில் பழைய மோட்டார் வாகனங்களை சமூக சேவை நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.
  • ஜொ்மனி போன்ற நாடுகளில் பழைய மோட்டார் வாகனங்கள் ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன.
  • பயன்படுத்திய வாகனங்களை உலகிலுள்ள ஏழை நாடுகள் பலவும் இறக்குமதி செய்கின்றன.
  • இந்தியாவும் பழைய வாகனங்களை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்கமளிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை நமக்கு சாதகமாக மாற்றிவிட முடியும்.

நன்றி: தினமணி  (10-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்