- நடப்பாண்டில் ஒன்பது மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களும், அடுத்த ஆண்டில் மக்களவைக்கான தோ்தலும் நடைபெற இருக்கும் நிலையில், மிகவும் கவனமாகவும், அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலும் பட்ஜெட் அமைந்தாக வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க புதிய வழிமுறைகளை நிதியமைச்சகம் ஆராய்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை.
- தோ்தல் கால நிதிநிலை அறிக்கை என்பதால் சலுகைகளும், மானியங்களும் வாரி வழங்கப்பட வேண்டிய சூழலில் புதிய வரிகள் என்பது அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும். அத்தகைய சூழலில் நிதியாதாரத்தை பெருக்குவது குறித்து மட்டுமல்லாமல், வரி வருவாயை முறையாக வசூலிப்பது குறித்தும் நிதியமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். ஜிடிபி-க்கும், வரி வருவாய்க்கும் இடையேயான விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.
- வரி ஏய்ப்பையும், வரி செலுத்தாமல் தவிா்ப்பதையும் தடுக்க முடியுமானால், அதன் மூலம் அந்த விகிதத்தை அதிகரிப்பது சாத்தியம். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வரம்புக்கு அதிகமான வருவாய்க்கு வருமான வரி விதிப்பது; ஜிஎஸ்டி ஏய்ப்பைத் தடுப்பது; மாத ஊதியம் பெறாதவா்களின் வருமான வரி வரவை அதிகரிப்பது; பன்னாட்டு வா்த்தக வரி துஷ்பிரயோகத்தைத் தடுப்பது; சட்டவிரோதமான வணிகம்; கடத்தல் ஆகியவற்றால் ஏற்படும் வரி இழப்பைக் கட்டுப்படுத்துவது ஆகிய ஐந்தும் அரசின் வரி வருவாயைக் கணிசமாக உயா்த்தக்கூடும்.
- இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 45% போ் ஈடுபடும் வேளாண் துறை, ஜிடிபி-யில் வெறும் 18% மட்டுமே பங்களிக்கிறது. விவசாயத்திலிருந்து பெறும் வருமானத்துக்கு எந்தவித வரம்பும் இல்லாமல் வரி விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி கணக்கில் வராத பணத்தையெல்லாம் விவசாய வருமானமாக காட்டி வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிலதிபா்கள், வணிகா்கள், சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கணக்கில் வராத பணத்தை விவசாய வருமானமாக காட்டுவதற்கும், வருமான வரி வரம்பிலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கும் முனைகிறாா்கள்.
- நீண்டகாலமாகவே பெரும் நிலச்சுவான்தாா்களின் விவசாய வருமானத்தை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை நிலவுகிறது. இதுவரை எந்தவோா் அரசும் அதற்குத் தயாராகவில்லை. கட்சி பேதமில்லாமல் பெரும்பாலான அரசியல்வாதிகளும் இதன் மூலம் பயனடைகிறாா்கள் என்பதும்கூட அதற்குக் காரணம். சாமானிய விவசாயி பாதிக்கப்படாமல், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கணக்குக் காட்டப்படும் விவசாய வருமானம், வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
- ஜிஎஸ்டி வருவாய் தொடா்ந்து அதிகரித்து வருவது என்னவோ உண்மை. பொருளாதாரம் முறைப்படுத்தப்படுவதன் அடையாளம் அது என்பதை மறுப்பதற்கில்லை. அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் எண்மப் பரிமாற்றத்தால் வங்கிப் பரிமாற்றங்களாக மாறியிருப்பது அதற்குக் காரணம். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அனைத்துப் பொருள்களின் மீதான வரிகளும் ஓரளவுக்கு வசூலாகின்றன.
- பாஸ்டேக், ஆதாா், கடவுச் சீட்டு, பான் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டு எண்ம பணப் பரிவா்த்தனை செயல்படுவதால், வரி வசூல் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் சரக்கோ, சேவையோ வழங்கப்படாமல் போலியான பில்கள் மூலம் ஜிஎஸ்டி ஏய்ப்பு நடைபெறாமல் இல்லை. குறிப்பாக, ஜிடிபி-யில் 5% பங்களிக்கும் கட்டுமானத் துறையில் மிக அதிகமான ஜிஎஸ்டி ஏய்ப்பு காணப்படுகிறது.
- மத்திய அரசின் வரி வருவாயில், தனிநபா் வருமான வரியின் பங்களிப்பு வெறும் 15% மட்டுமே. 2018 - 19 பட்ஜெட் உரையில், சராசரி மாத ஊதியதாரா், சம்பளம் பெறாத சுயதொழில் செய்பவா்களைவிட மூன்று மடங்கு வரி செலுத்துவதாக நிதியமைச்சரே குறிப்பிட்டாா். அதிக அளவிலான வருமான வரி செலுத்துவோரும்கூட, வரி வரம்பில் சிக்காத அளவிலான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்கிறாா்கள். ஜிஎஸ்டியை முறைப்படுத்துவதன் மூலம் சுயதொழில் செய்பவா்கள், வா்த்தகா்கள், வியாபாரிகள் ஆகியோரின் உண்மையான வருவாய் அறியப்பட்டு, மாத ஊதியம் பெறாதவா்களின் வருமான வரி வசூலை அதிகரிப்பது அவசியமான செயல்பாடு.
- தங்களது லாபத்தை சாதுரியமாக குறைந்த வரி அல்லது வரி இல்லாத நாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் பன்னாட்டு வணிகா்கள் வரி துஷ்பிரயோகம் செய்கிறாா்கள். இந்தியாவிற்கான இறக்குமதிகளும், இந்தியாவிலிருந்தான ஏற்றுமதிகளும் அதுபோன்ற நாடுகளின் மூலம் நடத்தப்பட்டு நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கலால் வரி மடைமாற்றம் செய்யப்படுகிறது.
- 2020 - 21-இல் மட்டும் பன்னாட்டு வா்த்தக வரி துஷ்பிரயோகத்தால் இந்தியா ரூ.75,000 கோடி இழப்பைச் சந்திக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல புகையிலைப் பொருள்கள் (ரூ.13,331 கோடி), மதுபானம் (ரூ.15,262 கோடி) கடத்தல் மூலம் வரி இழப்பு ஏற்படுகிறது. அந்தப் பொருள்களின் மீதான கலால் வரியைக் குறைப்பதன் மூலம் இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். அவை மட்டுமல்லாமல் கைப்பேசிகளும், நுகா்வோா் பொருள்களும்கூட கடத்தல் மூலம் வரி வருவாய் இழப்புக்குக் காரணமாகின்றன.
- வரி வருவாயை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே வரி வருவாய் இழப்பைத் தடுப்பது அவசியம் என்பதும் நிதியமைச்சருக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நன்றி: தினமணி (23 – 01 – 2023)