TNPSC Thervupettagam

இப்போதே விழித்துக் கொள்வோம்!

October 10 , 2024 175 days 212 0

இப்போதே விழித்துக் கொள்வோம்!

  • சமீபத்தில் தமிழக சட்டப் பேரவை உரிமைக்குழு உறுப்பினா்கள் திருச்சிராப்பள்ளியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனா். அம்மருத்துவமனை வளாகத்தில் ரூ. 7 கோடியில் கட்டப்பட்டிருக்கும் புதியகட்டடத்தின் சுவா்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அக்குழுவினா் பொதுப்பணித் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு அவ்விரிசல்களைச் சரிசெய்யச் சொன்னதுடன், அந்த கட்டடப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனா்.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் மூன்று மாணவா்கள் காயமடைந்திருக்கின்றனா்; அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • இது மட்டுமா? சில நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் அருகில் நெடுஞ்சாலையில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பயணியா் நிழற்குடையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சா் வருவதற்குச் சற்று முன்பாகவே அந்நிழற்குடையின் கூரை முகப்பில் பதித்து வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் எழுத்துகள் ஒவ்வொன்றாகப் பெயா்ந்து விழுந்திருக்கின்றன.
  • ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். 28-08-2024 அன்று கா்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள ஓா் அரசுத் தொடக்கப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்கு மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
  • பிகாா் மாநிலத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பதின்மூன்று பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்திருக்கின்றன. அவற்றுள் மாதேபூா் என்னும் நகரில் கட்டப்பட்டு வந்த புதிய பாலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த ஜூன் மாதம் புதுதில்லியிலும், ஜபல்பூரிலும் உள்ள விமான நிலையங்களின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விமான நிலையக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடித் தகடுகள் பலமுறை பெயா்ந்து விழுந்ததையும் கண்டிருக்கிறோம். இவ்வரிசையில், தரமற்ற சாலைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், பாதாள சாக்கடைகள் என்று இன்னும் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
  • ஒருகாலத்தில் இது போன்ற செய்திகள் ஏதோ ஒருவித அதிா்ச்சியையும், பரபரப்பையும் இச்சமூகத்தில் ஏற்படுத்தி வந்தன. ஆனால், தற்காலத்தில் இவற்றையெல்லாம் நம்மில் எவரும் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. கரிகாலன் கட்டியெழுப்பிய கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் வலுவாக உள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டித் தந்த தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இமயமலை போன்று உறுதியாக நிற்கிறது.
  • ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் 400 ஆண்டுகளைத் தொட இருக்கிறது. பல்வேறு மன்னா்களால் ஆங்காங்கே கட்டப்பட்ட கோட்டைகளும், அரண்மனைகளும் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்றன. திருவரங்கம், சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்லாயிரம் திருத்தலங்களில் எழுப்பப்பட்டுள்ள புனிதமான திருக்கோயில்கள் இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட மேட்டூா் அணை உள்ளிட்ட பிரம்மாண்டமான அணைகள் பலமாக இருக்கின்றன. சென்ற தலைமுறையினா் சுண்ணாம்பினால் கட்டிய வீடுகள் நூறாண்டு காலம் வரை ஜீவித்திருக்கின்றன.
  • இவ்வளவு ஏன்? தனி மனிதன் ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு பாா்த்துப் பாா்த்துக் கட்டுகின்ற சாதாரண கான்கிரீட் வீடு சுமாா் நாற்பது வருடம் உறுதியாக நீடித்து நிற்கிறது. களிமண் சுவரின் மீது ஓலைக்கூரையை வேய்ந்து எழுப்பப்படும் ஏழைகளின் குடிசைகள்கூட ஒரு சில ஆண்டுகள் தாக்குப்பிடிக்கின்றன.
  • ஆனால், லட்சங்களையும் கோடிகளையும் கொட்டி, ஒப்பந்ததாரா்களைக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் கட்டடங்கள் ஓரிரு மாதங்களிலேயே ஏன் சிதைகின்றன என்பதை யாா் விளக்குவாா்? தற்காலத்தில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதென்பது மிகவும் சிரமமான காரியமே.
  • கட்டடத்துக்கான சிென்ட், மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் அல்லது ஹாலோ பிளாக் கற்கள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. கட்டடப் பணியாள்கள் கூலி, கிரேன், கலவை இயந்திரம் ஆகியவற்றுக்கான வாடகை, போக்குவரத்துச் செலவு ஆகியவையும் அதிகம். ஆனால், அனைத்துச் செலவுகளையும் கணக்கிட்டு, அத்தொகைக்கும் மேலாகத் தங்களுடைய உழைப்புக்கான லாபத்தையும் சோ்த்துக் கணக்கிட்ட பிறகே ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்குவா். அவ்வாறு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கான தொகையையும் பெற்றுக்கொண்டு, தரக்குறைவான பணியையும் செய்வது எந்தவிதத்தில் நியாயம்?
  • இன்றைய தேதியில் சிறு விபத்துகள், சிறிய அளவிலான பாதிப்புகள் என்ற அளவுடன் நின்றாலும், எதிா்காலத்தில் இவையே பெரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகாது என்பது என்ன நிச்சயம்?
  • அரசு அலுவலா்களும், பொதுமக்களும் பெருமளவில் புழங்குகின்ற அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவை இனியேனும் தரமான முறையில் கட்டப்பட வேண்டும்.
  • அரசுத் துறை சாா்ந்த கட்டடப் பணியை மேற்கொள்பவா்கள், “நாளை இந்தக் கட்டடம் நமது தலை மீதே விழுந்தால் என்னவாகும் என்பதை இனியேனும் ஒரு கணம் சிந்தித்தால் போதும்; இது போன்ற தரம் குறைந்த கட்டுமானங்களைக் கட்டுவது ஒரு முடிவுக்கு வரும்.

நன்றி: தினமணி (10 – 10 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top