TNPSC Thervupettagam

இயக்கம் எனும் குடும்பம்

August 14 , 2019 1971 days 1097 0
  • இயக்கத்தினரைக் குடும்பத்தினராகக் கருதிச் செயல்பட்டவர் அண்ணா. சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரி, கடைசிக் காலத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். அப்போது, அவரது சிகிச்சைக்குப் பணம் திரட்டுவதற்காக, “என்னைக் கூட்டங்களுக்கு அழைப்போர் அழகிரியின் பெயரில் 100 ரூபாய்க்குப் பணவிடை அனுப்பிவிட்டு ரசீதை அனுப்பிவைக்க வேண்டும்” என்று கூறித் திரட்டினார்.
  • பாரதிதாசனுக்கும் இப்படி ஒரு பொற்கிழி கிடைக்க உதவினார். கலைவாணருக்கும் அண்ணாவுக்குமான உறவு உன்னதமானது. ‘நல்லதம்பி’ படத்துக்கு, சம்பளம் வாங்காமல் வசனம் எழுதிய அண்ணா, அதற்குப் பரிசாக என்.எஸ்.கே. தந்த காரையும் வாங்க மறுத்துவிட்டார். தன் மரணத்துக்கு முன் 
    என்.எஸ்.கே. கடைசியாகப் பங்கேற்றது, அண்ணா படத்திறப்பு விழாவில். அண்ணா கடைசியாகப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி கலைவாணர் சிலை திறப்பு விழா.

உடல்நலனில் கோட்டைவிட்ட அண்ணா

  • ஒரு தலைவன் தன் உடல்நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் கோட்டைவிட்டவர் அண்ணா. 1964-ல் சட்ட எரிப்பு வழக்கில் கைதாகிச் சிறையில் இருந்தவர், இடது கை வலியால் கடுமையாக அவதிப்பட்டார். கட்சிக்காரர்கள் கொண்டுவந்து கொடுத்த தைலங்கள், சிறையில் கொடுத்த மாத்திரைகள் எதனாலுமே வலி சரியாகவில்லை. வலது கைக்கும் வலி பரவி, போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். காரணம் கண்டுபிடிக்க முடியாத டாக்டர்கள், “இது மெல்ல மெல்ல தன்னால்தான் போக வேண்டும். கொஞ்சம் தேகப்பயிற்சி செய்யலாம், வலி அதிகமாகும்போது ஒத்தடம் கொடுக்கலாம்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
  • தினமும் மூன்று வேளை நோவால்ஜின் சாப்பிட்டு வலியைச் சமாளித்தார். மே மாதம் 7-ம் தேதி சலிப்படைந்துபோய் எல்லா மருத்துவ முறைகளையும் கைவிட்டார் அண்ணா. 3 ஆண்டுகள் கழித்து கழுத்தின் பின்புறம் கட்டிகள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. காலம் கடந்துவிட்டதால், அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. அண்ணாவின் உறவினர் ஒருவர் புற்றுநோயால் இறந்ததைச் சொல்லி, காஞ்சிபுரத்தில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அண்ணா. அவரது மரணத்தைத் தொடர்ந்து அங்கே அவரது பெயரிலேயே புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது.

உயர்ந்த மனிதன்

  • சிவாஜி கணேசனுடன் தனிப்பட்ட அன்பு கொண்டவர் அண்ணா. 1956 புயலை மத்திய அரசு கண்டுகொள்ளாதபோது, திமுக கலைஞர்களை வைத்து நிதி திரட்டினார் அண்ணா. அதிகம் வசூலித்த சிவாஜியை விட்டுவிட்டு, எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தினார்கள் சிலர். இந்த அவமதிப்பைத் தொடர்ந்து, திருப்பதிக்குப் போனதைக் காரணம் காட்டி சிவாஜி மீது தனிப்பட்ட தாக்குதலும் நடத்தினார்கள் திமுகவினர். “என்னை காங்கிரஸுக்குள் தூக்கிக்கொண்டுபோய்ப் போட்டது திமுகவினர்தான்” என்று சிவாஜி சொன்னார். “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்தினாலும் அண்ணாவின் மனம் தப்பு செய்துவிட்டோமே என்று வருந்தியது.
  • புற்றுநோயால் உடல் இளைத்துப்போன நிலையிலும், சிவாஜியின் 125-வது படமான ‘உயர்ந்த மனிதன்’ விழாவுக்குக் கஷ்டப்பட்டுப் போய்க் கலந்துகொண்டார் அண்ணா. “இந்தக் கோலத்தில் நீங்கள் போக வேண்டாம்” என்று அரங்கண்ணல் தடுத்தும் கேட்கவில்லை. அந்த விழாவில் கணேசனைப் புகழ்ந்து 45 நிமிடங்கள் பேசினார் அண்ணா. “பராசக்தி வராமல் போயிருந்தாலும், சிறிது காலத்துக்குப் பிறகு அவர் புகழ்பெற்றிருப்பார். திமுகவால் அவர் வளரவில்லை. கொலம்பஸ் கண்டுபிடிக்காமல் போயிருந்தால், அமெரிக்கா கிடைத்திருக்காதா என்ன?” என்று சொன்னார் அண்ணா.

நன்றி: இந்து தமிழ் திசை(14-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்