- காட்சி ஊடகத்தின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பங்கேற்ற இலக்கியவாதி ஒருவர் வகுப்பறைக் கல்வி குறித்தும், உயர்கல்வி படித்தவர்கள் குறித்தும் வைத்த சில விமர்சனங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் எதிர்கொண்டன. ஆனால், இது குறித்து குறிப்பிடத்தகுந்த விவாதம் ஏதும் நடைபெறவில்லை.
- தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் அண்மையில் தனது பணியிலிருந்து விலகினார். அவர், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. பணியில் அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. அப்படியென்றால், அவரது சீரற்ற மனநிலைக்கு காரணம் என்ன?
- கடந்த காலங்களில் பல பிரச்னைகளை எதிர்கொண்ட நம் முன்னோருக்கு இதுபோன்ற நோய்கள் அரிதாகவே காணப்பட்டன. அவர்களின் பணி ஒன்றல், நட்பு பேணல், சுற்றம் தழுவல், விழா சிறத்தல் போன்ற வாழ்க்கைமுறை அவர்களைப் புற அழுத்தத்தில் இருந்து விலக்கி, சீரான மனநிலையில் வைத்திருந்தன.
- அந்தக் கொண்டாட்டங்கள் அவர்களுக்கு வாழ்வியலை, மனிதநேயத்தை, அன்பை, கருணையை, ஆன்மிகத்தை போதித்தன. ஆனால், இன்று அவை இளைஞர்களால் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பதற்கு அண்மையில் விமர்சன தாக்குதலுக்கு உள்ளான இலக்கியவாதி ஓர் உதாரணம்.
- தற்போதைய உலகில் மிகவும் சிலாகித்து பேசப்படும் படைப்பூக்க செயற்கை நுண்ணறிவு எனப்படும் சாட் ஜிபிடி-யில் உள்ளவை அனைத்தும் பதிவேற்றப்பட்ட தரவுகளின் தொகுப்புகள்தாம். அதில், வாழ்வியலும், மனிதமும், அன்பும், கருணையும் சுரக்காது. இன்றைய மாணவர்கள் கிட்டத்தட்ட சாட் ஜிபிடியைப் போன்றே உருவாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுள் இயல்பான மனிதநேயம் சுரக்க வாய்ப்பில்லை.
- தற்போது, அவர்கள் அதிக பதிவேற்ற சுமையின் காரணமாகவோ, வணிக, வன்முறை கொண்ட புறத்தாக்குதல் காரணமாகவோ சீரற்ற மனநிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இதன் தாக்கமே, இளவயது மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தமாக வெளிப்படுகின்றன.
- இவற்றுக்குத் தீர்வாக இருப்பது இலக்கியம் மட்டுமே. ஏழை, எளியவர்களின் வாழ்வியலைப் பேசும் இலக்கியங்களே இருட்டில் வாழ்ந்தாலும், வெளிச்சத்துக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் பலரையும் உயிர்த்திருக்க வைத்திருக்கின்றன.
- அன்றுமுதல் இன்றுவரை படைக்கப்படும் இலக்கியங்களை வாசிக்க மறந்துவிட்டு, அல்லது மறுத்துவிட்டு, இது தொழில்நுட்ப உலகம் என்ற இறுமாப்போடு கைப்பேசி, கணினிகளில் மூழ்கிக்கிடக்கும் இளைய தலைமுறை, தாங்களும் அதேபோன்று இயந்திரமாக மாறி, எண்ணற்ற நோய்களைத் தேடிக்கொள்கின்றனர்.
- கைப்பேசி, கணினிகளின் நினைவகத் திறன் அதிகரிக்க அதிகரிக்க, தங்களின் நினைவகம் செயலிழந்து வருவதை அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை? கற்றலும், உயர்கல்வியும் மட்டுமே ஒருவரை சிறந்தவராக உருவாக்கிவிடுவதில்லை. கற்றல் பொருளாதாரத் தேவைக்கானது. வாழ்வியலுக்கான கற்றலை அவர்கள் எங்கிருந்து பெறப்போகிறார்கள்? வாசிப்புப் பழக்கம் மட்டுமே அதைக் கொடுக்கும் என்பதை அவர்கள் ஏன் உணர்வதில்லை?
- இலக்கியங்கள் எப்போதும் எளிய மனிதர்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பது. கற்றவர்கள், கல்லாதவர்கள், ஏழை, பணக்காரர் அனைவரையும் அது சமமாகவே பாவிக்கிறது. எளியவர்களை உயர்த்தி வைக்க நினைக்கிறது.
- அதனால்தான், அது வகுப்பறை கல்வி, உயர்கல்வி என்று பாராமல், மனிதத்தோடு நடக்காதவர்களை விமர்சிக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆயிஷா தொடங்கி, இன்றைய பெரும்பாலான இலக்கியங்கள், பேச்சாளர்கள் வரை தற்போதைய கல்விமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதற்கும் காரணங்கள் வெளிப்படையானவைதான்.
- இந்த விமர்சனங்கள் வகுப்பறை கல்வியே கூடாது என்பதற்காகவோ, ஒருவருக்கு கல்வியே தேவையில்லை என்று சொல்வதற்காகவோ வைக்கப்படுபவை அல்ல. இயந்திரங்களை ஒத்த இளைஞர்கள் உருவாவதை தடுத்து, அன்பும், கருணையும் கொண்ட சந்ததி உருவாக வேண்டும் என்ற அக்கறையில் வைக்கப்படுபவை.
- கிருபானந்த வாரியார் சுவாமிகளை ஒருமுறை பல்கலைக்கழகம் ஒன்றில் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். துணைவேந்தர் தனது அறிமுக உரையில், ஒரு பேச்சாளரை அழைத்துவந்துள்ளோம். அவர், இது பல்கலைக்கழகம் என்பதை நினைவில் வைத்துப் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். வாரியார் சுவாமிகள், தனது உரையின் நிறைவில், சத்தான கீரைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். ஆனால், உயிர்காக்கும் மூலிகைகள் அரிதாகவே கிடைக்கும் என்று கூறி முடித்தார். தனது தவறை உணர்ந்த துணைவேந்தர் கூட்டத்திலேயே மன்னிப்பு கேட்டார் என்ற செய்தி உண்டு.
- இலக்கியக் கூறின் ஒரு வகையான கதைசொல்லல் இன்று புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. பெற்றோரால் பிள்ளைகளுக்கு கதை சொல்வது கைவிடப்பட்டு, அவர்களை கைப்பேசிகள் ஆக்கிரமித்துவிட்ட நிலையில், அந்த இடத்தை இன்று சில இலக்கியப் பேச்சாளர்கள் நிரப்பிவருகின்றனர். மனித உறவை எப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் இலக்கியவாதிகள் யோசித்து கதைகளாக வெளிப்படுத்துகின்றனர்.
- இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடும் அண்டை மாநிலமான கேரளத்தில் வாசிப்புக்காக ஒருவர் மாதம் சராசரியாக 700 ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகிறார். ஆனால், தமிழகத்தில் அது 200 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிக்க நகரங்கள் பட்டியலில், கேரளத்தின் கோழிக்கோடு, இலக்கியம்-பிரிவில் அண்மையில் இடம்பிடித்துள்ளது.
- பலகோடி பேருக்கு நாம் கல்வி கொடுத்துள்ளோம் என்பது நமக்குப் பெருமைதான். ஆனால், அவர்களில் எத்தனை பேர் வாழ்வியலையும், மனிதநேயத்தையும் கற்றிருக்கிறார்கள் என்பதில்தான் நமது வெற்றி உள்ளது.
நன்றி: தினமணி (06 – 11 – 2023)