TNPSC Thervupettagam

இயற்கை உணவே ஊட்டச்சத்து

September 7 , 2019 1762 days 758 0
  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    நோய்களைத் தடுக்கவும், குறைக்கவும், குணப்படுத்தவும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் பயன்படுகின்றன. குழந்தைகளுக்கு சத்துணவு என்றால் கடைகளில் விற்கப்படும் மாவு வகைகள் அல்ல.
  • காட்சிப் பிழைகளான விளம்பரங்களைப் பார்த்து அவற்றை நம்பி பெரும் பணத்தை பெற்றோர் செலவு செய்கின்றனர். குழந்தைகள் நன்றாக உயரமாக வளர, சிறப்பாக விளையாட, அறிவுடன் இருக்க என்று மாயத்தோற்றங்களை உருவாக்கி பெற்றோரை மழுங்கச் செய்வதில் ஊடகங்கள் இமாலய வெற்றி அடைந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

விழிப்புணர்வு

  • குழந்தைகளை வளர்ப்பவர்கள் விளம்பரங்களை நம்பாமல் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். ஊட்டச்சத்துகள் இயற்கையான உணவிலிருந்து கிடைக்கவேண்டும். குழந்தைக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் அனைத்தும் அன்றாட உணவில் கலந்திருக்கவேண்டும்.
  • குடும்பத்தினருக்கு அன்றாடம் தயாரிக்கப்படும் உணவிலிருந்து குழந்தையும் சாப்பிடவேண்டும். சிறு குழந்தைகளுக்கு சில எளிய மாறுதல்களைச் செய்யலாம். உதாரணமாக, சாதத்தை சிறிது குழைவாக வேக வைக்கலாம்.  குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பது குறித்தும், தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகளைப் பற்றியும் வழிகாட்டுதல்களை இந்திய குழந்தை மருத்துவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
  • தினமும் 100 மில்லிகிராம் அளவுக்குக் குறைவாக உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின்கள், துத்தநாகம், செம்பு, மாங்கனீசு, அயோடின், மாலிப்படிமை குரோமியம் போன்றவை நுண்ணூட்டச் சத்துகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவை குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி, செரிமானத்திற்கு உதவும் நொதிகள்  தேவையான அளவு சுரந்து நன்கு வேலை செய்ய, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க என்று பற்பல தளங்களில் தேவைப்படுகின்றன.
  • ஒருசில சத்துகளின் குறைபாடு உடலில் நோயாக வெளிப்படுகிறது. உதாரணமாக இரும்பு சத்துக் குறைபாடு ரத்த சோகையாக அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. அயோடின் குறைபாடு, முன் கழுத்துக் கழலை மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாடு என்று வெளிக்காட்டுகிறது. மற்ற நுண்ணூட்டச்  சத்துகளின் குறைபாடு எளிதில் வெளியில் தெரிவதில்லை.

செயல்பாடுகள்

  • ஆனால், உடலின் பல உறுப்புகளை, செயல்பாடுகளை மெதுவாக அழிக்கிறது. இவற்றை சாதாரண பரிசோதனைகள் மூலம் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது. எனவே, இவற்றை மறைந்திருக்கும் பசி (ஹிடன் ஹங்கர்) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.  சரியான, சிறந்த உணவு முறைகளால் இவற்றை முற்றிலும் தடுக்கலாம். 
  • உதாரணமாக இரும்பும் போலிக் அமிலமும் சேர்ந்த மாத்திரைகள், அயோடின் கலந்த உப்பு, துத்தநாகம் கலந்த உப்பு, சர்க்கரைக் கரைசல், குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் ஆகியவை குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. மக்களிடையே இவை குறித்து  விழிப்புணர்வு தேவை. அன்றாடம் வீட்டில் சமையல் செய்யும்போது சில மாறுதல்களைச் செய்யலாம்.
  • 1. வார்ப்பு இரும்பு பாத்திரங்களில் குறைந்த தீயில் சமைப்பதால் இரும்புச் சத்து உணவில் சேரும்; 2. நொதித்த உணவுப் பொருள்களான இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம்; இதனால் அதிக வைட்டமின் பி 12 கிடைக்கிறது; பைடேஸ் போன்ற நொதிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது; 3. தானியங்களை ஊறவைத்துச் சமைப்பதால் பாஸ்பேட் மற்றும் பைடேட் அளவு குறைகிறது; 4. தானியங்களை முளைகட்ட வைப்பதால் தேவையற்ற பாலிபினால், டேனின் போன்றவை குறைந்து சிலவகை தேவையான பைடேஸ் அதிகரிக்கிறது;
    5.
    செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை உதாரணமாக அயோடின் கலந்த உணவு, கோதுமை மாவு, வைட்டமின் கலந்த எண்ணெய் வகைகளை இயன்றவரை பயன்படுத்துதலாம்
    6.
    பலவகை உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் பழக்குதல் மிகவும் முக்கியமான செயல்பாடு. தினமும் வானவில் உணவு வகைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். வானவில் நிறங்களான வயலட் (முட்டைகோஸ்), நீல வகைகள் (பீட்ரூட், கத்தரிக்காய், கேழ்வரகு) பச்சைக் காய்கறிகள், கீரைகள், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணப் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த காய்களுடன் சிறிது நிலக்கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு சேர்த்துத் தாளிப்பது மேலும் நுண்ணூட்டச் சத்துக்களை அளிக்கும்; 7. இறைச்சியின் தசைப் பகுதி, மீன், கொழுப்புச் சத்துள்ள மீன் போன்றவற்றை அடிக்கடி உணவுடன் தரவேண்டும்
  • 8. சிறு தானிய மாவு வகைகளை லேசாக கொதிக்க வைத்து கஞ்சி, கூழ் போன்றவை செய்யும்போது சில மாற்றங்கள் ஏற்பட்டு வைட்டமின்  ஏ உணவில் சேரும்; 9. குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதால் இயற்கையான வைட்டமின் டி உடலில் சேரும். வெயிலிலிருந்து வரும் போட்டான் பி என்ற கதிர்கள் தோலில்பட்டு வைட்டமின் டி உருவாகிறது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை உள்ள கடும் வெயிலில்தான் போட்டான் பி கதிர்கள் அதிகம். எனவே, குழந்தையின் முகம், கை, கால்கள், முதுகு, நெஞ்சுப்பகுதி போன்றவற்றில் வெயில்படுமாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் 15-30 நிமிஷம் வரை வெயிலில் விளையாட விடலாம். உட்கார வைத்து நாமும் அருகிலிருந்து கதை சொல்லலாம். நமக்கும் வைட்டமின் ஈ  தேவைதான்

உலக ஊட்டச்சத்து அமைப்பு - அறிக்கை

  • 10. பழச் சாற்றைவிட முழுப் பழம் அதிக சத்துக்களை அளிக்கிறது. குழந்தைகளுக்கு உணவில் மிகக் குறைந்த அளவு சர்க்கரை மட்டும் சேர்க்க வேண்டும். ஐந்து வயது வரை காபி, டீ, சாக்லேட் வாசனை உள்ள பானங்களைத் தரக் கூடாது. துரித உணவு வகைகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை அன்பளிப்பாகக்கூட அளிக்கக்கூடாது.
  • நமது நாட்டில் 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 38 சதவீதம் போதிய வளர்ச்சி இல்லாமல் குட்டையாக இருக்கின்றனர். உலக ஊட்டச்சத்து அமைப்பின் அறிக்கையின்படி உலகில் உள்ள வளர்ச்சி குன்றிய (எடை மற்றும் உயரம்) குழந்தைகளில் 3-இல் 1 பங்கு பேர் இந்தியாவில் இருக்கின்றனர் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. எனவே, குழந்தைகளுக்கான எளிய ஊட்டச்சத்து உணவு முறைகளை ஒவ்வொரு பெற்றோரும் தனது வீட்டில் தொடங்க வேண்டும்.

நன்றி: தினமணி (07-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்