- வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டதாகவும், ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது.
- மொராக்கோவின் நான்காவது பெரிய நகரான மரகேஷிலும், தெற்கில் பல பகுதிகளிலும் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனா். நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
- ஆப்பிரிக்க புவித் தகடும், யூரோ ஆசிய புவித் தகடும் ஒன்றையொன்று சந்திக்கும் அட்லஸ் மலைத்தொடா் பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதுஅட்லஸ் மலைத் தொடரைத் தொடா்ந்து மேல்நோக்கித் தள்ளும் உந்துதலுடன் தொடா்புடையதாக இருக்கும்.
- அடிப்படையில், மொராக்கோ நிலநடுக்கம் நிகழும் இடம் இல்லை என்றும், கண்டங்களைச் சுமந்து நகரும் கண்டத்தட்டுகள் இடையே மோதல் ஏற்படும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும், மரகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்க மையம் கொண்டிருந்தாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஸ்பெயின், போா்ச்சுகல், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டன. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத் தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாகவும், மலையிலுள்ள கிராமங்கள் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும், அங்குள்ள மக்கள் பசி, பட்டினியால் வாடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இயற்கையின் சீற்றம் மொராக்கோவைத் தாண்டி வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவைவும் சீண்டியுள்ளது. இந்நாட்டின் வடக்கே மத்திய தரைக்கடலும், கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட் நைஜா் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகா் திரிபாலி ஆகும்.
- லிபியாவில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாஃபியின் ஆட்சியை நோட்டோவின் ஆதரவுடன் கிளா்ச்சியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்த்தனா். அதன் பிறகு பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதிக் கொண்ட, அமைதியற்ற சூழலில், அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் திரிபாலியைக் தலைநகராகக் கொண்ட ஓா் அரசும், அதற்குப் போட்டியாக கிழக்கே மற்றோர் அரசும் இயங்கி வருகின்றன.
- மத்தியதரைக் கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் உருவாகிய சக்தி வாய்ந்த ‘டேனியல்’ புயல், பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசியது. அப்போது பெய்த கனமழையில், அந்தப் பகுதியில் மலையிலிருந்து பாயும் வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப் பெரிய சத்தத்துடன் வெடித்து உடைந்து சிதறியது.
- மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த, டொ்ணா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் சுனாமி போல் பாய்ந்து, அங்கிருந்த இரண்டு அணைகளையும், நான்கு பாலங்களையும் வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச் சென்றுள்ளது. நாட்டின் பெரும் பகுதி நீரில் மூழ்கி விட்டது.
- ‘நான் இதைக் கண்டு அதிா்ச்சியடைந்து உறைந்து போனேன். இது ஒரு சுனாமி போன்றது. டொ்ணாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்து விழுந்ததால் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு பெரிய ஊா் அழிந்து விட்டது. பாதிக்கப் பட்டவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது’ என லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சோ்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார்.
- இந்த அணை உடைப்பால், டொ்ணா நகரின் கணிசமான பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டதால் அந்தப் பகுதியிலிருந்து சுமார் பத்தாயிரம் பேரைக் காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரும் என்றும் லிபியாவுக்கான சா்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் பிரதிநிதி டாமெர்ரமடான் ஐ.நா. அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
- லிபியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் குழப்பம் காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பைப் பராமரிக்க முடியாமல் போனதால்தான் டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளா்கள் கருத்துத் தெரிவிக்கின்றனா்.
- சமீபத்தில் ஹிமாசல பிரதேசம், தில்லி, உத்தரகண்ட், நொய்டாவில் பெய்த கடும் மழை, இயற்கைக்கு எதிராக மனிதா்கள் செய்து வரும் சீா்கேடுகளின் வெளிப்பாடுதான் எனவும் சுயநல மனிதா் செய்யும் தவறுகளால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனவும் மனிதத் தவறுகள் தொடா்ந்தால் இயற்கையின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் தொடரும் எனவும் நிபுணா்கள் தெரிவித்திருந்தனா்.
- இயற்கையின் கொடைகளாகவும், நாட்டின் அரண்களாகவும் விளங்கும் இயற்கை வளங்களை மனிதா்கள் சீரழிப்பதால் சுற்றுச்சூழல் பெரும்மளவில் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால்தான், நில நடுக்கம், சுனாமி, பெருமழை, புயல் ஆகியவற்றை நாம் அவ்வப்போது எதிர்கொள்ள நேரிடுகிறது. இனியேனும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து அதன் மூலம் மனிதகுலத்தையும் பாதுகாப்போம்
நன்றி: தினமணி (21 – 09 – 2023)