TNPSC Thervupettagam

இயற்கை விவசாயம்: இன்னும் கடக்க வேண்டிய நெடுந்தொலைவு!

October 4 , 2024 53 days 83 0

இயற்கை விவசாயம்: இன்னும் கடக்க வேண்டிய நெடுந்தொலைவு!

  • கடந்த 45 - 50 நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு சிறு நகரங்களில் நடந்த, இனியும் நடக்கவுள்ள விதை, உணவு, பாரம்பரிய நெல், அரிசித் திருவிழாக்கள் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகின்றன.
  • தினமணியில் நான் எழுதிய கட்டுரைகளில் இரண்டு நினைவில் வந்துசென்றன. முதல் கட்டுரை, 'நம்பிக்கை நட்சத்திரங்கள்', 2000-ல் வெளிவந்தது.
  • இயற்கை விவசாயம் தமிழகத்தில் தவழத் தொடங்கிய காலம் அது. இயற்கை விவசாயத்தைத் தங்களது நிலத்தில் சாதித்துக் காட்டிய தமிழக, இந்திய உழவர்கள், பிற உழவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் அரசுகளுக்கு வழிகாட்டிகளாகவும் உள்ளனர் என்பதைக் கூறுவது.
  • அடுத்தது 2005 ஆகஸ்டில், 'விவசாயிகளை விடுதலை செய்வோம்' என்ற கட்டுரை. கடனிலிருந்தும், ரசாயனங்களிலிருந்தும் விவசாயிகள் விடுதலை பெற வேண்டும். அதன் மூலம்தான் உண்போரின் ஆரோக்கியமும் விடுதலை பெறும். ஆகவே, விவசாயிகளின் விடுதலை என்பது உழுவோரும் உண்போரும் இணைந்து பெற வேண்டியது என்று கூறுவது. இது தமிழகத்தில் இயற்கை விவசாயம் மெல்ல எழுந்து நடைவண்டி பயிலத் தொடங்கிய காலம்.
  • இவ்விரு காலத்திற்கும் இடையில் ஈரோடு இயற்கை உழவர்கள் நம்மாழ்வார் இன்றிப் பயிற்றுநர்களாக வளர்ந்து சக உழவர்களை ரசாயனங்களில் இருந்து விடுதலை பெற்றிட இயற்கை விவசாயப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். இப்பயிற்சியின் நிறைவு நாளன்று கலந்துகொண்ட நம்மாழ்வார், 'கண்கள் பனிக்க, இதயம் நெகிழ்ந்து, ‘நான் இறக்கையின்றி ஆகாயத்தில் பறப்பதுபோல் உள்ளது. இனி ஈரோட்டிற்கு நான் தேவையில்லை' என்று கூறிப் பிற மாவட்டங்களில் இயங்கத் தொடங்கினார்.
  • இன்று தமிழகத்தின் சிறுசிறு நகரங்களில், கிராமங்களில் நடக்கும் விதை, அரிசி, உணவு, மரபு நெல் திருவிழாக்களை அவர் கண்டால் பூரித்து மகிழ்ந்திருப்பார். தமிழக சமூகச் சூழலில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்த உழைத்த பலரில் இருவர், தாம் வாழுங்காலத்திலேயே இந்த மாற்றங்களைக் கண்டுசெல்லும் கொடுப்பினை பெற்றவர்களாக உள்ளனர்.
  • சுயமரியாதை, மனிதர்களுக்கிடையே சமத் தன்மை தேவை என்று உழைத்த பெரியாரும் தற்சார்பு வேளாண்மை, தற்சார்பு கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று உழைத்த நம்மாழ்வாருமே அவ்விருவர்.
  • இவர்கள் எடுத்து வைத்தவை சில ஆண்டுகளுக்குள் நடந்தேறக் கூடியவை அல்ல. பல பத்தாண்டுகள் தொடர் இயக்கமாக இயங்கினால்தான் நடக்கக் கூடியவை. பெரியாரின் வேலையை அரசியல் இயக்கங்கள் கையில் எடுத்துக்கொள்ள நம்மாழ்வாரின் வேலையை ஆயிரக்கணக்கான இளம் உழவர்கள் தோளில் தூக்கிக் கொண்டுள்ளனர். இயற்கை விவசாயம் தானாக நடக்கத் தொடங்கியுள்ளது இன்று.
  • நம்மாழ்வார் நம்மிடம் கைமாற்றிக் கொடுத்துள்ள வேலையோ பல பத்தாண்டுகளுக்கான வேலை. தலைமுறைகளுக்கான வேலை. அவரது இலக்கு இயற்கை விவசாயத்தோடு நிற்கவில்லை.
  • தற்சார்பு கிராமங்கள், தங்களின் இயற்கை வளங்களைத் தாங்களே காத்துப் பேணி மேம்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகள் உள்ளடக்கியது, நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முன்னெடுப்பு. இன்னும் கடக்க வேண்டியது நெடுந்தொலைவாக உள்ளது.
  • நம்மாழ்வாரின் வேலை, இயற்கை விவசாய வேலையாக சுருக்கிப் பார்க்கப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக உழைத்தவர் என்றே பொது சமூகம் காண்கிறது. அவர் ஒரு முறை சிரித்துக்கொண்டே சொன்னார், “ஐயா, இந்த நம்மாழ்வாரை, இயற்கை விவசாயத்திற்காக வேலை பார்க்கிறவன் என்றே பலரும் பார்க்கிறார்கள். ஆனால் நம்மாழ்வாரின் வேலை 'மனித வள மேம்பாடு (Human Resource Development) என்றார்.
  • இந்த மனித வள மேம்பாடு என்பது இயற்கை விவசாயம் தாண்டி தன் சமூகத்தை வடிவமைப்பவராக ஒவ்வொரு இயற்கை உழவரும் இயங்க வேண்டும் என்பதற்காகவே இயங்கினார்.  "ஆரம்ப காலம் தொட்டே, நம்மாழ்வார் தன்னோடு இணைந்து இயங்கும் ஒவ்வொரு இளைஞரையும் கதைகள், விளையாட்டுகள் மூலம் அவரை அறியாலமேயே பெரும் சமூகப் பணிக்காக செதுக்குவார்" என்கிறார் அவரோடு மிக நீண்ட காலம் இணைந்து இயங்கிய புதுக்கோட்டை ஜீவானந்தம்.
  • நம்மாழ்வார், தமிழகத்து இயற்கை வேளாண்மையைத் தனித்துவத் தன்மையோடு வளர்த்தெடுத்தார். இந்தியாவின் பிற பகுதிகளில் வளர்த்தெடுக்கப்படும் இயற்கை விவசாயம் என்பது நச்சு இல்லாத உணவை விளைவித்திடும் ஒன்றாக வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்து இயற்கை வேளாண்மையானது, செடிகள் தங்களுக்கான உணவைத் தானே ஒளிச்சேர்க்கை மூலம் தயாரித்துக்கொள்ளும்போது நாம் ஏன் அதற்கு சாப்பாடு போட வேண்டும் என்பதிலும், வேளாண்மை என்பது உள்ளூர் தகவமைப்பில் (Agriculture is Location Specific) நடக்க வேண்டியது என்றும் தொடங்குகிறது. இது அறிவார்ந்த ஒன்று, தபோல்கர் கூறும் அறிவியல் மீதான போலி பிம்பங்களை நீக்கி, அறிவியலைக்கொண்டே தமிழக வேளாண்மைப் பண்பாடு வளர்ந்துள்ளதை விளக்கி வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று.  அவரது பார்வையில் ஒவ்வொரு பண்ணையும் தனித்த உயிரினமாகும்.
  • இதையொட்டிதான் மரபு விதைகளை மீட்டெடுக்க விதைப் பயணங்கள் மேற்கொண்டார். மரபு நெல் விதைகள் காக்கும் வேலையை முன்னெடுத்தார்.
  • ஒவ்வோர் உழவரும் ஒரு விஞ்ஞானி. தன் பண்ணையை ஆய்வகமாகக் கொண்டு இயங்கும் விஞ்ஞானியாக உள்ளார்.  அவரவர் நிலத்திற்கேற்ற, சூழலுக்கேற்ற பயிர் ரகங்களை உருவாக்கும் வல்லமை கொண்ட விஞ்ஞானிகளாக ஒவ்வொரு உழவரும் பரிணமிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.  இத்தகு வித்தைகள் அறிந்தவராக, கற்பிப்பவராக வளர வேண்டும், வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவரது வேலைகளில் புதைந்திருந்த ஒன்று ஒவ்வொரு உழவரும் அவரவர் பகுதியின் இயற்கை வளங்களைக் காப்பவராக, பேணி வளர்ப்பவராக அடுத்தடுத்த தலைமுறையினருக்கானதாக மேம்படுத்துபவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு இயற்கை உழவரும் தத்தமது பகுதியின் இயற்கை வளங்களை மேலாண்மை செய்பவராக உயர வேண்டியது அவசியம். இயற்கை வளங்களைக் காக்கத் தவறும்போது இயற்கை விவசாயப் பண்ணைகள் இல்லாமல் போகும். அந்தந்த இடத்தின் இயற்கை வளத்தையொட்டியே அங்குள்ள பண்ணைகள் அமையும் என்பதால் ஒவ்வொரு உழவரும் சூழல் மேலாண்மை செய்பவராகத் தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அவர் மேற்கொண்ட 6 விழிப்புணர்வு நடைப்பயணங்களில் 4 இயற்கை வளங்களைக் காப்பதற்கான நடைப்பயணங்களே.
  • விளைந்தவற்றை நேரடியாக உண்போருக்குக் கிடைக்கச் செய்தல், கால்நடைகள், வளர்ப்புப் பறவைகள், நீர் சேமிப்பு, மரங்கள் உள்ளிட்டவை இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையம், ஒவ்வோர் உழவரும் பயிற்றுநராக வளர்தல், ஒவ்வொரு பண்ணையும் பயிற்சி மையமாக மாறுதல், நகரத்தவர்கள் தங்கி உற்சாகம் பெற்று, உடல்நலம் மேம்படுத்திச் செல்லும் நல்வாழ்வு மையமாக அமைத்தல், உள்ளூரில் உள்ள நுகர்வோரை மையமாக வைத்து வணிகத்தை உருவாக்குதல், உள்ளூர் அறிவைப் போற்றி அதில் புதைந்துள்ள அறிவியலை வெளிக்கொணர்ந்து பரப்புதல் என பல தளங்கள் இன்றைய இயற்கை உழவர்கள் முன் உள்ளன.
  • "இச்சவால்களை எதிர்கொள்ள இயற்கை உழவர்கள் உழவராக மட்டும் இருக்காமல் பல்வேறு நிறுவனங்களைக் கட்டமைத்து தங்களின் வலிமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். மதிப்புக் கூட்டல், உள்ளூர் வணிகம்  தொடங்கி பல்வேறு தளங்களில் நிறுவனங்களை அமைத்தல் தேவையாக உள்ளது. அவற்றை உழவர்கள் உருவாக்கி நடத்திடல் தேவை" என்கிறார், 'சமன்வயா' அமைப்பின் ராமசுப்பிரமணியம்.
  • இத்தாலியில் உள்ள ஸ்லோ புட் அமைப்பை உருவாக்கிய ’கார்லோ பெர்டினி, உலகில் உள்ள போர், கல்வி, விவசாயம், மாசுபாடு, வணிக ஆதிக்கங்கள், உடல் நலம், இயற்கை வளங்கள் மீதான தாக்குதல்கள், ஏழை-பணக்காரர்கள் பிரச்னை, சக மனிதர்களே சுரண்டல்காரர்களாக இருப்பது உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் உணவின் மூலம் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.
  • நம்மாழ்வார் இத்தனை பிரச்னைகளையும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுதல் மூலம் தீர்வுகளை உருவாக்க முடியும் என்று இயங்கினார்.
  • காந்திகிராம மேனாள் பேராசிரியர் முனைவர் பழனிதுரை, "நம்மாழ்வாரின் வேலை இயற்கை விவசாயம் தாண்டியது, தன் சமூகத்தை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட உழவர்களையும் உழைப்போரையும் உருவாக்குவதாகவே இருக்கிறது" என்கிறார்.
  • இதன் மறைமுகப் பொருள், இயற்கை வேளாண்மையைக் கைக்கொள்ளும் ஒவ்வொருவரும் தம்மை நம்மாழ்வாராக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
  • ஒவ்வொருவரும் நம்மாழ்வாராக மிளிர்வது அவசியம், ஏனெனில் தமிழகத்து இயற்கை வேளாண்மை செல்ல வேண்டிய தொலைவு வெகு அதிகமாக உள்ளது.

நன்றி: தினமணி (04 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்