TNPSC Thervupettagam

இயற்கைப் பேரிடரும் காப்பீடும்

June 2 , 2022 797 days 552 0
  • எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் காலநிலை மாற்ற அபாயத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வசிப்பதாக எரிசக்தி, சுற்றுச்சூழல், நீர் கவுன்சில் (கவுன்சில் ஆன் எனர்ஜி, என்விரோன்மென்ட் அண்ட் வாட்டர்) கூறுகிறது. ஆசியா முழுவதும் காலநிலை சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கான காப்பீடு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றபோதிலும் காலநிலை தொடர்பான இழப்பீடு வழங்குவதில் இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் செயல்திறன் உலக அளவில் மிக மோசமாக உள்ளது என்று உலகளாவிய காலநிலை மாற்ற சேதாரம் சார்ந்த காப்பீட்டுத் துறை பற்றிய சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
  • மே 2020-இல் மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகளை அழித்த பேரழிவு ஆம்பன் சூறாவளிக்கு பின் கோரப்பட்ட காப்பீட்டுக் கேட்புத் தொகையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்டதாக மேற்கு வங்க பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மார்ச் 30, 2022 அன்று செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
  • காலநிலை மாறுபாடு ஏற்படுத்தும் தாக்கத்தினால் உருவாகும் வெள்ளம், வெப்ப அழுத்தம், வறட்சி ஆகியவற்றால் உலக அளவில் மிகவும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்று இந்தியா என்று ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையேயான குழு (ஐபிசிசி) கூறுகிறது. இக்குழுவின் சமீபத்திய அறிக்கை தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகளால் இந்தியா பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
  • சுற்றுச்சூழல் தளமான "க்ளைமேட் ட்ரெண்ட்ஸ்' தயாரித்த சமீபத்திய அறிக்கை இழப்பீடு வழங்குதலில் வெளிப்படைத்தன்மை இன்றி மோசமாக செயல்படும் பல காப்பீட்டு நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளதாகக் கூறுகிறது. உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களின் காலநிலை மாற்ற பேரிடருக்கான இழப்பீடு பற்றி "எர்ன்ஸ்ட் அண்ட் யங்' நடத்திய மதிப்பாய்வு காப்பீட்டு நிறுவனங்களின் காலநிலை தொடர்பான இழப்பீட்டு நிதி காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளுக்கான பணிக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக மதிப்பிடப்பட்டதாக தெரிவிக்கிறது.
  • காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளுக்கான பணிக்குழு (டாஸ்க் போர்ஸ் ஆன் க்ளைமேட் ரிலேடட் பைனான்சியல் டிஸ்கிளோஸர்) என்பது ஜி20-இன் நிதி உறுதிநிலை வாரியம் (பைனான்சியல் ஸ்டபிளிட்டி போர்டு) மூலம் 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பணிக்குழு காலநிலை மாற்றத்தின் போது வணிகங்களுக்கான நிதி தொடர்பான பரிந்துரைகளை தேவைப்படும் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
  • இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் காலநிலை இடர் மதிப்பீடு குறித்து முடிவெடுக்கும் செயல்பாட்டில் மிகவும் பின்தங்கியுள்ளன என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை - மேம்பாட்டு ஆணையம் காலநிலை மாற்றம் குறித்த காப்பீட்டுத் திட்ட மாதிரிகளை மேம்படுத்துவதற்கும் காப்பீட்டு தவணை கட்டணத்தை (பிரீமியம்) மதிப்பீடு செய்வதற்கும் விவேகமான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்றும் காலநிலை மாற்றம் சார்ந்த காப்பீட்டுத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • தெலங்கானா வெள்ளத்திற்கு பின் 330 கோடி ரூபாய் காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 151 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2021 ஜூன் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தை நிசர்கா சூறாவளி தாக்கிய பின் 290 கோடி ரூபாய் காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 93 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
  • 2020 மே மாதம் ஒடிஸாவிலும், மேற்கு வங்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்திய ஆம்பன் புயல் சேதங்களுக்கு 1,767 கோடி ரூபாய் மதிப்புடைய 14,575 காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், அதில் 2021 ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை 11,512 காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கப்பட்டதாகவும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை - மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் மிக அதிகமான கால நிலை மாற்ற பாதிப்பு காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், 11,512 காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நிதி 471 கோடி ரூபாய் மட்டுமே. அதாவது 80% காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கைகள் தீர்க்கப்பட்டாலும் மொத்த கேட்புத் தொகை உரிமைகோரல் பணத்தில் சுமார் 26% மட்டுமே வழங்கப்பட்டதாக ஆம்பன் புயல் குறித்த தரவு கூறுகிறது. இந்தியாவின் மற்ற வானிலை நிகழ்வுகளுக்கு செயல்பட்டது போன்றே ஆம்பன் புயல் தாக்குதலுக்கு பின்னும் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டதாக காப்பீட்டு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • 2018-இல் ஏற்பட்ட கேரள மாநில வெள்ள பாதிப்புகளுக்குப் பின் ஏற்பட்ட உண்மையான இழப்புகளில் 10% க்கும் குறைவாகவே காப்பீட்டு நிறுவனங்கள் கேட்புத்தொகை கோரிக்கைகளுக்கு நிதி வழங்கியுள்ளன என்று சர்வதேச பொருளாதார ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் கூறுகிறது. 2020-21 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு பேரழிவு நிகழ்வுகளுக்கு பின், வைக்கப்பட்ட 2,559 கோடி ரூபாய் மதிப்புடைய காப்பீட்டுக் கேட்புத்தொகை கோரிக்கைகளில் சுமார் 70% கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வளிக்கப் பட வில்லை.
  • உலகளாவிய வெப்பநிலை 2 டிகிரி செல்சியûஸ ஒட்டி அதிகரிக்கும்போது உருவாகும் காலநிலை மாற்றம் 2100-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2.6% ஆகக் குறைக்கும் என்று காலநிலை போக்குகள் குறித்த ஆராய்ச்சி முடிவு எச்சரித்துள்ளது. 2001 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பின் அடிப்படையில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக உலகளாவிய காலநிலை ஆபத்து குறித்து 2021-இல் வெளியான "ஜெர்மன் வாட்ச்' அறிக்கை கூறுகிறது.
  • காலநிலை மாற்றம் குறித்த உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையேயான குழு, வரம்புகளின்றி மக்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில் காலநிலை இடர் காப்பீட்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

நன்றி: தினமணி (02 – 06– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்