- எத்தனையோ தினங்கள் கொண்டாடுகிறோம்; கடைப்பிடிக்கிறோம்; நம் எதிர்கால சந்ததியினருக்கு அப்படியே இயற்கையின் அதிசயங்களை விட்டு செல்வதற்குரிய சிறந்த விழிப்புணா்வு தினம் உலக சுற்றுச்சூழல் தினம் ஆகும்.
தினம் உலக சுற்றுச்சூழல் தினம்
- பூமியிலுள்ள நீா்நிலைகள், காடுகள், வனங்கள், வன ஜீவராசிகள், வளி மண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் என அனைத்தும் மனிதகுலத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கை பொக்கிஷங்களாகும்.
- மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் முதலானவற்றின் நல்வாழ்வு, இந்த சுற்றுச்சூழலின் சமநிலையையே நம்பியுள்ளது.
- இந்தச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி, உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது.
- ரசாயனக் கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை முதலானவை வளி மண்டலத்தை மாசுபடுத்தி உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
- வாகனப் புகையாலும், குளிர்சாதனக் கருவிகள் பயன்பாட்டினாலும் சுற்றுச்சூழல் மாசடைந்து ஓசோன் வளிமண்டலப் படலம் வலுவிழந்து சூரியனின் நேரடிக் கதிர்வீச்சின் தாக்கத்தால், பூமி அதிக வெப்பம் அடைவதற்குக் காரணமாக உள்ளது.
- தற்போது ஓசோன் வளிமண்டல பாதிப்பு குறைந்திருந்தாலும், அதை மேலும் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.
- பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். புவி வெப்பநிலை உயா்வு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவை காரணமாக கொசுக்களின் அதிகப் பெருக்கம், புதிய பரிணாம நுண்ணுயிரிகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
- மரங்களுக்கும், நமக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் வாழ்வாதாரத்துக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில், உயிரினங்கள் இருக்காது.
சில விவரங்கள்
- ஐ.நா. சபையின் கணக்கெடுப்பின்படி, இந்தப் பூமியில் 3 லட்சத்து 4,000 கோடி மரங்கள் உள்ளன. ஆனால், மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46% மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.
- இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பூமியில் இருந்து 1,530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன.
- அதே சமயம் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளா்கின்றன, எப்படிப் பார்த்தாலும் ஓா்ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1,030 கோடி மரங்கள்; நாம் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு மரங்களை வளா்க்க வேண்டும் என்பதை இந்தக் கணக்கு உணா்த்தும்.
- மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன.
- இந்தக் கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம். இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும்தான் உள்ளன என்பது வேதனையான செய்தி.
- இதனால்தான் மரங்கள் வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை சுற்றுச் சூழலியலாளா்கள் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.
- கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சாலைகள், வாகனங்கள், குளிர்சாதன (ஏ.சி.) - குளு குளு பெட்டி (பிரிட்ஜ்) பெருக்கம், மரங்கள் - காடுகள்அழிப்பு முதலானவற்றின் விளைவாகக் காற்றில் நச்சு வாயுக்கள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- பல விதமான மாசுக்களால் காற்று, நிலம், நீா்,போன்ற இயற்கை வளங்கள் வேகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. உலகில் பத்தில் ஒன்பது பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை என்று ஓா் ஆய்வு அறிக்கை சொல்கிறது. உலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் போ் உயிரிழக்கின்றனா்.
- மண் வளத்தைப் பாதுகாப்பதும் மிக அவசியம். வயல்களில் ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும். நெகிழிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் மண், ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீா் என எல்லா நீா்வளமும் கடுமையாக மாசடைகின்றன. நெகிழி பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தாலும், அதை முற்றிலும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
- சுற்றுச்சூழலை மேலும் பாதுகாக்க பேட்டரி வாகனங்கள் தயாரிக்க உலகநாடுகள் முன் வரவேண்டும், ஓசோன் படலத்திற்குத் தீங்கை உண்டாக்காத வகையில் குளிர்சாதனப்பெட்டி, ஏசி தயாரிக்க மற்றும் ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட ஏசி மற்றும் பிரிட்ஜ் இவற்றிலுள்ள வாயுக்களை மாற்றி நல்ல வாயுக்களை ஏற்ற அரசு மற்றும் உலகத்தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும்.
- உலகம் தோன்றிய காலத்திலிருந்து, கடந்த 25 ஆண்டுகளில்தான் சுற்றுச்சூழல் மாசு உலகை அச்சுறுத்துகிறது. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான், நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.
இயற்கையை காப்பாற்ற சூளுரைப்போம்
- இந்த ஆண்டு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பால், உலகில் 70%-க்கும் மேற்பட்ட நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுற்றுச்சூழல் ஓரளவு தூய்மை அடைந்துள்ளது.
- காற்று மாசு குறைந்ததன் காரணமாக தொலைவில் உள்ள மலைப் பகுதிகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன.
- நதிகள், கடல்கள் தூய்மை அடைந்துள்ளன. எதிர்வரும் காலங்களிலும் மாதம் இரண்டு நாள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழல் தூய்மை அடையும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
- அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைச் சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் எடுத்துச் செல்வதை தலையாய கடமையாக முன்வைத்து நாம் அனைவரும் இன்றைய தினத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். மக்களிடத்தில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களை விட்டுச் செல்வது எனச் சூளுரைப்போம்.
- (இன்று உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம்)
நன்றி: தினமணி (05-06-2020)