- ஒரு வாரத்துக்கு மேலாகியும் கூட, சீனாவில் உருவாகி இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளுக்குப் பரவியிருக்கும் புதிய வகை கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன், வங்கதேசம் என்று 25 நாடுகளில் 236 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன நோயாளிகளையும் சேர்த்தால் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது வரை 24,588. பலியானவர்கள் 493 பேர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 228 சிறப்புப் படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருப்பதுடன் சித்தா, ஆயுர்வேதம் போன்ற துறைகளில் இதற்கான தடுப்பு மருந்துகள் குறித்தும் தீவிர ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எல்லை மாவட்டங்களில் தீவிர மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
கரோனா நோய்த்தொற்று
- கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள கேரள மாநிலம் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து கேரளம் திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்கெனவே "நிபா' நோய்த்தொற்றில் 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கேரள சுகாதாரத் துறை நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ளும் பேரிடர் நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருப்பது சற்று ஆறுதல்.
கேரளாவில்....
- கேரள மாநிலத்தில் உள்ள 84 மருத்துவமனைகளில் 2,239 நோயாளிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். கரோனா நோய்த்தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து கேரளத்தின் விமான நிலையங்கள், துறைமுகங்களில் வந்திறங்குபவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உறவினர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
- கேரள மாநிலத்தைப் பின்பற்றி தமிழகமும் கர்நாடகமும்கூட ஓரளவுக்குத் தயாராகவே இருக்கின்றன என்பது ஆறுதல். இந்த அளவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
- கரோனா நோய்த்தொற்றின் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல். அதன் தொடர்வினையாக நுரையீரல் பாதிக்கப்படுவதுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஜலதோஷமாகவும் காய்ச்சலாகவும் இருப்பதால், நோய்த்தொற்றை முன்னரே கண்டறிய முடிவதில்லை.
- கரோனா நோய்த்தொற்று ஆரோக்கியமாக இருக்கும் நபரைத் தாக்கினாலும்கூட அது முற்றுவது வரை எந்தவித அறிகுறியும் காணப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே இருக்கிறார்கள். அதனால் விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகள் மூலம் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைத்
தீர்மானிக்க முடிவதில்லை.
- ஒரு வாரம் அல்லது பத்து நாள்களுக்குப் பிறகுதான் கரோனா நோய்த்தொற்று முழு வீரியமும் பெற்று அதன் பாதிப்பு வெளியில் தெரிகிறது. அதனால் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் அதிகமாகவே உண்டு.
- சீனாவைப் பொருத்தவரை அதுவொரு கம்யூனிஸ சர்வாதிகார நாடு. ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையுள்ள வூஹான் நகரத்தை சீன அரசால் முற்றிலுமாக முடக்கிவைக்க முடிகிறது. வூஹான் நகருக்குச் செல்லும் அனைத்துப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு, ஏனைய நகரங்களுக்கு மேலும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடிந்திருக்கிறது.
- 1,000 படுக்கை வசதி உள்ள புதிய மருத்துவமனை ஒரே வாரத்தில் இதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே வீரியத்துடன் கரோனா நோய்த்தொற்று இந்தியாவைத் தாக்கினால், அதுபோன்ற நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடியாது என்கிற பலவீனத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
"ஜீனஸ்' பிரிவு
- கரோனா நோய்த்தொற்று என்பது உயிரியலில் "ஜீனஸ்' என்கிற பிரிவைச் சேர்ந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்ட்டா என்கிற நான்கு "ஜீனஸ்' நோய்த்தொற்றுகள் 1960-இல் உயிரியல் நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் ஆல்பாவும் பீட்டாவும் பாலூட்டிகளையும், "காமா' என்பது பறவைகளையும் "டெல்ட்டா' என்பது பாலூட்டிகள், பறவைகள் என இரண்டு இனங்களையும் பாதிக்கும் கிருமிகள். இவற்றில் மிக மோசமான கரோனா நோய்த்தொற்று, மனிதர்களில் ஜலதோஷ பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளில் ஒன்று. சார்ஸ் (2003), மெர்ஸ் (2012) இப்போது கரோனா (2020) ஆகிய மூன்று நோய்த்தொற்றுகளும் இந்த நூற்றாண்டில் உயிரிழப்புகளையும் பொருளாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும் நோய்த்தொற்றுகள்.
- மனித இனம் நூறாண்டு இடைவெளியில் இதேபோல நோய்த்தொற்று பரவி பெரும் உயிரிழப்புகளை எதிர்கொள்வது வழக்க மாகவே மாறியிருக்கிறது. 1720-இல் பிளேக், 1820-இல் காலரா, 1920-இல் ஸ்பானிஷ் காய்ச்சல், இப்போது 2020-இல் சீனாவில் உருவாகி இருக்கும் கரோனா நோய்த்தொற்று என்று தொடரும் விசித்திரம் ஆச்சரியப்படுத்துகிறது.
உலகமயச் சூழல் வணிகத்தை மட்டுமல்ல, முன்னெப்போதும் இல்லாத அளவில் நோய்த்தொற்றையும் பரவலாக்கியிருக்கிறது.
நன்றி: தினமணி (060-02-2020)