TNPSC Thervupettagam

இயல்பை இழக்கும் இமயமலை

November 29 , 2023 232 days 181 0
  • இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் ரீதியாகப் பலவீனமானவை எனக் கருதப் படும் இடங்களில் எழுப்பப்பட்ட சாலைகளும், பாலங்களும், கட்டிடங்களும் இயற்கைப் பேரிடர்களான வெள்ளத்தினாலும் நிலச்சரிவுகளினாலும் அழிவுகளைச் சந்திக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் நலன்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு, வணிக நோக்கத்துக்காக மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதால் இமயமலை தனது இயல்பை இழந்துவருவதாகத் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டுவருகிறது.
  • இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இமயமலைத் தொடர்கள் பரவியிருக்கின்றன. இதில் இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட் மாநிலங்களில் தொழில்மயமாக்கலும் நகர்மயமாக்கலும் பலவீனமான இடங்களில் உருவாக்கப்பட்டு வருவதால், அவற்றுக்கான பின்விளைவுகளையும் அப்பகுதிகள் சந்தித்துவருகின்றன.

விதிகளை மீறும் திட்டங்கள்

  • அதிகரித்துவரும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப் பட்டு வருகின்றன. மலைப் பகுதிகளில் உருவாக்கப்படும் சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஏராளமான விதி மீறல்கள் நடைபெறுகின்றன. உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வா பகுதியில் ‘சார் தாம்’ நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக லட்சக் கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன; காடுகள் பாதிக்கப்பட்டன. இத்திட்டங்களால் உருவாகும் சகதி இமயமலைப் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதித்துவருகிறது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிஆகிய நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் வகையில்தொடங்கப்பட்ட ‘சார் தாம்’ நெடுஞ்சாலைத் திட்டம்,உத்தராகண்ட் மாநிலம் சந்தித்துவரும் பேரழிவுகளுக்குஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. புனிதப்பயணத்துக்கான வழித்தடத்தைச் சுற்றுலாத்தலத்துக்கான பாதையாக மாற்ற அரசு முயற்சிப்பதால், இந்தப் பிரச்சினைஏற்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

வளர்ச்சிப் போட்டி

  • மலைப் பகுதிகளில் உயரமான ரயில் பாதைகளை அமைப்பதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவிவருகிறது. மலைப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும்போது பாறைகளின் தன்மையை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆனால், போட்டி மனப்பான்மையால் சுற்றுச்சூழல் சமநிலை பேணுதல் இங்கு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. சீனாவில் அமைந்துள்ள திபெத் மலைத் தொடர்கள் உறுதியான பாறைகளால் ஆனவை. ஆனால், இந்தியாவில் அமைந்துள்ள இமயமலைத் தொடர் நிலைத்தன்மை அற்றவை.
  • உலகின் இளமையான மலையான இமயமலையில் இன்னமும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என உத்தராகண்ட் மாநிலம் கருதப்படுகிறது. மேலும், பனியாறு உருகுதல், மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற ஆபத்துகளையும் உத்தராகண்ட் எதிர்கொள்கிறது. இப்படியான சூழலில் சாலை விரிவாக்கம், சுரங்கம் அமைத்தல் போன்ற பாதுகாப்பற்ற கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

தலையிட்ட உச்ச நீதிமன்றம்

  • வட இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, அதிகார மட்டத்தில் இருப்பவர்களைக் கவலையடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இமயமலைப் பகுதியின் நில அமைப்பின் தாங்கும்திறன் குறித்து முழுமையான, விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. மேலும், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அனைத்து மாநிலங்களில் மலைப் பாதையின் தாங்கும்திறன் குறித்த ஆய்வை மேற்கொண்டு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
  • 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நீர்மின் திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது. அக்குழுவெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில் நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறைக்கப்பட்டது. ஆனால், நிலஅமைப்புக்குப் பொருந்தாத மலைப்பாதை விரிவாக்கத்தையும், மலையைக் குடைந்து சுரங்கம் வேண்டும் ஏற்படுத்தும் பணி களையும் அவை தடுக்கவில்லை என்பதே உண்மை நிலவரம்.

காரணம் என்ன

  • காலநிலை மாற்றம் காரணமாக, இமயமலைப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை இருந்த சராசரி வெப்பநிலை, இப்போது மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறான நிகழ்வுகள்தான் இமயமலைப் பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆபத்தானதாக மாற்றியுள்ளன. சமவெளிகளில் இருப்பது போல் மலைப்பாதைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாது என்ற யதார்த்தத்தை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எல்லைச் சாலைகள் தேவைப்பட்டால், அவை உறுதியான பாறை நிலப்பரப்பில் அமைக்கப்பட வேண்டும். இமயமலையில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் நீர்மின் திட்டமும் முழுமையாகத் தடைசெய்யப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தீர்வு

  • மலைப் பிரதேசங்களில் அணைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நகரமயமாக்கல் ஆகியவற்றை மதிப்பிட, வழிகாட்ட, கண்காணிப்பதற்கான மத்திய அரசின் கொள்கையும் அணுகுமுறையும் மாற வேண்டும். மலைப் பகுதிகளில் நிலத்தின் தன்மையை உணர்ந்து போக்குவரத்தில் ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் மலைப் பகுதிகளில் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கொள்கை வழிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும். வரையறையற்ற கட்டுமான விரிவாக்கத்தால் உத்தராகண்ட்டின் ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஜோஷிமட் நகரம் எதிர்கொண்டுவரும் அபாயம் குறித்து, இஸ்ரோ ஆய்வு நடத்தியது. அதன் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், அபாயகரமான பகுதிகளில் உத்தராகண்ட் அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதே மாதிரியான ஆய்வை இமயமலைப் பகுதி முழுவதும் நடத்த வேண்டும். அந்த ஆய்வின் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்