TNPSC Thervupettagam

இயல்பை மாற்றாத சட்டத் திருத்தங்கள்

August 18 , 2023 464 days 293 0
  • நாடாளுமன்றத்தில் மூன்று குற்றவியல் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.C), இந்திய சாட்சியங்கள் சட்டம் (Indian Evidence Act) ஆகியவற்றுக்கு மாற்றாக, இந்தப் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் என்பதால், இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்தில், இந்தப் புதிய சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மத்திய அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஏற்கெனவே இருக்கும் இந்தச் சட்டங்களின் ஆங்கிலப் பெயர்களுக்குப் பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா எனப் பெயர் மாற்றப்பட்டு, மசோதாக்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பன்மொழிப் பண்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக உள்ளது. இது இந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மக்களிடையே வேறுபாட்டை உருவாக்கும் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
  • சில சட்டப் பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124ஏ மாற்றப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் 150ஆவது பிரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவில் தேசத் துரோகம்என்ற சொல் விலக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்குப் பதிலாக இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை - ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவித்தல்என்று சேர்க்கப்பட்டிருப்பது அதை ஈடுசெய்துள்ளது; மேலும், இது தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. பயங்கரவாதம், ஊழல், கும்பல் படுகொலைகள், திட்டமிடப்பட்ட குற்றம் போன்ற குற்றங்களைப் புதிய தண்டனைச் சட்டங்களின் கீழ் புதிய பெயர்களில் கொண்டுவரவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • குற்றம் நடந்த இடத்தைப் பொருட்படுத்தாமல், எந்தக் காவல் நிலையத்திலும் மக்கள் புகார்செய்ய இது வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்தை ஒரு குழு தங்களுக்குச் சாதகமாகக் கைக்கொள்ள வாய்ப்புள்ளது. இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள், திட்டமிடப்பட்ட குற்றங்கள், கும்பல் படுகொலைகள், பயங்கரவாதம் ஆகிய குற்றப் பிரிவுகள் இன்னும் தெளிவற்றதாகத்தான் உள்ளன. மேலும், இந்தத் தெளிவற்ற சட்டப் பிரிவுகள், அரசமைப்புரீதியாகக் கைது செய்வதற்கான பரந்த அதிகாரங்களைக் காவல் துறைக்கு வழங்க வழிசெய்கின்றன.
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க இந்தியாவில் கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் திருமணத்துக்கு உள்பட்ட பாலியல் வல்லுறவு குற்றமாக்கப் படவில்லை. ஒவ்வொரு குற்றச் சம்பவமும் தடயவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இந்தப் புதிய மசோதாக்கள் முன்மொழிகின்றன. ஆனால், இந்தியாவின் தடயவியல் அமைப்பு அதைக் கையாளும் விதத்தில் இல்லை என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  • 163 ஆண்டுகள் பழமையான இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பல பிரிவுகள் மாற்றப்பட வேண்டியவையே. ஆனால், இந்தப் புதிய மசோதாக்களில் பெரும்பாலானவை புதிய பெயர்களின் கீழ் பழைய சட்டப் பிரிவுகளை அப்படியே கொண்டுள்ளன. ஆங்கில மயமாக்கலுக்கு எதிரான நம் மனநிலை குறித்து காந்தி இப்படிச் சொல்கிறார்: புலி இருக்கக் கூடாது. ஆனால், புலியின் சுபாவம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்’. மத்திய அரசும் ஆங்கிலமயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். மாநில மொழிகளை மதிக்க வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (18  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்