- உம்பன் புயல் வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சூறையாடியிருக்கிறது. கடும் கோடை, புயல் மழைக் காலங்களில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்தப் புயலும் மற்றுமொரு உதாரணமாகியிருக்கிறது.
- இரு மாநிலங்களும் கடும் சேதங்களைச் சந்தித்திருப்பதோடு, லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போயிருக்கிறது.
- உம்பன் புயலால் பேரழிவு ஏற்படும் என்பது முன்கூட்டியே ஓரளவுக்குக் கணிக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தம்மாலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தன.
- அதைத் தாண்டியும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, கரோனா விளைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களுக்கும் இது இரட்டை அடி.
- கரோனா கிருமிப் பரவலானது மக்கள் ஒன்றுகூடல் தவிர்ப்பை நிர்ப்பந்திக்கும் நிலையில், பல லட்சம் மக்கள் புயல் காரணமாக வீடுகளை இழந்து, ஒரே இடத்தில் கூட்டமாகத் தங்கவைக்கும் சூழல் உருவாகியிருப்பதானது புதிய அபாயத்தையும் கூடுதல் சவால்களையும் உருவாக்கியிருக்கிறது.
- ஏற்கெனவே, பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும் இரு மாநிலங்களும் இந்தப் பேரிடர் இக்கட்டை எதிர்கொள்ள ஒன்றிய அரசு, உடனடி நிதி உதவியையும் தேவைப்படும் ஏனைய உதவிகளையும் உடனடியாக அளித்திடல் அவசியம்.
- தெளிவான எச்சரிக்கை விடுத்து, அதன் மூலம் பல லட்சக் கணக்கான உயிர்களைக் காக்கும் அளவுக்கு இந்தியாவின் புயல் எச்சரிக்கை அமைப்பு பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஒடிஷா இதில் நாட்டுக்கே முன்னோடி மாநிலம் ஆகியிருக்கிறது. ஏனைய மாநிலங்களும் அதன் வழியில் பயணிக்கின்றன.
- ஆயினும், நாம் இனி யோசிக்க வேண்டியது பேரிடர்களிலிருந்து மீள்வது எப்படி என்பதை மட்டும் அல்ல; பேரிடர்களை நிரந்தரப் பிரச்சினையாகவும், முன்கூட்டி திட்டமிட முடியாததாகவும் மாற்றிக்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றம் எனும் பெரும் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதேயாகும்.
- வங்கக் கடலில் இப்போது உண்டாகியிருக்கும் உம்பன் புயல் போன்ற கோடைகாலப் புயல்கள், கடந்த காலங்களில் மிக அரிதானவையாக இருந்தன. சுமார் அரை நூற்றாண்டுக்கு ஒருமுறை என்ற அளவில் ஏற்படக் கூடியதாக இருந்தன. இப்போதோ சென்ற ஆண்டில் ஃபானி புயல், இந்த ஆண்டில் உம்பன் புயல் என்று அடுத்தடுத்து எதிர்கொள்கிறோம்.
- நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதே இது உணர்த்தும் சமிக்ஞை. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க வாழ்க்கைக்கு நாம் மாற வேண்டியதன் அவசியத்தையே அது வலியுறுத்துகிறது. இப்போதைய இரட்டைத் துயரத்திலிருந்து வங்கம், ஒடிஷாவை மீட்டெடுப்பதோடு, இதுபற்றியும் நாடு சிந்திக்கட்டும்!
நன்றி: தி இந்து (27-05-2020)