TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப் போரில் துப்பாக்கி ஏந்த மறுத்த ராணுவ வீரன்!

December 25 , 2024 6 days 52 0

இரண்டாம் உலகப் போரில் துப்பாக்கி ஏந்த மறுத்த ராணுவ வீரன்!

  • இதை யார் சொன்னது என்று தெரியுமா? எனக்கும் தெரியாது. பரவாயில்லை. ஆனால் இது சொல்லும் அர்த்தம் தெரியுமா? ஏறத்தாழ எல்லா மதங்களும், கடவுள்களும் சொல்லும் அடிப்படைக் கருத்து இதுதான். உயிர்களை மதித்து, அன்பு செய்து வாழ வேண்டும் என்றே கடவுள்களும் (அ) கடவுள்களை உருவாக்கிய மனிதர்களும் போதிக்கிறார்கள்!
  • நாம் குழந்தையாக இருந்தபோது, இருக்கும் கடவுள்களில் ஒருவர் பெயரால், இருக்கும் மதங்களில் ஒன்றின் பெயரால் நமக்கும் அதே ‘அன்பு செய்' எனும் விதிமுறை கற்பிக்கப்படுகிறது. ஆனால் நம்மால் அப்படி இருக்க முடிகிறதா? புள்ளிவிவரங்களின்படி ஒரு நாளில் ஒரு மனிதனை குறைந்தது 5-லிருந்து 10 பேர் 'மண்டைகாய' வைக்கிறார்கள். அது அலுவலகமாக இருக்கலாம், வீட்டிலாக இருக்கலாம், அல்லது டிராபிக்கில் நகர வழியில்லை எனத் தெரிந்தும் பின்னாலிருந்து ஹாரனை அழுத்திக் கொண்டேயிருக்கும் மதிப்பிற்குரிய மகான்களாக இருக்கலாம், அல்லது சில சாப்பாட்டுக் கடைகளில் சாம்பார் கொண்டுவரச் சொன்னால்கூட மூஞ்சியைக் காட்டும் பணியாளர் நண்பர்களாக இருக்கலாம்! இவர்களையெல்லாம் எங்கிருந்து அன்பு செய்ய? அகிம்சையெல்லாம் ஓர் அளவுக்குத்தான் என காந்தியேகூட கடுப்பாகிவிடுவார் என்று தோன்றுகிறது.
  • ஆனால் நமக்குச் சொல்லித்தரப்பட்ட அதே ‘அன்பு செய்’ விதிமுறை, அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தைக்கும் சொல்லித் தரப்பட்டது. அந்தக் குழந்தை நம்மில் பலரையும்போல இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில்விடாமல், அந்த பாடத்தை ஆழமாகக் கற்றது. ஆனால், அதே குழந்தை வளர்ந்தவுடன் இரண்டாம் உலகப் போரில் பங்குபெற வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஒரு உயிரை எடுக்க விரும்பாத, ஏன் துப்பாக்கியைத் தொடக்கூட விரும்பாத அவன், அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான பயங்கரமான துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே வெறும் கையுடன் ஓடித் திரிந்த கதையைக் கேட்டு உலகமே வியந்தது. கையில் எந்த ஆயுதமும் இல்லாத அவனால் ஜப்பானின் ஒக்கினவா (Okinawa) எனும் பகுதி கைப்பற்றப்பட்ட கதையைக் கேட்டு அந்தக் கடவுளும் கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்த்திருப்பார். அப்படி என்ன செய்தான் அந்த வெறுங்கை வீரன்?
  • டெஸ்மண்ட் டாஸ் (Desmond Doss). அதுதான் அவனது பெயர். 1919-ல் விர்ஜினியாவில் டாம் - பெர்த்தா டாஸ் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தான். தந்தை டாம், முதல் உலகப் போரில் பணியாற்றி அதில் கிடைத்த ரணக் கொடூர நினைவுகளால் மனோவியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனாலேயே அதிகளவு குடிப் பழக்கமும், தினமும் மனைவியை அடித்துக் கொடுமை செய்வதுமாக இருந்தார். ஆனால் தாய் பெர்த்தா மென்மையானவள். மிகவும் பக்தியானவள். தன் 3 பிள்ளைகளையுமே பக்திமான்களாகவே வளர்க்க நினைத்தாள். அதில் அம்மாவின் செல்லப்பிள்ளை டெஸ்மண்ட் டாஸ் அவள் நினைத்தபடியே வளர்ந்தான். இயேசு எனும் கடவுள் பெயரால், கிறிஸ்தவம் எனும் மதத்தின் பெயரால் அவனுக்கு அந்த ‘உயிர்களிடத்தில் அன்பு’ சொல்லித் தரப்பட்டது. அவனை நல்ல மனிதனாக வளர்க்க கடவுள் பக்தி என்பது மிக முக்கியப் பங்காற்றியது. பைபிள் வாசகங்களை மனதில் தாங்கி நிற்கும் அவன், முக்கியமாகக் கடைப்பிடிப்பது "தௌ ஷேல்ட் நாட் கில்” (Thou Shalt not kill) எனும் வாசகத்தைத்தான் என்றிருக்கிறார் அவனது தாய். இன்னொரு உயிரை எடுப்பது, கடவுள் பார்வையில் மிகப் பெரிய பாவம் என்பதே அதன் பொருள்.
  • அவனுக்கு 16 வயதிருக்கும்போது வானொலியில் அவசரமாக ரத்தம் வேண்டிய செய்தி ஒன்று வந்துள்ளது. அதைக் கேட்ட டெஸ்மண்ட், பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டு உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டானாம். 6 கிலோ மீட்டர்கள் மரங்கள் நிறைந்த காட்டுப் பாதையில் ஒரு டவுசரையும் அழுக்கு பனியனையும் போட்டுக்கொண்டு நடந்தே சென்று ரத்தம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான். இந்தக் கதையை அவனது அம்மா பெருமையுடன் சொல்கிறார்.
  • துறுதுறுவென சுற்றித்திரிந்த டெஸ்மண்ட் வறுமை காரணமாக 8 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வறுமைக்கு 1929 - 1939க்கு இடையே உருவான உலகளாவிய பொருளாதார மந்த நிலையே காரணமாக இருந்துள்ளது. நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிய நிலையில் எப்படியோ டெஸ்மண்ட், கப்பல் கட்டும் தளம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அங்கு நல்ல பெயரும் வாங்கிவிட்டான். வேலை, குடும்பம், கடவுள், அன்பு, இடையில் ஓர் அழகான காதல் என வாழ்ந்துகொண்டிருந்தபோதுதான் வெடித்தது, “இரண்டாம் உலகப் போர்”.
  • 1939-ல் துவங்கிய அந்தப் போரில் நாட்டின் முக்கால் பங்கு இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற விருப்பப்பட்டார்கள். நாட்டுப்‘பற்று’ என்பது நாட்டு’வெறி’யாக மாறி எதிரிகளைக் கொன்று குவிக்க அமெரிக்க இளைய ரத்தம் துடித்தது. ‘எதிரி’ என எவனாவது பெயர் வைத்திருந்தால்கூட அவனையும் போட்டுத் தள்ளும் அளவிற்கு ஒரு கோபத்தை இளைஞர்கள் மத்தியில் உருவாக்க, பல விளம்பர வேலைகளைக்கூட அமெரிக்கா செய்துகொண்டிருந்தது. இளைஞர்களிடையே அந்த வெறியைத் தூண்டியதில் அங்கிள் சாம் (Uncle Sam) போஸ்டர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ராணுவப் பயிற்சிகளில் தோல்வியுற்ற அல்லது உடலளவில் தகுதி பெறாத பல இளைஞர்கள் நாட்டுக்காக ப் பணியாற்ற முடியாத இயலாமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் ஏராளம்.
  • இந்த நேரத்தில்தான், பணிபுரியும் இடத்தில் கிடைத்த பதவி உயர்வை மறுத்துவிட்டு ராணுவத்தில் சேர முடிவெடுத்தான் டெஸ்மண்ட். அதற்குக் காரணம், அவனது அண்ணன் ராணுவத்தில் சேர்ந்ததாகக்கூட இருக்கலாம். நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேட்கை அவனுக்குள்ளும் இருந்தாலும் கொலைக்கு எப்போதும் இசையாத அவன், ராணுவ மருத்துவப் பணியாளர்கள் பிரிவில் சேர விண்ணப்பித்தான். அமெரிக்க ராணுவத்தால் தேர்வும் செய்யப்பட்டான். வீட்டில் அம்மா கதறி அழ, அவர்களைத் தேற்றிவிட்டு, காதலியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ராணுவப் பயிற்சிக்குக் கிளம்பினான். எந்த உயிரையும் எடுக்க, காயப்படுத்த விரும்பாத ஒருவன், உலகின் மிக மோசமான கருணையற்ற போருக்குத் தயாரானான்.
  • ராணுவப் பயிற்சியில் எல்லா பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றான். பலர் நோஞ்சான் எனக் கிண்டல் செய்யுமளவில் இருந்தாலும் முடிந்த அளவு முயற்சி செய்து அனைத்திலும் தேர்ச்சி பெற்றான். ஆனால் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போதுதான் அனைவரது குறியும் அவன் மீது திரும்ப ஆரம்பித்தது. பயிற்சியில் டெஸ்மண்ட் துப்பாக்கியைத் தொட மாட்டேன் எனச் சொல்லிவிட்டான். ஏன் எனக்கேட்டால் "என் கடவுள் இதைத் தவறு என்கிறாரே” எனப் பணிவாகப் பதிலளித்தான். ஆனால் அதே கடவுளை வணங்கும் மற்ற தேச பக்தர்கள் எல்லோரும் மரக்கம்புகளை ஜப்பானியர்களாக நினைத்து சுட்டுத்தள்ள பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். இவன் துப்பாக்கியைத் தொடாத கதை உயர் அதிகாரிகள் வரை பரவி இவனுக்குப் பிரச்னைகளை பெருக்கியது.
  • டெஸ்மண்ட் டாஸ் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவனை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பினர். இது கடவுள் பக்தி இல்லை, கோழைத்தனம் என மற்ற வீரர்கள் இவனைக் கிண்டல் செய்தனர். ஆனால் அவன் மனவளம் குன்றியவனல்ல என மருத்துவர்கள் தெரிவித்தனர். எதைச் சொல்லியும் அவனை ராணுவப் பயிற்சியிலிருந்து வெளியேற்ற முடியாததால் அவனுக்குக் கழிப்பறை கழுவுதல் உள்ளிட்ட கடினமான வேலைகளையெல்லாம் கொடுத்தனர்.
  • துப்பாக்கிக்குப் பயப்படும் கோழையென அவனை அனைத்து வீரர்களும் கிண்டல் செய்து, அவன் தூங்குவதற்கு முன்னால் கடவுளைத் தொழும்போது அவன் மீது ஷூவை விட்டெறிந்து, அவனது பாக்கெட் பைபிளை அவனிடமிருந்து பறித்து அவனை அலையவிட்டு, அவனது காதலியின் புகைப்படத்தை எடுத்துவைத்துக்கொண்டு ‘வீரமில்லாத உனக்கு எதற்கு இவ்வளவு அழகான பெண்’ என அவனை எல்லா வகையிலும் இழிவுபடுத்தினர்.
  • தூங்கிக்கொண்டிருக்கும்போது போர்வையால் போர்த்தி அவனை அடித்துத் துவைத்தனர். இவையனைத்திற்கும் டெஸ்மண்ட்டால் அமைதியாக அழ மட்டுமே முடிந்தது. ஆனால் காலையில் முகம் முழுக்க காயங்களுடன் மீண்டும் பயிற்சிக்கு வந்து நின்றுவிடுவான். டெஸ்மண்ட் நினைத்திருந்தால் அவனால் அப்போதே ராணுவப் பயிற்சியிலிருந்து விலகி வீட்டிற்கே சென்றிருக்க முடியும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அதற்கும் கடவுளை வேண்டிக்கொண்டான்.
  • இருக்கும் பிரச்னைகள் போதாதென ஒருநாள், உயர் அதிகாரி ஒருவர் வந்து, துப்பாக்கியை எடுத்துச் சுடும்படி டெஸ்மெண்ட்டிற்கு உத்தரவிட்டார். அப்படிப்பட்ட அதிகாரியின் நேரடி உத்தரவை மீறுவது ராணுவச் சட்டத்தின்படி தவறு என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் தனது கடவுள் பக்திக்கு மீறிய செயலை அவன் செய்ய மறுத்தான். மாறாக மருத்துவப் பணியாளனாக பணியாற்ற வந்ததாக பணிவுடன் சொன்னான். எனினும், அத்தனை பேருக்கு முன்னால் ஒரு உயர் அதிகாரியை அவமதித்த குற்றத்திற்காக டெஸ்மண்ட் ராணுவச் சிறையிலடைக்கப்பட்டான்.
  • சிறையில் அவன் வடித்த கண்ணீரில் அந்தக் குட்டி பைபிளே முழுவதும் நனைந்திருக்கும். இந்தச் சமூகம்தான் கடவுளைப் போற்றி பின்பற்றவும் சொல்லித் தந்தது, அதுவே அதனை மீறாததற்கு தண்டிக்கவும் செய்கிறது எனக் குழம்பினான். மருத்துவப் பணியாளனுக்கு ஆயுதப் பயிற்சி எதற்கு? என்ற வாதத்தாலும், அவனது தந்தை கெஞ்சிக் கூத்தாடிப் பெற்ற மேலிட சிபாரிசாலும் அவனது தண்டனைத் திரும்பப் பெறப்பட்டு ராணுவத்தில் பணியாற்ற அவன் அனுமதிக்கப்பட்டான், துப்பாக்கி இல்லாமல்!
  • எனினும், சக ராணுவ வீரர்கள் கண்ணுக்கு அவன் ஒரு புழுவாகவே தெரிந்தான். வீரமாகச் சண்டையிட்டுக் காயங்களுடன் கிடப்பவர்களுக்கு மருந்துபோட்டுவிடும் ஒரு நோஞ்சானாகத்தான் டெஸ்மண்ட் பார்க்கப்பட்டான். குவாம், லேய்ட்டே, பிலிப்பின்ஸ் எனப் பல இடங்களில் நடந்த சண்டைக்குப் பின் ஜப்பானில் உள்ள ஒக்கினவாவை நோக்கி நகர்ந்தது டெஸ்மண்ட் டாஸ் பங்குபெற்ற படை.  அந்தச் சண்டையில்தான் உண்மையான வீரன் யார்? என இந்த உலகம் பார்த்தது!
  • ஹேக்சா ரிட்ஜ் (HACKSAW RIDGE) எனப்படும் 500 அடி உயர மலைப்பாறையின் மீது ஏறித்தான் ஒக்கினவாவை அடைய வேண்டியிருந்தது. கயிற்றால் செய்யப்பட்ட ஏணியைக் கொண்டு அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் மேலே ஏறி சண்டையிட ஆரம்பித்தனர். அந்தத் தீவிர துப்பாக்கிச் சண்டையில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். பலரது முகங்களும், கை கால்களும் குண்டுகளால் துளைக்கப்பட்டன. தோட்டாக்கள் மட்டுமின்றி நெருப்பைக் கக்கும் துப்பாக்கிகள்கூட அந்தச் சண்டையில் பயன்படுத்தப்பட்டன. நிற்காமல் கேட்கும் வெடிகுண்டு சப்தத்தில் பல நூறு பேர் கை, கால்களை இழந்துகொண்டிருந்தனர். உயிரெனும் வெப்பம் பலரது உடலைவிட்டுப் பிரிந்து அந்த இடத்தையே சூடாக்கியது.
  • அந்தச் சண்டைக்கு மத்தியில் டெஸ்மண்ட் டாஸ் காயப்பட்டு விழுந்தவர்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்தான். கீழே கிடந்தவர்களுக்கு முதலுதவி செய்தான். அனைத்து வீரர்களின் உடலிலும், துப்பாக்கி, குண்டுகளை வைக்கும் உறைகள் பொருத்தப்பட்டிருந்தபோது, டெஸ்மண்ட்டின் உடல் முழுதும் மருந்து டப்பாக்களையும், வலி நிவாரணிகளையும், காட்டன் துணிகளையும் வைக்கும் உறைகள் பொருத்தப்பட்டிருந்தன. துப்பாக்கி ஏந்திய வீரர்களுக்கு இருந்த அதே ஆபத்தான சூழல்தான் இந்த துப்பாக்கி ஏந்தாத டெஸ்மண்டுக்கும். ஆனால் அனைவரும் உயிர்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, இவன் பிணக் குவியலுக்குள் பிழைத்திருப்பவர்களைத் தேடி உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தான்.
  • சில மணி நேரத்தில் ஜப்பானின் தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாத அமெரிக்க வீரர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். மீண்டும் கயிற்றேணி வழியாக இறங்கியும், சிலர் அப்படியே மேலிருந்து குதித்தும் மலைக்குக் கீழே பாதுகாப்பாக ஒளிந்துகொண்டனர். ஆனால், டெஸ்மண்ட்டுக்கு அங்கிருந்து கீழே இறங்க மனமில்லை. அவன் மனதில் ஓடியதெல்லாம், காயம்பட்ட சிலர் உதவிக்காக ஏங்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? என்பது மட்டும்தான். அந்த மலைப்பாறையின் விளிம்பிலிருந்த சிறிய பாறைக்கு அருகே ஒளிந்துகொண்டிருந்த அவன், கண் முன்னே தெரிந்த கயிற்று ஏணி வழியே இறங்க மனமில்லாமல், மனதைத் திடப்படுத்தி மீண்டும் போர்க்களத்திற்குள் தனியாக ஓடினான். உடன்வந்த வீரர்கள் எல்லோரும் கீழே ஓடிவிட இவன் மட்டும் ஒளிந்து ஒளிந்து சென்று காயப்பட்ட தன் வீரர்களைத் தேடினான். ஒருவன் கிடைத்ததும், அவனது காயத்திற்கு மருந்துபோட்டு அவனைக் கஷ்டப்பட்டு அந்த விளிம்பிலிருந்த பாறைக்கு இழுத்துவந்தான். பின் கயிறு ஒன்றின் மூலம் அந்த அடிபட்ட வீரனைக் கட்டி, தனி ஆளாக கீழே இறக்கினான்.
  • ஆயுதங்களுடன் சென்ற வீரர்களே இறந்துகிடக்க, டெஸ்மண்ட் கண்டிப்பாக இறந்திருப்பான் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தபோது ஒரு அடிபட்ட வீரன் கயிற்றால் கட்டப்பட்டு கீழே இறக்கப்பட்டதைப் பார்த்து அனைவரும் திகைத்துவிட்டனர். அந்த வீரனைக் கயிற்றிலிருந்து விடுவித்து தூக்கிவந்தபோது, மயக்கமாக இருந்த அவன் சொன்னான், "டெஸ்மண்ட்”! அனைத்து வீரர்களும் மிரண்டுவிட்டனர். கயிறு மீண்டும் மேலே சென்றுவிட்டது.
  • ஒருவனைக் காப்பாற்றிய டெஸ்மண்ட் தன் கடவுளிடம் ‘இன்னும் ஒருவனை மட்டும் என் கண்ணில் காட்டுங்கள்’ என வேண்டினான். மீண்டும் போர்க்களத்திற்குள் ஓடினான். மேலும் ஒருவன் கிடைத்தான். அவனுக்கும் முதற்கட்ட சிகிச்சை அளித்து அவனையும் விளிம்பிற்குத் தூக்கிவந்து கீழே கயிற்றால் இறக்கினான். பின் கடவுளிடம் மீண்டும் அதே வேண்டுகோள் "இன்னும் ஒருவனைக் காட்டுங்கள்.” மீண்டும் அந்தப் பிணக்குவியலுக்குள் ஓடினான்.
  • எதிர்த் திசையில் ஜப்பான் ராணுவம் கொலை வெறியுடன் இருக்க, உயிரைப் பணயம் வைத்து தன் வேலையைச் செய்தான். மீண்டும் ஒருவன் கிடைத்தான். இப்படி 2 அல்ல 3 அல்ல, மொத்தம் 75 உயிர்களைக் காப்பாற்றினான் அந்த துப்பாக்கி ஏந்தாத 'கோழை' டெஸ்மண்ட் டாஸ். நோஞ்சான் எனக் கிண்டல் செய்யப்பட்ட அவன் தனி ஆளாக, உயிருக்கு பயமில்லாமல் 75 பேரைக் கயிறு கட்டி இறக்கினான். அந்தப் போர்க்களத்தில் காயப்பட்டுக்கிடந்த ஜப்பான் வீரனுக்கும் அவன் முதலுதவி செய்ததுதான் வியப்படைய வைக்கும் உண்மை.
  • டெஸ்மண்ட்டால் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர், தன்னைக் காப்பாற்ற டெஸ்மண்ட் வந்தபோது அவனுக்கு பாதுகாப்பிற்காக தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்ததாகவும், ஆனால் உயிரைக் காப்பாற்றத் துப்பாக்கி தேவையில்லை என அப்போதும் துப்பாக்கியைத் தொட அவன் மறுத்ததாகவும் சொல்கிறார்.
  • 75 பேரைக் காப்பாற்றிவிட்டு படு காயங்களுடன் கீழே திரும்பிய டெஸ்மண்ட்டுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அதிலிருந்து அவன் முழுதாக மீள்வதற்குள் வீரர்கள் அடுத்த சண்டைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். இந்த முறை அந்த மலையில் ஏறப் போகும் படைக்கு, இது வாழ்வா சாவா நிலைதான். எல்லா வீரர்களும் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தனர். அந்தப் படையின் ஜெனரல், டெஸ்மண்டிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். டெஸ்மண்ட் இந்தப் படையுடன் இன்று வந்தால் வீரர்கள் தைரியமாக சண்டை போடுவார்கள் என்று அவர் கூறினார். கண்டிப்பாக டெஸ்மண்ட் நம்மைக் காப்பாற்றுவான் என்ற தைரியம் அவர்களுக்குக் கிடைக்கும் என அவர் கூறினார். அதற்கு டெஸ்மண்ட் தனது பாக்கெட் பைபிளில் உள்ள வாசகத்தைப் படித்துவிட்டுவர கொஞ்சம் அவகாசம் மட்டுமே கேட்டான். மொத்த படையும் டெஸ்மண்ட் அவனது பைபிளைப் படித்துவிட்டு வரும்வரை காத்திருந்த கதையை உயிர் தப்பிய அனைத்து வீரர்களும் நினைவு வைத்துள்ளனர். அந்த முறை அமெரிக்க ராணுவம் ஹேக்சா ரிட்ஜ் மலைப் பாறையில் நடந்த சண்டையில் வெற்றியைச் சுவைத்தது.
  • டெஸ்மண்டின் இந்த வீர தீரச் செயலுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமன் கையால் பதக்கமும் கிடைத்தது.
  • இப்போது… மீண்டும்….
  • “உயிர்களிடத்தில் அன்பு செய்”
  • ஏறத்தாழ எல்லா மதங்களும் எல்லா கடவுள்களும் சொல்வது இதைத்தான். டெஸ்மண்ட் குழந்தையாக இந்த உலகிற்கு வரும்போது அவனுக்குச் சொல்லித்தரப்பட்ட அந்த ஒற்றை வார்த்தை, அவனை எப்பேர்ப்பட்ட மனிதனாக வளர்த்தெடுத்துள்ளது! அவன் ஒருபோதும் நேரில் கண்டிடாத கடவுள் என்ற ஒருவரின் பெயரால் சொல்லித் தரப்பட்ட ஒரு நல்ல விஷயம், எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளது! இவனது கதையைக் கேட்கும்போதுதான் இந்தக் கடவுள் கோட்பாடுகள் எல்லாம் நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்டவைதானே என்பது புரிகிறது. பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் இதேபோல் கடவுள் நம்பிக்கையைச் சரியாகச் சொல்லித் தந்திருந்தால், பின்பற்றத் தெரிந்திருந்தால், எந்தப் போரும் நடந்திருக்காதுதானே?
  • எந்தக் கடவுளும் யாரையும் கொல்லச் சொன்னதில்லை, மற்ற கடவுள்களை இழிவாகப் பேசியதுமில்லை. அடிப்படையில் எல்லா உயிர்களையும் நேசிக்கச் சொல்கின்றனர். அதாவது கடவுள், மதம் எனும் கோட்பாடுகள், டெஸ்மண்ட் டாஸைப் போன்ற மனிதர்களை உருவாக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால்… எல்லாம் எங்கே மாறிப் போனது? ஒரு உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த எல்லா கடவுள்களும் மறந்தது எப்படி? மதச் சண்டைகளும், கலவரங்களும், கடவுளின் பெயரால் நடக்கும் படுகொலைகளும் நம் கண்ணில் படாமலில்லைதானே. நடக்கும் மிகக் கொடூரமான சம்பவங்களைப் பார்க்கும்போது “இவனுங்களுக்கு என்ன சொல்லிக் குடுத்தா, என்ன பண்ணிட்டு இருக்கானுக?” எனக் கடவுளே இந்த உலகைக் கைவிட்டுவிட்டு வேறு உலகத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது.
  • மதங்களின், கடவுள்களின் நல்ல போதனைகள் சுய லாபத்திற்காகத் திரிக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றனவோ? உண்மையில் டெஸ்மண்ட் டாஸிடம் கடவுள் எனும் கோட்பாட்டிற்கு கிடைத்ததுதான் முதலும் கடைசியுமான வெற்றியா?
  • எப்படி ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக பூச்சாண்டிகளும், பேய்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, அது அந்தக் குழந்தை வளர்ந்த பின்னும் தேவையற்ற ஒரு பயமாக ஒட்டிக்கொள்கிறதோ அதைப்போல, எதற்கோ உருவாக்கப்பட்ட கடவுள்களால் இப்போது என்னென்னமோ நடந்து கொண்டிருக்கின்றன.
  • உலகில் கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் அவலங்களையெல்லாம் பார்க்கும்போது டெஸ்மண்ட் டாஸும், அவனுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திய அவனது அம்மாவும் எங்கோ உயர்ந்து நிற்கிறார்கள். இப்போது நீங்கள் சொல்லுங்கள், உங்கள் கடவுள் என்ன சொல்கிறார்?

நன்றி: தினமணி (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்