இரா. நல்லகண்ணு 100
- இரா.நல்லகண்ணு அரசியலில் அறியப்பட்ட அளவுக்கு இலக்கியத்தில் அறியப்படவில்லை. இளம் பருவத்திலேயே வாசிப்பதில் பேரார்வம் கொண்டவர். பள்ளியில் பலவேசம் என்ற ஆசிரியர் இவருக்கு ஊக்கச்சக்தியாக விளங்கினார். விடுதலைப் போராட்டக் களம் பாரதியை அறிமுகப்படுத்தியது. சிறை வாழ்வு பொதுவுடமை இலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்பைத் தந்தது. மார்க்சியத் தத்துவ நூல்களுடன், இலக்கிய நூல்களையும் கற்கத் தொடங்கினார்.
- 1954இல் சிறையில் ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் டென்னிஸனின் படைப்பிலிருந்து ‘மாண்ட வீரனை மனைக்குக் கொண்டு வந்தனர்’ என்கிற பகுதியை மொழிபெயர்த்தார். இது இவரின் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்தியது. அறிஞர் நா.வானமாமலை, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் ஆகிய மூவரும் இவருக்கு முன்னோடிகளாக விளங்கினர். தொடக்கத்தில் இவர்களுடனான உறவு இளம் வயதில் இலக்கியப் பற்றை உருவாக்கியது. 1962இல் ஆர்.என்.கண்ணன் என்கிற பெயரில் ‘சூத்திரதாரி’ சிறுகதையை ‘சாந்தி’ இதழில் எழுதினார். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைச் சித்தரிக்கும் அற்புதமான சிறுகதை அது.
- விவசாயிகள் இயக்கத்திலும், பொதுவுடமைக் கட்சியிலும் பொறுப்பேற்றுச் செயல்படத் தொடங்கியதால் இவரின் படைப்புப் பணிக்கு அடைப்பிட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் தொடர்ந்து இலக்கியங்களைக் கற்றார். இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்தினார். தீவிர வாசகராகவும் எழுத்தாளர்களின் உபாசகராகவும் திகழ்ந்தார். பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவாவுக்குப் பிறகு பலதரப்பட்ட எழுத்தாளர்களைக் கொண்டாடியவராக நல்லகண்ணு திகழ்கிறார்.
- ஜீவா தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ‘தாமரை’ இதழ் ஆகியவற்றின் வளர்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பொதுவுடமை இயக்கம் பாரதியை உயர்த்திப் பிடித்தது. நல்லகண்ணுவும் பாரதி குறித்து எழுதினார்; பேசினார். இவரின் ‘பாரதியும் விவசாயிகளும்’ எனும் கட்டுரை சிறப்பானது.
- எட்டயபுரத்தில் பாரதி விழாவைத் தொடர்ந்து நடத்திவரும் ‘எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்துடன்’ இன்றும் தொடர்பில் இருந்து வழிகாட்டுகிறார். காசிக்குச் சென்றபோது பாரதியின் ‘காசி வாசம்’ குறித்து விவரங்களைத் தேடிப் பதிவுசெய்திருக்கிறார். பாரதி நூற்றாண்டு விழாவிலும் மணிமண்டப உருவாக்கத்திலும் பெரும்பங்காற்றினார்.
- பாரதியோடு பாரதிதாசனையும் இணைத்து பொதுவுடமை இயக்கத்திற்கு வலுச் சேர்த்தார். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை நடத்தி, மலரும் கொண்டுவரச் செய்தார். கவிஞர் தமிழ்ஒளியைத் தமிழ்ச் சூழலில் கவனம் பெறச் செய்தவர்களில் ஒருவர் இவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’ என்கிற அறக்கட்டளைப் பொழிவில் தமிழ்ஒளியைச் சிறப்பித்துப் பேசினார் நல்லகண்ணு. தமிழ்ஒளி-75 விழாவில் தலைமையுரையாற்றினார்.
- கம்பனில் தோய்ந்தவர். ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், வள்ளலார் வரை ஆழமான பரிச்சயம் அவருக்குண்டு. ஒருமுறை நேர்ப் பேச்சில் ‘வள்ளலார் பற்றிய என் பார்வைக்கு தோழர் வழிகாட்டி’ என்றார் அறிஞர் கா.சிவத்தம்பி. தொ.மு.சி. ரகுநாதனின் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்துள்ளார். பாரதி குறித்த ஆக்கங்களை வரவேற்றதுடன், சமுதாய இலக்கியம் நூலை மிகவும் பாராட்டியுள்ளார். அதேவேளை, தொ.மு.சி.யின் திருக்குறள் குறித்த கருத்துகள் அவரின் சொந்தக் கருத்துக்கள் என்றும் சுட்டியுள்ளார்.
- நா.வானமாமலையின் அறிவாற்றலைப் புரிந்து அவரை முன்னோடியாக ஏற்றார். அவர்போல் நாட்டுப்புறப் பாடல்களில் ஆர்வம் கொண்டார். சில பாடல்களைச் சேகரிக்கவும் செய்தார். ‘ஆராய்ச்சி’ இதழுக்கும் உறுதுணையானார். புகழ் பெற்ற ‘ஆண்டான் கவிராயன்’ பற்றியும் எழுதி உள்ளார்.
- விந்தன், ஜெயகாந்தன், சு. சமுத்திரம், பொன்னீலன், இராஜம் கிருஷ்ணன், தனுஷ்கோடி ராமசாமி, சிற்பி, ஈரோடு தமிழன்பன் போன்ற பல படைப்பாளிகளையும் போற்றுவார். சாமி.சிதம்பரனார், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன், இ.சுந்தரமூர்த்தி, வீ.அரசு, மே.து.ராசுக்குமார், ந.முத்துமோகன் போன்ற அறிஞர்கள் பலரையும் ஊக்கப்படுத்தியவர். முகம் தெரியாத ஒருவரின் படைப்பைக்கூடப் பத்திரிகைகளில் வாசித்து விட்டு, பிடித்திருந்தால் தேடி, அழைத்துப் பாராட்டும் இயல்பு இவருக்குண்டு.
- ‘விடுதலைப் போரில் விடிவெள்ளிகள்’, ‘மொழி வழி மாநிலம் தமிழ்நாடு’, ‘தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்’, ‘சமுதாய நீரோட்டம்’, ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ‘கவிஞர் தமிழ்ஒளி’, ‘சிறையிலிருந்து ஓர் இசை’, ‘அணிந்துரைகள், முன்னுரைகள்’, மதிப்புரைகள்’ ஆகிய நூல்கள் இவரின் கலை இலக்கியப் பார்வையைச் சுட்டி நிற்கின்றன. “மனித வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்.
- எல்லாவிதமான சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறைகளிலிருந்தும் தன்னையும் தன் சமூகத்தையும் மேலும் மேலும் விடுவித்துக் கொள்ளும் போராட்டம். பல முனைகளில் நடக்கும் இந்தப்போராட்டமே வாழ்க்கையை மேலும் மேலும் மேம்படுத்தும். இம்மாதிரிப் போராட்டத்தில் ஈடுபடும் மனிதர்களுக்கு இலக்கியம் ஊக்கமளிக்க வேண்டும். நம்பிக்கை அளிக்க வேண்டும். கலையும் இலக்கியமும் மனிதனை விமர்சிக்கலாம். ஆனால் விகாரப்படுத்தக் கூடாது” என்பார். இத்திசை வாழ்விலேயே இயங்கி வருகிறார்.
- மார்க்சிய அடிப்படைகளை முழுமையாக ஏற்று, வழி நடத்தி, தலைமை தாங்கியவர் நல்லகண்ணு. அதேவேளை, நிலவியல் சார்ந்து தாய் மொழியையும் தமிழ்ப் பற்றையும் கைக்கொண்டார். வர்க்க இலக்கியங்களோடு சேர்த்தே அதன் நீட்சியாக தலித்தியத்தையும், பெண்ணியத்தையும் வரவேற்றார்.
- கலை இலக்கியத் துறையில் ஈடுபடும் யாவருக்கும் ஒரு மூதாயாக அரவணைத்தார். சனநாயகமும், சமநீதியும், மனித நேயமும்தான் அவரின் அளவுகோல்கள். ‘என் கட்சி’ என்ற பாப்லோ நெரூடாவின் கவிதையை அடிக்கடி நினைவுகூர்வார். அதில், “என் கட்சி: நீ எனக்கு நெருப்பு பற்றுவதைப்போல அன்பைத் தூண்டக் கற்பித்தாய்” என வரும். நல்லகண்ணுவும் அன்பைத் தூண்டுகிறார். வையம் அன்பால் தழைக்கும்தானே?
- (டிசம்பர் 26 அன்று இரா.நல்லகண்ணு நூற்றாண்டு தொடங்குகிறது.)
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 12 – 2024)