TNPSC Thervupettagam

இரு தேர்வுகள்: இருள் சூழும் மருத்துவக் கல்வி

July 28 , 2023 535 days 328 0
  • தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 நடைமுறைக்கு வந்தபின், தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வந்த இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India) கலைக்கப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) அமைக்கப் பட்டது.
  • மருத்துவக் கல்வி - மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்என்று சொல்லப்பட்டாலும், மருத்துவக் கல்வி - மருத்துவ சேவைகள் குறித்த விஷயங்களில், மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்களைப் பறிப்பது, தடையற்ற தனியார் மயத்தைப் புகுத்துவது, நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பை அளிப்பது என்கிற நோக்கங்களுடனேயே இந்த ஆணையம் செயல்படுகிறது.
  • புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மருத்துவம் - துணை மருத்துவத் துறையில் பிற்போக்குத் தனமான விஷயங்களை இந்த ஆணையம் செயல்படுத்திவருகிறது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019, நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதன் உள்ளடக்கமாக உள்ள நீட் தேர்வைக் கட்டாயப்படுத்தி 2016 முதல் மத்திய அரசு நடத்திவருகிறது. தற்போது 2024 முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தேர்வுகள்

  • மருத்துவக் கல்வி / கல்லூரி சேர்க்கை குறித்துத் தத்தம் கொள்கைகளையும் சேர்க்கை வழிமுறைகளையும் பாடத்திட்டத்தையும் உருவாக்க அந்தந்த மாநிலங்களே அதிகாரம் பெற்றவை. இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவமனைகளை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும், உயர்நிலை, மேல்நிலைப் பாடத்திட்டம் - மருத்துவக் கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பாதித்துள்ளது.
  • ஆயூஷ்’ - செவிலியர் படிப்புகளுக்கும் நீட் தேர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒட்டு மொத்த மருத்துவம் - மருத்துவம் சார்ந்த துறைகளையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட்மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர் போன்றோரைத் தயார் செய்யும் அதே வேளையில், பொது சுகாதார - கிராமப்புற சுகாதார சேவைகளையும் சீரழிக்கிறார்கள்.
  • 2016 முதல் நீட் தேர்வை ஆதரித்தவர்கள், ‘இதன் மூலம் மருத்துவக் கல்வியில் ஊழலை ஒழிக்கவும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும்என்று கூறினார்கள். நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு உத்தரவாதம்என்றும் சொன்னார்கள், ஆனால் நிதர்சனம் அப்படியில்லை.
  • நீட் தேர்வின் மூலம் தகுதிபெற்ற மாணவர்கள் மட்டுமே இளநிலை மருத்துவம் படிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட சேர்க்கையின் புள்ளிவிவரங்கள் அதைத் தவறு என்று நிரூபித்துள்ளன. நீட் தேர்வின் மூலம் மருத்துவ இடங்கள் வணிக மயமாவது சட்டபூர்வம்ஆக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, நீட் தேர்வில் தகுதி பெற்றாலே (கட்-ஆஃப் மதிப்பெண் வாங்கினாலே) தேர்ச்சிஎன்பதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
  • இதனால் கிராமப்புற, ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் நல்ல மதிப்பெண் பெற்றாலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு கிடைக்காதபோது, தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மருத்துவக் கனவைக் கைவிடுகிறார்கள்.

தனியார்மய அபாயம்

  • கடந்த காலங்களில் 50% இடஒதுக்கீடு இருந்த காரணத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குப் பல்வேறு சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ ஆசிரியர்களும் கிடைத்து வந்தார்கள். கடந்த 6 ஆண்டுகளில் நீட் தேர்வு முறையில் முதுகலை படிப்பு - உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • இது, அரசு மருத்துவக் கல்லூரி / மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுகாதாரப் பணிகளைப் பெருமளவு பாதிக்கிறது. நாளடைவில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று காரணம் கூறி, அரசு - பொது சுகாதாரக் கட்டமைப்புகளும் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும்.
  • நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் தனியார் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டன. பல லட்சங்களைச் செலவழித்துப் பயிற்சி எடுத்தால் மட்டுமே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முதல் முறை தேர்வு பெறவில்லையென்றால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். பள்ளி நேரம் முடிந்து பயிற்சி மையங்களுக்குச் செல்வதையெல்லாம் தாண்டி, தனியார் பயிற்சி நிறுவனங்கள் தனியார் பள்ளிகளுடன் கைகோத்து பள்ளிகளையே பயிற்சி மையங்களாக மாற்றும் அவலம் அரங்கேறிவருகிறது.
  • வெளியேற்றும் தேர்வு?
  • இந்த அவலங்களின் உச்சமாக, ‘நீட் தேர்வின் மூலமாக அனுமதிக்கப்படும் மருத்துவ மாணவர்களின் தரம் உயர்ந்திருக்கும்என்றெல்லாம் ஆரம்பத்தில் வாதிட்ட தேசிய மருத்துவ ஆணையம், ‘பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வியின் தரம் சரியில்லை. அதனால், மருத்துவர் பட்டம் பெறும் மருத்துவ மாணவரின் தரம் குறைந்திருக்கிறதுஎன்று புதிதாகக் கண்டுபிடித்து, ‘நெக்ஸ்ட்என்ற தேர்வைக் கொண்டு வந்துள்ளது.
  • இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் தேர்வை NEXT-Step I என்ற பெயரில் அகில இந்திய அளவில் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும்என்று அது கூறுகிறது. மாநில அரசுக்கு, ‘மருத்துவக் கல்வியின் மீதுள்ள அதிகாரத்தையும், மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் மாண்பையும் ஒருசேர சூறையாடும் நோக்கம் இது.
  • அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாக நினைத்து, தன் வரம்பு மீறிச் செயல்படுகிற மத்திய அரசின் சர்வாதிகாரத்தன்மையை வெளிப்படுத்துவதும்கூட. ஏனெனில், அரசமைப்பின்படி பல்கலைக்கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இவை மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளவை.
  • மேற்படிப்புக்கான போட்டித் தேர்வை (PG NEET) தகுதித் தேர்வான இறுதி ஆண்டுத் தேர்வுடன் இணைப்பது ஒன்றுக்கொன்று முரணானது, இளநிலை நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவம் பயின்ற மாணவர்களை, ‘நெக்ஸ்ட்தேர்வின் மூலம் மேலும் வடிகட்டுவதே இதன் நோக்கமாகும்.
  • ஒருபுறம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாமே மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்துகொள்ளலாம்என்று கூறி, போதிய அடிப்படை உள்கட்டமைப்பு, நோயாளிகள் - மருத்துவ ஆசிரியர்கள் இல்லாத தரமற்ற தனியார் கல்லூரிகளில் படிக்க வைத்துவிட்டு, மறுபுறத்தில் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுதித் தன் தரத்தை நிரூபிக்க வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது எப்படிச் சரியாகும்?
  • நெக்ஸ்ட்முதல் நிலைத் (NEXT Step I) தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால், பயிற்சி மருத்துவராக முடியாது. ஆறு மாதங்களோ ஒரு வருடமோ காத்திருந்து தேர்வுக்குத் தயாராகி மீண்டும் ஒரு பெருந்தொகையைக் கல்வி, தேர்வு, விடுதிக் கட்டணங்களாகச் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நெக்ஸ்ட் பயிற்சி மையங்கள் பல உருவாகும். கல்வி வியாபாரம்கொடிகட்டிப் பறக்கும். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தாண்டியே மருத்துவராக வேண்டும்.
  • ஏற்கெனவே கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையை இது மேலும் மோசமாக்கும். தற்போது, பயிற்சி மருத்துவராக ஓராண்டு பயிற்சி பெற்ற பிறகு, நெக்ஸ்ட் இரண்டாம் நிலையில் (NEXT Step 2) தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பதிவுசெய்துகொள்ள முடியும். இப்படிப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வுகாணக் குரல் கொடுக்க வேண்டியது மக்கள் மன்றத்தின் கடமை!

நன்றி:இந்துதமிழ் திசை (28– 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்