TNPSC Thervupettagam
January 4 , 2024 371 days 274 0
  • இந்தியா 2023-இல் உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட தேசமாக மாறியது. அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு இந்த நிலை தொடரக்கூடும். இந்தியா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்து பிரிட்டனை ஐந்தாவது இடத்திற்குத் தள்ளியது. இவையெல்லாம் நாம் பெருமைப்படக்கூடிய சாதனைகள் என்றால், இவைபோல அல்லாமல் தலைகுனிவை ஏற்படுத்தும் இன்னொரு "சாதனை'யையும் நாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
  • இந்திய நீதிமன்றங்களில் ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எண்ம மயச் சூழலில் நீதிமன்ற இணையதளத்தில் புள்ளிவிவரங்களைப் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்நீதிமன்றங்களில் 60.6 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.43 கோடி வழக்குகளும் நிலுவையில் இருந்தன.
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 3.24 கோடி என்று உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி பார்த்தால், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 18% அதிகரித்திருக்கின்றன. பொருளாதாரம் 6%, மக்கள்தொகை 0.8% என்று வளர்ச்சி அடைந்தால், தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 18% வளர்ச்சி அடைகிறது என்பது பெருமைப்படக்கூடிய ஒன்றல்ல.
  • தேங்கிக் கிடக்கும் வழக்குகளை ஓராண்டுக்குக் கீழே, ஓராண்டுக்கும் மூன்று ஆண்டுகளுக்கும் இடையே, அதற்கும் மேலே என்று பிரித்துப் பார்த்தால், 25% வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணையில் இருக்கின்றன என்பது தெரியவருகிறது.
  • உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நான்கில் ஒன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருப்பது என்றும், வழக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகம் என்றும் 2018 அறிக்கையொன்று தெரிவிக்கிறது. மிக அதிகமான வழக்குகள் - ஏழு லட்சத்துக்கும் அதிகம் - அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மட்டும் தேங்கி இருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் ஏறத்தாழ 75% வழக்குகள் குற்றவியல் வழக்குகள் என்றால், உயர்நீதிமன்றங்களில் அதே அளவிலான வழக்குகள் குடிமையியல் சார்ந்தவை.
  • வழக்குகள் விசாரணையில் தேங்கிக்கிடக்கின்றன என்றால், நீதி தாமதமாகிறது என்று பொருள். அதுமட்டுமல்ல, விசாரணை காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கையும் அதேபோல அதிகம். தீர்ப்புக்காகக் காத்திருக்கும் அந்த கைதிகளில் பெரும்பாலோர் நிரபராதிகளாகக் கூட இருக்கக்கூடும். அவர்களது நிலை குறித்தும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை.
  • இந்தியாவில் 1,319 சிறைச்சாலைகள் இருக்கின்றன. 2021 ஆய்வின்படி, அவற்றிலுள்ள கைதிகளின் சராசரி எண்ணிக்கை 130%; நான்கு சிறைச்சாலைகளில் ஒரு சிறைச்சாலையில் 150% அல்லது அதிலும் கூடுதல். வேறு சிறைச்சாலைகளில் 400%-க்கும் அதிகம். 100 பேருக்கான சிறைச்சாலையில் 400 பேர் காணப்படுகிறார்கள் என்றால், அந்தச் சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் எந்த அளவில் இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
  • சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் அனைவரும் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களோ, தண்டனை வழங்கப்பட்டவர்களோ அல்லர். அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பூர்வாங்க விசாரணை அல்லது வழக்கு விசாரணையில் இருப்பவர்கள். சிறைவாசிகளாக இருக்கும் 5,54,034 கைதிகளில் 77% விசாரணைக் கைதிகள் என்கிறது 2021 இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம்.
  • விசாரணைக் கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்கொள்ள கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தேசிய சட்ட சேவை ஆணையம், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சிறப்பு முனைப்பை அறிவித்தது. சமீபத்தில் பணி ஓய்வு பெற்றிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெüல், அதைத் தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்ற விசாரணைக் கைதிகள் மறுசீராய்வுக் குழுவின் மூலம் பிணையில் வெளிவரத் தகுதியுள்ள விசாரணைக் கைதிகளை அடையாளம் காணும் முயற்சி வேகமெடுத்திருக்கிறது.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் சிறைச்சாலைகளில் காணப்பட்ட கடுமையான இடநெருக்கடியை எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் உயர்நிலைக் குழுவை அமைத்தது. இடைக்காலமாகவோ, இடைக்காலப் பிணையிலோ, பரோல் எனப்படும் நன்னடத்தை அவகாசமாகவோ விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டது. கொள்ளை நோய்த்தொற்றின் முதல் அலையின்போது 61,000-க்கும் அதிகமான கைதிகள் வெளியேறியபோது சிறைச்சாலைகளில் இடநெருக்கடி 15% குறைந்தது.
  • 2021 இரண்டாவது அலையின்போது மீண்டும் இடநெருக்கடி பிரச்னை எழுந்தது. விசாரணைக் கைதிகள் பிணையில் அனுப்பப்பட்டனர். 2022-இல் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் முயற்சியால் 37,000 விசாரணைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
  • கீழமை நீதிமன்றங்களில் "முடிந்தவரை பிணை; தவிர்க்க முடியாவிட்டால் மட்டுமே சிறை' என்கிற உச்சநீதிமன்ற அறிவுரையை தேசிய சட்ட ஆணையம் வலியுறுத்துகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் காணப்படும் பிணைக்கான விதிகளின் அடிப்படையில் விசாரணைக் கைதிகள் நீண்ட நாள் சிறையில் அடைக்கப்படுவதை தவிர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.
  • சட்டத்தின் அடிப்படையான ஆட்சியில் மூன்று மாதங்களுக்கு மேல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்படுவது ஏற்புடையதல்ல!

நன்றி: தினமணி (04 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்