TNPSC Thervupettagam

இருண்ட காலத்தின் மீட்சிப் பாடல்

August 11 , 2024 109 days 92 0
  • உரிமைகள் மறுக்கப்பட்டு மனிதர்களில் ஒரு பிரிவினர் நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்படும்போது காதல் காவியங்களையும் புனைவுகளையும் படைத்துக் கொண்டிருப்பவர் கலைஞர் அல்ல; சமகாலத்தைப் பிரதிபலிப்பதுதான் ஒரு கலைஞரின் கடமை என்பது நீனா சிமோனின் நிலைப்பாடு. கலையைப் போராட்டக் கருவியாகப் பயன்படுத்தி மக்கள் மனங்களில் விடுதலை உணர்வை விதைத்தவர் அவர்.
  • இருபதாம் நூற்றாண்டின் இணை யற்ற கலைஞரான நீனா சிமோன், வடக்கு கரோலினாவில் 1933ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் யூனிஸ் கேத்லீன் வேமன். எட்டுக் குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் ஆறாவது குழந்தை அவர். யாரும் கற்றுத் தராமலேயே மூன்று வயதில் பியானோ இசைத்த யூனிஸைப் பார்த்து குடும்பமே வியந்தது. 12 வயதில் தேவாலயத்தில் தனியாக பியானோ வாசிக்கும் அளவுக்கு யூனிஸ் உயர்ந்தார். அந்த முதல் இசை நிகழ்ச்சிதான் அவரது வாழ்க்கையின் திசையை மாற்றியது. தேவாலயத்தில் யூனிஸ் வாசிப்பதை அவருடைய பெற்றோர் முதல் வரிசையில் அமர்ந்து கேட்டனர். அப்போது வெள்ளையினத்தவருக்காக இருக்கையை விட்டுத்தரும்படி யூனிஸின் பெற்றோரைக் கேட்டனர். அதைப் பார்த்ததும் யூனிஸ் கொதித்து விட்டார். பின் இருக்கையில் அமர வைக்கப்பட்ட தன் பெற்றோர் மீண்டும் முதல் வரிசைக்கு வரும்வரை தான் இசைக்கப்போவதில்லை என்பதில் அந்தச் சிறுமி உறுதியாக நின்றார். இறுதியில் அவரது உறுதியே வென்றது!

பாடகர் உதயமானார்

  • முதல் ஆப்ரிக்க அமெரிக்க செவ்வியல் கலைஞர் என்னும் வரலாற் றைப் படைக்கும் நோக்கத்துடன் ஃபிலடெல்பியாவில் உள்ள கர்டிஸ் இசைப்பள்ளிக்கு விண்ணப்பித்தார். எந்தவொரு காரணமும் சொல்லப் படாமல் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தான் கறுப்பினப் பெண் என்பதுதான் நிராகரிப்புக்குக் காரணம் என்பது யூனிஸுக்குப் புரியாமல் இல்லை. அந்த இசைப்பள்ளியின் ஆசிரியரிடம் தனியாகப் பயிற்சி பெற்றார். மாணவர்களுக்குத் தான் இசைப் பயிற்சி அளித்ததன் மூலம் ஆசிரியருக்குப் பணம் கொடுத்தார். அந்த வருமானமும் போதாத நிலையில் 1954இல் நியூஜெர்ஸியில் இருந்த கேளிக்கை விடுதியில் பியானோ இசைக்கச் சென்றார். அங்கே பியானோ இசைப்பதுடன் பாடுவதற்கும்தான் சம்பளம் எனச் சொல்லப்பட்டது. அதுதான் யூனிஸ் கேத்லின் வேமன் எனும் பியானோ கலைஞர், நீனா சிமோன் என்னும் மகத் தான புரட்சிப் பாடகராக உருவெடுக்க காரணமாகவும் அமைந்தது.
  • தான் கேளிக்கை விடுதியில் பாடுவது தனது பெற்றோருக்குக் களங்கத்தை ஏற்படுத்தித்தருமோ என்கிற எண்ணத்தில் ‘சிறு பெண்’ என்னும் பொருளுடைய ‘நீனா’ என்கிற ஸ்பானிய பெயரையும் தனக்குப் பிடித்த நடிகை சிமோனின் பெயரையும் இணைத்து ‘நீனா சிமோன்’ எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.
  • பாடித்தான் ஆக வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டபோது எதைப் பாட வேண்டும் என்பதை நீனா சிமோன் முடிவுசெய்தார். அவரே பாட்டெழுதி, இசையமைத்து, பியானோ வாசித்தார். கேளிக்கை விடுதியில் புரட்சிக்கான பாடலை அவர் இசைத்தார். தங்கள் மக்களின் பாடுகளைக் கதைப் பாடல்களாகச் சொன்னார். எவ்வித அலங்காரமும் இல்லாத அவரது கணீர் குரல் மக்களை வசியப்படுத்தியது. நாட்டுப்புறப்பாடல்களையும் சிறார் பாடல்களையும் செவ்வியல் தன்மையோடு பாடிய நீனாவின் பாணி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. வெள்ளையின இளைஞர் கள் கேளிக்கைப் பாடல்களில் மூழ்கி யிருந்தபோது கறுப்பின மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காவும் ஒலித்த நீனா சிமோனின் குரல் கறுப்பின இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வைத் தூண்டியது. 1950களின் இறுதியில் அவர் பாடிய ஒரே ஒரு பாடல் (I Loves You, Porgy) அமெரிக்காவின் தவிர்க்க முடியாத இசைக் கலைஞராக அவரை அரியணையேற்றியது.

தடையை மீறி ஒலித்த பாடல்

  • அதுவரை போராட்டப் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கையில்லாத நீனாவை இரண்டு சம்பவங்கள் அசைத்துப் பார்த்தன. அலபாமா தேவாலயத்தில் 1963இல் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நான்கு ஆப்ரிக்க அமெரிக்கச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட கொடூரம், நீனா சிமோனை முழுநேர அரசியல் செயல்பாட்டாளராக்கியது. கறுப்பின உரிமைப் போராளி யான மெட்கர் எவர் அதே ஆண்டு கொல்லப்பட்டதும் நீனாவைக் கொந்தளிக்க வைத்தது. நிறவெறியால் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகளைக் கண்டித்து 1964இல் ‘மிசிசிபி காட்டேம்’ (Mississippi Goddamn) பாடலைப் பாடினார். ஒரு மணிநேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட அந்தப் பாடல் மனித உரிமைப் போராட்டங்களின் பிரச்சாரப் பாடலானது. நிறவெறிக்கு எதிரான அந்தப் பாடல் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் பலவற்றில் தடைசெய்யப்பட்டது. ஆனால், நீனா ஏற்றிவைத்த உரிமைப் போராட்டச் சுடர் அதன் பிறகே கொழுந்துவிட்டுச் சுடர்ந்தது. “கறுப்பினத்தில் பிறந்ததைத் தவிர அந்தப் பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? தன் மக்களின் உரிமைகளுக்காக மெட்கர் போராடியது குற்றமா? அவர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? அந்தக் கோபம்தான் மிசிசிபி காட்டேம் பாடலை எழுதத் தூண்டியது.” என்று தன் சுயசரிதையில் (I put a spell on you) சொல்லியிருக்கிறார் நீனா.
  • அதன் பிறகு அவர் எழுதிய ‘ஃபோர் விமன்’ (Four Women), ‘ஸ்ட்ரேஞ்ச் ஃப்ரூட்’ (Strange Fruit), ‘டு பி யங், கிஃப்டட் அண்ட் பிளாக்’ (To be Young, Gifted and Black) போன்ற பாடல்கள் கறுப்பின மக்களின் விடுதலையை வலியுறுத்தின. ஒத்துழையாமைப் போராட்டத்திலும் அகிம்சைவழிப் போராட்டத்திலும் நீனாவுக்கு நம்பிக்கை இல்லை. மறுக்கப்படுகிற உரிமைகளைப் போராடிப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்களோடு இணைந்து கறுப்பின மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கெடுத்தார். சமத்துவமே சமூக விடுதலைக்கான பாதை என்பதை உரக்கச் சொன்ன பொதுவுடைமைவாதியாகவும் முற்போக்காளராகவும் நீனா திகழ்ந்தார்.

பெண்கள் பேச்சு

  • நீனா சிமோனின் தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள் வெள்ளை யினத்தவருக்குக் கோபமூட்டின. அதுவரை அவரது பாடல்களுக்கு மில்லியன் டாலர்களில் பணம் கொடுத்துவந்த நிறுவனங்கள் அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்தன. புரட்சியைக் கைவிட்டுப் பொழுது போக்குவதற்கான பாடல்களை அவர் இசைத்திருந்தால் பணத்தில் புரண்டி ருக்கலாம். ஆனால், அந்தப் பயனற்ற வாழ்க்கையைப் புறக்கணித்துவிட்டுத் தன் மக்களின் உரிமைகளுக்கான பாடலைப் பாடுவதையே நீனா விரும்பினார். ஒருகட்டத்தில் அமெரிக்க அரசுக்கும் நீனாவுக்கும் மோதல்கள் வலுத்தபோது 1970இல் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
  • அழகுப் பதுமைகளாகவும் ஆண்களைக் கவர்வதே பெண்களின் வேலையாகவும் கற்பிக்கப்பட்டிருக்கும் மாயைகளில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றார் நீனா. பெண்கள் புறணி பேசியபடி பொழுதைக் கழிப்பார்கள் என்கிற பொதுப்புத்திக்குப் பதில் சொல்லும்விதமாக, “நாங்கள் ஆண்களைப் பற்றியும் அலங்கார உடைகளைப் பற்றியும் பேசுவதில்லை. நாங்கள் லெனினைப் பற்றியும் மார்க்ஸைப் பற்றியும் புரட்சியைப் பற்றியும் பேசுவோம். அதுதான் பெண்களின் பேச்சு” என்றார்.

என்னிடம் வாழ்க்கை இருக்கிறது

  • நீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது பொது வாழ்க்கைப் பயணத்துக் குத் துணைநிற்கவில்லை. முதல் திருமணம் சில மாதங்களிலேயே முறிந்துவிட, அவருடைய இரண்டா வது திருமணமும் உவப்பானதாக அமைய வில்லை. அவருடைய கணவரே அவரது இசை வாழ்க்கையின் நிர்வாகியாக இருந்தார். உடல், உள ரீதியான வன்முறைக்கு ஆளானபோதும் தன் பொதுவாழ்க்கைச் செயல்பாடுகளை நீனா நிறுத்தவில்லை. பின்னாளில் இருதுருவ மனநிலை, மார்பகப் புற்றுநோய் போன்றவற்றோடு போராடிக் கொண்டே விடுதலைப் பாடல்களை அவர் இசைத்தார். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நிறத்தின் பெயராலும் சக மனிதர்களை ஒடுக்கும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களிடம் சொல்ல நீனாவிடம் எப்போதும் ஒரு பதில் உண்டு. அது, ‘என்னிடம் வீடு இல்லை, ஆடை இல்லை, பணம் இல்லை, பள்ளி இல்லை, நாடு இல்லை, கடவுள் இல்லை, காதலன் இல்லை’ எனத் தொடங்கி, ‘என்னிடம் மூளை உண்டு, ஆன்மா உண்டு, வாழ்க்கை உண்டு’ என முடியும். நீனா சிமோன் சொன்னதைப் போலவே இந்த அச்சமற்ற நிலைதான் விடுதலை.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்