இருந்து என்ன பயன்?
- உக்ரைனிலும் மேற்கு ஆசியாவிலும் நடந்து கொண்டிருக்கும் மோதல்களை உலகம் வேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகின் 90% நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்திருப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
- கடந்த மாதம் ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது கூட்டம் நடைபெற்றது. உறுப்பு நாடுகளின் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். சபையின் நடவடிக்கைகள் காணொலிக் காட்சியாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.
- "சமாதானத்தை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைவோம்' என்கிற உன்னத நோக்கத்தை ஐ.நா. பொதுச் சபையின் அந்தக் கூட்டம் முன்வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் கூடிய தலைவர்கள் பேசிய பேச்சுக்கும், வெளியே நடக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்பதுதான் யதார்த்த நிலை.
- செப்டம்பர் 26-ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், கத்தார் ஆகிய 12 நாடுகள் கொண்ட அணி கூடி விவாதித்து, மேற்கு ஆசியாவின் போர்ச்சூழல் இஸ்ரேலுக்கோ, லெபனானுக்கோ நன்மை ஏற்படுத்தாது என்று கூட்டறிக்கை வெளியிட்டது. அந்தச் செய்தியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தபோது, அமெரிக்கா இஸ்ரேலை போர் நிறுத்தத்துக்கு வற்புறுத்தி சம்மதிக்க வைத்திருக்கிறது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். உலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன.
- அடுத்த நாளே, ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற வந்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. எடுத்த எடுப்பிலேயே கடுமையான வார்த்தைகளால் உலக நாடுகளை விமர்சித்தார்.
- ஐக்கிய நாடுகள் சபையை யூதர்களுக்கு எதிரான கூட்டம் என்றும், உருண்டையான உலகம் இஸ்ரேலுக்கு எதிராகத் தட்டையாக மாறி எதிர்க்கிறது என்றும் குற்றம் சாட்டினார். பயங்கரவாதம் இல்லாத, ஆயுதம் இல்லாத காஸா உருவாக வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா முற்றிலுமாகத் தோற்கடிக்கப்படும் வரை இஸ்ரேலின் முனைப்பு தொடரும் என்றும் ஐ.நா. சபையில் முழங்கினார்.
- அமெரிக்கா மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய 21 நாள் போர் நிறுத்த செயல்திட்டம் அந்த விநாடியே மரணித்தது. தன்னுடைய உரையைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே ராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டார் இஸ்ரேல் பிரதமர்.
- பதுங்கு குழிகளை குறிவைத்துத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அதன் கவனக்குவிப்பு ஹிஸ்புல்லா தலைமையகமும், இலக்கு அதன் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவும். டாஹியேவின் ஹரேட் ரிக் பகுதியில் அமைந்த ஹிஸ்புல்லா தலைமையகம் துல்லியமாகத் தாக்கப்பட்டு ஹஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார்.
- பெய்ரூட்டில் அந்தத் தாக்குதல் நடந்த சில நிமிஷங்களில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வருத்தத்துடன் தெரிவித்தபோது உலகம் சிரித்தது. இஸ்ரேலின் எந்தவொரு பிரதமரும், அமெரிக்க அதிபரை இதுபோல அவமானப்படுத்தியதும் இல்லை; கேலிக்குள்ளாக்கியதும் இல்லை.
- கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, "அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து நாங்கள் செய்த தவறை நெதன்யாகு செய்ய வேண்டாம்' என்று அவருக்கு அமெரிக்க அதிபர் பைடன் அறிவுறுத்தினார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, பலமுறை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் போரை நிறுத்துவதற்காக மேற்கு ஆசியாவுக்கு பயணித்து விட்டார். "இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல, தன்னை எப்படி தற்காத்துக் கொள்கிறது என்பதும் முக்கியம்' என்று பிளிங்கன் வெளிப்படையாகவே பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்தார்.
- அதிபர் பைடனோ, ஆண்டனி பிளிங்கனோ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவர் எந்த ஆலோசனைக்கும் தயாராக இல்லை.
- 2023 அக்டோபர் ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து காஸாவில் நடக்கும் போரில், இதுவரை சுமார் 42,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏறத்தாழ நூறு பேர் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். காஸா உருக்குலைந்து போயிருக்கிறது.
- ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் போரில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் எல்லையின் இருபுறமும் இடம் பெயர்ந்திருக்கின்றனர். உலக வரலாற்றில் இப்படியொரு வேதனையான, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத சோதனையை மனித இனம் சந்தித்ததில்லை.
- மீண்டும் ஓர் உலகப் போர் மூண்டுவிடக் கூடாது என்பதற்காகவும், வருங்காலத் தலைமுறையினர் போரின் பேரழிவில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் 1945-இல் உருவாக்கப்பட்ட அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை. ஐ.நா.வின் பொதுச்செயலாளர் குட்டெரெஸ் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையும் செயலிழந்து போயிருக்கிறது.
- இன்னொரு உலகப்போர் கடந்த 80 ஆண்டுகளாக ஏற்படவில்லை என்பது என்னவோ உண்மை. ஆனால், உலகம் எதிர்கொண்ட இருநாடுகளுக்கு இடையேயான எந்தவொரு போரையும், எந்தவொரு பிரச்னையையும் ஐ.நா. சபையால் தீர்க்க முடியவில்லை என்பதும் உண்மை.
- பிறகு ஐ.நா. என்றொரு அமைப்பு இருந்து என்ன பயன்?
நன்றி: தினமணி (18 – 10 – 2024)