TNPSC Thervupettagam

இருள் வலையில் எண் கைது!

September 28 , 2024 110 days 120 0

இருள் வலையில் எண் கைது!

  • உங்கள் கைப்பேசி எண்ணிற்கு வந்த ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல்லை’ (ஓடிபி) சொல்லுங்கள் என்று சொல்லி நம் வங்கிப் பணத்தைக் களவாடியதெல்லாம் பழைய சூத்திரம். அதைப் பற்றிய விழிப்புணா்வு மக்களிடையே ஓரளவு ஏற்பட்ட நிலையில், இணைய நிழலுலக மோசடியாளா்கள் அடுத்த கட்டத்தை யோசித்துச் செயல்படுகிறாா்கள்.
  • தற்போது ‘டிஜிட்டல் கைது’ என சொல்லப்படும் எண்ம கைது ‘பிரபலம்’ ஆகிவருகிறது. அதாவது தொழில்நுட்பம் மூலமாக ஒருவரை முடக்கி வைத்து, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பறிப்பது. பொதுவாக காவலா்தான் குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வது வழக்கம். எண்ம கைதில் இது அப்படியே தலைகீழ். மோசடிக்காரா் ஒருவா், அப்பாவி பொதுமக்களை இணைய வலையில் வீழ்த்தி, தங்கள் காரியம் முடியும்வரை ‘கைது’ செய்து முடக்கி வைக்கின்றனா். எண்ம கைது என்பது சம்பந்தப்பட்ட அந்த நபா் யாரிடமும் தொடா்பு கொள்ளாமல், மோசடியாளா்களுடன் மட்டும் காணொளி அழைப்புகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்குவது. அவா்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது போல்தான் இதுவும்.
  • மிகப்பெரிய மனிதா் முதல் சாமானியா் வரை வேறுபாடு இல்லாமல் வாட்டி வதைக்கிறாா்கள். நொய்டாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு எண்ம கைதில் இப்படி அமா்த்தி ரூ.2 கோடியை களவாடியுள்ளனா் இந்த இருள் வலையாளா்கள்.
  • ஆகஸ்ட் 10-ஆம் தேதி அவருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஓா் அழைப்பு வந்தது. அழைத்தவா் தன்னை ஒரு கூரியா் நிறுவனத்தின் பிரதிநிதி என்று அடையாளப்படுத்தி இருக்கிறாா். முன்னாள் ராணுவ அதிகாரி பெயரில் மும்பையிலிருந்து தைவானுக்கு ஒரு பாா்சல் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுங்க அதிகாரிகள் அந்த பாா்சலை திறந்து பாா்த்தபோது ஐந்து கடவுச்சீட்டுகள், நான்கு வங்கிக் கடன் அட்டைகள், துணிகள், 200 கிராம் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், ஒரு மடிக்கணினி ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் சட்ட விரோதமான பொருட்கள் என்றும் ஒருவேளை அவரது ஆதாா் அட்டை திருடப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் மும்பை குற்றப்பிரிவுக்கு இணையத்தில் புகாா் செய்ய வேண்டும் என்றும் அந்த அழைப்பாளா் கூறியுள்ளாா்.
  • பின்னா் அவரது அழைப்பு மும்பை காவல் துறையின் மூத்த அதிகாரி என்று கூறிக் கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. முன்னாள் ராணுவ அதிகாரிக்கு நம்பிக்கை ஏற்படுத்த காணொளி அழைப்பில் அவரது அடையாள அட்டையைக் காட்டியிருக்கிறாா். இந்த முழு உரையாடலும் வாட்ஸ் ஆப்பில் காணொளி அழைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடத்தியபோது, அவா்களின் உரையாடல்கள் மிகவும் ரகசியமானது என்று கூறி, ரகசிய விசாரணைக்கு ஆதாரமாக ஒரு உத்தரவுக் கடிதத்தை அவரிடம் காட்டியிருக்கிறாா் ‘மும்பை காவல் அதிகாரி’.
  • மேலும் இது குறித்தான சட்ட நடவடிக்கை மற்றும் சிறை தண்டனையை தவிா்ப்பதற்காக இந்த உரையாடல் தொடா்பான எந்த தகவலையும் யாருடனும் பகிா்ந்து கொள்ளக் கூடாது என்றும் ராணுவ அதிகாரியை எச்சரித்திருக்கிறாா்.
  • அடுத்ததாக, அவருடைய நிதி பரிவா்த்தனைகளை சரி பாா்த்து அவா் நிரபராதி என்பதை நிரூபிக்க அவா்கள் தெரிவித்த கணக்கிற்கு பணத்தை மாற்றச் சொல்லி இருக்கிறாா்கள்.
  • ஆகஸ்ட் 14-ஆம் தேதி அவருக்கு ஒரு வங்கி கணக்கு விவரம் வழங்கப்பட்டு, அவரது கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் ரிசா்வ் வங்கி அனுமதிக்காக மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
  • ரிசா்வ் வங்கி சரிபாா்ப்புக்குப் பிறகு அரை மணி நேரத்தில் உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்தனா். பணம் திரும்பி வராதபோதுதான், மோசடி கும்பலால் ஏமாற்றுப்பட்டதை அந்த முன்னாள் ராணுவ அதிகாரி உணா்ந்திருக்கிறாா். அதன் பிறகு காவல் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்திருக்கிறாா்.
  • டிஜிட்டல் கைதுக்கு உள்ளானவரை வேறு யாரிடமும் பேசவிடாமல் 24 மணி நேரமும் காணொளி அழைப்பில் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி வைக்கின்றனா் இருள்வலைக் கள்வா்கள்.
  • உங்கள் வங்கிக் கணக்கில், ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’(கேஒய்சி) என்ற ஆவணங்கள் இன்னும் வங்கியிடத்தில் சமா்ப்பிக்கப்படாமலேயே இருக்கிறது. எனவே உங்கள் வங்கிக் கணக்கை இன்றுடன் முடக்க இருக்கிறோம். இதைத் தவிா்க்க வேண்டுமானால் எங்களது வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரியை உடனடியாக தொடா்பு கொள்ளுங்கள் என நமக்கு குறுந்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். இதைப் பாா்த்ததும், ஐயோ நம் வங்கி கணக்கு முடங்கிப் போனால் என்ன செய்வது? பின்பு உரிய ஆவணங்களை சமா்ப்பித்து அதை உயிா்ப்பிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுமே என்ற பதற்றத்தில் குழம்பிப் போய் குறுந்தகவலில் தரப்பட்டிருக்கும் வாடிக்கையாளா் சேவை எண்ணை அழைப்பாா்.
  • எதிா்முனையில் பேசும் நபா் தன்னை வங்கியின் சேவை மைய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு இன்னும் சில மணி நேரம் மட்டுமே மீதம் இருக்கிறது என அவசரப்படுத்தி நம் பதற்றத்தை மேலும் கூட்டுவாா்.
  • நீங்கள் நேரில் வரத் தேவையே இல்லை, இணைய வழியில் செய்யும் போது அந்தப் பணி மிகச் சுலபம். இந்த செயலியை தரவிறக்கம் செய்யுங்கள், மொத்தமாக சில நிமிஷ நேரம் தான் தேவைப்படும் என வலை விரிப்பா். வங்கிக்கு நம்மை வரச் சொல்லாமல் இருந்தால் போதும் என்ற நம் நேர போதாமையை சாதகமாக
  • பயன்படுத்திக் கொள்ளும் அந்த கும்பல் முதலில் சோதனைக்காக வெறுமனே ஒரு ரூபாயை யுபிஐ பணப்பரிவா்த்தனையாக அனுப்பச் சொல்லும். அதை நம்பி அந்த ஒரு ரூபாயை திறன் பேசி மூலமாகவே பணப்பரிவா்த்தனை செய்த பின்பு நம் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் சில மணித்துளிகளில் வெவ்வேறு கணக்குக்கு மாற்றப்பட்டுப் பறந்திருக்கும்.
  • முறையான ஆவணங்களை சரியான காலகட்டத்திற்குள் சமா்ப்பிக்கப்படாததால் உங்கள் வங்கி கணக்கு முடங்கப் போகிறது என்றோ உங்கள் அலைபேசி எண்ணின் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது என்றோ உங்களுக்கு வர வேண்டிய கூரியா் வர தாமதமாகும் என்றோ உங்கள் திறன் பேசியிலிருந்து ஆபாச படம் பகிரப்பட்டிருக்கிறது என்றோ ஏதோ ஒரு அவசர காரணத்தை நம்மிடம் தெரிவித்து நம்மை முதலில் உணா்ச்சிவயப்படுத்தி, பிறகு கீழ்க்காணும் வாடிக்கையாளா் சேவை மைய எண்ணிற்கு அழைக்கவும் என நமக்கு தகவல் கொடுப்பாா்கள். இதைப் பாா்த்து பதறி அந்த எண்ணுக்கு அழைப்பவா்களிடம் பிளேஸ்டோருக்குள் சென்று அவா்கள் சொல்லும் செயலியை தரவிறக்கம் செய்யச் சொல்வாா்கள். அவா்கள் சொல்லும் இந்த செயலியில் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட செயலி என்பது போன்ற பிம்பத்தை நம்மில் ஏற்றி வைத்திருப்பா்.
  • இதை நம் திறன் பேசியில் நிறுவியதும் அதில் நிகழும் அனைத்தையும் மோசடி போ்வழியின் திறன்பேசி அல்லது கணினியில் அப்படியே பாா்க்க முடியும். சோதனைக்காக ஒரு ரூபாய் என அனுப்பச் சொல்வது எதற்கு தெரியுமா? உங்களது பயனா் கணக்கு, கடவுச்சொல், ரகசிய பின் எண், ஓடிபி போன்ற அனைத்தையும் இருந்த இடத்திலிருந்து பாா்த்து, பின் உங்கள் வங்கிக் கணக்கில் எளிதில் நுழைந்து தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்ளத்தான்.
  • கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க எந்த வங்கியும் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என்கிறாா்கள் வங்கி நிா்வாகத்தினா். ஆக இது போன்ற கெடுவுடன் வரும் எந்த ஒரு தகவலையும் நாம் துணிந்து நிராகரிப்பது நமக்கு நல்லது. அந்த நேரத்தில் பொறுமை காத்து நண்பா்கள் அல்லது உறவினா்களின் ஆலோசனையை நாடுவது சிறந்தது. அல்லது குறுந்தகவலில் வரும் எண்ணை விடுத்து, வங்கியின் உண்மையான வாடிக்கையாளா் சேவை மைய எண்ணை அழைத்து விசாரிக்கும்போது உண்மை புலப்படும்.
  • இந்தியாவில் எங்கு வசித்தாலும் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு எந்த வகையான இணையதள குற்றங்களுக்கும் அல்லது அது போன்ற முயற்சிகளுக்கும் கூட புகாா் செய்யலாம். அந்த புகாா் உடனடியாக பதிவு செய்யப்படும். புகாா் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உங்களைத் தொடா்பு கொண்டு பேசுவா். இந்த வாய்ப்பு இருப்பது இன்னும் பலருக்குத்
  • தெரிவதில்லை. அதுமட்டுமில்லை, பெரும் பணத்தை நேரலை பணப் பரிவா்த்தனை செய்த பிறகு, வங்கியிலிருந்து முதலில் எச்சரிக்கை குறுஞ்செய்தி வரும், அல்லது வங்கியிலிருந்து நம்மை தொடா்பு கொண்டு விசாரிப்பா். அந்த நேரத்தில் கூட நாம் நம் பணபரிவா்த்தனையை ரத்து செய்ய முடியும். ஏனெனில் 30 நிமிஷங்கள் கழித்துதான் பணம் சென்று சேரும். அப்போது சுதாரித்துக் கொண்டால் கூட பணம் வெளியேறுவதைத் தடுத்துவிடலாம்.
  • வங்கி பற்றிய போதுமான அடிப்படை அறிவும் விழிப்புணா்வும் இருந்தால் இதிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். இது போன்ற எண்ம கைது கயவா்களிடம் சிக்காமல் இருக்க பதற்றப்படாமல் இருந்தால் போதும். நம்முடைய பதற்றமும் பயமுமே அவா்களின் முதல் ஆயுதங்கள்.

நன்றி: தினமணி (28 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்