TNPSC Thervupettagam

இருவரி கவிதைக்குச் சிறையா? பர்ஷாஸ்ரீ புராகோஹைன்!

December 1 , 2024 48 days 73 0

இருவரி கவிதைக்குச் சிறையா? பர்ஷாஸ்ரீ புராகோஹைன்!

  • “தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று முன்தோன்றி மூத்த நம் தமிழை, நெஞ்சுயர்த்திப் போற்றுவான் பாரதி. முன்தோன்றியதானாலும், இன்றும் குன்றாது வியக்க வைக்கும் “சீரிளமைத் திறம்” மிளிரும் தமிழின் ஒற்றை வரிச் ‘சொற்கூர்வேல்’ ஆத்திச்சூடியும், கொன்றைவேந்தனும், ஒன்றே முக்காலடியாலே உலகளந்து ஓங்கிநிற்கும் திருக்குறளும் பூர்விக பாத்தியதையாய்ப் பெற்றுச் சர்வ சுதந்திர சுகஜீவனமாக ஆண்டனுபவித்து வருபவர்கள் நாம். ஆதலால், கவிதைகள் ஆழமாக, அடர்த்தியாக இருப்பதற்கும், அவற்றின் நீளத்திற்கும் (கவிதை வரிகளின் எண்ணிக்கை) எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஆதிமுதலே நாம் அறிவோம் நன்றாக.
  • தொன்னூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியத்தின் பின்னூல் எனச் சிறப்புற்றுள்ள நன்னூலில் “நூலிற்கழகெனும் பத்தே” எனப் பட்டியலிடப்பட்டிருப்பதில் முதலாவது “சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்” என்பது. இதே கருத்தைத்தான் ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியர் “Brevity is the soul of wit” ( ஹேம்லட், இயல் - 2, காட்சி 2, வரி 90), "சுருங்க நவில்வதே கூர்ந்த அறிவாற்றலின் ஆன்மா” என்றார்.
  • “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என ஔவைப் பிராட்டி வியந்து போற்றிய ஒன்றே முக்காலடிக் குறளையும், ஓரடியாகச் சுருக்கிச் சுகவனம் சிவப்பிரகாசனார் - கட்டிக்கரும்பைப் பிழிந்தெடுத்த சாறெனக் - குட்டிக்குறள் நாம் சுவைக்க அருளியுள்ளார் (குறளில் ஏழு சீர்கள், குட்டிக்குறளில் நான்கு சீர்களே). எடுத்துக்காட்டாக, "உலகுக்கெல்லாம் ஒரு பொருள் முதலே” என்பது முதற்குறள், “அகர முதல...”வின் குட்டிக்குறள்.
  • ‘சுருக்’ எனத் தைக்கும் சுருக்கக் கவிதைகள் தமிழில் பூர்ண பரிச்சயமாகிப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே உலகின் பல மொழிகளில் (ஜப்பானிய ஹைக்கூ உள்பட) பல்வேறு பெயர்களில் விளைந்து வளர்ந்துள்ளன. அவ்வகையில் பார்த்தோமானால், ஆங்கிலத்தில், மிகக் குறைந்த வரிக் கவிதைகளாகப் பலகாலமாகச் ‘சானட்’ (Sonnet) எனப்படும் 14 வரிக் கவிதை வகையே பெரும்பாலும் பழக்கத்திலிருந்து வந்தது. அப்போக்கினை மாற்றும் முயற்சியாக, 17 ஆம் நூற்றாண்டுக் கவிஞரான ராபர்ட் ஹெர்ரிக் (Robert Herrick, 24-8-1591 – 15-10-1674) தனது இருவரிக் கவிதைகள் மூலம் (monometers) புகழடைந்தார். சுமார் 2500 கவிதைகளுக்குமேல் படைத்தளித்த அக்கவிஞர், தனது படைப்புகளில் ஒன்றான ஹெஸ்ப்ரைடஸ் (Hesperides, 1898) என்ற நூலில், ஆங்காங்கே இருவரிக் கவிதைகள் பல இடம்பெற்று ஒளிரச்செய்துள்ளார். எடுத்துக்காட்டாக இரு கவிதைகள் இங்கே:
  • ‘’சமூகத்தில் புறந்தள்ளி வைக்கப்படவேண்டிய இருவரெவர்?
  • சதா பொய் பேசும் தனவந்தன், தற்பெருமைத் தரித்திரன்’’ (18)
  • ‘’ஒன்று கடந்தவுடன் மற்றொன்று வரும் பின்னே
  • துன்பம், தொடர் துன்பம், அலை தொடரும் அலைபோல” (48)
  • அண்மைக்காலத்தில், ஹெர்ரிக் பாரம்பரியத்தில் வந்தவர் போல, அமெரிக்கக் கவிஞர் சார்லஸ் சிமிக் (முன்னாள் அரசவைக் கவிஞர், Poet Laureate) எழுதிய - ‘ஏழு சொல், மூன்று குறுவரி’ - கவிதை, "துடைப்பங்கள்" தன் பெயரைக் கவியுலகில் பெருக்கி வருகிறது.
  • இதோ அக்கவிதை;
  • துடைப்பங்களுக்கு மட்டும் நன்கு தெரிகிறது
  • பீடித்துக்கிடக்கும்
  • பேயழுக்குகள்.
  • ( Only brooms / Know the devil / Still exists).
  • சரி... சுருக்கம் பற்றி, இவ்வளவு விரிவாக எதற்கு என்கிறீர்களா?
  • வாங்க... செய்தியிருக்கு.
  • சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.
  • உங்களுக்கு பர்ஷாஸ்ரீ புராகோஹைன் (Barshashree Buragohain ) என்ற பெயர் தெரியுமா?
  • ‘தெரியாது’ என்ற குரலே அதிகம் கேட்பதால்,
  • வாங்க... நாம் தெரிந்து கொள்வோம்.
  • நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பே, அமெரிக்க அரசின் உள்துறை (State Department, உளவுத் துறையோ?) தெரிந்து வைத்திருக்கிறதே.
  • உலக நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் நடைமுறைகள் பற்றி ஆண்டுதோறும், அமெரிக்க உள்துறை அறிக்கைகள் (Country Reports on Human Rights Situations) வெளியிடப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்தியாவில் மனித உரிமைகள் நிலவரம் குறித்த 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கை, பிப்ரவரி 24, 2023 இல் வெளியானது. அந்த அறிக்கையில் பர்ஷாஸ்ரீ புராகோஹைன் பெயர் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • ஏன்?
  • அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹாட்டில் உள்ள தேவி சரண் பருவா மகளிர் கல்லூரியில் அறிவியல் பட்ட (கணிதம்) வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த, அந்த மாநிலத்தின் ஒரு சிறுகிராமத்துக் குறு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்துவரும் மாணவி பர்ஷாஸ்ரீ புராகோஹைன். 2022 இல், 18-லிருந்து 19 வயதுக்கு நகர்ந்த அம்மாணவி, மே 18, 2022 இல் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றக் காவலில் சிறை வைக்கப்பட்டார்.
  • இளம் மாணவி பர்ஷாஸ்ரீ கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருப்பதும், அந்த மாணவி மீது நாட்டின் கடுமையான சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அப்பட்டமான மனித உரிமை மீறல் என அமெரிக்க அரசின் உள்துறை அறிக்கையில் கண்டனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எதற்காக அந்த இளம் மாணவி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டாள்?
  • ஒரே ஒரு கவிதையால்தான்!
  • என்ன கவிதை?
  • ஒரு கணிதப் பேராசிரியராக வர வேண்டும் என்ற கனவு வளர்த்துவரும் பர்ஷாஸ்ரீ, “சிறுவயது முதலே கவிதைகள் எழுதும் ஆர்வமுங்கொண்டிருப்பவர்” என்று அந்த மாணவியின் மூத்த சகோதரன் அரிந்தம் புராகோஹைன் (Arindam, வயது 26) கூறியிருக்கிறார். பர்ஷாஸ்ரீ, 3 மே, 2022 இல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கவிதையைப் பதிவிட்டார். (அப்போது அப்பெண்ணுக்கு வயது 18) சாதாரணமாக, வழக்கம்போல முகநூலில் எழுதிப் பதிவிட்டபோது, அக்கவிதையைப் பதிந்த பதினைந்து நாள்களுக்குள் ஏற்பட்டுவிட்ட விளைவுகளை அம்மாணவி கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க எந்த முகாந்திரமும் இருந்ததில்லை. 17 மே, 2022 அன்று அஸ்ஸாம் போலீசார் அந்த மாணவியைக் கண்டுபிடித்து, அடுத்த நாள் (18 மே, 2022) கொடுஞ்சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, (UAPA) பிரிவுகளின் கீழ் கைது செய்ததாக அறிவித்து வழக்குப் பதிவு செய்தது.
  • கைது செய்யப்படுவதற்குக் காரணமான முகநூல் கவிதை அஸ்ஸாமிய மொழியில் இரண்டே இரண்டு வரிக் கவிதைதான். (சுருக்கம் பற்றி முதலில் விரிவாக ஆலாபனை செய்தது இதற்குத்தான்!).
  • அந்த இருவரிக் கவிதைதான் குற்றம்! அதனால்தான் கைது! அதனால்தான் சிறைவாசம்! அதனால்தான் UAPA சட்டத்தின் கீழ் வழக்கு என நீண்டு - அஸ்ஸாமில் நடந்த கைது நடவடிக்கை - அமெரிக்க உள்துறை வரை எட்டியிருக்கிறது.
  • இதுதான் சுருக்கம்.
  • சரி, அந்த இருவரிக் கவிதையில் அப்படி என்னதான் அந்த இளங்கவி - மாணவி எழுதிவிட்டார்?
  • அதைத் தெரிந்து கொள்வதற்குமுன் சில பின்புலங்களைத் தெரிந்துகொள்ள அவசியம் இருக்கிறதே.
  • இனி, விஷயங்களைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கனும். வாங்க...
  • முதலில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act- UAPA) குறித்துக் கொஞ்சம் (சுருக்கமாகத்தான்) தெரிந்துகொள்வோம்.
  • நம் நாட்டில், அந்நியர்களாகிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களது ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த மக்களின் அனைத்து வகையான செயல்பாடுகளையும் கடும் அடக்குமுறைகளைக் கையாள ஏதுவான சட்டங்களின் துணைகொண்டு அவர்கள் அடக்கி வந்தனர், நாமறிவோம். காலனி ஆட்சிக்கு எதிராகப் பேசும் எவரும் கடுமையான சிறைத் தண்டனைகளுக்கும் பிற பல்வகைக் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட வேண்டும் என்பதே அத்தகைய சட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
  • அந்நிய ஆதிக்கத்தை முழுமூச்சுடன் எதிர்த்துவந்த இந்திய தேசிய இயக்கத்தைக் குற்றமாக்குவதற்குச் "சட்டவிரோத சங்கம் (Unlawful Association)" என்ற வார்த்தையை, முதன்முதலில், 1908 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் பயன்படுத்தியது. அப்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்திய கொடூரமான சட்டங்களில் ஒன்று தேசத்துரோகக் கூட்டங்கள் தடுப்புச் சட்டம், 1911 ஆகும். மேலும், ரௌலட் சட்டம் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் புரட்சிகர குற்றச் சட்டம், 1919 என்பது, இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட கடுமையான சட்டங்களில் வெளிப்படையாக அடையாளமாகும் சட்டமாகும்.
  • ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது அழியா உண்மை. முன்சொன்னமாதிரியான பல பிரிட்டிஷ் ஆட்சிக்காலச் சட்டங்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் நீக்கப்பட்டனபோல் தோன்றினாலும், 1971 இல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (MISA), 1980 இன் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா TADA) 1985; பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) 2002, போன்றவற்றின் மூலம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மனப்பான்மை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்திய அதே வகையான அடக்குமுறைகளை மேற்கொள்ள ஏதுவான பல சட்டங்களை சுதந்திர மக்களாட்சிக் குடியரசின் இந்திய நாடாளுமன்றம் உருவாக்கித் தந்துள்ளதும் உண்மையே.
  • குறிப்பிட உரிய, பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா TADA) 1985; பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) 2002, போன்ற சட்டங்கள் யாவுமே கருத்துச் சுதந்திரம், சங்கமாகச் செயல்படும் உரிமை, மற்றும் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளை மேலும் மேலும் கட்டுப்படுத்துவதற்காகவே வரிந்துகட்டிக் கொண்டு வந்து நிற்கின்றன என்று துர்பா கோஷ் (ஜென்டில்மேன்லி டெரரிஸ்ட்ஸ், 2017) என்ற தலைப்புள்ள தன் நூலில் எழுதியுள்ளார்.
  • ஆரம்பத்தில், பயங்கரவாதத்தைத் தடுக்க, குடிமக்களைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க நோக்கம் கொண்டிருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 (UAPA), தற்போது கருத்து வேறுபாடுகளின் கழுத்தை இறுக்கி எதிர்ப்புக் குரல்களை மௌனமாக்குவதற்கும், அகலாது அப்பிக்கிடக்கும் அவல நிலவரங்ளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கத் துணிபவர்களை அச்சுறுத்துவதற்கும் கையாயுதமாகப் பயன்படுத்தப்படும் நிலையடைந்துள்ளது. குறிப்பாக, 1967-க்குப் பிறகு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 (UAPA) பல திருத்தங்களைக் கண்டுள்ளது.
  • இந்தத் திருத்தங்கள் அனைத்தும் “வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த அரசாங்கங்களின் அடக்குமுறை அதிகார ஆசைகளை வலுப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டன” என்று அனுஷ்கா சிங் தன் நூலில் (சிங் 2018) விளக்கியுள்ளார். 2004, 2008, 2012 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 (UAPA) மீதான திருத்தங்கள் மூலம், ஒரு காலகட்டத்தில் வலுவான எதிர்ப்புகளின் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட - POTA மற்றும் TADA போன்ற கருப்புச் சட்டங்களின் – விதிகள், ஓசையில்லாமல் வேறெழுத்து ஆடைகளுடுத்தி, மீட்டுவைக்கப்பட்டுள்ளன.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய, UAPA போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம், அரசியல் எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த 1947-க்கு முந்தைய அந்நிய ஆட்சி கைக்கொண்டிருந்த அதேவகை அதிகாரங்களையே சுதந்திர இந்திய அரசுகளும் பயன்படுத்துகின்றன என்பதையும், பல காலகட்டங்களில், வெவ்வேறு அரசாங்கங்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக UAPAவை ஆயுதமாக்கி வருவதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கொள்கைகளுக்கு, செயல்பாடுகளுக்கு முரணாக நிற்கும் எந்த ஒரு தனிநபரின் சுதந்திரமான, தன்னெழுச்சியான, குரலும் செயலும், ‘தேசவிரோதம்’, ‘நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது’ என முத்திரை குத்தும் போக்கு வளர்ந்தும் வலுப்பெற்றும் வருவது நிதர்சனம்.
  • இந்தச் சட்டத்தின் செயல்பாடு குறித்து பியுசிஎல் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள் உற்றுநோக்கத் தக்கனவாக உள்ளன. கடுமையான இந்தச் சட்டத்தின் கீழ், 2015 முதல் 2020க்கு இடையில் கைது செய்யப்பட்ட 8,371 பேரில், 235 பேர் மட்டுமே, வழக்குகள் நடைபெற்று நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது வெறும் 2.8 விழுக்காடுதான்; மீதி 97.2% பேர், நீதிமன்றங்களால் விடுதலை பெறுகின்றனர். இந்தத் தரவுகளை சார்பு நிலையுள்ள பியுசிஎல் அமைப்பு கூறுவதாக யாரும் ஒதுக்கிவிட முடியாது. இந்தத் தரவுகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளாகும். இந்தத் தரவுகள் காட்டும் உண்மை என்னவென்றால், காரணமிருக்கோ, இல்லையோ, குரல் எழுப்பும் நபரா? ‘கைது செய், சிறையிலடை, நீண்டகாலம் வாடவிடு, பிறகு நீதிமன்றங்கள் பார்த்துக்கொள்ளட்டும்’ என்பதுதான் ஆள்வார் போக்கு.
  • “ஓர் உண்மையான தாராளவாத ஜனநாயக சமுதாயம் விரோதக் குரல்களுக்கும் சமமான இடத்தைக் கொடுக்கும், அதன் மூலம் அதிருப்தியடைந்திருப்பவர்கள், போட்டியாளர்கள் எனப் பலரும் தமது குரல்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்தும்”என்ற லட்சிய நிலையை 'தி டெமாக்ரடிக் பாரடாக்ஸ்' என்ற தனது நூலில் சாண்டல் மௌஃபே (Mouffe 2000) எதிர்பார்க்கிறார். ஆனால் ‘இங்கெல்லாம் அதற்கு வாய்ப்பேயில்லை’ என்பதே நம்மை ஆள்வார்கள் அளிக்கும் பதிலாக இருக்கும்.
  • சரி, சரி, பர்ஷாஸ்ரீ புராகோஹைன் எழுதிய இருவரிக் கவிதைதான் என்ன என அறிய அவசரமா?
  • இருவரிதானே? சுருக்கமாகவே பார்த்துவிடலாம் (எனக் கருதுகிறேன்) முடியுமா?
  • ஒன்றே முக்காலடிக் குறளுக்கு இன்றுவரை தமிழில் அ, ஆ, இ.. எழுதத் தெரிந்த அத்தனைபேருமே உரையெழுதி வருகிறார்களல்லவா? (நானந்த அணியில் இல்லவே இல்லை) குறள்போல் குறுகிய இரு வரிகள் என்பதற்காக மட்டுமே பர்ஷாஸ்ரீ கவிதையின் இருவரிக் கவிதை குறளோடு இணைத்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இங்கே. மற்றபடி, குறளுக்கும் மாணவி கவிதைக்கும் எந்த வகை ஒப்பீடும் பொருந்தவே பொருந்தாது என்பது உறுதிபடச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. மாணவியின் இருவரிக் கவிதை தரு பொருள் ஒன்று; புரி பொருள் வேறொன்று.
  • பர்ஷாஸ்ரீ புராகோஹைன் இருவரிக் கவிதையும், புரிந்து கொள்ளப்பட்ட அர்த்தமும் விநோதமே.
  • "சுவாதின் க்சுருஜோர் டிக்ஸே அகோ எகுஜ்,
  • அகோ கோரிம் ரஷ்தா த்ருஹ்”
  • என்பது அஸ்ஸாம் மொழியில் எழுதி பர்ஷாஸ்ரீ முகநூலில்- 3 மே 2022 இல் பதிவிட்ட (குற்றமான) கவிதை.
  • அதன் தமிழ்ப் பிழிவு: ‘’சுதந்திர உதய சூரியனின் திசையில் இன்னும் ஓர் அடி, நான் மீண்டும் ஒரு முறை தேசத் துரோகத்தைச் செய்வேன்."
  • இந்தக் கவிதையின் சிக்கல் இரண்டு சொற்களில் பொதிந்து கிடப்பதாகப் புரிந்துகொண்டனர் காவல்துறையினர். அந்தச் சொற்கள் ‘உதய சூரியன்’, ‘தேசத்துரோகம்’ என்ற பொருள்தரும் அஸ்ஸாமிய மொழிச் சொற்கள். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
  • ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்ற சொலவடை கேட்டிருக்கிறோம். அதனை உண்மையாக்குவதுபோலக் கவிஞர்கள் நினைப்பது ஒன்று, கண்டவர்களும் அதைப் புரிந்துகொள்வதும் ஆளாளுக்கு ஒன்று என்ற நிலை பல நாடுகளில் நிகழ்கின்றன.
  • சில வாரங்களுக்கு முன் நாம் சந்தித்த பாலஸ்தீனப் பெண் கவிஞர் டாரின் டட்டூர் ( Dareen Tatour) எழுதிய ‘ரெஸிஸ்ட் மை பீப்பிள் ரெஸிஸ்ட் தெம்’ என்ற ஒரு கவிதைதான் குற்றமாச்சு அந்நாட்டில். எழுதும்போதே வலிக்கும் துயரை இளம் வயதிலேயே சிறைப்பட்டு அல்லற்படும் அவலம் அவருக்கு அக்கவிதையால் நேர்ந்தது. இந்நிகழ்வில் குறிப்பிட உரிய செய்தி யாதெனில், பாலஸ்தீன மொழியில் எழுதப்பட்ட டட்டூரின் கவிதையைப், பத்தாவது வகுப்புவரை ஹெப்ரூ மொழியைக் கூடுதல் மொழியாகக் கற்றதாகச் சொன்ன ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஹெப்ரூ மொழியில் மொழிபெயர்த்து அந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மூன்று சொற்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக, அரசுக்கு எதிராகப் போர்தொடுக்க மக்களிடையே வன்முறையைத் தூண்டுவதாக நீதிமன்றம் கருதித் தண்டனை அளித்த விந்தை அறிந்தோமல்லவா?
  • கிட்டத்தட்ட பர்ஷாஸ்ரீ புராகோஹைன் கவிதைக்கும் ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ கதைதான் ஏற்பட்டது எனலாம். இரண்டு சொற்களை - ‘உதய சூரியன்’, ‘தேசத்துரோகம்’ என்ற பொருள்தரும் அஸ்ஸாமிய மொழிச் சொற்களை – காவல்துறை எப்படிப் புரிந்து கொண்டு, இந்த மாணவி கைது, சிறை, வழக்கு என்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதைப் பார்ப்போம்.
  • முதலில் உதய சூரியன்.
  • புலரும் விடியலைக் குறிக்கும் எளிதான சொல்லாக; மலரப்போகும் காதலினின்ப ஒளியைக் குறிப்பிட; வளமான எதிர் காலத்தைச் சுட்டுவதாக; இருள் விலகி ஒளிவரும் மகிழ்வைக் காட்ட; இன்னும் கவிஞரின் கற்பனையில் உதிக்கும் எண்ணற்ற செய்திகளை, பொருட்களைக் குறிப்பாகச் சொல்ல, உதிக்கும் சூரியனை- உதய சூரியனை யௌவனத்தின் தலைவாயிலில் நிற்கும் இளங்கவி குறிப்பிட்டிருக்கலாம். கவிதை எழுதியவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் நோக்கத்தை / பொருளை அதனைப் படிப்பவர்கள் – கூடுதல், குறைவு இல்லாமல் - அப்படியே உள்வாங்கி, உணர்வதென்பது ஒருக்காலும் நிகழ்வதேயில்லை. இங்கும் அப்படித்தான் ஆனது போலும்.
  • கொஞ்சம் அப்படியே சற்று விலகி, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொண்டுவிட்டுத் திரும்புவோமா?
  • உல்ஃபா (ULFA) என்று சுருக்கமாக அறியப்படும் இந்த இயக்கம், இந்திய அரசு உள்துறை அமைச்சகம் அளித்திருக்கும் தகவலின்படி, அஸ்ஸாமில், ஏப்ரல் 7, 1979 இல் பீமகந்தா புராகோஹைன், ராஜீவ் ராஜ்கோன்வார் என்ற அரவிந்த ராஜ்கோவா, அனுப் சேடியா என்ற கோலப் பருவா, பிரதீப் கோகோய் என்ற சமிரன் கோகோய், பத்ரேஷ்வர் கோகோய், பத்ரேஷ்வர் கோகோய்ன் மற்றும் பரேஷ் ரகராங்ருஹைன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் பிரிவு 35 இன் கீழ் 30- 03- 2015 நாளிட்டு வெளியிடப்பட்டுள்ள ஒன்றிய அரசாங்க அறிவிப்பால், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வரிசை எண் 11 இல் இடம்பெற்றுள்ள அமைப்பாகும். உல்ஃபா, நீண்ட காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
  • ஒரு போராட்ட அமைப்பாக இயங்கிவந்த உல்ஃபா, பிப்ரவரி 5, 2011 இல் இருந்து - உல்ஃபா 'துணைத் தலைவர்' பிரதீப் கோகோய் தலைமையிலான குழு மூலம் - சில கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி, 'முறையான' பிளவு ஆகஸ்ட் 2012 இல் நடந்தது. ஒன்றிய அரசுடன் அமர்ந்து பேசுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் என இரு பிரிவுகள் - பேச்சு - எதிர்ப்புப் பிரிவு (ULFA - ATF) மற்றும் பேச்சு சார்புப் பிரிவு (ULFA - PTF) ஆகிய இரு பிரிவுகள் - முறையே பரேஷ் பருவா மற்றும் அரவிந்த ராஜ்கோவா தலைமையில் இயங்கத் தொடங்கின. ஒன்றிய அரசுடன் பேச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தீவிரப் போராட்டப் போக்குகொண்ட உல்ஃபா - ஏடிஎஃப், ஏப்ரல் 2 -5, 2013-ல் நடைபெற்ற தனது 'மத்திய செயற்குழு' கூட்டத்தில் தீர்மானித்தபடி, அமைப்பின் பெயரை உல்ஃபா- சுதந்திரம் (ULFA-I) என மாற்றிக்கொண்டுள்ளது.
  • இந்த அமைப்பின் கொடியிலுள்ள சின்னம் உதய சூரியன்!
  • இப்போது புரிந்திருக்குமே பர்ஷாஸ்ரீ புராகோஹைன் மீது காவல்துறை ஏன் பாய்ந்தது என்று.
  • ‘’சுதந்திர உதய சூரியனின் திசையில் இன்னும் ஒரு அடி, நான் மீண்டும் ஒரு முறை தேசத்துரோகத்தைச் செய்வேன்" – என்ற பர்ஷாஸ்ரீ கவிதையைத் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான உல்பா-I அமைப்பில் சேர அடியடுத்து வைப்பதாக காவல்துறை அர்த்தப்படுத்திக்கொண்டது. பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு என்ற வகையில் தேசத்துரோகம் என்ற சொல்லின் வெளிப்படையான பொருளையே காவல்துறை எடுத்துக்கொண்டது. எழுதியவர், நான் அந்தக் கருத்துகளோடு எழுதவில்லை என உறுதி கூறுகிறார்.
  • பர்ஷாஸ்ரீ தன் முகநூல் பக்கத்தில் எழுதிய இருவரிக் கவிதையில் எந்தப் பயங்கரவாத அமைப்பைப் பற்றியும் நேரடியாகக் குறிப்பிடவில்லை, இருப்பினும், உரியம்காட் காவல் நிலையத்தில் வழக்கு எண் 20/2022, 18. 05. 2022 நாளிட்டுப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையில் “அவரது முகநூல் பதிவில் அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கும் அழைப்பு உள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவளிப்பதாக ஒருவர் பகிரங்கமாக கூறிவிட்டு, இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கப் போவதாக அறிவித்தால், அவர் மீது வழக்குத் தொடர சட்டப்பூர்வமாக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். முறையான நடைமுறையைப் பின்பற்றித் தகுதியான நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சட்டம் தன் போக்கில் செல்லட்டும்” என்று எழுதப்பட்டது.
  • அதனடிப்படையில் அவருக்கு எதிரான காவல்துறை எஃப்ஐஆரில் - ‘ அந்தக் கவிதை தடைசெய்யப்பட்ட ராணுவ அமைப்பான உல்ஃபா-I க்கு மறைமுகமான ஆதரவை / சார்பை அறிவிப்பதாகவும், ஒன்றிய அரசுடன் எந்தவகையான பேச்சுக்கும் இடமில்லை என்று அறிவித்து, ஆயுதப்போராட்டத்திற்கு ஆள்சேர்த்துப் பயிற்சியளித்து வரும் அந்த அமைப்பின் மூலம் நாட்டிற்கு எதிராக - "இந்திய அரசுக்கு எதிராக - போர் தொடுக்கும் நோக்கம் கொண்ட ஒரு பெரிய ‘குற்றச் சதி’ என்று வரைந்து வரைந்து எழுதினர்.
  • புராகோஹைனின் கைது எல்லை மீறிய செயலா? என்று ஆர்டிக்கிள் 14 போன்ற மனித உரிமைக் கள ஊடகங்கள் கேள்வி எழுப்பிய நிலையில், மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஜி.பி. சிங் நேரடியாக ஊடகங்களில் வந்து, “புராகோஹைன் உல்ஃபாவில் சேர விருப்பம் தெரிவித்திருந்தார். இது ஒரு கடுமையான குற்றம்” என்று அவர் கூறினார், மேலும் “உல்ஃபா ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு. கடந்த காலங்களில் அசாமில் இருந்து இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து, மியான்மரில் இறந்த சம்பவங்கள்கூட உள்ளன. எங்கள் இளைஞர்கள் அவர்களுடன் சேருவதைத் தடுப்பது எங்கள் கடமை" என்று டிஜிபி சிங் கூறினார்.
  • இதற்கிடையில், மாணவியின் கோலாகாட் சிறைவாசத்தின்போது இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் வந்தன. தனது கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த புராகோஹைன் அவரது வழக்குரைஞர் சைகியாவின் அறிவுரைப்படி, சிறையிலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் மூலம், தனது தேர்வுகளை எழுத அனுமதி கோரினார். அமர்வு நீதிபதி அம்மாணவி “சரியான இடத்தில்” தேர்வு எழுத அனுமதித்து ஆணையிட்டார். டிசிபி (DCB) கல்லூரி பின்பற்றும் திப்ரூகர் பல்கலைக்கழக வழிகாட்டுதல்களின்படி, “சரியான இடம்” என்பது தேர்வு நடைபெறும் இடம் அல்லது மையம் ஆகும். இருப்பினும், டிசிபி கல்லூரியின் முதல்வர், கோலாகாட் சிறைக்கும் ஜோர்ஹாட் நகருக்கும் இடையே உள்ள நீண்ட தூரத்தை மனதில் வைத்து, சிறை வளாகத்திலேயே புரகோஹைன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, கோலாகாட் மாவட்ட ஆணையர் ஏற்பாட்டில், சிறையில், தனியறையில் இரண்டு தேர்வுகளையும் எழுதினார், மாணவி புரகோஹைன்.
  • கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் (63 நாள்கள்), குவஹாட்டி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியபோது, கல்லூரி மாணவி "எந்த அமைப்பையும் குறிப்பிடாமல்தான் தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே, 25,000 ரூபாய்க்கான பண உறுதியளிப்பதன்பேரில், மாணவிக்குப் பிணை வழங்கலாம் என்று ஜூலை 21, 2022-ல் ஆணையிட்டது. பிணையில் வெளிவந்து கல்லூரிப்படிப்பை முடித்திருக்கும் மாணவியின் மனப்பரப்பில் ஒரு இரு வரிக் கவிதைக்காகக் கைது செய்யப்பட்டதும், ஏற்பட்ட சிறை அனுபவங்களும் மறக்க இயலாதவையாக நிலைபெற்றுள்ளன. கவிதைகள் தொடர்கின்றன- மலை, கடல், காடு, பூக்கள், காதல் எனும் தளங்களில். அரசியல் பக்கம் செல்லாது சூடுகண்ட அவரது கவிதைப் பூனை.

நன்றி: தினமணி (01 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்