- ஒவ்வொரு ஆண்டும் கண் தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கண்ணின் மையப்பகுதியில் கரு விழிக்கு முன்புறம் ஒளி ஊடுருவக் கூடிய வகையில் மெலிதாக உள்ள படலமே விழிவெண்படலம் ("கார்னியா') ஆகும்.
பார்வை இழப்பு
- விழிவெண்படலம் ("கார்னியா') பாதிக்கப்படும் நிலையில் பார்வையிழப்பு ஏற்படும். வைட்டமின் ஏ சத்துக் குறைவு காரணமாக விழிவெண்படல ("கார்னியா') பாதிப்பைத் தடுப்பது, விழிவெண்படல பாதிப்பு காரணமாக பார்வை இழந்தோருக்கு விழிவெண்படல மாற்று சிகிச்சை ("கார்னியல் டிரான்ஸ்பிளான்டேஷன்') அளித்து மீண்டும் பார்வை கிடைக்கச் செய்வது ஆகியவை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கண் தானம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி பார்வையிழப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக விழிவெண்படல பாதிப்பு ("கார்னியல் பிளைன்ட்னஸ்') உள்ளது. இந்தியாவில் விழிவெண்படல பாதிப்பு காரணமாக முழுவதும் பார்வையிழந்தவர்கள் 1,20,000 பேர்; மேலும், விழிவெண்படல பாதிப்பு காரணமாக ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 20,000 பேர் பார்வையிழப்புக்கு உள்ளாகின்றனர்.
- இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசு சாராத கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. விழிவெண்படல பாதிப்பு காரணமாக பார்வையிழப்பு ஏற்படுவோரைக் குணப்படுத்தத் தேவையான கண்களின் விகிதத்தில், 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் குறித்த விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடமும் குறைவாக உள்ளதே இதற்குக் காரணம்.
தானம்
- இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற்று உரிய முறையில் கண் வங்கியில் சேமித்து வைத்து, விழிவெண்படல பாதிப்பு பார்வையிழப்பைக் குணப்படுத்த முடியும். ஒருவர் வாழும் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாலோ அல்லது இறந்தவரின் குடும்பத்தினருடைய விருப்பத்தின் பேரிலோ இறந்தவரின் கண்களை எடுத்துப் பார்வையற்றவருக்குப் பொருத்த அனுமதிப்பதே கண் தானம்.
- பிறவிக் குறைபாடு, கிருமி நோய்த்தொற்று பாதிப்பு, குழந்தைப் பருவத்தில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு, காயம் அல்லது தழும்பு ஏற்படுவது முதலான காரணங்களால் விழிவெண்படலத்தின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்பட்டு பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய பாதிப்பு ஏற்படும் நிலையில், தானம் மூலம் பெறப்படும் விழிவெண்படலத்தை மாற்று சிகிச்சை செய்து பார்வையிழப்பு ஏற்பட்டவருக்கு மீண்டும் பார்வை அளிக்க முடியும்.
பார்வைக் குறைபாடுகள்
- ஒரு வயதுக்கு மேல் உள்ள எவரும் கண் தானம் செய்யலாம். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எனப் பார்வைக் குறைபாடுகளுக்கு கண்ணாடி அணிந்துள்ளோர், கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கண் நரம்பு பாதிப்பு-விழித்திரை பாதிப்பு உள்ளோர், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளோர், இதய நோய் உள்ளோர் ஆகியோர் கண்களைத் தானம் செய்யலாம்.
- காரணம் தெரியாத இறப்பு, கண்களில் கிருமி பாதிப்பு உள்ளோர், விழிவெண்படல மாற்று சிகிச்சை செய்து கொண்டோர், வெறிநாய்க்கடி வைரஸ் காரணமாக உயிரிழந்தோர், மஞ்சள்காமாலை, எய்ட்ஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் கண்களைத் தானம் செய்ய முடியாது. இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறும்போது, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே தானமாகப் பெறப்படும் கண்கள் மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.
- ஒருவர் உயிரிழந்தவுடன் இரண்டு கண்களையும் ஆறு மணி நேரத்துக்குள் எடுத்துப் பாதுகாக்க வேண்டும். எனவே, கண் தானத்தை ஏற்கெனவே உறுதிப்படுத்தியவர் இறக்கும் நிலையில், குடும்பத்தினர் தாமதிக்காமல் கண் வங்கிக்கு தகவல் தருவது அவசியம். முன்கூட்டியே உறுதிப்படுத்தாவிட்டாலும்கூட, இறந்தவரின் கண்களைத் தானமாக அளிக்க குடும்பத்தினருக்கு விருப்பம் இருந்தாலும் கண் வங்கியைத் தொடர்பு கொண்டு உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.
- கண் வங்கியிலிருந்து மருத்துவக் குழுவினர் வருவதற்கு முன்பு இறந்தவரின் கண்கள் மூடி இருக்கும்படி செய்ய வேண்டும். இறந்தவர்களின் கண்களை ஈரமான பஞ்சைக் கொண்டு மூடிவைக்க வேண்டும். இறந்தவர்களின் அருகில் உள்ள மின் விசிறிகளை அணைக்க வேண்டும். இறந்தவரின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்தி வைக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்துக் காய சிகிச்சைப் பிரிவு, இதய அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் நோயாளி இறக்கும் நிலையில், அவரது குடும்பத்தினரிடம் கண் தான ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கண்களைத் தானமாகப் பெறும் நடைமுறையும் உள்ளது. மூளைச் சாவு ஏற்பட்டு உடலைத் தானம் செய்யும்போதும் கண்களைத் தானமாகப் பெறலாம். தானமாகப் பெற்ற கண்களை கண் வங்கியில் ஓராண்டு வரை பாதுகாத்து வைக்க முடியும்.
ஒருவர் இறந்தவுடன், கண் வங்கியின் மருத்துவக் குழுவினர் இரண்டு கண்களையும் முழுமையாக தானமாகப் பெற்று எடுத்துச் செல்வார்கள்;
- எனினும் கண்களை அகற்றிய அடையாளமே தெரியாது. தானமாகப் பெற்ற கண்களின் இரண்டு விழிவெண்படலங்கள் ("கார்னியா'க்கள்) மூலம் இரண்டு வேறு நபர்களுக்கு விழிவெண்படல மாற்று சிகிச்சை மூலம் பார்வை கிடைக்கும். கண்களின் மீதமுள்ள பாகங்கள் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். தமிழகத்தில் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்ய "104' என்ற எண்ணை அழைக்கலாம்.
நன்றி: தினமணி(26-08-2019)