TNPSC Thervupettagam

இலக்கிய நோபல் இந்தியர்களுக்கு ஏன் எட்டாக்கனி?

November 17 , 2024 60 days 98 0

இலக்கிய நோபல் இந்தியர்களுக்கு ஏன் எட்டாக்கனி?

  • கொரிய எழுத்தாளருக்கு இந்த ஆண்டு இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்திய இலக்கியம் 111 வருடங்களாகத் தொடர்ந்து காத்திருக்கிறது. இது மிக நீண்ட இடைவெளிதான்! 1913இல் ரவீந்திரநாத் தாகூரின் ‘கீதாஞ்சலி’க்கு இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசைப் பெற்ற முதல் இந்தியரான தாகூர். ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சிறப்பையும் பெற்றார்.
  • 1901இல் பிரஞ்சுக் கவிஞர் சாலி புருதோம் தொடங்கி இதுவரை 120 பேர் இலக்கிய நோபல் பரிசினை வென்றுள்ளனர். இதில் 103 பேர் ஆண்கள். 17 பேர் பெண்கள். ஸ்வீடிஷ் நாவலாசிரியர் செல்மா லாகர் லாஃப் 1909இல் முதன்முறையாக நோபல் பரிசு பெற்ற பெண் என்கிற சிறப்பினைப் பெற்றார். 1907ஆம் ஆண்டு விருது பெற்ற ருட்யார்ட் கிப்ளிங் இளம்வயதில் (41 வயது) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர். 2007இல் டோரிஸ் லெஸ்ஸிங்குக்கு நோபல் கிடைத்தபோது அவருக்கு 88 வயது! ஏழு ஆண்டுகள் (1914, 1918, 1935, 1940, 1941, 1942) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஒருவருக்கும் வழங்கப்படவில்லை.
  • தாகூருக்குப் பின்னர், இந்தியர் ஒருவருக்குக்கூட இதுவரை இலக்கிய நோபல் பரிசு ஏன் வழங்கப்படவில்லை என்பதுதான் இப்போதைய கேள்வி. நோபல் இலக்கியப் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகாடமி இப்படிச் சர்ச்சைக்கு உள்ளாவது புதிதல்ல! தொடக்கத்தில் இது ஐரோப்பிய மையமாகவே செயல்பட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது அது தொடர்ந்து இந்தியர்களைப் புறக்கணித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டு வலுத்துவருகிறது!
  • இந்திய இலக்கிய வளம், தொன்மை, மரபு ஆகியவற்றை உலகம் போற்றுகிறது. இந்திய இலக்கிய வளம் என்பது அதன் நீண்ட நெடிய வாய்மொழி இலக்கிய மரபில் இருந்து தொடங்கிக் கிளைக்கிறது.
  • காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கதைப் பாடல்கள், கூத்து, நிகழ்த்துக் கலை, நாடகம், உரைகள், புதினங்கள், அறிவியல் எழுத்துகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களையும் அதற்குரிய இலக்கிய மரபுகளையும் கொண்டது இந்திய இலக்கியம்.
  • இந்திய வாழ்வின் நுட்பமான பகுதிகளைப் படம்பிடித்துக் காட்டி ஆர்.கே.நாராயணனின் ‘மால்குடி டேஸ்’, ‘தி கைடு’ போன்ற படைப்புகள் பலமுறை நோபல் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றன. இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் இந்திய எழுத்தாளராக அறியப்படும் சல்மான் ருஷ்டியின் ‘மிட் நைட்ஸ் சில்ரன்’, ‘தி சாத்தானிக் வர்சஸ்’ போன்ற படைப்புகள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றன.
  • இந்திய - அமெரிக்கப் பின்னணியைக் கொண்ட எழுத்தாளர் அனிதா தேசாயின் ‘கிளியர் லைட் ஆஃப் டே’ நாவல் நோபலுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நாவல், இந்தியக் குடும்பங்களில் நிகழும் பதற்றங்களை, அதனால் ஏற்படும் முரண்களை மிக நுட்பமாக ஆராய்ந்து கூறுகிறது. இந்திய இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய தனித்துவம் மிக்க படைப்பான ‘ஏ சூடபிள் பாய்’ (விக்ரம் சேத்) புதினமும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது.
  • அமிதாவ் கோஷ் ‘தி ஷாடோ லைன்ஸ்’, ‘தி கிளாஸ் பேலஸ்’ போன்ற படைப்புகளின் மூலம் ஏகாதிபத்தியம், புலப்பெயர்வு, அடையாளம் போன்ற அம்சங்களைப் படைப்பாக்கியவர். இவருடைய பெயரும் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தது.
  • ஒவ்வோர் ஆண்டும் நோபல் இலக்கியப் பரிசுத் தேர்வுக்கான நடைமுறைகள் பல அடுக்குப் பாதுகாப்புடனும் ரகசியமாகவும் பல்வேறு கட்டங்களிலும் நடைபெறுகிறது. பரிந்துரைகள், வல்லுநர் போன்ற விவரங்கள் 50 ஆண்டுகளுக்கு வெளியே தெரியக் கூடாது என்பது நோபல் அறக்கட்டளையின் விதி. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை மீதும் பார்வை மீதும் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
  • ஸ்வீடன் அகாடமியின் அரசியல் கோட்பாடுகளைப் பிரதிபலிப்பவர்களும், மேற்கத்திய சிந்தனை கொண்டவர்களும் நோபல் பரிந்துரைப் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுகின்றனர் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இது ஒரு வகையான அரசியல்தான். மொழிப் பாகுபாடும் உண்டு. ஐரோப்பிய, ஆங்கில எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
  • லியோ டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜாய்ஸ், வர்ஜினியா வுல்ஃப், ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் போன்ற பலர் உலகளவில் பல உயரிய இலக்கியப் பரிசுகளைப் பெற்றுப் புகழடைந்தவர்கள். ஆனால், நோபல் இலக்கியப் பரிசினை இவர்கள் பெற்றதில்லை. இதே போன்று சில சந்தேகத்திற்கு இடமான தேர்வுகளும் நிகழ்ந்துள்ளன. 2016இல் பாடலாசிரியர் பாப் டிலானுக்கு வழங்கப்பட்டபோது, விமர்சனங்கள் எழுந்தன. இது அகாடமியின் தேர்வைக் கேள்விக்கு உள்ளாக்கியது.
  • பன்முகத்தன்மை கொண்ட இந்திய மொழிகளில் இருந்து, அதன் உள்ளார்ந்த உணர்வுகளை, மன ஊடாட்டங்களை மொழிபெயர்ப்பதில் சவால்கள் உள்ளன. சரியான, துல்லியமான மொழிபெயர்ப்புப் பற்றாக்குறையும் இருக்கிறது. இந்திய இலக்கியங்கள் பெரும்பாலும் தனித்துவமான பண்பாட்டுப் பின்புலம், அதன் பரந்த பரிமாணங்களை நம்பியுள்ளன, இது நோபல் குழுவின் பார்வைக்குப் பொருந்துவதில்லை. இந்திய இலக்கியங்கள் பெரும்பாலும் வட்டாரச் சிக்கல்களை, மதம், சாதி, உள்ளூர் அரசியல் குடும்பம், தனிமனித உறவுகள், தியாகம், பண்பாடு, மீறல்கள், எதிர்வினைகளைப் பிரதிபலிக்கின்றன. இவை உலகளாவிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் பரிந்துரையாளர்களுக்கு முக்கியமாகப் படாமல் போய்விடுகிறது. இவை எல்லாம் நோபல் இலக்கியப் பரிசுப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியர்கள் இடம்பெறாமல் போவதற்கு உலகளாவிய நிலையில் உள்ள இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் முன்வைக்கும் காரணங்களில் சில.
  • இந்திய இலக்கியவாதிகளின் பார்வை தேசிய அளவிலான அங்கீகாரத்திலேயே தேங்கிவிடுகிறது; அல்லது திருப்தி அடைந்துவிடுகிறது என்பது ஒருபக்கம். மறுபக்கம், நோபல் இலக்கிய பரிசுக்குப் பரிந்துரைக்கும் வல்லுநர்களின் பிரதிநிதித்துவம் இந்தியாவில் குறைவாக உள்ளது என்பதுதான் உலக இலக்கியத் திறனாய்வாளர்கள் முன்வைக்கும் கருத்து. எது எப்படி இருப்பினும் இந்திய இலக்கியவாதிகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதில் சர்வதேச அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்