- உலக உணவு நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது.
- வயிற்றுப் பசியை அகற்றுவதற்கு உலக உணவு நிறுவனம் மேற்கொண்டு வரும் உன்னதமான முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும், அங்கீகாரமும் வழங்கும் விதத்தில் அமைந்திருக்கிறது இந்த நோபல் விருது.
- தொன்றுதொட்டு வயிற்றுப் பசியை மாற்றுவது தர்மங்களிலேயே மிகச் சிறந்த தர்மம் என்று உலகுக்கு எடுத்துரைத்த சமுதாயம் இந்திய சமுதாயம்.
- தானங்களில் சிறந்தது "அன்னதானம்' என்று பசித்தவர்களுக்கு உணவளிப்பதை தலைசிறந்த புண்ணியமாக அறிவுறுத்தினர் நமது முன்னோர்.
- வழிப்போக்கர்களுக்கு அன்னச் சத்திரங்கள், விருந்தினர்களுக்கு உணவு வழங்கிய பிறகுதான் உணவு உட்கொள்வது போன்ற நற்பண்புகளை கொண்டிருந்த சமூகம் நம்முடையது.
- "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றும், "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றும் சூளுரைத்தவர் மகாகவி பாரதியார்.
- "பசி வந்திடப் பத்தும் பறந்து போம்' என்றவர் தமிழ் மூதாட்டி ஒளவையார். விருந்தோம்பலின் இன்றியமையாமையை திருக்குறளில் ஓர் அதிகாரமாக்கி வலியுறுத்தியவர் வள்ளுவப் பேராசான்.
- இவையெல்லாம்தான் உலக உணவு நிறுவனத்தின் செயல்பாட்டுக் கூறுகள் எனும்போது, நாம் நோபல் விருது குழுவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மனித இனத்தின் வெற்றி
- பெரும்பாலான பின்தங்கிய வளர்ச்சி அடையும் நாடுகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும் உலக உணவு நிறுவனத்துக்கு நோபல் விருது வழங்கியிருப்பதன் மூலம், நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டி மனிதாபிமானத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறது.
- பசிதான் மனித இனத்தின் மிகப் பெரிய சாபக்கேடு என்பதால், பட்டினியில் வாடுபவர்களுக்கு உணவு வழங்குதல், ஊட்டச்சத்து உணவு இல்லாத குழந்தைகளைப் பேணுதல் என்பவை மனித இனத்தின் கடமைகள்.
- "பசியாறுதல் என்பது அனைவரின் உரிமை' என்பதை உலக உணவு நிறுவனத்துக்கு விருது வழங்கியதன் மூலம் நோபல் குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.
- ரேஷன் எனப்படும் உணவுப் பொருள்கள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலமும், பள்ளிக்கூடங்களிலும் அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குவதன் மூலமும் பெரும்பாலான மக்களின் பசியை அகற்றியிருக்கிறோம்.
- ஓரளவுக்கு பட்டினி மரணங்கள் இல்லாத நிலையை எட்டியிருக்கிறோம். இதுவோர் அசாதாரணமான வெற்றி என்பதை நாம் உணர வேண்டும். இதை உணராதவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
- பசியாற்றுதலும், பட்டினி மரணங்கள் இல்லாமல் இருப்பதும் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை நமது முன்னோர் உணர்ந்திருந்ததால்தான் அன்னதானச் சத்திரங்களை ஏற்படுத்தி, பசியாற்றுவதற்கு முன்னுரிமை வழங்கினார்கள். அதன் அடிச்சுவட்டில் பயணித்திருக்கிறது உலக உணவு நிறுவனம்.
- இப்போதும்கூடப் பல நாடுகளில் ஊட்டச்சத்தில்லாத உணவால் நோய்த்தொற்றுப் பரவலும், முறையான உணவு வழங்கும் முறை இல்லாததால் பலர் பசியில் வாடுவதும் தொடர்கிறது.
- அதனால்தான் சிரியாவிலும், யேமனிலும், நைஜீரியாவிலும், தெற்கு சூடானிலும் உலக உணவு நிறுவனம் நடத்தி வரும் திட்டங்கள் சர்வதேசப் பாராட்டுதலைப் பெற்றிருக்கின்றன.
- கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் 10 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் உணவு வழங்கும் பெரும் பொறுப்பை உலக உணவு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னெச்சரிக்கை செய்தது அந்த நிறுவனம்.
- அந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை அவரவர் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
- உலக உணவு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குவதில் செய்து வரும் உதவியையும் பணியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- உலகில் உணவு உற்பத்தி அனைவருக்கும் போதுமான அளவு இருக்கிறது. அப்படியிருந்தும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான, ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் வாடுகிறார்கள்.
- ஏறத்தாழ 70 கோடி பேர் தொடர்ந்து பசியால் வாடுகிறார்கள் என்று உலக உணவு நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. கொள்ளை நோய்த்தொற்றால் 8 முதல் 13 கோடி பேர் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்து வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று கூறப்படும் நிலையில், உலக உணவு நிறுவனத்தின் தேவையும் பணியும் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
- வறுமையைக் காரணமாக்கி தீவிரவாதமும், பயங்கரவாதமும், உள்நாட்டுப் போர்களும் தூண்டிவிடப்படுகின்றன. அதன் மூலம் சிந்தப்படும் ரத்தத்தின் அளவு அச்சமூட்டுகிறது.
- அதை ஆயுதங்களால் எதிர்த்துப் போராட முடியாது என்கிற நிலையில், உலக உணவு நிறுவனம் பசியை அகற்றுவதன் மூலம் அதை எதிர்கொள்கிறது என்பதை மனித இனம் உணர வேண்டும்.
- இதை உணர்ந்ததால்தான் நோபல் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு நிறுவனத்துக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதை வழங்கி கெüரவித்திருக்கிறது.
- அனைவருக்கும் உணவு என்பதை இலக்காக்கிப் பயணிக்கும் உலக உணவு நிறுவனத்தின் வெற்றியே, மனித இனத்தின் வெற்றி!
நன்றி: தினமணி (15-10-2020)