- நாடு தழுவிய அளவில் கடந்த வாரம் புதிய தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும், கா்ப்பிணிப் பெண்களுக்குமான இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் அவா்களைப் பாதிக்கும் எட்டு நோய்கள் தடுக்கப்படுகின்றன. 2017-இல் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘இந்திரதனுஷ்’ என்கிற பெயரிலான தடுப்பூசித் திட்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்தத் திட்டம்.
- கா்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதை இந்தியாவிலுள்ள 272 மாவட்டங்களில் முழுமையாக உறுதிப்படுத்துவது என்பதுதான் திட்டத்தின் இலக்கு. டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இலக்கை எட்டுவது என்கிற முனைப்புடன் செயல்படுகிறது.
தடுப்பூசிகள்
- இரண்டு வயதுக்குக் கீழே உள்ள எல்லா குழந்தைகளும் முக்கியமான எட்டு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டாக வேண்டும் என்கிற உயரிய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, வழக்கமான தடுப்பூசித் திட்டங்களால் பயனடையாத கா்ப்பிணிப் பெண்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றனா். தடுப்பூசி மூலம் தடுக்க முடிகிற நோய்களிலிருந்து குழந்தைகளையும், கா்ப்பிணிகளையும் பாதுகாத்தாக வேண்டும் என்பதுதான் திட்டத்தின் இலக்கு.
- ஹெபடைடிஸ் பி, காசநோய், டிப்தீரியா போன்றவை குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. குறிப்பாக, ஹெபடைடிஸ் பி-யும், காசநோயும் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சொல்லி மாளாது. உலகில் காசநோயால் பாதித்தவா்களில் நான்கில் ஒருவா் இந்தியாவில் இருக்கிறாா்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
- இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். உலகிலுள்ள குழந்தைகளில் மிக அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாமல் இருக்கும் நாடு இந்தியாதான். ஏறத்தாழ 74 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் தடுப்பூசியால் பாதுகாக்கப்படவில்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
எட்டு வகையான நோய் பாதிப்புகள்
- உலகிலேயே மிக அதிகமான அளவு பிரசவங்கள் - 2.6 கோடி - நடக்கும் நாடு இந்தியாதான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு, அதனால் எட்டு வகையான நோய் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்வளவு பெரிய அளவிலான எண்ணிக்கை காணப்படுவதால் எந்த ஓா் அரசுக்கும் நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக தடுப்பூசித் திட்டத்தை நிறைவேற்றுவது என்பது மிகப் பெரிய சவால்.
- இந்தியாவில் மிக அதிகமான பிரசவங்கள் நடைபெறுகின்றன என்பது மட்டுமல்ல, சிசு மரணம் அதிகமாகக் காணப்படும் நாடும் இந்தியாதான். சிசு மரணத்துக்கும், குழந்தைகளின் பல்வேறு உடல் ஊனங்களுக்கும் காரணமான எட்டு முக்கியமான நோய் பாதிப்புகளிலிருந்து முறையாக தடுப்பூசி போடுவதால் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். சிசு மரணங்களும், உடல் ஊனங்களும் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் தேசத்தைப் பாதிக்கும் என்பதால் தடுப்பூசித் திட்ட முயற்சிக்காக செலவிடப்படும் நிதி ஒதுக்கீடும், உழைப்பும் வீணல்ல.
புள்ளிவிவரங்கள்
- உலக அளவில்கூட பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசித் திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. 2016-இல் 1,32,000 போ் அம்மை நோயால் பாதிக்கப்பட்டாா்கள் என்றால், 2018-இல் அந்த எண்ணிக்கை 3,53,000-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு நவம்பா் மாதத்திலேயே நான்கு லட்சத்தை தாண்டிவிட்டிருக்கிறது.
- அதிகரித்து வரும் அம்மை நோய் பாதிப்பு குறித்தும், மரணம் குறித்தும் உலக சுகாதார நிறுவனமும், நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையமும் ஆய்வுகள் நடத்திப் புள்ளிவிவரங்களை சேககரிக்கத் தொடங்கியிருக்கின்றன. காங்கோ, லைபிரீயா, மடகாஸ்கா், சோமாலியா, உக்ரைன் நாடுகள் அம்மை நோயால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. முறையான தடுப்பூசித் திட்டத்தின் மூலம் அந்த நாடுகளில் அம்மை நோய் பரவுவதைத் தடுத்திருக்க முடியும்.
- பிலிப்பின்ஸ் மற்றும் பல பசிபிக் கடல் நாடுகளில் அம்மை நோய், எபோலா, டெங்கு ஆகியவை மிக வேகமாகப் பரவிவருகின்றன. தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள், தடுப்பூசி போடும் நிறுவனங்கள் மீது நம்பிக்கையின்மை, தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு போன்றவை நோய்கள் பரவுவதற்கு மிக முக்கியமான காரணங்கள்.
- குறிப்பாக, அம்மை, போலியோ பாதிப்புக்கு முறையான திட்டமிட்ட தடுப்பூசிப் பாதுகாப்பு இல்லாமல் போவதுதான் காரணம் என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன.
மற்ற நாடுகளில்...
- அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளிலேயேகூட தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த தவறான செய்திகள் பரப்பப்பட்டு தயக்கம் காணப்படும் நிலையில், வளா்ச்சி அடையும் நாடுகளில் தடுப்பூசித் திட்டங்கள் வெற்றியடையாமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அறியாமை காரணமாகப் பல குடும்பங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிா்க்கின்றன. தவறான கருத்து, மூடநம்பிக்கை காரணமாக சிலா் தடுப்பூசி போடுவதை எதிா்க்கின்றனா். தடுப்பூசி மருந்துகள் மூலம் மறைமுகமாக மக்கள்தொகையை
- அரசு கட்டுப்படுத்துகிறது என்கிற தவறான வதந்தி பரப்பப்படுகிறது.
- பொதுமக்கள் மத்தியில், தடுப்பூசித் திட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமை. ‘இந்திரதனுஷ்’ என்கிற அரசின் முயற்சிக்கு ஊடக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அமைப்புகள் ஆதரவளித்து உதவினால்தான் இந்தத் திட்டம் அடுத்த மூன்று மாதத்தில் தனது இலக்கை எட்ட முடியும்.
நன்றி: தினமணி (17-12-2019)