TNPSC Thervupettagam

இலக்கும் சவாலும்

August 17 , 2022 722 days 426 0
  • தில்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, அடுத்த கால் நூற்றாண்டு பயணத்துக்கான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்திருக்கிறது. மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு சுதந்திர தின உரையையும், நாடாளுமன்ற குடியரசுத் தலைவர் உரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் உரை ஆகியவற்றைப் போலவே முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இந்தியா தனது 75 ஆண்டு கால சுதந்திரத்தை நிறைவு செய்யும் வேளையில் ஆற்றியிருக்கும் உரையும் வரலாற்றுச் சிறப்புப் பெறுகிறது.
  • வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த முறை அப்படி எந்தவொரு புதிய அறிவிப்பும் இல்லை. அதற்கு பதிலாக இந்தியா தனது 75 ஆண்டு கால சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில் அடுத்த கால் நூற்றாண்டுக்கான இலக்கை முன்னிறுத்தியிருக்கிறது இந்த ஆண்டின் உரை.
  • வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடுகளின் வரிசையில் உயர்த்துவதுதான் அடுத்த கால் நூற்றாண்டுகளாக இலக்கு என்று அறிவித்திருக்கும் பிரதமர், ஐந்து உறுதிகளை ஏற்க வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தியிருக்கிறார். தேசத்தின் வளர்ச்சி, காலனிய மனப்பான்மையை விட்டொழித்தல், பாரம்பரியத்தில் பெருமை கொள்ளுதல், ஒற்றுமையின் வலிமையை உணருதல், தத்தம் கடமைகளை முறையாகப் பின்பற்றுதல் ஆகிய உறுதிகளை ஒவ்வொரு இந்தியரும் ஏற்று செயல்பட்டால் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடு என்கிற இலக்கை எட்ட முடியும் என்பதுதான் அவர் தெரிவித்திருக்கும் செய்தி.
  • பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், பிரதமர் அரசியல் ரீதியாக சில வெளிப்பாடுகளை தனது உரையின் மூலம் பதிவு செய்ததைப் பார்க்க முடிகிறது. பெண்களின் பாதுகாப்பு, எரிசக்தி தன்னிறைவு, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, அனைத்து மொழிகளுக்கும் மரியாதை உள்ளிட்ட பல கருத்துகளை முன்வைக்க அவர் தவறவில்லை. அதேபோல, ஊழலுக்கு எதிரான முனைப்பு குறித்தும், வாரிசு அரசியலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டவும் மறக்கவில்லை.
  • விளிம்பு நிலை மக்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்கிற அண்ணல் காந்தியடிகளின் விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்பது மட்டுமே தேசப் பிதா குறித்து பாரதப் பிரதமர் தனது உரையில் செலுத்திய மரியாதை. தனக்கு முன்னர் மிக அதிக காலம் பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவை உரையில் குறிப்பிட்டாரே தவிர அவருக்கு சிறப்பிடம் அளிக்கவில்லை. ஏனைய பிரதமர்களையும் அவர்களது பங்களிப்பையும் இந்தியா தனது 75-ஆவது ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும் தருணத்தில் பிரதமர் குறிப்பிடாமல் விட்டது மிகப் பெரிய குறை.
  • இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்கிற பிரதமரின் இலக்கு வரவேற்புக்குரியது. ஆனால், அது எளிதானதல்ல. வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் கடைசியாக இருக்கும் இத்தாலியின் தனிநபர் ஜிடிபி 32,000 டாலர். இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 1,900 டாலர். வங்க தேசம்கூட நம்மைவிட அதிகம்.
  • வளர்ச்சி அடைந்த நாடு என்கிற நிலையை அடைய தனிநபர் வருமானம் மட்டுமே குறியீடல்ல. விவசாயம் சாராத வேலைவாய்ப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தனிநபர் வருமானமும், வேளாண்மை சாராத வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • 1760-இல் ஐரோப்பாவில், குறிப்பாக பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற்புரட்சிதான் வளர்ச்சிக்கு வித்திட்டது. வேளாண் சார்ந்த சமூகம் தன்னை மாற்றி தகவமைத்துக் கொண்டது திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை தேங்கிக்கிடந்த பல நூற்றாண்டு வாழ்க்கைத் தரத்திலிருந்து தடம் மாறி, மிகப் பெரிய தனிநபர் வருவாய் உயர்வை தொழிற்புரட்சி ஏற்படுத்தியது.
  • விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து, உற்பத்தி - சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்போது தனிநபர் வருவாய் அதிகரிக்கிறது. எல்லா பணக்கார நாடுகளிலும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
  • 2018 - 19-இல் இந்தியாவில் 41% மக்கள் விவசாயம் சார்ந்தவர்கள். உற்பத்தித் துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 12.1%. அவர்களும்கூட குறைந்த ஊதிய, வேலைவாய்ப்பு உறுதி இல்லாத மனைவணிகத் துறையில் பணிபுரிபவர்கள். விவசாய வேலைவாய்ப்பு கிடைக்காததால் அதிலிருந்து வெளியேறியவர்கள்.
  • அடுத்த கால் நூற்றாண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டுமானால், உற்பத்தித் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும். குறைந்த இறக்குமதி வரி மூலம்தான் அதிகரித்த ஏற்றுமதியை உருவாக்க முடியும். அப்போதுதான் உலகத்தின் உற்பத்தி சங்கிலியில் இணைய முடியும்.
  • விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் தொழில் துறைகளிலும் சேவை துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறும்போது உணவு உற்பத்தி குறைந்துவிடவும் கூடாது. வேளாண்மையை நவீனப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேளாண்துறை சீர்த்திருத்தம் அவசியம். கிடப்பில் போடப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்டங்கள், நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள், இறக்குமதி வரிகள் குறைப்பு ஆகியவை மட்டுமல்லாமல், நீதித்துறை சீர்திருத்தமும் ஏற்படாமல் வளர்ச்சி அடைந்த நாடு என்கிற இலக்கு அசாத்தியம்.
  • அசாத்தியத்தை சாத்தியம் ஆக்குவதுதான் சாதனை.

நன்றி: தினமணி (17 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்