TNPSC Thervupettagam

இலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா?

November 29 , 2019 1870 days 875 0
  • இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த ஆட்சியதி காரத்தில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
  • மகிந்த ராஜபக்சவின் தம்பியான கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றிருப்பதால், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
  • தேர்தலில் தோல்வியை அடுத்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்திருப்பது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் புதிய பிரதமரை நியமிக்க வழிவகுத்தது.
  • அந்நாட்டின் அரசமைப்பின்படி அதிபர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவைக்குத் தலைமைதாங்குவார். அவரால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
  • இரண்டு ராஜபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்குப் பெரும்பான்மை இல்லையென்றாலும், அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.
  • ஏனெனில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2020-ல் நடக்கவிருப்பதால் அதுவரையிலான காபந்து அரசாக மட்டுமே இது இருக்கும். மகிந்த ராஜபக்ச இன்று இலங்கையின் செல்வாக்கு மிகுந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
  • அவரது தம்பியின் வெற்றிக்குப் பின்னால் அவரது பலம் இருப்பதை மறுக்க முடியாது. வெளியுறவைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக்சவின் இருப்பு பல விஷயங்களைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானதாக இருக்கும்.
  • எனினும், இலங்கையின் இரண்டு முக்கியமான பொறுப்புகள் ஒரு குடும்பத்தின் கையில் இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

19-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

  • 2015-ல் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பானது மாற்றத்துக்கும் மறுசீரமைப்புக்குமானது.
  • அந்தத் தீர்ப்பின் விளைவாகத்தான் 19-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தமானது அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது.
  • முக்கியமாகப் பிரதமரையும் அமைச்சரவையையும் நீக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது என்ற வரையறையையும் கொண்டுவந்தது.
  • அந்தத் திருத்தம் கொண்டுவந்த ஜனநாயகத்துக்கான சாதகமான அம்சங்கள் நீடிக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
  • தேர்தல் முடிவுகள் குறித்த மகிந்த ராஜபக்சவின் எதிர்வினையில், அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தைப் பற்றிய குறிப்பு தொனித்தது.
  • அந்தத் திருத்தத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்களைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருக்கிறார்.
  • சட்டத் திருத்தத்தால் கிடைத்திருக்கும் சாதகமான அம்சங்களைத் தூக்கியெறியும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
  • இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்கள் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்திருக்கும் சூழலில், முந்தைய ஆட்சியை நோக்கித் திரும்புவது என்பது அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.
  • இலங்கையின் புதிய அதிபரைச் சந்திப்பதற்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அனுப்புவது என்ற இந்தியாவின் முடிவு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான காலங்காலமான உறவைப் பேணுவதற்கானதாகும்.
  • இச்சூழலில், புதிய அரசானது சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள தமிழ் மக்களுக்கான தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா கோரியிருப்பது வரவேற்க வேண்டியதே.

நன்றி : இந்து தமிழ் திசை (29-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்