TNPSC Thervupettagam

இலங்கை இனப்படுகொலை: கனடாவின் நிலைப்பாட்டால் காட்சி மாறுமா

May 31 , 2023 591 days 350 0
  • இன்று வரையில் தமிழர்களால் மீள முடியாத முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் விளைவை இன்னமும் அறுவடை செய்து கொண்டிருக்கிறது ஈழம். இந்நிலையில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதைக் கனடா ஏற்றுக்கொண்டிருப்பது, போரால் நிலைகுலைந்த மக்களின் காயங்களில் சிறிதளவு மருந்தைத் தடவியதுபோல் இருக்கிறது. கனடாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு மிகுந்த கோபத்துடன் எதிர்கொண்டிருக்கிறது.

ஈழத்தில் கனடாவின் மலர்வளையம்:

  • 2013இல் பொதுநலவாய மாநாட்டை (2013 Commonwealth Heads of Government Meeting) இலங்கையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட வேளையில், அதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.
  • 2009 போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளில் நடந்த இந்தப் பொதுநலவாய மாநாட்டில், உலகத் தலைவர்கள் கலந்துகொள்வதன் வழியாக, தாம் முன்னெடுத்த போருக்கான ஆதரவு வெளிப்பாடாக இருக்கும் என இலங்கை அரசு எதிர்பார்த்தது. இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று அன்றைக்குத் தமிழகத்திலிருந்து தீவிரமான எதிர்ப்புகள் எழுந்திருந்தன.
  • இருந்தாலும், சர்ச்சைகளுக்கு நடுவில் பல நாடுகள் இதில் பங்கேற்றன. எனினும், அன்றைக்குக் கனடாவின் பிரதமராக இருந்த ஸ்டீவன் ஆர்ப்பர் இலங்கை வருவதைப் புறக்கணித்தார்; அது உலகில் பெரும் பேசுபொருளானது. அன்றைக்கு கனடா இலங்கைமீது மௌனமான ஒரு எதிர்வினை ஆற்றியது அல்லது மௌனமாக இலங்கையின் பொறுப்புக் கூறல் குறித்து வலியுறுத்தியது என்றே சொல்ல வேண்டும். மறுபுறம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு நடந்த போருக்கு எதிராகவே கனடா இப்படிச் செய்கிறது என்பதே இலங்கை அரசின் பார்வையாக இருந்தது.
  • இந்தச் சூழலில், கனடாவின் இணையமைச்சர் தீபக் ஆபராய் இலங்கை வந்தார். அவர் இலங்கையின் வட பகுதிக்கு மிகுந்த ஆர்வத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கைப் போர் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த தாக்குதலின் அடையாளமாகப் பெயர் பதித்திருக்கும் ஆனையிறவுப் பகுதியில் உள்ள நீரேரியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனால் சீற்றமடைந்த இலங்கை அரசு, தீபக் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினார் என்று கூறியது. உயிரிழந்த மக்களுக்கே அஞ்சலி செலுத்தியதாக தீபக்கும் கனடா தரப்பும் தெளிவுபடுத்தினர்.

கனடாவின் கணிப்பு:

  • போர் முடிந்து பதினான்கு ஆண்டுகள் ஆகின்றன. கனடாவின் இணையமைச்சர் இலங்கை வந்து சென்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் ஐ.நா-வில் இலங்கை குறித்துப் பல அமர்வுகள் நடந்துவிட்டன. இலங்கையில் பலர் அதிபர்களாகவும் பிரதமர்களாகவும் பதவியில் மாறிமாறி அமர்ந்துவிட்டனர்.
  • ஆனால், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்துத் துளியளவுகூட பொறுப்புக் கூறல் மற்றும் நீதி வழங்கல் என்பன இடம்பெறவில்லை. அன்றைக்கு மௌனமாக கனடா வலியுறுத்திய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இலங்கை ஒருபோதும் பொறுப்புக் கூறலை மேற்கொள்ளாது என கனடா அன்றைக்கு இலங்கைமீது வைத்த விமர்சனம் அல்லது கணிப்பு சரியானது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
  • இலங்கைப் போருக்குப் பிறகு, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இதுவரை எத்தனையோ உயர் ஆணையர்கள் பதவி வகித்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். நவநீதம் பிள்ளையில் இருந்து மிச்சேல் பச்சல் அம்மையார் வரை அனைவருமே, தான் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை இலங்கை செய்யும் எனும் நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டார்கள்.
  • நம்பகமான உள்நாட்டு விசாரணை வாயிலாக இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இலங்கை அரசோ, கால அவகாசத்தைப் பெற்றே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் திரண்ட மக்கள்:

  • கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. அப்போது போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவனாக அந்த மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில், கண்ணீர் கரையும் பெருந்துயரில் நான் இருந்தேன்.
  • பலர் குடும்பங்களாகவே அழிக்கப்பட்டிருந்தார்கள். நீண்ட புகைப்பட வரிசைகளை வைத்து மக்கள் அஞ்சலி செய்துகொண்டிருந்தார்கள். தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் அழுகுரல்கள் ஒரு பக்கம் நெஞ்சில் துயரை அடைத்தது. பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் ஓலம் இன்னொரு பக்கம் துயர நதியாய்ப் பரவியது. தீபங்களின் மத்தியில் திரண்ட மக்கள், அழுது உருகிக்கொண்டிருந்தார்கள்.
  • கால், கைகளை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள் என்று முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைப் போரின் தடங்களைச் சுமந்த மக்கள்தான் எங்கும் நிறைந்து நின்றார்கள். முள்ளிவாய்க்கால் பிரகடன உரையை நிகழ்த்திய தவத்திரு அகத்தியர் சுவாமிகள், “நடந்த இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை வழியாக நீதி வழங்கப்பட வேண்டும். இப்போதும் ஈழத்தில் இலங்கை அரசு இனவழிப்பைத் தொடர்கிறது, அதனை உடனே நிறுத்த வேண்டும்” என்று பேசினார்.

கனடாவின் அதிரடி:

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை ஆற்றியிருக்கிறார். அதில் “நாங்கள் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைவுகூர்கிறோம். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.
  • பலர் காணாமல்போனார்கள், காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்தார்கள். கொல்லப் பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள், அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்து வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எமக்குக் கரிசனைகள் உள்ளன” என்று அவர் தன்னுடைய சிரத்தையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  • அத்துடன், “கனடா தமிழ்ப் பிரஜைகளின் கதைகள், மனித உரிமைகள், சமாதானம், ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாகக் கருதிவிட முடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன. இதன் காரணமாகவே கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியைத் தமிழ் இனப் படுகொலை நினைவு தினமாக நாங்கள் அங்கீகரித்தோம்.
  • கொல்லப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள், உரிமைக்காக இலங்கையில் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்காகக் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தாது” என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பது, போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.

சீற்றத்தில் இலங்கை அரசு:

  • கனடா பிரதமரின் பேச்சைக் கேட்டு இலங்கை அரசு கொதிப்படைந்திருப்பது வெளிப்படை. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜஸ்டின் ட்ரூடோவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ட்ரூடோ கூறியது இலங்கையில் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் விசித்திரமாகப் பேசியிருக்கிறார்.
  • இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க மௌனம் காத்துவரும் நிலையில், முன்னாள் அதிபரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சே, போரில் மக்களும் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்வதாகவும், அதேவேளை அதனை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார். முன்னாள் கடற்படை அதிகாரியும் இந்நாள் எம்பி-யும், சிங்கள இனப் பேரினவாதியுமான சரத் வீரசேகர, “கனடாவில் ஈழத்தை அமைக்க வேண்டியதுதானே!” என்று ட்ரூடோவைச் சீண்டியிருக்கிறார்.
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினார்; இதுவே முதற்படியாகும். இன்று கனடா இனப்படுகொலையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல பிரித்தானியப் பிரதமரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்துள்ளனர். அத்துடன் அமெரிக்க காங்கிரஸ் தரப்பும் இதனை வலியுறுத்திவருகிறது. உலகின் அனைத்து நாடுகளும் ஈழ இனப்படுகொலையை ஒருநாள் ஏற்கும் என்பது திண்ணம். ஈழ மக்களின் இன்னல்கள் தீரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நன்றி: தி இந்து (31 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்