- ஆட்சியாளர்கள் செய்யத் தயங்குவதையும், தவறுவதையும் நீதிமன்றங்கள் தலையிட்டு விடைகாண முற்படுவதை வரம்பு மீறல் என்று விமர்சிக்க முடியவில்லை.
- நிர்வாகமோ, நீதித்துறையோ, நாடாளுமன்றமோ எதுவாக இருந்தாலும் மக்களின் நன்மைக்காக செயல்படுபவை. ஒருவர் தவறும்போது மற்றவர் அந்தத் தவறை திருத்துவதன் மூலம் நன்மை ஏற்படுமானால், அது வரவேற்புக்குரியதே.
- கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகச் சரியான ஆறுதலான ஒன்று. எஸ். அபிராமி என்பவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஹிந்துக்களான இலங்கை தமிழ் அகதிகளுக்கும் 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லும் என்று அளித்த அந்தத் தீர்ப்பை வரவேற்க ஒட்டுமொத்த தமிழகமும் கடமைப்பட்டிருக்கிறது.
- இலங்கையில் காணப்படும் பிரச்னையை தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையேயான பிரச்னையாக வடிவமைத்தது, இலங்கையின் வடகிழக்கு மாகாண தமிழர்களின் நலனைப் பாதித்தது. உண்மையில் பார்க்கப்போனால், அடிப்படைப் பிரச்னை மொழி ரீதியானது அல்ல; மத ரீதியிலானது.
- பெரும்பான்மை சிங்கள - பெüத்தர்களுக்கும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வடகிழக்கு மாகாண ஹிந்துக்களுக்கும், கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான பிரச்னை அது. பெரும்பான்மையினரான பெüத்த - சிங்களர்கள், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சம உரிமை வழங்க மறுத்ததாலும் மதரீதியிலான இனவெறித் தாக்குதலை முன்னெடுத்ததாலும் உருவானதுதான் இலங்கையின் பிரச்னை என்பது கூர்ந்து சிந்தித்தால் விளங்கும்.
- இன்னும் சொல்லப்போனால், பலாலியில் ஹிந்து புரோகிதர் ஒருவர் சிங்கள - பெüத்தர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டதைத் தொடர்ந்துதான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்த முற்பட்டார் என்பது வரலாற்று உண்மை.
- குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-இல் கொண்டுவரப்பட்டபோது அதில் காணப்பட்ட மிகப் பெரிய குறைபாடு "மதச் சிறுபான்மையினர்' என்கிற வார்த்தை சேர்க்கப்படாதது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள், அகமதியாக்கள், பார்ஸிக்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவது என்பதுதான் அந்தச் சட்டத்தின் நோக்கம்.
- அதன் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் குடியுரிமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உண்மை. அதே நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில், "முஸ்லிம்கள் அல்லாத' என்கிற வார்த்தைக்குப் பதிலாக மதச்சிறுபான்மையினர் என்கிற வார்த்தை சேர்க்கப்பட்டிருந்தால் பிரச்னையே எழுந்திருக்காது.
- மேலும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்து நீண்டகாலமாக தங்கியிருக்கும் தமிழர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இணைக்கப்
- படாதது குறித்து அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இலங்கை தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டிருப்பது காரணம் காட்டப்பட்டது. இன(மத) கலவரத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையின் மதச் சிறுபான்மையினரான தமிழ் பேசும் ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்ததை கருத்தில் கொள்ளாதது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் குறைபாடு.
- அபிராமி என்பவரின் பெற்றோர் இலங்கை வாழ் தமிழ் ஹிந்துக்கள். இலங்கை குடியுரிமை பெற்றவர்கள். இலங்கையில் கலவரம் ஏற்பட்டபோது, அங்கிருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த அவர்களிடம் கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்தவித பயண ஆவணங்களும் இருக்கவில்லை.
- 1993-இல் அகதிகளாக வந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர் அபிராமி. இந்தியாவில் வசித்து வருகிறார். அவர் இந்தியாவில் பிறந்ததால் இலங்கையின் குடியுரிமை பெற்றவர் அல்ல. இந்தியாவைத் தனது தாய்நாடாக ஏற்றுக்கொண்டு வாழ்பவர். அவர் தனக்கு இந்திய குடியுரிமை கோரி முன்னெடுத்த முயற்சிகள் அனைத்துமே நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை நாடினார்.
- "இலங்கை அகதிகள் மரபணு ரீதியாக இந்த மண்ணைச் சேர்ந்த நமது மொழி பேசும் கலாசாரப் பின்னணி கொண்டவர்கள். அவர்களை கண்காணிப்பு வளையத்தில் கட்டுப்படுத்தி நீண்ட காலத்திற்கு தாய்நாடில்லாத மக்களாக வைத்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கும் உரிமைக்கு எதிரானது. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா இந்தியாவின் அகதிகள் கொள்கையில் வரவேற்புக்குரிய மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை. ஆனால், அதில் இலங்கை சேர்க்கப்படாதது தவறு'' என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- 1947 பிரிவினையின்போது கிழக்கு, மேற்கு பாகிஸ்தானிலிருந்தும்; 1959-இல் திபெத்திலிருந்தும்; வங்கதேச உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 1971-லும்; 1983-க்குப் பிறகு இலங்கையிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது என்பது இந்தியர்களுக்கான வாய்ப்புகளைப் பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல், நிதிச்சுமையையும் ஏற்படுத்தும் என்பதை பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டிக்காட்டி எச்சரித்ததை நினைவில் கொள்ள வேண்டும். அதனால்தான் இந்தியாவில் தேசிய அகதிகள் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
- நீதிபதி சுவாமிநாதன் அறிவுறுத்தியிருப்பதுபோல, இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
நன்றி: தினமணி (31 – 10 – 2022)