TNPSC Thervupettagam

இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?

November 22 , 2024 55 days 80 0

இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?

  • முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையின் வரலாற்றின் மாபெரும் அவலங்களை விதைத்திருக்கிறது. இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறபோதும் இலங்கையை மாறிமாறி அவலமும் நெருக்கடியும் உலுப்பியபடியே இருக்கின்றன.
  • இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் கோத்தபயவின் அதிகாரக் கைப்பற்றல், இலங்கை மக்களைப் பசியிலும் தாகத்திலும் தள்ளிய யுகத்தில் முடித்தது. அதிபராக இருந்த கோத்தபய அதிகாரத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு, நாடாளுமன்றம் வழியாக அதிபராகத் தேர்வான ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி முடிந்த நிலையில், அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிறார். பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றிருக்கிறார்.

பழைய வரலாறு:

  • தேசிய மக்கள் சக்தி எனப் பெயரிடப்​பட்ட அனுரகுமார திசா​நாயக்​க​வின் கட்சி​யின் நிஜமான பெயர் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) எனப்​படும் ஜேவிபி. ஈழத் தமிழர்​களுக்கு முன்பே இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்​தியது ஜேவிபி தான். 1971களில் அரசுக்கு எதிராக ஜேவிபி பெரும் கிளர்ச்சி செய்​தது; பல ஆயிரம் ஜேவிபி உறுப்​பினர்கள் கொல்​லப்​பட்டு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடு​களின் உதவி​யுடன் ஜேவிபி முடக்​கப்​பட்​டது.
  • 1983இல் நடந்த ஜூலைப் படுகொலைக்​கும் ஜேவிபியே காரணம் என்று அப்போதைய அரசு ஜேவிபியைத் தடைசெய்​தது. அதன் பிறகும் 1987இலும் ஜேவிபி கிளர்ச்​சி​யில் ஈடுபட்​டது. அப்போது​தான் அக்கட்​சி​யின் தலைவர் ரோஹண விஜயவீர கொல்​லப்​பட்​டார். இலங்​கை​யின் அதிபர் பதவியைக் கைப்​பற்ற நினைத்த அவரது கனவும் கலைந்​தது.
  • இந்த நிலை​யில் 90களின் பின்னர் ஜேவிபி புதிய தலைமை​யின் கீழ் தனது அரசியல் பயணத்​தைத் தொடங்​கியது. 2001ஆம் ஆண்டிலும் 2004ஆம் ஆண்டிலும் ‘ஸ்ரீலங்கா சுதந்​திரக் கட்சி’​யுடன் இணைந்து தேர்​தலில் போட்​டி​யிட்டு கூட்டணி ஆட்சி​யில் பங்கு வகித்​தது. அந்தக் காலக்கட்​டத்​தில் இலங்கை அரசுக்​கும் விடு​தலைப் புலிகளுக்​கும் இடையில் நார்​வே​யின் ஏற்பாட்​டில் பேச்சு​வார்த்தை நடைபெற்​றது.
  • விடு​தலைப் புலிகளுடன் பேச்சு​வார்த்​தைகளில் அரசு ஈடுபடக் கூடாது என்றும், பிரபாகரனுடனான அமைதி ஒப்பந்​தத்​தைக் கிழித்​தெறிந்து போரைத் தொடங்கி விடு​தலைப் புலிகளை முழு​மையாக அழிக்க வேண்​டும் என்றும் வலியுறுத்தி, அதற்காக சிங்கள மக்களைத் திரட்​டிப் போராட்​டங்​களில் ஈடுபட்டது ஜேவிபி. அதற்காக ஒரு கட்டத்​தில் இலங்கை அரசின் கூட்​ட​ணியி​லிருந்து விலகி அழுத்தம் கொடுத்​தது. இலங்கை அரசு போரை நடத்தி புலிகளை வெல்வதற்​குத் தாமே மக்கள் ஆணையைப் பெற்று வழங்​கிய​தாக​வும் பெருமை பேசி​யது.

மீள்​வரவு:

  • 70களில் இலங்கை அதிபர் பதவியைக் கைப்​பற்ற முனைந்து தோல்​வி​யுற்ற ஜேவிபி, 54 ஆண்டு​களுக்​குப் பிறகு தேசிய மக்கள் சக்தி என்ற கட்சி​யின் ஊடாக ஆட்சி​யைக் கைப்​பற்றி​யுள்​ளது. அதன் இளைய தலைவரான அனுரகுமார திசா​நாயக்க செப்​டம்பர் 21இல் நடைபெற்ற தேர்​தலில் வெற்றி​பெற்று இலங்​கை​யின் ஒன்ப​தாவது அதிபர் ஆனார். ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி​யின் தலைவர் சஜித் பிரேம​தா​சாவுக்​கும் அனுர​வுக்​கும் இடையில் கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்​தலில் முன்​னாள் அதிபர் ரணில் விக்​கிரமசிங்கா படுதோல்வி அடைந்​தார்.
  • சஜித்தை அனுர வென்​ற​போதும் 50% வெற்றியை எட்ட வேண்​டும் என்ற நிபந்​தனைக்கு ஏற்ற வகையில் வெற்றி​பெற​வில்லை. இரண்​டாவது தெரிவு முறையாக விருப்பு வாக்​குகள் எண்ணப்​பட்டு 57,40,179 வாக்​கு​களைப் பெற்று அனுர வெற்றி​பெற்​றார். இந்த நிலை​யில் அடுத்து நாடாளு​மன்றத் தேர்​தல்களை நடத்தி நாடாளு​மன்​றத்​தைக் கைப்​பற்றி ஆட்சி​யைத் தக்கவைக்க வேண்டிய நிலை அனுரகுமார அரசுக்கு ஏற்பட்​டது.
  • அதிபர் பதவி​யில் தோல்​வியைத் தழுவி​னாலும் பிரதமர் பதவியைக் கைப்​பற்று​வேன் என்று சஜித் பிரேம​தாசா தேர்​தலில் குதித்​தார். முன்​னாள் அதிபர் கோத்​த​பய​வின் பெரமுன கட்சி​யும் களமிறங்​கியது. முன்​னாள் அதிபர் ரணில் விக்​கிரமசிங்கா​வும் தனது ஆதரவாளர்​களுக்​காகப் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட்​டார். இந்த நிலை​யில் அனுர​வின் தேசிய மக்கள் சக்தி பெரும்​பான்​மை​யைப் பெறுமா என்கிற கேள்வி தேர்தல் அரசி​யலில் மேலோங்​கியது.
  • நவம்பர் 14இல் நடைபெற்ற பொதுத் தேர்​தலில் 68 லட்சம் வாக்​குகளை தேசிய மக்கள் சக்தி கட்சி பெற்று நேரடி வாக்​களிப்​பின் மூலம் 141 இடங்​கள், தேசிய பட்டியல் மூலம் 18 இடங்கள் என மொத்​தமாக 159 இடங்​களைக் கைப்​பற்றியது. இதன் ஊடாக மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்​மை​யைப் பெற்று இலங்கை வரலாற்றில் புதிய சாதனையை அனுர அரசு படைத்​துள்ளது.

தமிழர்​களின் வாக்​குகள்:

  • கடந்த காலத்​தில் நாம் 69 லட்சம் வாக்​கு​களைப் பெற்​றோம் என்று கோத்தபய ராஜபக்ச பெருமை பேசி​னார். எனினும் அவர் 145 இடங்​களையே கைப்​பற்றி​னார். ஆனால் வடக்கு, கிழக்குத் தமிழர் பகுதி​யில் மட்டக்​களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்​டங்​களில் அதிக இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்று, வடக்கு கிழக்​கில் வெற்றி பெற்ற முதல் சிங்​களக் கட்சி என்ற பெயரை​யும் பதிவுசெய்​தது.
  • அப்படி​யெனில் ஈழத் தமிழ் மக்கள் சிங்​களக் கட்சியை ஏற்றுக்​கொண்டு​விட்​டார்களா அல்லது தனியாட்​சி​யைக் கைவிட்டு​விட்​டார்களா என்கிற கேள்வி இங்கே எழலாம். தமிழ் தேசியக் கட்சிகள் உடைந்து தேர்​தலில் போட்​டி​யிட்​டதன் காரண​மாகத் தமிழர் பகுதி​களில் அவை வெற்றி பெற்ற கட்சிகளாக அடையாளம் பெறவில்லை.
  • மாறாகக் கடந்த காலத்​தில் வடக்கு, கிழக்​கில் 11 தமிழ் இடங்​களைப் பெற்ற இலங்​கைத் தமிழரசுக் கட்சி இம்முறை 8 இடங்​களைப் பெற்​றதுடன் வேறு தமிழ்க் கட்சிகளும் சில இடங்​களைப் பெற்றன. கடந்த காலம்போல தமிழ்த் தரப்புகள் அனைத்​தும் ஒரு கட்சி​யில் நின்று தேர்தலை எதிர்​கொண்​டிருந்​தால் அனுர​வின் கட்சி இதே இடங்​களுடன் வடக்கு கிழக்​கில் இரண்டாம் நிலை​யைப் பெற்றிருக்​கும்.
  • கடந்த காலத்​தைப் போலன்றி பழுத்​துக்​கொழுத்த அரசி​யல்​வா​திகள் அனுர​வின் அரசில் நாடாளு​மன்​றத்​துக்​குத் தேர்வு செய்​யப்​பட​வில்லை. இளைஞர்​களும் படித்​தவர்​களும் கூடு​தலாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர். ஒரு சிலரைத் தவிர அனைவரும் புதிய முகங்​கள். நாடாளு​மன்​றத்​தைச் சுத்​தப்​படுத்தப் போகிறோம் என்று அனுர சொல்​லி​யிருந்​தார். கட்சித் தாவல்​கள், ஊழல்கள் இடம்​பெறாத ஆட்சியாக இருக்​கும் என்று இலங்கை மக்கள் எதிர்​பார்க்​கிறார்​கள்.
  • கடந்த காலத்​தைப் போலன்றி மக்களின் நிதி​யைச் சுருட்டி, பாரிய பொருளாதார நெருக்​கடிகளில் தள்ளாத ஆட்சியாக இந்த ஆட்சி இருக்​கும் என்பது மக்களின் நம்பிக்கை. நிறைவேற்று அதிகார முறை​யின்படி இறுதி முடிவு அதிபர் அனுர கையிலேயே உள்ளது; அதேநேரம் இனிமேல் நாடாளு​மன்​றத்​துக்கே அதிகாரம் என்று அனுர தரப்பு சொல்​கிறது. அதேபோல புதிய அரசமைப்பு அனைத்து இன மக்களுக்​கும் ஏற்ற வகையில் உருவாக்​கப்​படும் என்றும் அதிபர் அனுர சொல்​லி​யிருக்​கிறார்.

சீனா​வின் ஆதிக்கம்:

  • 2009 போருக்​குப் பிந்தைய காலத்​தில் இலங்​கை​யில் சீனா​வின் ஆதிக்கம் மிகவும் கடுமையாக நிலவிவரு​கிறது. சீனாவைப் போலவே அனுர​வின் கட்சி​யும் இடது​சாரி அமைப்பு என்ப​தால், இம்முறை தேர்​தலில் அனுரகுமார வெற்றி பெறு​வதையே சீனா விரும்பியதாகச் சொல்​லப்​பட்​டது. சில நாள்​களுக்கு முன்னர் இலங்​கைக்கான சீனத் தூதுவர் கீ சென்​ஹொங், யாழ்ப்​பாணம் வந்து ஊடகச் சந்திப்பை நடத்​தி​னார்.
  • இதில் தெற்கை மையப்​படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்​பாணத்​தி​லும் மிகப் பெரும்​பான்​மையாக ஆதரவு வழங்​கப்​பட்​டுள்ள​தாக​வும் அனுர​வோடும் தெற்​கோடும் தமிழர்கள் கைகோத்​துள்ளமை தமக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக​வும் இலங்​கையோடும் வடக்கு கிழக்​கோடும் சீனா தன் தொடர்​புகளை இன்னும் வலுப்​படுத்​தும் என்றும் சென்​ஹொங் கூறி​உள்​ளார். இதையடுத்து அனுர​வின் ஆட்சி​யில் சீனா​வின் ஆதிக்கம் இன்ன​மும் அதிகரிக்கப் போகிறதா என்கிற விவாதம் எழுந்​திருக்​கிறது.
  • பயங்​கர​வாதத் தடைச்​சட்​டத்தை நீக்க வேண்​டும், மாவீரர் துயிலும் இல்லங்​களி​லிருந்து ராணுவம் விலக வேண்​டும், தமிழர்​களின் நிலங்கள் முழு​மையாக விடுவிக்​கப்பட வேண்​டும், அரசியல் உரிமை​யைத் தமிழர்​களுக்கு வழங்க வேண்​டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்​காகத் தமிழ் மக்களில் கணிச​மானவர்கள் அனுர​வுக்கு வாக்​களித்​துள்ளனர்.
  • தற்போது அனுர​வின் அரசில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்​சுப் பதவி​களில் இல்லை. தனிச் சிங்கள அமைச்​சரவை அமைக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த காலத்​தைப் போல தமிழ் மக்களின் வாக்​கு​களைப் பெற்று பேரின​வாதக் கருத்​துக்​களைப் ​பாது​காத்து, மீண்​டும் தமிழ் மக்​களையே அடக்கி ஒடுக்கி ஆளும் வழி​யில் அனுர​வின் அரசும் செல்​லுமா அல்லது ஈழத் தமிழர்​களின் ​வாழ்​வில் ​விடு​தலை​யை​யும் ஆறு​தலான ​வாழ்க்கை​யை​யும் ஏற்​படுத்​துமா என்​பது​தான்​ இன்​றைய முதன்​மைக்​ கேள்​வி!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்