TNPSC Thervupettagam

இலவச பஸ் பாஸ்: தங்கள் பங்கை விட்டுக் கொடுப்பார்களா

June 10 , 2023 581 days 358 0
  • அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எல்லோரிடமும் ஒரேமாதிரி புலம்பலைக் கேட்கிறேன். “இப்போதெல்லாம் கற்பித்தல் பணியைவிட எழுத்தர் பணியே எங்களுக்கு அதிகமாக இருக்கிறது” என்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே அதுதான் நடைமுறை. ஆசிரியர்களுக்கு ஒருமணி நேரம்கூட ஓய்வு கொடுக்கக் கூடாது என்றே நினைக்கின்றனர். கற்பித்தல் நடைபெற வேண்டுமானால் தயாரிக்க வேண்டுமே. “படிக்கற காலத்துல ஒழுங்காப் படிச்சிருந்தா இப்ப எதுக்குப் படிக்க வேண்டியிருக்குது?” என்று கேட்ட ‘கல்வித் தந்தைகள்’ உண்டு.
  • பாடவேளை போக மற்ற நேரங்களில் ஆசிரியர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதே பொதுக் கருத்து. பாடத்திற்குத் தயாரிக்க வேண்டும், கருவி நூல்களை எல்லாம் பார்க்க வேண்டும், கற்பித்தல் முறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும், மாணவர்களைப் பற்றி அறிய வேண்டும், வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தம் என எத்தனையோ வேலைகள் ஆசிரியருக்கு இருக்கின்றன. அவை எல்லாம் பொதுச் சமூகத்தின் கவனத்தில் இருப்பதே இல்லை. அவற்றை முறையாக ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்களா என்னும் கேள்வி இவ்விடத்தில் தேவையில்லை. கற்பித்தலுக்கு அவை அவசியம். ஆனால், ஆசிரியரின் நேரத்தைப் பிடுங்கிப் பல்வேறு வேலைகளுக்குக் கொடுத்துவிடுவது கடந்த பத்தாண்டுகளாக மிகவும் அதிகரித்திருக்கிறது. இது கற்பித்தலைப் பெரிதும் பாதிக்கும். ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இனி ஸ்மார்ட் அட்டை!

  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லாப் (இலவசப்) பேருந்துப் பயணத்தை அரசு வழங்குகிறது. கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்வதற்கு இந்தச் சலுகையும் ஒரு காரணம். சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு மட்டும் போதாது. உணவு, விடுதி, போக்குவரத்து எனப் பலவற்றைக் கட்டணமில்லாமல் அரசு வழங்குகிறது. இவையெல்லாம் இணைந்ததுதான் சமூக நீதி. “இலவசங்கள் இல்லையென்றால் சமத்துவமான சமுதாயத்தை, சமூக நீதியை இந்த நாட்டிலே நிலைநிறுத்த முடியாது.
  • ஒருவரிடம் அனைத்து வசதிகளும் இருக்கும். மற்றொருவரிடம் சைக்கிள் வாங்கக்கூடிய அளவுக்குக்கூட வசதி இருக்காது. அத்தகைய நபருக்குக் கூடுதல் சலுகை மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த அரசினால்தான் முடியும்” என்று அமைச்சர் எ.வ.வேலு ‘விலையில்லா சைக்கிள்’ வழங்கும் விழா ஒன்றில் பேசியது (இலவசங்கள் இல்லையெனில், மின்னம்பலம், 6 செப்டம்பர், 2022) சரியானதே. தமிழ்நாட்டு அரசியலர்கள் இலவசத் திட்டங்களைச் சமூக நீதியோடு இணைத்துக் காண்கின்றனர் என்பது முக்கியமானது.
  • இவ்வாண்டு 30 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் (தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி வரை) கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்தில் பயனடைவர் என்று அரசுப் புள்ளி விவரம் சொல்கிறது. இந்த எண்ணிக்கை கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருக்கும் மாணவர் சேர்க்கை முடிந்தால்தான் முழுமையான எண்ணிக்கை தெரியவரும். இதற்கெனப் போக்குவரத்துத் துறைக்கு இழப்பீடாகக் கடந்த கல்வியாண்டில் அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,300 கோடி. இவ்வாண்டு ரூ.1,500 கோடியாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ‘இலவச பஸ் பாஸ்’ என அழைக்கப்படும் அட்டையை இனி ஸ்மார்ட் கார்டாக வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஸ்மார்ட் கார்டுகள் தயாராகும் வரை பழைய கார்டுகளையே பயன்படுத்தலாம்.

நடைமுறைச் சிக்கல்கள்

  • மாணவர்களுக்குப் பெரிதும் பயன் தரும் மிக அருமையான திட்டமாகிய இதை நடைமுறைப் படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு கணிசமானது. நான் கல்லூரி முதல்வராக இருந்தபோது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டேன். இதை எடுத்துச் செய்வதற்குக் கல்லூரி அளவில் ஆசிரியர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். எடுத்துச் செய்ய விருப்பம் கேட்டால் ஆசிரியர்களில் எவரும் முன்வர மாட்டார்கள். ஓராண்டு எடுத்துச் செய்தவர் அடுத்த ஆண்டு “என்னய விட்ருங்க சார்” என்பார். ஒவ்வோரு ஆண்டும் யாராவது ஓராசிரியரை இணங்க வைக்க வேண்டும். அல்லது கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என ஆணையிட வேண்டும். ஆசிரியர்களின் விருப்பமின்மைக்குக் காரணம் இவ்வேலையில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள்தான்.
  • ஒவ்வொரு வகுப்பு மாணவர்களிடமும் விவரம் திரட்டிப் புகைப்படம் வாங்கி ஒட்டிப் பட்டியல் தயார்செய்வது அந்தந்த வகுப்பாசிரியர் வேலை. அரசுக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் இவற்றை எல்லாம் பெறுவது சாதாரணக் காரியமல்ல. கல்லூரி மாணவர் தாம் பத்தாம் வகுப்பு படித்தபோது எடுத்த புகைப்படத்தைக் கொண்டுவந்து நீட்டுவார். அவரைப் புதிதாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வரச் செய்வது ஆசிரியர் வேலை. புகைப்படம் எடுக்கக் கையில் பணமில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆசிரியர்களே உதவிசெய்து எடுத்துவரச் செய்வதுண்டு. நூறு ரூபாய் செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்கள் அனேகம். புகைப்படக்காரர் ஒருவரை வரவைத்து அனைத்து மாணவர்களையும் ஒரே நாளில் புகைப்படம் எடுப்பதுண்டு. புகைப்படத்திற்கான பணத்தை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும், புகைப்படக்காரரை ஏற்பாடு செய்ய வேண்டும். அவற்றில் ஏதாவது பிரச்சினை என்றால் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களே பொறுப்பேற்க நேரும்.
  • மாணவர்கள் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் இப்போது 35 கிலோ மீட்டர் வரை மேற்கொள்ளலாம் என்பது விதி. கல்வி நிறுவனத்திற்கும் தம் ஊருக்கும் எத்தனை கிலோ மீட்டர் என்னும் கணக்கு மாணவர்களுக்குச் சரிவரத் தெரியாது. சிலர் இரண்டு பேருந்து, மூன்று பேருந்து மாறிமாறிச் செல்ல வேண்டி இருக்கும். சுற்றுவட்ட ஊர்கள் எல்லாம் தெரிந்த ஆசிரியராக இருந்தால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் மூத்த மாணவர்களிடம் விசாரித்து, கூகுள் வரைபடத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா விவரங்களையும் சேகரித்துப் பட்டியல் தயாரித்து அனுப்பக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஆகும். அப்போதும் விடுபட்ட மாணவர்கள் இருப்பர். அவர்களுக்குத் தனிப்பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தொடர் அலைச்சல்…

  • ஒவ்வொரு வகுப்பாசிரியரும் கொடுக்கும் பட்டியலைச் சரிபார்த்து அதன் மென்வடிவத்தையும் தயாரித்துப் போக்குவரத்துத் துறைக்குக் கொண்டு சேர்ப்பது ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஆசிரியரின் வேலை. அருகிலிருக்கும் போக்குவரத்து அலுவலகத்தில் அதை ஒப்படைக்க இயலாது. இரண்டு மூன்று மாவட்டங்களுக்குச் சேர்ந்தாற்போல் இருக்கும் கோட்ட அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளுக்குச் சேலத்தில் இருக்கும் போக்குவரத்து அலுவலகமே பொறுப்பு. ஒரு கல்வியாண்டில் பத்து முறையேனும் அந்த அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் செல்ல நேரும். பத்து நாட்கள் அவருக்கு மாற்றுப்பணி வழங்க இயலாது. கல்லூரிக்கு வந்து கையொப்பம் இட்டுவிட்டுச் செல்லவோ அடுத்த நாள் வந்து கையொப்பம் இட்டுக்கொள்ளவோ அனுமதி கொடுக்க வேண்டும். அவருடைய வகுப்புகளும் பத்து நாட்கள் பாதிக்கப்படும்.
  • பத்து முறை அவர் சென்று வர வேண்டுமானால் அதற்கான போக்குவரத்துச் செலவை யார் தருவது? அதற்கென ஒதுக்கீடு ஏதுமில்லை. ஒருமுறை என்றால் ஆசிரியரே சமாளித்துக்கொள்வார். பத்து முறையும் அவரையே ஏற்றுக்கொள்ளச் செய்வது நியாமல்ல. பெற்றோர் ஆசிரியர் கழக நிதி போன்றவற்றிலிருந்துதான் எடுக்க வேண்டும். சில கல்வி நிறுவனங்களில் இச்செலவுக்கென மாணவர்களிடம் சிறுதொகை வசூலிப்பதும் உண்டு. அரசு விதிப்படி அப்படி வசூலிக்கக் கூடாது. ஆனால், வேறு வழியில்லை. அங்கே செல்லும் ஆசிரியருக்குப் போக்குவரத்து, உணவுச் செலவுகளைத் தாராளமாகக் கணக்கிட்டால் சராசரியாக ஒவ்வொரு முறையும் ஐந்நூறு ரூபாய் தேவை. பத்து முறை என்றால் ஐயாயிரம் ரூபாய். ஒருங்கிணைப்பாளர் பணியைக் கூடுதலாகச் செய்யும் ஆசிரியரை இச்செலவையும் ஏற்றுக்கொள்ளச் செய்வது சரியல்ல.

மரியாதையின்மை

  • இந்தச் செலவுப் பிரச்சினையைச் சமாளிக்க ஒருவழியைக் கண்டுபிடித்தேன். கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.ராஜேஷ் கண்ணன் தினமும் சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குப் பேருந்தில் வந்து செல்கிறார் என்பதை அறிந்தேன். இப்போதெல்லாம் பெரும்பாலான கல்லூரிப் பேராசிரியர்கள் கார் வைத்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில்லை. சேலத்திலிருந்து வருதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் ஆகிய இருதகுதிகள் கொண்டவரைவிட முடியுமா? அவருக்கு இப்பொறுப்பைக் கொடுத்துச் செய்யும்படி சொன்னேன். ஏற்கெனவே இப்பொறுப்பை அவர் பார்த்திருக்கிறார். என்றாலும் அதிலிருக்கும் சிரமங்களைச் சொல்லி “என்னை விட்டுவிடுங்கள்” என்றார். நான் விடவில்லை. “நீங்கள் இளைஞர்; துடிப்பானவர்” என்றெல்லாம் கொஞ்சம் புகழ்ந்து பொறுப்பேற்றுக்கொள்ளச் செய்தேன். அவை உண்மையும்கூட. ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நூறு விழுக்காடு சரியாகச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் உள்ளவர் அவர்.
  • மாணவர் பட்டியல் தயாரானதும் முதல்நாளே எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். அடுத்த நாள் கல்லூரிக்கு அவர் வர வேண்டியதில்லை. சேலத்தில் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று அவ்வேலையைப் பார்க்கலாம். அதற்கடுத்த நாள் வந்து கையொப்பம் இட்டுக்கொள்ளலாம் என்பது ஏற்பாடு. செல்வதற்கான அனுமதிக் கடிதம் மட்டும் கொடுக்கச் சொல்லிவிடுவேன். அவருக்குப் போக்குவரத்துச் செலவு கொடுக்க வேண்டியதில்லை. அப்படி ஒருவர் அமையவில்லை என்றால் வேறேதாவது வழியில்தான் செலவை ஈடுகட்ட வேண்டும். செலவை எப்படியோ சமாளித்துவிடுகிறோம் என்றாலும் ஆசிரியர்கள் அவ்வேலையை விரும்பாமைக்கு முக்கியமான காரணம் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கிடைக்கும் மரியாதையின்மை.

போக்குவரத்துத் துறையினரின் அலட்சியம்

  • அரசு தரும் இலவசங்களை எல்லாம் தம் சட்டைப்பையில் இருந்து தாமே எடுத்து வழங்குவதாகவே சார்ந்த துறைப் பணியாளர்கள் நினைக்கிறார்கள். போக்குவரத்துத் துறையில் அது சாதாரணம். கூட்டமாக நிற்கும் மாணவர்களைப் பொறுமையுடன் ஏற்றிச் செல்ல ஓட்டுநர்களும் நடத்துநர்களும் விரும்புவதில்லை. அவர்களை ஆடுமாடுகளைப் போலவே நடத்துவர். நிறுத்தத்திலிருந்து தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்துவது, நிறுத்தாமலே சென்றுவிடுவது, பாதிப்பேர் ஏறியதும் பேருந்தை நகர்த்துவது, மாணவர்களுடன் சண்டையிடுவது என்பவை எல்லாம் எத்தனையோ முறை செய்திகளாகி இருக்கின்றன.
  • பெண்களுக்கு இலவசப் பயணத்தை அரசு அறிவித்தபோது போக்குவரத்து ஊழியர்கள் பலர் மோசமாக நடந்துகொண்ட செய்திகள் வந்தன. பெண்களை இழிவாகப் பேசக் கூடாது, நடத்தக் கூடாது, மரியாதையுடன் அவர்களை அணுக வேண்டும் என்று அரசே எச்சரிக்கை விடுக்கும்படி நிலைமை ஆனது. சலுகையை அரசு வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளாத அரசு ஊழியர்களின் மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது? தமக்குரியப் பணப் பலன்களுக்காகப் போராடும் அரசு ஊழியர்கள் தமக்கு மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? சாதாரண மக்களுக்கு அரசு கொடுக்கும் சலுகை ஏன் அவர்களை உறுத்துகிறது?  பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் மாணவர்கள் மீது செலுத்தும் அதிகாரம் வன்முறை சார்ந்தது. அதை ஏற்றுக்கொள்ளாத மாணவர் எதிர்வினை புரியும்போது பிரச்சினை பெரிதாவது வழக்கம்.
  • மாணவர்களிடம் இவ்வாறு நடந்துகொள்வதற்குக் கொஞ்சமும் குறையாமல்தான் மாணவர் பட்டியலை எடுத்துச் செல்லும் ஆசிரியரிடமும் போக்குவரத்து ஊழியர்கள் நடந்துகொள்கின்றனர். இத்தனைக்கும் இருவரும் அரசு ஊழியர்கள்தான். போக்குவரத்து ஊழியர்களைவிடவும் கூடுதல் நிலை கொண்ட பணியில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆனால், அவர்களுக்கு உட்கார இருக்கைகூடத் தர மாட்டார்கள். பட்டியலில் ஏதாவது கண்டுபிடித்துப் பிரச்சினையை உருவாக்கித் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். அவர்களுக்குப் போதுமான விளக்கம் சொல்லித் திருத்தங்களை அங்கேயே மேற்கொள்ள ஆசிரியருக்குப் பொறுமை வேண்டும்; சேவை மனப்பான்மையும் தேவை.

சாதியச் சாயல்

  • ஒருமுறை சென்று போக்குவரத்து ஊழியர்களோடு தகராறு ஏற்பட்டு இனிமேல் அந்தப் பக்கமே போக மாட்டேன் என்று நின்றுவிட்ட ஆசிரியர்கள் உண்டு. எல்லாம் ‘தான்’ சீண்டப்படுவதுதான் காரணம். இங்கே சக மனிதர்களை மரியாதையுடன் நடத்தும் வழக்கமே இல்லை. சாதியத்தின் படிநிலை ஏற்கனவே மனதில் இருப்பதால் எவரையும் தனக்குக் கீழாகப் பார்ப்பது சாதாரணம்.
  • அரசுப் பதவி என்பதால் சாதியத்துடன் கூடிய அதிகாரப் பார்வை அரசு ஊழியர்களுக்கு இயல்பாக வந்துவிடுகிறது. சாதியமற்ற நாடுகளில் அரசு ஊழியர்களின் அணுகுமுறையையும் நம் நாட்டில் அரசு ஊழியர்களின் அணுகுமுறையையும் இந்த வகையில் ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் எனக்குண்டு. அரசு ஊழியர்கள் பிறரை நடத்தும் விதத்தில் சாதியத்தின் சாயல் படிந்திருக்கிறது என்பது என் கருதுகோள். 
  • எங்கள் கல்லூரியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் மாணவர்களுக்கு இலவசப் பஸ் பாஸ் வழங்குவோம். அவ்வளவு பேருக்கும் விவரம் சேகரித்துப் பட்டியல் தயாரித்துப் போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைத்து அவர்கள் சரிபார்த்து அட்டை தயாரிக்க டெண்டர் எடுத்துள்ள நிறுவனத்திடம் வழங்க வேண்டும். அதன் பிறகே அட்டைகள் தயாரித்து வழங்குவார்கள்.
  • மாணவர் கைக்கு அட்டை வந்து சேரக் கிட்டத்தட்ட ஒரு பருவம் முடிந்துவிடும். அப்போதும் புகைப்படம் மாறியது, பயண வழி மாறியது எனப் பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். அவற்றை ஆண்டு முழுவதும் கவனித்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

சில யோசனைகள்

  • இந்தத் திட்டத்தை இன்னும் எளிமையாகவும் செலவில்லாமலும் நடைமுறைப்படுத்த வழிகள் இருக்கின்றன. ஒரு மாணவர் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தால் பத்தாம் வகுப்பு வரை அந்தப் பள்ளியிலேயே படிப்பார். அவருக்கு எதற்கு ஆண்டுதோறும் புதுப்புது அட்டை? ஆறாம் வகுப்பில் கொடுக்கும் அட்டையைப் பத்தாம் வகுப்பு வரை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாமே. கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேரும் மாணவர் மூன்றாண்டுகள் படிப்பார். மூன்றாண்டுகளுக்கும் ஒரே அட்டை போதுமே. தொண்ணூறு விழுக்காடு மாணவர்களுக்கு படிப்பிலோ முகவரியிலோ மாற்றமே இருக்காது. புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு மட்டும் புதிய அட்டைகள் கொடுத்தால் போதும். கரோனோ காலத்தில் இரண்டு மூன்று கல்வியாண்டுகள் புதிய அட்டை வழங்கும் நடைமுறையைத் தவிர்த்துப் பழையதையே பயன்படுத்தலாம் என்று அரசு தெரிவித்தது. அதனால் எந்தக் குளறுபடியும் நேரவில்லை. அப்புறம் எதற்காக ஆண்டுதோறும் புதிய அட்டை?
  • வேறொரு வழியும் எனக்குத் தோன்றுவதுண்டு. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதற்கு மாணவர்களே செலவழித்துக்கொள்கின்றனர். அவ்வட்டையிலே இலவசப் பயணத்திற்கான வழியைக் குறிப்பிட்டுவிட்டால் போதும். இப்போதெல்லாம் அரசுக் கல்வி நிறுவனங்களிலேயே நல்ல, ஸ்மார்ட் கார்டுக்கு நிகரான அடையாள அட்டைதான் கொடுக்கிறார்கள். மாணவர் அடையாள அட்டையே இலவசப் பயணத்திற்கான அட்டையாகவும் மாறிவிடும். லட்சக் கணக்கான மாணவர்கள் புகைப்படத்திற்குச் செலவழிக்கும் தொகையும் அலைச்சலும் மிச்சம். ஆசிரியர்கள் இந்த வேலையிலிருந்து விடுபடலாம். ஒரே ஒரு பட்டியலைப் போக்குவரத்துத் துறைக்கு அனுப்பிவிட்டால் போதுமானது.
  • இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது லட்சக்கணக்கான மாணவர்களுக்குச் செலவைக் குறைக்கும்; ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என ஏராளமானோரின் மனித உழைப்பை மிச்சமாக்கும். ஆனால், இதை நடைமுறைப்படுத்தத் தடையாக இருப்பது நம் சமூகத்தில் மலிந்திருக்கும் ஊழல்தான். இலவசப் பஸ் பாஸ் தயாரிக்கப் போக்குவரத்துத் துறை சார்பாக ஒப்பந்தப் புள்ளி கோருவார்கள். ஏதேனும் ஒரு நிறுவனம் அதை எடுக்கும். அது நிச்சயம் தனியார் நிறுவனம்தான். அனேகமாக ஒரு ஸ்மார்ட் கார்டு தயாரிக்க நூறு ரூபாய்க்கு மேல்தான் தொகை செலவிடப்படும். முப்பது லட்சம் கார்டுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும். அத்தனை கோடி ரூபாய்களைச் செலவழிக்க வேண்டுமா?
  • ஒப்பந்தப் புள்ளி என்று ஒன்று இருந்தால்தான் பல தரப்புக்கும் கமிஷன் தொகை கிடைக்கும். இலவசப் பஸ் பாஸ் வழங்குவதிலும் கமிஷன் வாங்குவது நடக்கும். சமூக நீதியை நிலைநாட்டும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஊழல் வழிமுறைகளையே நம் அரசுகள் தேர்கின்றன.
  • மக்களுக்கும் செலவு; மக்கள் வரிப்பணத்திற்கும் செலவு. வீணாகும் மனித உழைப்பு. இவற்றை எல்லாம் தவிர்க்கக் கூடாதா? சமூக நீதித் திட்டம் ஒன்றை ஊழலுக்கான ஓட்டைகளை அடைத்து நடைமுறைப்படுத்த முடியாதா? ஒப்பந்தப் புள்ளி கோராமல் கல்வி நிறுவன அளவிலேயே அட்டை வழங்கிவிடுவது எளிதானது; அடையாள அட்டையே போதுமானது. நிதிச்சுமையில் தவிக்கும் அரசுக்குச் சில பத்துக் கோடி ரூபாய்கள் என்றாலும் முக்கியம்தானே? அதை அரசியலர்கள் விரும்புவார்களா? அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா? தங்கள் பங்கை விட்டுக் கொடுப்பார்களா?

நன்றி: அருஞ்சொல் (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்