- தமிழகத்தில் சுமார் 17.59 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. சராசரியாக ஆண்டுதோறும் 65.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப் படுகிறது.
- தமிழகத்தில் மொத்தமுள்ள 59.73 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களில், சுமார் 62 சதவீத நிலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.
- கடந்த 2011 முதல் உணவு தானிய உற்பத்தியில் ஆண்டுக்கு 100 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை கடந்து சாதனைப் பட்டியலில் இடம் பெற்று, 2011- 12, 2013- 14, 2014- 15, 2015- 16 என நான்கு ஆண்டுகள் "கிரிஷி கர்மான்' விருதை மத்திய அரசிடமிருந்து தமிழகம் பெற்றுள்ளது.
- உணவு தானிய உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தி, அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்கு பெருக்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
- அதில் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்துவிட்டாலும் கூட, விவசாயிகளின் வருமான இலக்கு என்பது தற்போதுவரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
- இதுபோன்ற சூழலில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல், மழைநீரில் நனைந்து வீணாவது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது.
- இதன் மூலம் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றனர்.
- கொள்முதலின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கும், அதன் மூலம் தரமில்லாத அரிசி உற்பத்தி செய்வதற்கான வழி ஏற்படுவதற்கும் இதுவே முக்கிய காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
- நெல் பயிர் 105 முதல் 135 நாள்கள் சாகுபடிக்கு பின் அறுவடை செய்யப்படுகிறது. பல்வேறு ரக நெல் பயிரிடப்பட்டிருந்தாலும், அறுவடைக்குப் பின், மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றப்படும் அரிசியின் தரம் தனியார் சந்தையில் ஒரு தரத்திலும், நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் போது மற்றொரு தரத்திலும் மாறிவிடுகிறது.
- தமிழகத்தைப் பொருத்தவரை சுமார் 2.01 கோடி குடும்பங்களுக்கு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுகிறது.
- மாதந்தோறும் 2.97 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் இந்த அரிசி, பொதுமக்களுக்கு உணவாகப் பயன்படுதைவிட, சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் கால்நடைத் தீவனமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தரமானவையாக இருந்தாலும்கூட, பிரதான உணவுப் பொருளான அரிசியின் தரம் குறைவாக இருப்பது குறித்தும், அதனைத் தரம் உயர்த்துவது குறித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
- 12 சதவீத ஈரப் பதத்துடன் கூடிய நெல், விதைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 13 சதவீத ஈரப் பதத்துடன் கூடிய நெல், உணவு தானியத்திற்காக சேமிக்க முடியும்.
- ஆனால், தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பில் 19 முதல் 21 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
- அந்த நெல், அரைவை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போது ஒரு நாளுக்கு பதிலாக ஐந்து நாள்கள் வரை தண்ணீரில் ஊற வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அவித்தல், உலர்த்துதல் போன்ற பணிகளில் ஏற்படும் கால தாமதம், கவனமின்மை காரணமாக அரிசியின் தரம், நிறம், சுவை அனைத்தும் குறைந்து விடுகின்றன.
- மனிதத் தவறுகளால் ஏற்படும் இந்த பாதிப்புகளால், அரசுத் தரப்பில் பல நூறு கோடி ரூபாய் செலவிட்டும்கூட மக்களுக்கு தரமான அரிசி கிடைக்காத சூழல் நிலவுகிறது. இது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. உற்பத்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அதன் பின்னர் சந்தைப்படுத்துதலுக்கு வழங்கப்படுவதில்லை.
- சரியான ஈரப் பதத்துடன் நெல் கொள்முதல் செய்து, உரிய நேரத்தில் அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்து, அங்கு அரிசியாக மாற்றும் பணிகளையும் அரசு தீவிரமாக கண்காணித்தால் தரமான அரிசி நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.
- ஈரப் பதமான நெல்லை உலர்த்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. வேளாண்மைத் துறையில் சொட்டுநீர்ப் பாசனம், இயந்திர நடவு முதல் அறுவடை வரை எண்ணற்றத் திட்டங்களின் கீழ் பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பல்வேறு திட்டங்களில் தகுதியான விவசாயப் பயனாளிகள் கிடைக்காமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன.
- நெல் கொள்முதல் செய்வது முதல் அரிசியாக மாற்றப்படும் பணிகள் வரையிலும் அரசு தீவிர கவனம் செலுத்தும்பட்சத்தில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்குவதைவிட குறைந்த விலையில் தரமான அரிசி விநியோகித்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- பொது விநியோகத் திட்டம் செயல்படத் தொடங்கியது முதல் ஏற்பட்டு வரும் இந்த பிரச்னைக்கு இப்போதாவது தீர்வு காணப்பட வேண்டும்.
- பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியைக் கடத்தி ஆலைகளில் மறு அரைவை செய்து மீண்டும் வெளிசந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
- நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படுவதால் அதிகாரிகள் மட்டுமின்றி மக்களும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
- இதற்கு மாறாக தரமான அரிசியாக விநியோகிக்கப்படும் பட்சத்தில் அரசுக்கு நற்பெயர் கிட்டுவது உறுதி.
நன்றி :தினமணி (24-11-2020)