TNPSC Thervupettagam

இலவசம் நல்ல பொருளாதாரக் கொள்கையா

August 11 , 2022 728 days 685 0
  • ஜூலை 30ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற தேசிய அனல் மின் கழகத்தின் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள மரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவில் பல மாநிலங்கள், மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்குத் தர வேண்டிய ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மின் தொகையைச் செலுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றன எனச் சொன்ன அவர், மாநிலங்கள் இத்தொகையைச் செலுத்தவில்லையெனில் மின் உற்பத்தி நிறுவனங்கள் நின்றுவிடும் எனச் சொன்னார். மின் உற்பத்தி நின்றுபோனால், நாட்டின் பொருளாதார இயந்திரத்தை இயக்கும் எரிபொருள் இல்லாமல், பொருளாதார வளர்ச்சி நின்றுவிடும் எனவும் எச்சரித்தார்.
  • இதற்கு முன்பு, ஜூலை 17ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், புண்டேல்கண்ட் வேக விரைவுச் சாலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசத் திட்டங்களைக் கடுமையாகச் சாடினார். இலவசம் வழங்கும் கலாச்சாரம் தொடர்ந்தால், நாட்டில் வேக விரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், ராணுவ உற்பத்தித் தொழிற்சாலைகள் போன்றவற்றை நாம் உருவாக்க முடியாது. இலவசத் திட்டங்கள் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து இன்றைய இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.
  • இது நிகழ்ந்து சில நாட்கள் கழித்து, அஸ்வினி சஹானி என்னும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். பஞ்சாப் மாநிலத்தின் கடன் ரூ.3 லட்சம் கோடி, கர்நாடகத்தின் கடன் ரூ.6 லட்சம் கோடி, மொத்த மாநிலங்களின் கடன் ரூ.70 லட்சம் கோடிக்கும் அதிகம். அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது, இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில், வாக்காளர்களுக்கு இலவசத் திட்டங்கள் அளிப்பதைத் தடைசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
  •  ‘தேர்தல் நன்கொடை பத்திரம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துடன் நேரடித் தொடர்புள்ளது என்றாலும் அதை ‘விசாரிக்க நேரமில்லை’ என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘இலவசங்கள் கூடாது’ என்ற மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்கும் தனித்தன்மை மீது நாம் கவனம் செலுத்த வேண்டாம்!’.
  • தில்லியின் பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், திட்ட வகுப்பாளர்கள் அனைவருமே ஒரே குரலில் எதிர்க்கும் ஒரு விஷயம், `இலவசம்` என்பதுதான். அதுவும் நீங்கள் ஒரு தமிழர் என்றால், தில்லிவாழ் பெருமக்கள் பலரும் உங்களுக்குச் சொல்வது இதுதான். ‘நீங்கள் உங்கள் மாநிலத்தில் எல்லோருக்கும், எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள்… சினிமா நட்சத்திரங்களுக்கு வாக்களிக்கிறீர்கள்… ஒன்னு அய்யா, இல்லன்னா அம்மா.’

மக்கள் நலத் திட்டங்கள்

  • தமிழ்நாட்டில், 1982ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். அதுவரை இருந்த காமராஜர் திட்டத்தைவிட 20 மடங்கு அதிக நிதி கோரும் திட்டம். தமிழகத்தின் முக்கியமான அரசியல் பத்திரிகையான ‘துக்ளக்’, அதைக் கடுமையாக விமரிசித்தது. ‘மீன் கொடுக்காதே, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்னும் வாக்கியம் பயன்படுத்தப்பட்டதாக நினைவு. அன்றைய காலகட்டத்தில், மாநிலத்தின் திட்டங்களை மத்திய அரசின் திட்டக்குழு மீளாய்வு செய்யும். அன்று திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்த மன்மோகன் சிங், மாநிலத்தின் வருவாயில் கிட்டத்தட்ட 10% இதுபோன்ற இலவசங்களுக்குச் செலவிடுதல், நல்ல நிதி நிர்வாகமா என விமர்சனம் செய்கிறார். தனது ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சென்றிருந்த எம்.ஜி.ஆர்., ‘அது தொடர்பான கோப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, வெளியேறினார்’ என திராவிட வருடங்கள் என்னும் நூலை எழுதிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.நாராயண் விவரிக்கிறார்.
  • இதுதான் இந்திய நாட்டின் திட்டங்களை வடிவமைப்பவர்களின் மனச்சாய்வு. பட்டினி என்பதன் உண்மையான சிக்கலை உணராமல், அனுபவித்திராமல் பிறந்து வாழ்ந்த மனநிலை. அந்த மனநிலை ஒருவிதமான நில உடைமை / முதலாளித்துவ மனநிலை. உழைத்தால்தான் உணவு என்றால், மனிதர்கள் கடுமையாக உழைப்பார்கள். உழைக்காமல் உணவு தரப்பட்டால், அது மக்களைச் சோம்பேறியாக்கிவிடும் என்னும் மனநிலை.
  • தமிழ்நாட்டில், மணிமேகலையின் ‘அமுதசுரபி’ தொடங்கி, வள்ளலாரின் ‘அணையா அடுப்பு’ வரை உணவிடுதல் ஒரு மரபாக, அறமாக இருந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர, இந்திய விடுதலைக்கு முன்பே சென்னையில் இலவச உணவு என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. காமராஜர் காலத்தில் அது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். காலத்தில் அது அனைவருக்குமான சத்துணவாகவும், கருணாநிதி காலத்தில் அதில் முட்டைகளும் சேர்க்கப்பட்டன.
  • தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நலத் திட்டங்களை, மக்களை வறுமையின் பிடியில் இருந்து பாதுகாக்கும் சமூகப் பாதுகாப்பு வலையாக உருவகித்தார்கள். அது அவர்களின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான பங்கை வகித்தது. எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டின் ஏழைப் பெண்களுக்கு ஒரு கர்ப்ப கால மருத்துவ உதவித் திட்டத்தை உருவாக்கியது. அதற்கு முன்பு, பல ஏழைப் பெண்கள் கர்ப்ப காலத்தில், இலவசமாகப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துமனைகளுக்கு வரவில்லை. நாங்கள் இலவச மருத்துவமனைகளைக் கட்டிவிட்டோம். ஆனால், ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள் வருவதில்லை எனக் கையை விரித்துவிடாமல், ஏன் வரவில்லை என யோசித்தார்கள் பொதுச் சுகாதார நிர்வாகிகள்.
  • அதற்கான காரணம் மருத்துவமனைக்கு வந்து போகும் 1-2 நாட்கள் அவர்கள் கூலி வேலைக்குச் சென்று ஈட்டும் பணம் நஷ்டமாகிறது என்பதுதான். எனவே, ‘டாக்டர் முத்துலட்சுமி கர்ப்ப கால மருத்துவ உதவித் திட்டம்’ பிறந்தது. மூன்றாம் மாதம் முதல் பரிசோதனைக்கு வரும் ஏழைப் பெண்ணுக்கு ரூ.4,000 ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. அது கிட்டத்தட்ட 15 நாட்கள் ஒரு ஏழைப் பெண் ஈட்டும் ஊதியம். ஊதியத்தைவிட்டு மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டுமா என யோசிக்கும் ஒரு ஏழைப் பெண்ணை அது ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது.
  • அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செய்யப்படும் பரிசோதனைகளும், அங்கே கொடுக்கப்படும் ஆலோசனைகளும், பிள்ளைப் பேற்றை, ஒரு பாதுகாப்பான சூழலில் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்குகிறது. இதனால், பிள்ளைப் பேறு மரணங்களும், சிசு மரணங்களும் குறைகின்றன. இரண்டு குழந்தைகளுக்குப் பின்னர் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது இயல்பாகிப் போகிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி குறைகிறது. மருத்துவமனையில் பிள்ளை பெற்று வீடு திரும்பும் பெண்ணுக்கு தாய்வீட்டுப் பரிசாக அரசு, பிறந்த குழந்தைக்கான உடைகள், நாப்கின்கள், கிளுகிளுப்பைகளைக் கொடுத்து அனுப்புகிறது. இதை இலவசம் என்பதா? மக்கள் நலத் திட்டம் என்பதா?
  • பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவும், புத்தகங்களும், சீருடையும் இலவசமாகிப் போகிறது. அறிவொளி இயக்கம் மிக வெற்றிகரமாகச் செயல்பட்ட காலத்தில், பெண்கள் சைக்கிள் கற்றுக்கொள்வது அவர்களுக்கு எவ்வளவு பெரும் விடுதலையை அளிக்கிறது என்பதை உணர்ந்த அரசு, பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள்களைத் தரத் தொடங்கியது. மேல்நிலைக் கல்வி பயில, மாணவர்கள் தொலைதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளதை உணர்ந்த அரசு, 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது. 
  • பள்ளிகளில் பிள்ளைகளை தேர்வுகள் வைத்து ஃபெயிலாக்கும் முறை இருந்தது. இரண்டாவது, மூன்றாவது படிக்கும் ஏழைப் பெண்பிள்ளைகள் பள்ளியில் ஃபெயிலானால், பள்ளிக்கு வராமல் நின்றுவிடுகிறார்கள். அவர்கள், குழந்தைத் தொழிலாளியாகவோ, வீட்டில் இருக்கும் அடுத்த பெண் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் தாதியாகவோ மாறிவிடுகிறார்கள். வீட்டில் இருக்கும் பெண் குழந்தைக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்டு, மிக இளம் வயதில் கர்ப்பிணியாகிறார். 18-21 வரையிலான பிள்ளைப் பேறு மரணங்கள் மிக அதிகம்.
  • ஆனால், பள்ளிப் படிப்பு இலவசம், பள்ளிக்கு பெற்றோர் எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை, பள்ளி சென்றல் உணவு கிடைக்கும் என்னும் சூழலில், ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு வரத் தொடங்குகிறார்கள். ஃபெயில் என்னும் பயமும், சமூகக் கறையும் இல்லாததால், அவர்கள் பள்ளிக்குத் தொடர்ந்து வருகிறார்கள். கல்லூரி செல்ல உதவி என்பது அவர்களை மேலும் ஒரு முற்போக்கான சமூகச் சூழலில் வைத்திருக்கிறது. கல்லூரி முடித்த பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 21ஆக மாறுகிறது. பட்டம் படித்த பெண், தன் பிரசவத்துக்குக் கட்டாயமாக மருத்துவமனை செல்வார்.

சமூக நீதியும் பொருளாதார நீதியும்

  • பொது விநியோகத் திட்டத்தில் இலவசமாக 20 கிலோ அரிசி விநியோகிக்கப்படுகிறது. அங்கே குறைந்த விலையில் மற்ற பொருட்களும் விற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்துக்கு எந்த வருமானமும் இல்லையென்றாலும், குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பை இது அளிக்கிறது.
  • இன்று மகளிர் நலத் திட்டம் மேலும் வளர்ந்து, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் பெண்களுக்கு கல்லூரிக்கல்வி இலவசம் என்பதுடன் மாதம் ரூ.1,000 உதவித் தொகையாகவும், மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணமாகவும் அது வளர்ந்திருக்கிறது. அடுத்து பள்ளிகளில் அரசே காலை உணவை அளிக்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. இது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான காலை உணவு தயாரிக்கும் செலவிலிருந்தும், சிரமத்திலிருந்தும், ஏழைத் தாய்மார்களை விடுதலை செய்யும்.
  • ‘உலகில், பெண்களுக்கான சம உரிமை நிலைநாட்டப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தை 12 ட்ரில்லியன் (இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 3 ட்ரில்லியன்) அதிகரிக்கச் செய்யும்’ என மெக்கின்ஸி என்னும் உலகப் புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது. இதன் அர்த்தம் என்னவெனில், மகளிர் நல மேம்பாட்டில் முதலீடு செய்யப்பட்டும் மக்கள் நலத் திட்டங்கள், மிக அதிகப் பலனை ஈட்டித்தரும் என்பதே.
  • உணவு, உடை, கல்வி, மருத்துவம் என அடிப்படைத் தேவைகள் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கும் தமிழ்நாட்டில், மக்கள் சோம்பேறியாகிவிட்டார்கள் என விமரிசனங்கள் எழுகின்றன. அண்மையில், திருப்பூர் நகரின் தொழிலதிபர் ஒருவர் ‘தன் ஆலைகளில் வேலைசெய்ய உள்ளூர் இளைஞர்கள் வருவதில்லை’ என வருந்தி எழுதியிருந்தார். அதை ஒரு தொழிலதிபரின் மனநிலையில் இருந்தது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்ளூர் இளைஞருக்கு, இவர் ஆலைக்கு வேலைக்கு வராமல் இருக்கும் ஒரு சாய்ஸ் இருக்கிறது என்பதை அந்த இளைஞரின் பார்வையில் இருந்து பார்த்தால் இன்னொரு உலகமும் புரியவரும்.
  • இதன் அடுத்த தளத்தில், இன்னொரு வகைப் புலம்பலைக் காணலாம். என் உறவினர் ஒருவர், அவர் மகனுக்குத் திருமணமாகி மறுவீடு வைக்கும் விழாவுக்கு வரவில்லை. அவருடன் தொலைபேசியில் பேசுகையில், அவர் சொன்னார், ‘என்ன கண்ணு பண்றது, எல்லாரும் நூறு நாள் வேலைக்குப் போயிர்றாங்க… இல்லன்னா கொழாய மாட்டிகிட்டு திருப்பூர் மில் வேலைக்குப் போயிர்றாங்க… இங்க மாடு கண்ணுகளைப் பாத்துக்க ஆளே இல்லை’ என்று. திருமணமான அவர் மகன், பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். லட்சங்களில் ஊதியம். ஆனால், அவர் வீட்டு மாடுகளைப் பார்த்துக்கொள்ள உள்ளூர் ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் வேண்டும். 
  • யோகேந்திர யாதவின் கட்டுரையிலும், இந்த மனநிலையின் எச்சத்தைப் பார்க்கலாம். அவர் கட்டுரையின் வரிகள் பின்வருமாறு: 
  • ‘சரியாக ஆராயாமல் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்காக ஆதரிக்கும் ஏழைகளின் வாக்குகள் பகுத்தறிவற்றவை என்று கருதுகிறோமா? உண்மை என்னவென்றால், பொருளாதார அறிஞர்களைவிட ஜனநாயகத்தில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய நேரடியான – குறைந்தபட்ச பலன் என்ன என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவுள்ள – பொருளாதாரரீதியாக அதிக பலனுள்ள கொள்கைகளால் தங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது, அவற்றால் எந்த நிவாரணமும் தங்களுக்குக் கிடைத்துவிடாது என்பதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
  • எனவே, தங்களுக்குக் கிடைக்கக்கூடியவற்றை இப்போதே, இங்கேயே எளிதாகக் கைப்பற்ற விரும்புகிறார்கள். மிதிவண்டி, மின்விசிறி, மின்சார ஆட்டுக்கல், கைப்பேசி போன்றவற்றை வாங்கி உடனே பயன்படுத்திவிடலாம் என்பதால் வாக்களிக்கிறார்கள்.’
  • அவருக்கு நாம் சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. இலவசங்கள் நேரடியாகக் கிடைக்கும் குறைந்தபட்ச பலன்கள் அல்ல. மிக்ஸிகள், மின் விசிறிகள் என அரசு வழங்கும் எல்லா இலவசங்களையும் ஒரே தட்டில் வைத்து வாதிடுவது அறிவுடைமையும் அல்ல. இவர் கூறும் மின்சார ஆட்டுக்கல் போன்றவை மக்கள் நலத் திட்டங்களில் 5%கூட இல்லை. தமிழ்நாடு அரசுகள் மக்கள் நலத் திட்டங்கள், இலவசங்கள் வழியாக மக்களை முறையான சமூகப் பொருளாதார அடுக்குகளுக்குள் கொண்டு வந்திருப்பதை யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகள் உண்மையாக உணர வேண்டும்.
  • தமிழ்நாட்டின் இலவசத் திட்டங்கள், இந்திய அரசியல் சட்டம் பேசும், சமூக நீதி மற்றும் பொருளாதார நீதிக்கான வெற்றிகரமான உதாரணங்கள். இதைச் செய்யத்தான் அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கிறார்கள்.

இலவசங்களின் பொருளாதாரப் பலன் என்ன?

  • இலவசங்கள் மக்களைச் சோம்பேறியாக்கிவிடும். பொருளாதாரம் நசித்துவிடும் என்பவர்கள் உணர்ந்துகொள்ள ஒரு தரவை நாம் முன்வைக்கலாம்.
  • அது ஜிஎஸ்டி என்னும் விற்பனை வரிப் புள்ளிவிவரம். விற்பனை வரி என்பது பொதுமக்கள், சோப்பு, சீப்பு, வாகனங்கள் என வாங்கி நுகரும் வரிகளின் மீது அரசு பெறும் மறைமுக வரி. மக்கள், எந்தவித நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகாமல், தங்கள் சுய விருப்பத்தின் பேரில், தங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்குவதன் மூலமாக, மாநில அரசுக்குக் கிடைக்கும் மறைமுக வரி.
  • உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள்தொகை 23 கோடி. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, உத்தர பிரதேச மாநிலம் வசூலித்திருக்கும் ஜிஎஸ்டி வரி ரூ.41 ஆயிரம் கோடி. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி. இதே காலத்தில் தமிழ்நாடு வசூலித்திருக்கும் ஜிஎஸ்டி வரி ரூ.48 ஆயிரம் கோடி.
  • உணவு, கல்வி, மருத்துவம் என எல்லாமே இலவசமாகக் கொடுத்தால், மக்கள் சோம்பேறியாகிவிடுவார்கள், உழைக்க மாட்டார்கள் என்னும் வாதம் உண்மையானால், எப்படி தமிழ்நாட்டு மக்கள், உத்தர பிரதேச மக்களைவிட மூன்று மடங்கு அதிகம் பொருட்களை வாங்குகிறார்கள்? அதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
  • உண்மை நிலவரம் என்னவெனில், 20 கிலோ அரிசி பெறும் ஏழை, அதில் மிச்சமாகும் பணத்தில் சட்டை அல்லது சோப்பு வாங்குகிறார். முறைசார் பொருளாதாரத் தளத்தில் நுழைந்து, அரசுக்கு மறைமுக வரியைச் செலுத்தத் தொடங்குகிறார். இலவசமாகக் கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைப்பவர்களில் ஒரு சிறு சதவீதம் முறைசார் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரியத் தொடங்குகிறது. தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உலகையே தன் ஆடுகளமாகப் பார்க்கும் அளவுக்கு அதன் பார்வை விரிகிறது. உலகெல்லாம் பணிபுரியும் மக்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி, மாநிலத்தை வளப்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகிறது. சமூகப் பொருளாதார சமத்துவமின்மைக் குறைகிறது.
  • அரசு இலவசங்களை வழங்கினால், மனிதர்கள் அதை வாங்கித் தின்றுவிட்டு வேலைசெய்யாமல் இருந்ததுவிடுவார்கள் என்பது, மனிதர்களின் இயல்பை அறியாதவர்களின் நோக்கு. சமூகப் பொருளாதாரத் தளங்களில் உயர்வதற்காக உழைக்க வேண்டும் என்பதுதான் மனிதர்களிடம் இயல்பாக இருக்கும் மனநிலை. அதைத்தான் தமிழ்நாட்டில் வசூலாகும் ஜிஎஸ்டி வரி அளவுகள் உணர்த்துகின்றன.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு

வாழும் மனிதருக் கெல்லாம்;

பயிற்றுப் பலகல்வி தந்து – இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்’

  • எனப் பாடிய தமிழ்நாட்டின் கவிஞன், இம்மண்ணில் பிறந்த மிகப் பெரும் பொருளாதார அறிஞனும்கூட.

நன்றி: அருஞ்சொல் (11 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்