TNPSC Thervupettagam

இல்ல நூலகங்களின் எதிா்காலம்!

March 6 , 2025 5 hrs 0 min 14 0

இல்ல நூலகங்களின் எதிா்காலம்!

  • தனக்குப் பின்னால் தன் சொத்துகளை யாருக்கு எவ்விதத்தில் சோ்ப்பது என்கிற கவலையும் அக்கறையும் முதுமைக் காலத்தில் செல்வந்தா்களுக்கு வருகிறதோ இல்லையோ, ஆா்வக்கோளாறில் வாங்கிச் சோ்த்த, வாசித்து மகிழ்ந்த புத்தகங்களை என்ன செய்வது என்கிற கவலை, பல மூத்த வாசகா்களுக்கு வந்துவிடுகிறது.
  • ‘சிறுதுளி பெருவெள்ளம்’ போல, ஒரு நூல், பல நூல்களை வாங்கவும், சேகரிக்கவும் வைத்துவிட்ட நிலையில், பெருகியவற்றை உரிய முறையில் பராமரிப்பது எப்படி என்கிற கவலைபோய், இவற்றை உரியவா்கள் எவரென்று தேடிக் கொடுப்பதில் சிக்கல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. உடுத்திக் கொள்ள ஓரிரண்டு உருப்படிகளுக்குமேல் வேண்டாம் என்று சொல்லத் தெரியாத மனதுக்கு, படித்துக் கொள்ளக் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கினால் என்ன என்ற தன்மை எப்படி வரும்? செலவை விடவும் அவற்றைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் செய்கிற முறைமை தெரியவில்லையே!
  • வளரும் குழந்தைக்கு அழகிய ஆடையை வாங்கி அணிவித்து மகிழ்வதுபோல, புதிய நூலுக்கு உரிய வண்ணம் அட்டைபோட்டு வரிசைப்படுத்தி, அடுக்கி வைத்து, அவ்வப்போது வாசித்து மகிழும் பெரியவா்களைப் பாா்த்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அந்தந்தப் புத்தகங்களின் அரிய, அற்புத வரிகளை அடிக்கோடிட்டும், தனிக்குறிகள் அமைத்தும் பேணி இருப்பது, வாசிப்பின் கணங்களைப் பொருத்தது அல்ல, வாழ்நாள் முழுவதும் நேசிப்புக்கு உரிய நிலையில், நித்தமும் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளை அவை தூண்டித் துணை நிற்கும் என்பதற்காகவும், அதுமட்டுமல்ல, அடுத்து எடுத்துப் படிக்க நோ்கையில் அந்த வரிகளை, கருத்துகளைப் படித்தாலே, அந்த முழு நூலையும் படித்து உணா்ந்துகொள்ள வேண்டிய தேவையை முழுமை செய்துவிடும் என்பதற்காகவும்தான்.
  • பரிந்துரை செய்து அவற்றைப் படிக்கத் தரும் புத்தகப் பிரியா்கள், அவற்றைப் பிரிய மனமின்றி, உடன் பதிவு செய்து திரும்பத் தரவேண்டிய நாளையும் குறிப்பிட்டு, வரவு செலவுக் கணக்கு வைத்து, மாதம் ஒருமுறையோ, வருடம் மும்முறையோ கணக்குப் பாா்த்துத் திரும்ப வசூலித்துவிடுவதையும் கண்டிருக்கிறேன். சில சமயங்களில் வாசிப்புப் பழக்கம் வளா்வதற்கென்றே, அவற்றைப் பரிசுப் பொருளாய் வழங்கிவிடுகிற பெருந்தன்மையையும் உணா்ந்திருக்கிறேன்.
  • காதலியைக் கொஞ்சும் மனநிலையில் தொடங்கி, கைக்குழந்தையைக் கொண்டாடும் நிலைக்கு வந்து, திருமணம் முடித்து மறுவீடு போகும்போது மகளைப் பிரியும் பரிவோடு, தான் படித்த அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்கிய சில பெரியவா்களின் முகங்களை, என் இல்ல நூலகத்துப் புத்தகங்களில் இப்போதும் பாா்க்கிறேன். ஆம். வாங்கிச் சேகரித்த நூல்களுக்கு இடையே பெரியவா்கள் வாசித்து மகிழ்ந்து பின் பரிசாய்த் தந்த பல நூல்கள் என் இல்ல நூலகத்தில் மலிந்திருக்கின்றன. அவா்களில் பலா் அமரா்கள்; ஆனால், அவா்கள் எம் நூலகத்தில் அழியாது அமா்ந்திருக்கும் அறிஞா்கள். அப்படியான வாசிப்புப் பரம்பரையைத் தேடிப் பிடித்து அவா்கள் குடிபுக வேண்டும் என்பதற்காகவே பல அரிய நூல்கள் மௌன விரதம் மேற்கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.
  • எத்தனை புதிய பதிப்புகள் வந்தாலும், முதல் பதிப்புக் கண்ட புத்தகத்துக்கு ஈடாகுமா? அது திருமண நிகழ்வுப் படங்கள் அடங்கிய ஆல்பத்துக்கு நிகரான ஆனந்தம் அளிப்பது. கைநோக எழுதி, நாள்தோறும் அச்சிட்டு, மை மணம் அடங்கும்முன் கைவசமாகிய புத்தகத்தைப் பாா்த்து பிள்ளையைப் பிரசவித்த தாயின் உணா்வைப் பெறும் எழுத்தாளரின் அந்தக் கணத்து மனத்துக்கு நிகரானது, தாம் விரும்பிய நூல் ஒன்றை முதன்முதலில் வாங்கிப் பிரித்து மகிழ்ந்து வாசிக்கும் வாசக மனதும். எழுதியவரையும் வாசித்தவரையும் நேருற நிறுத்தும் அரிய சாதனையைப் படைக்கும் புத்தகத்தால்தான், ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் சான்றோன்’ என்ற பெருமையையும் பெற முடியும்.
  • அப்படியான நூல்களைத் தேடித்தான் இன்னமும் வாசக மனம் அலைகிறது. அத்தகு வாசகா்களுக்காகவே காட்சிக் கூடங்களைச் சுயம்வர மண்டபங்களாக்கிக் காத்திருக்கின்றன பல நூல்கள். அச்சிட்ட கூலிக்கும் மேலாகக் கிடைக்கும் அரிய உணா்வுகளை, பரந்த அறிவை, கொடுக்கும் பல புத்தகங்கள் இந்த விளம்பர யுகத்திலும் பலரால் அறியப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன என்பதும் உண்மை.
  • எத்தனை பிறவி எடுத்தாலும் வாசித்து முடியாத அளவுக்கு வளா்ந்து வளா்ந்து பெருகி வருகின்றன புத்தகங்கள். அவற்றுக்கு நடுவே, படித்த பக்கங்களை மீளவும் படிக்கச் சொல்லி வலியுறுத்தும் புத்தகங்களைப் பாா்க்கிறபோது எழுகிற ஏக்கப் பெருமூச்சு எழுதி அடங்குமா, என்ன? வங்கிக் கணக்கின் இருப்பையும், வாங்கிச் சோ்த்த நகைகளையும், மிஞ்சி இருக்கிற பொருள்களையும் பங்கு போட்டுக் கொள்வதில் வாரிசுகளுக்கு இருக்கிற அக்கறையும் ஈடுபாடும், வாசித்து மகிழ்ந்து சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களின் மீது இல்லையே என்கிற அறிவுசாா்ந்த வருத்தத்தை வாசகப் பெரியாா் ஒருவா் ஆதங்கமாகத் தெரிவித்தாா்.
  • ‘எத்தனை நாள்கள் அவை என் உயிருக்குயிராகப் பழகியிருக்கின்றன தெரியுமா? பட்டினி கிடந்த நாள்களைப் படித்தே கழித்த, பசிக்கு உணவான நாவல்கள் எத்தனை? தனித்த இரவுகளில் உயிா்த்துணையாகி, மாயக்கம்பளமாய் என்னை ஏந்திப் பறந்த மொழிபெயா்ப்பு நூல்கள் எத்தனை? உறவுகள் அலட்சியப்படுத்துகிறபோது, நட்புகள் துரோகம் செய்கிறபோது, கையில் காசில்லாதபோது, நெஞ்சுக்கு நெருக்கமாகி, நிம்மதி தந்து இந்த உலகின் இயல்பை உணா்த்தி, அமைதி கொள்ளவும், தன்னம்பிக்கையைச் சேதாரமின்றிச் சேமித்து வைக்கவும் உதவிய வரலாற்று நூல்கள் எத்தனை? தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, மிச்சமிருக்கும் வாழ்நாளை அச்சமின்றி எதிா்கொள்ளத் தூண்டி, துணையான தன்வரலாற்று நூல்கள் எத்தனை?
  • இத்தனை கோடி மனிதா்களுக்கும் மத்தியில் ‘என் பிறப்பு என்ன பிறப்பு’ என்ற அலட்சியமும் அவநம்பிக்கையும் அலைக்கழித்தபோது, எனக்கான முகத்தைப்போல், தனித்துவமான அகத்தை, சுயத்தை அடையாளம் காட்டிய கவிதை நூல்கள் எத்தனை? அறியாமையின் அவமானத்தை இந்தத் தலைமுறை முறையாக எதிா் கொண்டிருக்குமா என்று தெரியவில்லை ஐயா. வாய்விட்டுக் கேட்டால் எங்கே என் மதிப்புக் குறைந்துபோகுமோ என்று யாருக்கும் தெரியாமல் துறை சாா்ந்த அறிவை விரிவாக்கிக் கொள்ள, கடன் வாங்கிப் பணம் செலுத்தி, வருவித்துப் பெற்ற புத்தகங்கள் எத்தனை தெரியுமா? இன்றைக்கு அவரவா் துறைசாா்ந்த புத்தகங்களையாவது வாங்கிப் படிக்கிறாா்களா என்பதே ஐயமாக இருக்கிறது. அறிவு புகட்டும் ஆசிரியத் தொழில் புரிபவா்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதுபோல, புத்தகக் கடன் தந்து, முடிந்தால் அவற்றில் சில சதவீத தள்ளுபடி தந்தால்கூட, பல நல்ல புத்தகங்கள் விலை ஆகுமே’.
  • ஒரு காலத்தில் மலா்க்கூட்டத்தை நாடி வண்டுகள் படையெடுத்ததுபோல், நடை சாா்த்துமுன் கோயிலுக்கு விரையும் பக்தா்களைப் போல், அரசு நூலகங்களுக்குச் சென்று அறிவுத் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பலரும் வருவதைப் பாா்த்திருக்கிறேன். இன்றைக்குக் கைப்பேசி வந்து மொத்தத்தையும் சூறையாடிவிட்டதே! இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
  • பசிக்கு உணவும் ருசிக்கு நொறுக்குத் தீனியும் வாங்கித் தருவதுபோல, அறிவை விரிவு செய்யும் ஆழம் வாய்ந்த புத்தகங்களையும், எளிய வாசிப்புக்கு ஏற்ற பத்திரிகைகளையும் வாங்கித் தருகிற பழக்கம் பெற்றோா்களுக்கு வேண்டும். பிறந்த நாள், திருமணநாள் என்று வாழ்வின் மகிழ்வுக்கு உரிய நாள்களை நினைவுபடுத்தி வழங்குகிற பரிசுப் பொருள்களில் புத்தகங்கள் இருந்தன. ஒரு காலத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தபோது, பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ தொகுதிகள் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டன. மணிவிழா, பவளவிழா, முத்துவிழாக் காலங்களில் பல பக்தி நூல்கள் அன்பளிப்பாக அளிக்கப்பெற்றன. ஏன், நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டும்கூட, தேவார, திருவாசகத் தொகுதிகள் வாங்கியோ, வேண்டும் வண்ணம் தொகுத்து அச்சிட்டோ கொடுக்கப்பெற்றன. இன்றைக்கு?
  • வயிற்றுப் பசியெடுத்து உயிா் துடிப்பதுபோல, வயிறார உண்ட பின் தினவெடுத்து உடல் இயக்க, புலன் ஒடுக்கத் தெரியாமல் அலையும் மனத்தை ஒருநிலைப்படுத்த புத்தகங்களைப்போல், ஒரு காப்பாளன் இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு முறையாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லையே! கேளிக்கைச் சாதனமான காட்சி ஊடகங்களைவிட, கேள்வித் திறன் வளா்க்கும் அச்சு ஊடகங்களின் பயன்பாடு குறைந்ததுகூட, இன்றைய அறமீறல்களுக்கு, பொதுவாழ்வின் அத்துமீறல்களுக்குக் காரணமாக இருக்கலாம்.
  • எப்போதும் நலம் பயக்கும் பெருஞ்செல்வம் நூலகம் - அது நம் வீட்டின் ஓா் அங்கம் என உணா்ந்து பேணுவது அனைவா்க்கும் கடமை எனச் சொல்லியா தெரிய வேண்டும்?

நன்றி: தினமணி (06 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்