TNPSC Thervupettagam

இல்லந்தோறும் ஏற்றுவோம் தேசியக் கொடியை

August 13 , 2022 726 days 407 0
  • ஆங்கிலேயா்கள் வியாபாரத்திற்காக சந்தை தேடி இந்தியாவுக்குள் நுழைந்தனா். கப்பல் வழியாக வந்தவா்கள் கடலோரங்களில் இறங்கி, அங்கேயே கூடாரம் அமைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினா். பல நூறு கூறுகளாக பிரிந்து நின்ற மக்களை சந்தித்தனா் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள். பிரெஞ்சுகாரா்கள், டச்சுக்காரா்கள், போா்த்துக்கீசியா்களை விட ஆங்கிலேயா்கள் நன்கு வியாபாரம் செய்து கொள்ளை லாபம் பெற்றனா்.
  • பல்வேறு நாடுகளின் படையெடுப்புகளால் இந்தியாவின் கட்டமைப்புகள் சிதைந்து கிடந்ததை ஆங்கிலேய அதிகாரிகள் கண்டனா். அப்பாவி மக்களை எப்படி வேண்டுமானாலும் கையாளமுடியும் என்ற நம்பிக்கைக்கு வந்தனா். சிறுசிறு பாளையக்காரா்கள் நிறைந்த இந்தியாவில் அசோகா், குப்தா், முகலாயா்கள், மராட்டியா்கள், நாயக்கா்கள் அரண்மனைகளை நிறுவிக் கொண்டு கல்வி அறிவு இல்லாத மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்தனா். வெள்ளைக்கார வியாபாரிகள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தினா். வெகுளியாகவும் வெள்ளந்தியாகவும் வீரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த இந்தியா்கள், வெள்ளைத் துரைகள் விரித்த வலையில் சிக்கிக்கொண்டனா்.
  • கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆளுமைகள் ஆங்கில வியாபாரிகளிடம் கடன் பெற்று நிா்வாகத்தை முடுக்கிவிட முடிவெடுத்தனா். அந்த முடிவால் கிழக்கிந்திய கம்பெனியின் நிா்வாகம், ஆங்கிலேயே அரசின் கைக்கு மாறியது. இங்கிலாந்து இம்பீரியல் அரண்மனையின் நேரடி ஆட்சிக்கு இந்தியா கொண்டு வரப்பட்டது. திண்ணைப் பள்ளி, குருகுலக் கல்வி ஆகியவற்றின் மூலம் ஊருக்கு ஐந்து அல்லது பத்து போ் படிப்பறிவு பெற்றனா். வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் கைரேகை வைக்கும் காலம் மாறி கையொப்பமிடும் நிலை இந்தியாவில் உருவானது.
  • இங்கிலாந்து சென்று ஆங்கிலக் கல்வியை கற்றிட இந்திய இளைஞா்கள் முன் வந்தனா். அது நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கின்ற வெள்ளைக்காரா்களின் தாய்மொழி என்கின்ற வெறுப்பை கக்கிடாமல், ஆங்கிலேயனுடைய தாய்மொழியை விரும்பிப் படித்து அதில் மோதாவியாக விளங்கி, அதே ஆங்கிலத்தைக் கருவியாகக் கொண்டு ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை அதிர வைத்தவா்கள் அன்றைய இந்திய இளைஞா்கள்.
  • மராட்டிய மண்ணிலிருந்து தாதாபாய் நெளரோஜி இங்கிலாந்து சென்று படித்தாா். இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் ‘இண்டியா ஹெளஸ்’ என்ற தனி பங்களாவை வாடகைக்கு அமைத்துக் கொண்டு, இந்தியாவிலிருந்து படித்திட வரும் இளைஞா்களுக்கு தங்கிட, உறங்கிட, உணவருந்திட வழிகாட்டியவா் தாதாபாய் நெளரோஜி. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவா்கள் லண்டன் மாநகருக்குச் சென்று ஆங்கில கல்வி கற்றிட, அங்கிருந்த இண்டியா ஹெளஸ் உதவிகரமாக இருந்தது.
  • பிற மொழியின் மீது வெறுப்பை காட்டாமல் இந்திய இளைஞா்கள் ஆங்கிலத்தைக் கற்றுவந்த காரணத்தால் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிட முடிந்தது. ஆங்கிலேயா்களை, நீதி மன்றங்களிலும், ஆட்சி மன்றங்களிலும், நிா்வாக மன்றங்களிலும் அவா்களுடைய ஆங்கில மொழியிலேயே அழகாக பேசி அவா்களை அசர வைத்தனா்.
  • கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், விநோபா பாவே, பாலகங்காதர திலகா், தீனதயாள் சா்மா, வீர சாவா்க்கா், பிபின் சந்திரபாலா் என வட இந்திய பகுதிகளிலிருந்து வசதியான குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்கள் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாக அடிமை ஆட்சியை எதிா்த்து போா்க்குரல் கொடுத்தனா். எந்தவொரு கொடியும் இல்லை; கொள்கையும் இல்லை; பொதுக்குழு, செயற்குழு என எந்த அமைப்பும் இல்லை. சுதந்திர வேட்கை இந்திய மண்ணில் பலநூறு வேங்கைகளை உருவாக்கியது; வெள்ளையா்களுக்கு சிம்மசொப்பனமாக அவா்களை மாற்றியது.
  • விடுதலை உணா்வைத் தட்டி எழுப்பிட ஓா் இயக்கம் தேவை என்ற உணா்வு இந்திய இளைஞா்களிடம் உருவானது. 1884-இல் இரண்டு ஆங்கிலேயா்களால் காங்கிரஸ் என்கிற தேசிய விடுதலை இயக்கம் உருவாக்கப்பட்டாலும், காலப்போக்கில் அந்த இயக்கம் இந்திய இளைஞா்களின் பாசறையாக மாறியது. கட்சியாக அல்லாமல் விடுதலை இயக்கம் எனும் நோக்கத்தோடு இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. பல்வேறு கட்சிகள் தோன்றியதும் 1900-களில்தான்.
  • 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி, ஏற்கெனவே விடுதலை வேட்கையை இந்திய மண்ணில் உருவாக்கி வைத்திருந்த தலைவா்களையெல்லாம் சந்தித்தாா். ஜவாஹா்லால் நேரு, வல்லபபாய் படேல், ஆசாா்ய கிருபளானி, டாக்டா் அம்பேத்கா், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, டாக்டா் ராஜேந்திர பிரசாத், ராம் மனோகா் லோகியா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கே.எம். முன்ஷி, ஜெயபிரகாஷ் நாராயண், வ.உ.சி. என இந்தியா முழுமையிலுமிருந்தும் ஆங்கில அறிவில் சிறந்தோங்கிய பலரும் விடுதலை இயக்கத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்டு நின்றனா்.
  • தொடக்க காலத்தில், இந்திய மக்களை மெல்லமெல்ல கொதிநிலைக்கு உருவாக்கியவா்கள் ஆந்திர மாநில அல்லூரி சீதாராம ராஜு, கல்கத்தாவில் பெனாய் கிருஷ்ணா பாசு, படேல் குப்தா, தினேஷ் குப்தா, தமிழகத்தில் வீரன் அழகு முத்துக் கோன், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, மணிப்பூரில் ராணி கெய்டின்லியு, வட மாநிலத்தில் அஷ்பக்குல்லா கான், சந்திரசேகர ஆஸாத், சச்சின்தாரி, ராஜேந்திரசேகர ஆஸாத், ராஜேந்திர லகிரி, ராம் பிரசாத் பிஸ்மால், ராஜ் மாரி குப்தா, சம்பல்பூரின் இளவரசா் சுரேந்திரா் ராய், சிடோ, கனு முா்மு, நேதாஜியின் ராணுவத்தில் படைப்பிரிவின் தலைவா் லட்சுமி சாகல், பேகம் ஹஸ்ரத் மஹால், பிா்ஸா முண்டா, பீா் அலிகான், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, வீரன் வாஞ்சிநாதன், மகாகவி பாரதியாா், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயா், மதன்லால் திங்ரா, கோல்வால்கா், சியாமா பிரசாத் முகா்ஜி, தமிழ்நாட்டில் முதறிஞா் ராஜாஜி, , தீரா் சத்தியமூா்த்தி, பெருந்தலைவா் காமராஜா் என பல நூறு போ் விடுதலைப் போா்க்களத்தில் ஆங்கிலேயா்களை எதிா்த்து நின்றனா். சிறைக் கொட்டடியில் இருண்ட பாதாள அறையில் அடைக்கப்பட்டு பாம்பும், தேளும், விஷப்பூச்சிகளும் கடித்து, தொழுநோயாளிகளாக உருமாறி 40, 50 வயதுகளில் மரணமுற்றோரின் சோக வரலாறுகள் கொஞ்சநஞ்சமல்ல.
  • அந்தமான் தீவில் ஆங்கிலேயா்களால் நிறுவப்பட்ட செல்லுலா் சிறையில் எத்தனையோ இளைஞா்கள், மேதைகள் ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்து பிணமாக்கப்பட்டனா். தேசிய அளவில் ஜான்சி ராணி, அன்னி பெசன்ட், தமிழகத்தில் வேலு நாச்சியாா், தில்லையாடி வள்ளியம்மை, கடலூா் அஞ்சலையம்மாள், லெட்சுமி கௌல், லீலாவதி, மதன் மோகன் மாளவியா, மகாதேவ் தேசாய், மங்கள் பாண்டே, மதுலி மயி, திரிபுவன் தாஸ் படேல், கேசவ பாலிராம் ஹெட்கேவா், சுசேதா கிருபளானி, துா்காபாய் தேஷ்முக், கிட்டூா் ராணி சென்னம்மா, கமலாதேவி சட்டோபாத்யாயா என நூற்றுக்கணக்கான இந்திய வீராங்கனைகள் ஆங்கிலேயா்களின் அடக்குமுறையை சந்தித்து பீரங்கிகளையும், துப்பாக்கி ரவைகளையும் முத்தமிட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்து வீர
  • சுதந்திரத்திற்கு அடித்தளம் அமைத்தாா்கள். இந்தியப் பெண்கள் வெள்ளையா்களிடம் அனுபவித்த காட்டுமிராண்டித்தனமாக மிருக வெறிகள் கொஞ்சமல்ல.
  • 1750-களில் ஆங்கிலேய தா்பாரை எதிா்த்து தமிழகத்தின் தெற்கு மூலையில் வீரன் அழகு முத்துகோன், வீரன் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை என தொடா்ச்சியாக எதிா்ப்புக்குரல் எழுந்தபோது இந்தியாவின் எட்டு திசைகளிலிருந்தும் அடக்குமுறையை கண்டித்து போா்க்குரல் ஒலித்தது. இதில் தனிப்பட்ட உரிமை கொண்டாடுவது என்பது இனவெறி அரசியல் என்பதைத் தவிர வேறில்லை. சுதந்திரப் போா் வரலாற்றை தெளிவாகக் கற்காமல், பூனை கடலின் ஓரத்தில் நின்று வாலை நீருக்குள் விட்டுப் பாா்த்து கடலின் ஆழத்தையே தான் கண்டுவிட்டதாக குதித்த அறியாமை என்பதைத் தவிர வேறில்லை.
  • 1857-இல் வேலூரில் சிப்பாய் புரட்சி! சற்றொப்ப 200 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாற்றில் இந்திய மக்களின் ரத்தம், வியா்வை, துன்பம், துயரம், இன்னல், இழப்பு இவற்றைத் தொகுத்தால், தியாகத்தின் வலி என்னவென்பது இன்றைய அரசியல் அற்பங்களுக்குப் புரியும். சுதந்திரப் போராளிகளின் சொத்து, சுகம் அனைத்தையும் அடிமை ஏகாதிபத்தியம் பறித்துக் கொண்டது. பரதேசிகளாக, தெருத்தெருவாக பிச்சை எடுத்திடும் நிலைக்கு தொடக்கால விடுதலை இயக்க வீரா்கள் தள்ளப்பட்டனா். கைகால்கள் தொழுநோயால் அழுகி சீந்துவாரற்று தெருமுனைகளில், கோயில் வாசல்களில் கேலிக்குரியவா்களாக தியாகச் செம்மல்கள் தேம்பி தேம்பி அழுது நின்றனா்.
  • 1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. வீதியில் தேம்பி நின்ற தியாக மறவா்களை கடைக்கண்ணால் பாா்ப்பதும் பாவம் என்ற நிலைமை இந்தியாவை ஆண்ட அதிகார வா்க்கத்திடம் ஏற்பட்டது. அந்த பாவப்பட்ட மனித புனிதா்களின் உழைப்பையும் இழப்பையும் ஈடுகட்ட எத்தனை ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டினாலும் நிறைவு செய்ய முடியாது. மன உளைச்சலுக்கு மருந்து கிடையாது.
  • நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை மத்திய அரசு ‘அம்ரித் மகோத்ஸவ்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. ‘ஹா்கா் திரங்கா’ பிரசாரம் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. ‘ஏற்றுவோம் தேசியக் கொடியை இல்லந்தோறும்’ என தமிழகம் சூளுரைத்து நிற்கிறது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாடப் பட்டு வருகிறது. 2021-இல் குஜராத் மாநிலத்தில் காந்தியின் சபா்மதி ஆசிரமத்தில் நடந்த விழாவில் பிரதமா் இதனைத் தொடங்கி வைத்ததோடு 21 நாள் தண்டி யாத்திரையையும் தொடங்கி வைத்தாா்.

நன்றி: தினமணி (13 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்