TNPSC Thervupettagam

இளமை என்னும் கற்பிதம்

December 8 , 2024 33 days 63 0

இளமை என்னும் கற்பிதம்

  • எம்.வி.வெங்கட்ராம், சிறுகதை, நாவல் எனத் தொடர்ச்சியாக எழுதியவர். ‘வேள்வித் தீ’, ‘காதுகள்’ போன்ற முக்கியமான படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். தொன்மங்களை நவீன இலக்கியமாக எழுதியதில் எம்.வி.வெங்கட்ராமுக்கும் முக்கியப் பங்கு உண்டு. குரு நாட்டு மன்னன் யயாதியின் ஒரே மகளான மாதவி குறித்த தொன்மக் கதையை ‘நித்ய கன்னி’ (1975) என்ற நாவலாக எழுதியிருக்கிறார். ஆண்களால் சுரண்டப்பட்ட ஒரு பெண்ணின் கதையாக இந்நாவல் வாசிக்கப்பட்டது.
  • இவர் எழுதிய ‘யௌவனம் தந்த யுவன்’ என்ற சிறுகதையும் மகாபாரதத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டது. தொன்மங்கள்தான் மனித இனத்தின் பொதுக்கூறாக இருக்கின்றன. மனித சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதற்குத் தொன்மங்களே அதிகமும் பயன்படுகின்றன. ‘தொன்மத்தில் நம்பிக்கையிழந்த எந்த நாகரிகமும் அதன் இயற்கையான வளமுடைய படைப்பாற்றலை இழந்துவிடும்’ என்பது நீட்சேவின் கருத்து. எம்.வி.வெங்கட்ராம் தொன்மத்தில் நம்பிக்கை கொண்டவர். தொன்மங்களை நவீன வாசிப்புக்கு உட்படுத்துவதில் தேர்ந்தவர். அவரது ஆக்கங்களே இதற்குச் சான்று.
  • அசுர மன்னன் விருஷபர்வன் மகள் சர்மிஷ்டை. விருஷபர்வனின் குலகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி. சர்மிஷ்டையும் தேவயானியும் தோழியர். இவர்கள் இருவரும் ஒரு நாள் பணிப்பெண்கள் சூழ நீராடச் செல்கின்றனர். காற்று இவர்களது ஆடைகளைக் கலைத்துப் போடுகிறது. தேவயானியின் உடையை சர்மிஷ்டை அணிந்துகொள்கிறார். இருவருக்குள்ளும் பிரச்சினை எழுகிறது.
  • சர்மிஷ்டை தேவயானியை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு அரண்மனைக்கு வந்துவிடுகிறார். வேட்டைக்குச் சென்ற குரு நாட்டு மன்னன் யயாதி, தேவயானியைக் காப்பாற்றுகிறார். சுக்ராச்சாரியாரின் கோபம் சர்மிஷ்டையைத் தேவயானிக்குப் பணிப் பெண்ணாக்குகிறது; யயாதியைத் தேவயானிக்குத் திருமணம் செய்து வைக்கிறது.
  • யயாதியின் மூலமாகத் தேவயானிக்கு யது, துர்வசு என இரு குழந்தைகள் பிறக்கின்றனர். இதற்கிடையில், யயாதி சர்மிஷ்டையையும் ரகசியமாகத் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு திரஹ்யு, அனு, புரு என மூன்று குழந்தைகள்.
  • யயாதியின் ரகசியத் திருமணத்தை அறிந்து தேவயானி கோபமடைகிறார்; சுக்ராச்சாரியாரிடம் முறையிடுகிறார். ‘காமத்திற்குக் காரணமான தன் இளமையை இழந்து முதியவனாகட்டும்’ என்று யயாதியைச் சபிக்கிறார் சுக்ராச்சாரியார். யயாதியின் வேண்டுகோளை ஏற்று, தன் முதுமையை வேறொருவருக்கு அளித்து அவர்களது இளமையைப் பெற்றுக்கொள்ளும் படி சாபத்திற்கு விமோசனமும் அளிக்கிறார். யயாதியின் உடல் முதுமையை அடைந்தாலும் மனம் இளமையாகவே இருக்கிறது.
  • மனைவியரின் வனப்பு அவனை மேலும் துயரத்திற்கு உள்ளாக்குகிறது. தன் மகன்களிடம் இளமையை யாசகமாகக் கேட்கிறான். அரசுரிமையை அளிப்பதாகக் கூறியும் முதல் நான்கு மகன்களும் யயாதியின் முதுமையைப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். புரு மட்டும் தந்தைக்கு உதவுகிறான்.
  • ஆயிரம் ஆண்டுகள் மனைவியருடன் காமத்தை நுகர்ந்த யயாதி, இறுதியில் தன் முதுமையைப் புருவிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்கிறான். புருவை நாட்டுக்கு அரசனாக்கிவிட்டு சொர்க்கம் புகுந்தான் யயாதி. புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்களும் கௌரவர்களும் என்பது தொன்மக் கதை. இந்தத் தொன்மக் கதையின்மீதுதான் எம்.வி.வெங்கட்ராம் மறுவாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
  • எம்.வி.வி. யயாதி சாபம் பெற்ற தொன்மக் கதையை ‘யௌவனம் தந்த யுவன்’ புனைவில் நேரடியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இக்கதையை இளமைக்கும் முதுமைக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டமாகக் கருதலாம். முதுமையைச் சாபம் என்கிறார் யயாதி; வரம் என்கிறார் புரு. உடலின் போதாமைகளை யயாதியின் மூலமாக உணர்ந்துகொள்கிறார் புரு. ‘மோகத்திற்கு இரையானவர்கள் எவ்வளவு இழிவான துயரமும் துன்பமும் அடைவார்கள் என்பதை நீங்கள் படுகிற வேதனையால் அறிகிறேன்’ என்கிறார். அதீத காமத்தின் இழிவை யயாதி கதாபாத்திரத்தின் மூலமாகத் திறந்து காட்டுகிறார் எம்.வி.வெங்கட்ராம்.
  • சுக்ராச்சாரியாரிடம் சாபம் பெற்ற யயாதியைப் புனைவின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தி விடுகிறார் எம்.வி.வெங்கட்ராம். உடல் முதுமையாகவும் மனம் இளமையாகவும் இருப்பதுதான் யயாதிக்குப் பெரிய துன்பமாக இருக்கிறது. களியாட்டம் போடும் மனதிற்கு இணையான உடல் வலிமை யயாதிக்கு இல்லை. தன் மனைவியர் இருவரையும் பார்க்கும்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • ஆனால், யயாதியால் நடக்கக்கூட முடியவில்லை. புருதான் உதவுகிறார். யயாதியின் புலம்பல்கள்தான் புரு தன் இளமையைத் துறப்பதற்குக் காரணமாகிறது. நீதி இலக்கியங்கள் தொடர்ந்து வலியுறுத்திய ‘யாக்கை நிலையாமை’ குறித்து எம்.வி.வி. விரிவாக உரையாடியிருக்கிறார். இனிய குரல் கரகரக்கும்; கண்கள் ஒளியிழக்கும்; தோல் சுருங்கும்; அகன்ற மார்பு அழுகிய பழம்போன்று வாடும். இவை முதுமையின் அறிகுறிகள். யயாதி, சாபத்தின் மூலமாக ஒட்டுமொத்த முதுமையின் குறியீடாக மாறியிருக்கிறார். தன்னுடலைத் தானே வெறுக்கும் உன்மத்த நிலைதான் முதுமை என்பது யயாதியின் பார்வை. காமமெனும் சிற்றின்பத்தை வென்று பேரின்பம் காண்பதற்கு மூப்பு வரம் என்பது புருவின் பார்வை. இருவரது பார்வையையும் மோத விட்டிருக்கிறார் எம்.வி.வெங்கட்ராம்.
  • சர்மிஷ்டையின் கோபமே அவளது துயரத்திற்குக் காரணமாகிறது. நீராடச் சென்ற இடத்தில் தேவயானியிடம் கோபப்படாமல் இருந்திருந்தால், இத்தகைய இழிநிலைக்கு உள்ளாகியிருக்க மாட்டார். அதேபோல, தேவயானியும் அவசரபுத்தி உடையவர். யயாதியின் சாபத்திற்கு தேவயானிதான் காரணம். ‘யௌவனம் தந்த யுவன்’ புனைவை இப்படியும் வாசிக்கலாம். ‘பெண் புத்தியின் ஆத்திரத்தால் செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்’ என்று யயாதியின் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறுகிறார் தேவயானி. தான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தேவயானி வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறார்
  • எம்.வி.வெங்கட்ராம். தேவயானிக்குத் தெரியாமல் சர்மிஷ்டையைத் திருமணம் செய்துகொண்டவர் யயாதி. ஏமாற்றப்பட்டவர் தேவயானி. ஆனால், எம்.வி.வி. தேவயானியைக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறார். சர்மிஷ்டையும் எல்லாவற்றுக்கும் தேவயானிதான் காரணம் என்கிறார். தேவயானியும் இதற்கு உடன்படுகிறார். எம்.வி.வி. யயாதியின் பக்கம் நின்று பேசுவதான தொனியைப் பிரதி ஏற்படுத்துகிறது.
  • இந்த உடல் நிச்சயமில்லாதது; ஒருநாள், நம் உடலே நமக்குப் பெரும் துயரத்தை உருவாக்கும். இதனைப் புரிந்துகொள்ளாமல் துன்பத்தில் உழல்கிறார் யயாதி. தந்தையின் சாபத்தினூடாக உடலின் நிலையற்ற தன்மையை உள்வாங்கிக் கொள்கிறார் புரு. காமத்தைக் கடந்துசெல்வதற்கான வழியாகவும் முதுமையை வரவேற்கிறார் புரு. இந்த உண்மை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் யயாதிக்குப் புரிகிறது. யயாதியின் சாபம், புரு என்னும் ஆன்ம மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. தேவயானிதான் அதற்குக் காரணம்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்