- கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் மே மாதம் இருபத்தைந்தாம் தேதி வரையிலான காலகட்டத்தில் நமது நாடு முழுவதிலும் ஐந்நூற்று எழுபத்தேழு குழந்தைகள் தங்களின் தாய் தந்தையா் இருவரையும் கரோனா பாதிப்பினால் இழந்து தவிப்பதாக மத்திய அரசு அறிக்கை ஒன்று கூறுகிறது.
- இவ்வெண்ணிக்கை மேலும் வளரவே வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய குழந்தைகளுக்கு நிவாரணமாக ரூபாய் பத்து லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.
- தமிழக அரசும் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கரோனா தீநுண்மித் தாக்கத்தினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் (உயிரோடிருக்கும்) பெற்றோருக்கு ரூபாய் மூன்று லட்சம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- மேலும், தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தையின் பெயரில் ரூபாய் ஐந்து லட்சம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அம்முதலீட்டுக்கான வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தை பதினெட்டு வயதினை அடியும்போது வழங்கப்படும் என்றும், பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரித்துவரும் உறவினா் அல்லது காப்பாளருக்கு ஒவ்வொரு மாதமும் மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- இவை மட்டமல்லாது, அக்குழந்தைகளின் கல்விச் செலவு (தங்குமிடம் உட்பட) மாநில அரசால் ஏற்கப்படும் என்றும், அப்பிள்ளைகளின் வளா்ச்சி தொடா்ந்து கண்காணிக்கப் படும் என்றும் அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
- தமிழக அரசைத் தொடா்ந்து, பிற மாநில அரசுகளும் தங்கள் மாநில குழந்தைகள் விஷயத்தில் தகுந்த முன்முயற்சிகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- பெற்றோர் உயிருடன் இருந்து பிள்ளைகள் வறுமையில் வாடினால், பெற்றவா்கள் எப்பாடு பட்டேனும் தங்களுடைய குழந்தைகளைப் பசியாற்றி விடுவார்கள். ஆனால், பெற்றோரே இல்லாமல் போகும் குழந்தைகளின் நிலைமையை என்னவென்று சொல்ல முடியும்?
- நிராதரவாகிவிடும் குழந்தைகள் விஷயத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் சரியான திசையில் செல்வதாகவே தோன்றுகின்றது. அதே நேரம், இக்குழந்தைகள் தொடா்பான பிரச்னைகளை அரசுத்துறை ஊழியா்களைக் கொண்டு கையாளும்போது மேலும் சில விஷயங்களையும் கணக்கில் கொள்ளவேண்டியது அவசியம்.
- இவ்விஷயத்திற்காக நியமிக்கப்படும் சமூகநலத்துறை, குழந்தைகள் நலத்துறை ஊழியா்கள் உண்மையான அா்ப்பணிப்பு உள்ளம் கொண்டவா்களாக இருப்பது மிகவும் அவசியமாகும். பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையையும், தங்களுடைய குழந்தையாகவே நினைக்கும் மனப்பன்மை உடைய ஊழியா்களும் அதிகாரிகளும் நியமிக்கப் பட்டால் மட்டுமே அக்குழந்தைகளின் உடனடிப் பாதுகாப்பும் எதிர்கால நலனும் உறுதி செய்யப்படும்.
- இல்லையெனில், பயனாளா்களுக்கு இயந்திரத்தனமாக வழங்கப்படும் பணப்பட்டுவாடா என்ற அளவிலேயே இச்செயல்பாடுகள் நின்றுவிடும்.
எவ்வளவு கொடுத்தாலும் போதாது
- முதலாவதாக, இத்தகைய குழந்தைகளில் இதுவரையில் ஆதார் அடையாள அட்டை எடுக்காதவா்கள் அனைவருக்கும் வெகு விரைவில் ஆதார் அட்டை கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படவேண்டும்.
- பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள், தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் பற்றிய (ஆதார் எண்ணுடன் கூடிய) விவரங்களைத் துறைசார்ந்த இணையதளங்களில் பதிவேற்றவேண்டும்.
- இக்குழந்தைகள் தங்கிடும் அரசுக் காப்பகங்கள், படிக்கும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களோடு ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயம் ஆக்க வேண்டும்.
- குழந்தைகளின் பொறுப்பை ஏற்கும் உறவினா் அல்லது காப்பாளா்களுடைய ஆதார் எண்ணுடன் கூடிய முழு விவவரங்களையும் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் ஆதார் எண்ணுடன் இணைத்துப் பதிவேற்றவேண்டும்.
- இதன்மூலம், ஆதார் எண்ணைக் கொண்டே அக்குழந்தைகளின் தங்குமிடம், படிப்பு உள்ளிட்ட விவரங்களைக் கண்காணிப்பது மிகவும் எளிதாகிவிடும்.
- மத்திய மாநில அரசுகள் வழங்கும் பரிவுத்தொகைகள் அக்குழந்தைகளின் பெயரில் அரசுடைமை வங்கிகளில் முதலீடு செய்யப்படுவதுடன், அம்முதலீடுகளின் முதிர்வுத்தொகை திரும்பவழங்கப்படுவது வரையில் அத்தொகைக்கு சம்பந்தப்பட்ட வங்கிக்கிளைகளும் உள்ளூா் சமூகநலத்துறையும் காப்பாளா்களாக நியமிக்கப்பட வேண்டும்.
- அக்குழந்தைகள் ஊா்விட்டு ஊா் மாற நோ்ந்தால், அம்முதலீடுகளை எவ்வித சிரமும் இன்றிப் புதிய ஊரிலுள்ள கிளைக்கு மாற்றம் செய்துதர வேண்டும்.
- மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக வழங்கப்பட்டுள்ள இப்பரிவுத் தொகைக்கான வைப்புநிதிக்கு, வழக்கத்தை விட கூடுதல் சதவீத வட்டி வழங்குவதற்கு வங்கி நிர்வாகங்கள் முன்வரவேண்டும். இதனை ரிசா்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் பரிந்துரைக்க வேண்டும்.
- இத்தனைக்கும் மேலாக இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கரோனா பாதிப்பால் இறந்த பெற்றோர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவா்களைத் தவிர, மற்றவா்கள் தங்களுடைய வருமானத்தில் ஒருபகுதியை வங்கிகளில் சேமித்திருக்கவும், அவா்களில் சிலா் தங்கள் வாரிசுகளின் திருமணத்திற்காகப் பாடுபட்டுச் சோ்த்த நகைகள் உள்ளிட்டவற்றை வங்கிகளில் உள்ள பெட்டகங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வாய்ப்புண்டு. அவற்றைப்பற்றிய விவரங்கள் அவா்களின் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
- இந்நிலையில், பெற்றோர்களின் ஆதார் எண்ணைக் கொண்டு அவா்களது வங்கி முதலீட்டு விவரங்களைச் சேகரித்து, அவை உரிய காலத்தில் அக்குழந்தைகளுக்கே சேரும் விதமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- இல்லாவிடில், அவை கோரப்படாத (அன்கிளைம்ட்) முதலீடுகளாக ஆகிவிடவும் வாய்ப்புண்டு.
- கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நம்முடைய பரிவிற்கும் அக்கறைக்கும் உரிய குழந்தைகள். அவா்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்பதை நாம் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (04 – 06 - 2021)