- இளம் வயதில் மருத்துவர்கள் மரணமடைவது குறித்த செய்திகள் சமீப காலத்தில் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இத்தகைய அசாதாரணமான மரணங்களின் பட்டியல் நீள்கிறது. மருத்துவர்கள் சமீப காலத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். இந்தத் தொடர் மனஅழுத்தம் பல்வேறு உடல்நலச் சீர்கேடுகளுக்குக் காரணமாக இருக்கிறது, சில நேரம் தற்கொலை போன்ற விபரீதமான முடிவை மருத்துவர்கள் எடுப்பதற்கும் அதிகப் பணிச்சுமையே காரணம் என மருத்துவர்களும், மருத்துவச் சங்கங்களும் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
அசாதாரண மரணங்கள்
- இன்றைய காலத்தில், இளைஞர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்திருப்பதும், சிறிய பிரச்சினைகளைக்கூட கையாள்வதற்கான முதிர்ச்சியற்று இருப்பதும்தான் இந்த மரணங்களுக்குக் காரணம் என இன்னொரு சாரார் இதைத் தனிமனிதப் பிரச்சினையாகச் சுருக்கி புரிந்துகொள்கிறார்கள். எத்தனையோ கனவுகளோடு மருத்துவத் துறைக்குள் நுழையும் இந்த மருத்துவர்கள் ஏன் இத்தனை இளம் வயதில் அசாதாரணமாக இறந்துபோகிறார்கள்? தற்கொலை செய்துகொள்கிறார்கள்? இது குறித்த விவாதம் மருத்துவத் துறையில் மட்டுமல்லாது, பொதுத்தளத்திலும் எழுந்திருக்கிறது.
- ஓய்வின்றி 36 மணி நேரம் பணியாற்றுவதுதான் மருத்துவர்களை மன உளைச்சல்களுக்கு உள்ளாக்குகிறது என்றும், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு மருத்துவர்களின் பணிநேரத்தை வரையறுக்க வேண்டும் என்றும் மருத்துவச் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
- மருத்துவ மாணவர்களின் பணி நேரத்துக்கு ஏற்கெனவே அரசாங்கமும், நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணி இருக்கக் கூடாது என்பதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே உள்ளன. ஆனால், அவை எந்தளவுக்கு நடைமுறையில் உள்ளன?
- மருத்துவமனையைப் பொறுத்தவரை, ஒரு மருத்துவ மாணவரின் பணியை வரையறுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் முதுநிலை மருத்துவ மாணவர்கள், கற்றுக்கொள்ளும் பொருட்டு மருத்துவமனைப் பணியில் இருக்கிறார்கள். க
- ற்றலுக்காகப் பேராசிரியர்களையும், மூத்த மருத்துவர்களையும், மூத்த மாணவர்களையும் சார்ந்திருக்கும் நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதனால் பணி நேரத்தை வரையறுப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கான தீர்வல்ல. பணி நேரத்தை முறைப்படுத்துவதைவிட, பணியை முறைப்படுத்துவதுதான் முக்கியமானது.
பணியைச் செய்ய விடாததே பிரச்சினை
- பயிற்சி மருத்துவர்களைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் பணி என்பதைவிட, படிப்புக்குரிய பணி வழங்கப்படாததே மிக முக்கியப் பிரச்சினை. உதாரணத்துக்கு, அறுவைசிகிச்சையில் மேற்படிப்பு படிக்கும் மாணவருக்கு அதன் தொடர்பில் எவ்வளவு நேரம் வாய்ப்பு வழங்கினாலும் நேரத்தைப் பற்றிக் கவலையில்லாமல் கற்றுக்கொள்வார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு சுலபமாகக் கிடைக்காது.
- மாறாக, ரத்த வங்கிக்குச் சென்று ரத்தம் வாங்குவது, நோயாளிகளின் பரிசோதனை முடிவுகளைப் பெற அலைவது, மற்ற துறைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, வார்டில் ‘டிஸ்சார்ஜ் சம்மரி’ எழுதுவது எனக் கிட்டத்தட்ட கடைநிலை மருத்துவப் பணியாளர்களின் வேலைகள்தான் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.
- இதனால் தாங்கள் கற்றுக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை என்பது அவர்களது தலையாய பிரச்சினையாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மேற்படிப்புகளின் எண்ணிக்கையும் சமீபத்தில் அதிகரித்திருப்பதால் ஏராளமான மாணவர்கள் முதுநிலைப் படிப்புக்கு வருகிறார்கள்.
- அதனால், அறுவைசிகிச்சைத் துறையில் மேற்படிப்பு படிக்கும் மாணவர் படிப்பு முடியும்வரை, அறுவைசிகிச்சைக்கான கத்தியையே தொடாமல் வெளியே செல்லும் வாய்ப்பு இருக்கிறது. பலர் இதை நினைத்தே அச்சப்படுகிறார்கள், சோர்வடைந்து போகிறார்கள், நம்பிக்கையிழக்கிறார்கள்.
மருத்துவக் கல்வியில் மாற்றங்கள்
- மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை கற்றல் என்பது பாடப்புத்தகங்களை மட்டுமே நம்பியிருப்பதல்ல. அதுவும் முதுகலைப் மருத்துவப் படிப்பில் கற்றல் என்பது பெரும்பாலும் பேராசிரியர்களின் அனுபவங்களையும், அவர்களின் தனிப்பட்ட புரிதலையும் சார்ந்திருக்கும். மருத்துவப் படிப்புக்கான காலம் முழுவதும் அந்த ஆசிரியருக்கும், மாணவருக்குமான இணக்கம் சிறிது சிறிதாகக் கற்றலாக விரிவடையும். அது ஒரு தொடர் இயக்கம்.
- உதாரணமாக, பாடப்புத்தகங்கள் ஒரு நோயைப் புரிந்துகொள்வதற்கான அறிவைக் கொடுக்கின்றன, ஆனால் நோயாளியைப் புரிந்துகொள்வதையும், அவரிடம் எப்படிப் பேசுவது, எந்த நேரத்தில் என்ன பேசுவது, என்ன பேசக் கூடாது என்பதையெல்லாம் கற்றுக்கொள்ள ஆசிரியருடனான இந்த இணக்கம்தான் துணைபுரிகிறது.
- ஆனால், மருத்துவக் கல்வியில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், கற்றலை ஆசிரியர்களுடனான இந்த இணக்கத்திலிருந்து துண்டிக்கின்றன. ஆசிரியர் தன்னிச்சையாகத் தனது அனுபவங்களையோ, அவரின் அத்தனை ஆண்டுப் படிப்பினைகளையோ மாணவர்களுடன் பகிரத் தேவையில்லை.
- அவற்றையெல்லாம் தேவையில்லாத சுமை என்கிறது. இதன் விளைவாகக் கற்றல் சூழல் என்பதே இறுக்கமாக மாறியிருக்கிறது. தோல்விகளையும், இயலாமைகளையும் இந்தப் புதிய பாடத்திட்டம் அத்தனை மூர்க்கமாக அணுகுவதால் மாணவர்கள் படிக்கும் காலம்வரை மிகுந்த மன உளைச்சலில்தான் இருக்கிறார்கள்.
- ஆரோக்கியமற்ற உரையாடல்: நோயாளிகளை ஒரு பண்டமாகவும், மருத்துவர்களை லாபமீட்டுபவர்களாகவும் பார்க்கக் கூடிய மனநிலை, மருத்துவர்-நோயாளி இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்திருக்கிறது. இணைய வழியாகப் பரப்பப்படும் போலியான மருத்துவத் தகவல்கள் இந்தச் சூழலை மேலும் ஆரோக்கியமற்றதாக மாற்றியிருக்கின்றன. இதன் விளைவாகச் சில விபரீதங்கள் நடக்கும்போது அதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இளம் மருத்துவர்களே.
- ஏனென்றால் நோயாளியுடன் நேரடித் தொடர்பில் அவர்களே இருக்கிறார்கள். நிர்வாகத் தோல்விகளும், அமைப்புரீதியான போதாமைகளும் நோயாளிகளிடம் உண்டாக்கும் வெறுப்பை, நோயாளிகள் இத்தகைய இளம் மருத்துவர்களிடமே காட்டுகிறார்கள். யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் காயப்படும்போது இளம் மருத்துவர்கள் இந்த அமைப்பின் மீதும், இந்தத் துறையின் மீதும் நம்பிக்கையிழக்கிறார்கள்.
மருத்துவர்களின் பற்றாக்குறை
- பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களை வைத்துத்தான் பற்றாக்குறை ஈடுசெய்யப்படுகிறது. பெரும்பாலான அரசு மருத்துமனைகள், பயிற்சி மருத்துவர்களைக்கொண்டே இயங்குகின்றன. மேற்படிப்பு படிக்க வரும் மாணவர்கள் கற்றுகொள்ளவே அந்தப் படிப்பில் சேர்கிறார்கள்.
- ஆனால் நிர்வாகம் அவர்களைப் பணியாளர்களாகவே கருதுகிறது. மருத்துவர்களைப் பொறுத்தவரை 30 வயதுக்குப் பிறகே திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும், படிப்பின் நிமித்தமோ அதற்கு பிறகான பணியின் நிமித்தமோ வாழ்க்கைத் துணையைப் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
- மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கக்கூடிய சூழல், பணியிடத்தில் நிலவும் பாகுபாடுகள், அவமானம், கற்றலுக்கான சூழல் இல்லாதது, எதிர்காலத்தின் மீதான நிச்சயமின்மை ஆகியவற்றுடன் வாழ்க்கைத் துணையைப் பிரிய வேண்டிய கட்டாயமும் வரும்போது அவர்கள் இன்னும் பலவீனமான மனநிலைக்குச் செல்கிறார்கள். குழந்தைப்பேறு தாமதமாகும்போதும் / குழந்தையின்மை குறித்த கவலை எழும்போதும் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைகிறது.
- இதுபோன்ற அசாதாரணமாக மரணமடையும் இளம் மருத்துவர்களில், பெரும்பாலானவர்கள் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர்களாக இருப்பது நிச்சயம் தற்செயலானது கிடையாது.குடும்பங்களிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டு எதிர்மறையான மருத்துவச் சூழலில் பணிபுரியும்போது அவர்கள் மிக எளிதாக மன அழுத்தத்துக்குச் செல்கிறார்கள்.
- மருத்துவத் துறையில் சமீபகாலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களையும், அதன் விளைவாக நிகழும் இளம் வயது மருத்துவ மாணவர்களின் மரணங்களையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதுதான் பொதுச் சமூகமாக நாம் உணர வேண்டிய முக்கிய அம்சம். அரசு இதையெல்லாம் கூர்ந்து கவனித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2024)